
தமிழில் இன்று வெளிவருகிற கலை இலக்கிய இணைய இதழ்கள் பல. நான் சில இணைய இதழ்களை சொல் எண்ணி வாசிப்பேன். சிலவற்றை எட்டிக்கூடப் பார்ப்பதில்லை . எனக்குப் பிடித்தமான நம்பிக்கை தருகிற “குருகு” இணையத்தளத்தினை பலர் அறிய வாய்ப்பில்லை. அங்கு ஆழமான விவாதங்களும், அறிமுகங்களும் நிகழ்கின்றன. இலக்கியச் செயற்பாடு என்பது புனைவும் – அபுனைவும் – கவிதையும் என்று எண்ணுபவர்களுக்கு இந்தத் தளம் மிகச் சிரமமானது. ஏனெனில் இங்கே எழுதப்படுவை பல பண்பாட்டின் வேர்களில் இருந்து துளிர்ப்பவை. தத்துவங்கள் ஆராயப்படுகின்றன. ஆய்வாளர்களின் நேர்காணல்கள் அவ்வளவு அசல்தன்மையான கேள்விகளோடு உருவாகின்றன.
எழுத்தாளர் தாமரைக்கண்ணன் அவர்கள் எழுதியிருக்கும் “செவ்வேள் ஆடல்” என்ற சம்பந்தர் பற்றிய கட்டுரையை வாசித்தேன். அபாரம்! இன்றைக்குள்ள தலைமுறைக்கு இன்னொரு பொறுப்பு வாய்ந்த எழுத்துக்காரராக எழுத்தாளர் தாமரைக்கண்ணனைக் கூறலாம். இந்தக் கட்டுரைக்கு எவ்வளவு பக்கங்களை வாசித்து தொகுக்க வேண்டுமென்று அறிவேன். ஈடுபாடும் இலக்கியத்தை சேவிக்கும் பக்குவமும் கொண்ட உள்ளத்தால் உருவான ஆக்கம். இது சமயத்தின் பெருமைக்காக உருவாக்கப்பட்ட கட்டுரை அல்ல. நெடியதொரு பக்தி மரபின் பயணத்தை அறிமுகப்படுத்த எண்ணும் சிறந்த கட்டுரை.
“தனது தந்தையின் தோளில் ஏறி ஒவ்வொரு ஊராக சென்ற சம்பந்தர் அவரே நடந்து செல்ல முற்படுகிறார். சிறுபிள்ளை கால்நோக நடப்பது பொறாமல் இறைவனால் முத்துச்சிவிகை திருநெல்வாயில் அரத்துறை என்னும் தலத்தில் சம்பந்தருக்கு வழங்கப்பட்டது என்பது அவர் குறித்த அற்புதக்கதைகளுள் ஒன்று. எனவே சம்பந்தர் ஓவியங்களில் சிவிகையில் செல்பவராகவே காட்சியளிக்கிறார். இளவயதினரான சம்பந்தர் மதுரையில் நிகழ்த்திய அற்புதங்களை ஓவியங்களாக மேற்சொன்ன ஆலயங்களிலும் மதுரை மீனாட்சி ஆலய பொற்றாமரைக்குள ஓவியங்கள் வழியாகவும் அறியலாம்”.
http://www.kurugu.in/2023/09/4.html