நவீன எழுத்தாளர்கள் திரைக்கோ இம்மாதிரியான வெகுஜன நிகழ்ச்சிக்கோ வருவது நல்லது  என்பதே இன்று வரை என் நிலைப்பாடு.  நீங்கள் இக்கட்டுரையை எழுதும் சமயம் வரை மறுதரப்பை பரிசீலிக்கவே இல்லை என்றே தோன்றுகிறது. மறு தரப்பு எனும்போது பொறாமை குமுறல்களை குறிப்பிடவில்லை. மறு தரப்பின் முக்கியமான வாதமானது (அது பொது விவாதத்தில் இதுவரை எடுத்து வைக்கப்படாமல் இருந்திருந்தாலும் ) “வெகுஜன நிகழ்ச்சி எழுத்தாளனை மாற்றுமா இல்லை எழுத்தாளன் மாற்றப்படுவானா ?”

சற்றேறக்குறைய பதினோரு ஆண்டுகள் முன்பு தமிழின் பெரிய எழுத்தாளர் திரைப்படத்தில் ஈடுபடுவது குறித்து பேசிய தருணத்தில், இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் இந்தக் கேள்வியை  என்னிடம் கேட்டார்.  அவர் தரப்பு “எழுத்தாளன் மாற்றப்பட்டு விடுவான்” என்பதே. இதே கருத்தையே என்னைவிட முப்பது வயது அதிகமான, நவபாரதி என்ற புனை பெயரில் எழுதி வந்த நண்பரும் கொண்டிருந்தார்.

எழுத்தாளனை ஒரு idealist ஆக மனதில் உருவாக்கி கொண்டால் இப்படி நடக்க சாத்தியமே இல்லை. நடைமுறையில் பார்க்கும் போது தமிழ் திரைப்படத்துறை (எங்கு பெரிய பணம் விளையாடினாலும் இதுவே நடக்கும்) அத்தனை ஆளுமைகளையும்  ஏதாவது ஒரு வகையில் சலாமிட வைத்து இருக்கிறது.  தனி மனித சுதந்திரத்திற்கு முக்கியத்துவமளிக்கும் மேலைநாட்டு அலுவலகங்களிலும் , வியாபாரங்களிலுமே இது நடக்கும் போது , இன்னும் நிலப்பிரபுத்துவ மன நிலையிலிருந்து முழுமையாக விடுபடாத  இங்கும் நடப்பதில் ஆச்சரியமில்லை.

இப்படி யோசிக்கலாம் – பிக்பாஸ் போன்ற வெகுஜன நிகழ்ச்சியில் எழுத்தாளர்  ஒருவர் கலந்து கொண்டு  பொது புத்தியின் எண்ணத்திற்கு மாறாக ஒரு விஷயத்தை உரையாட முடியுமா? பொதுவான அரசியல் சரி நிலைகளை பேசினால் ஒரு பிரச்சினையும் வராது.  வெகுஜன கவனிப்பை நவீன இலக்கிய ஆக்கங்களுக்கு பெற்று தரலாம். ஆனால் அவர் எழுத்தாளராக, ஒரு இலக்கிய வாதியாக (அதாவது சமூக பொது மனத்தில் உயரிய விழுமியங்களை நிறுத்துபவராக ) அங்கு ஒன்றும்  செய்ய முடியாது.

எனக்கு மிகப்பெரிய பணம் அதில் வரும் லாபம் சார்ந்து நடக்கும் தொழில்களை பற்றி ஒரு புரிதல் உண்டு. அதில் ஒரு சௌகர்யம் உண்டு – அதில் உள்ள பணமும் லாபமும் மட்டுமே அதன் அளவீடு – மிகத் துல்லியமாக எந்த ஒரு சமயத்திலும் அளக்க முடியும். அதற்காக அது எதனுடனும் சமரசம் செய்யும். இதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம்.

இன்றைய திரைப்படத்துறையினரோ வெகு ஜன நிகழ்ச்சி நடத்துநர்களோ எழுத்தாளர்களை தேடி வரலாம். ஏனெனில்  சொல்லப்படாத கதையாடல்களை (narrative ) தேடி வருகிறார்கள். அது அந்த இலக்கியவாதியின் ஆன்மாவை காக்க  உத்திரவாதம்  அளிக்காது என்றே எண்ணுகிறேன். என் கருத்து தவறாக இருக்கலாம்.  ஆனால் உங்களை போன்று  நேரடியாக திரைத்துறையில் ஈடுபட்டுள்ளோர் சொல்வதையும் தொடர்ந்து கேட்டு வருகிறேன்.

இதற்காக ஒரு இலக்கியவாதி சினிமாவிலோ , பொது ஜன நிகழ்ச்சியிலோ ஈடுபடாமல் இருக்க முடியுமா? அங்கு தானே, அவன் ஆர்வம் சார்ந்த வேலையும் அதற்கான சம்பளமும் கிடைக்கும். இந்த ஆதாரமான கேள்விக்கு என்னிடம் விடையில்லை. ஆனால் ஈடுபட்டால் அலைக்கழிப்புகள் இருக்கும். இலக்கியவாதி தன் அறத்தை  இழக்காமல் இருக்க வேண்டும் – செய்யக்கூடியதே. அனைவராலும் செய்ய முடியுமா – முடியாது என்பதே என் புரிதல். அதையே ஒருசில சமகால நிகழ்வுகளும் காட்டுகின்றன.

  • பாலாஜி என்.வி

         பெங்களூர்

அன்புள்ள பாலாஜி!

உங்களுடைய கருத்துக்களும் நிலைப்பாடும் ஒருவிதமான கரிசனத்தோடு இருப்பது மகிழ்ச்சி. எழுத்தாளன் ஒருவன் தன்னுடைய அசல்தன்மையை இழக்காமல் சினிமா, வெகுஜன நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கெடுக்க வேண்டுமென விரும்பும் அதேவேளையில் அது சாத்தியமில்லையென கூறுகிறீர்கள். இந்த விவாதம் நெடுங்காலமாக நிகழ்வது. சென்ற தலைமுறையிலுள்ள தீவிர இலக்கியவாதிகள் பலர் தம் லட்சியவாதத்தின் கூர்த்தன்மையை  சினிமாவெனும்  சாணைக்கல்லிலேயே  கூர் பார்த்தார்கள். சினிமாத்துறையை திட்டுவது தம் அறிவுஜீவித்தனத்தின் பிரதானமான அடையாளமென கருதினார்கள். “பட்டினி கிடந்து செத்தாலும் சாவேன் – இந்தச் சினிமாச் சாக்கடையில் வீழ்வேனோ” என்று அறிக்கைகளும் பிரகடனமும் செய்தார்கள். சினிமா இயக்குனர்களுக்கு எதுவும் தெரியாதென  ஏளனம் செய்து, தம்மை அதிபுத்திசாலிகளாக, அதி உன்னதர்களாகப் பாவனை செய்தனர்.

அந்த மரபில் வந்தவர்கள் இன்று சினிமாக்காரர்கள் இல்லாமல் தங்களுடைய புத்தகங்களை வெளியிடுவதில்லை. சினிமா நிகழ்வுகளில் முன்னிருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். தாங்கள் எழுதிய புத்தகமோ, கதையோ  திரைப்படமாக ஆக்கப்படுகிறது என்றால் ஒருவகையில் அதன்மீது குவியும் வாசக கவனத்தை நினைத்து மகிழ்கிறார்கள். பதிப்பகங்களே புத்தகத்தின் அட்டைப்படத்தை அது திரைப்படமாக ஆக்கப்பட்டதை சுட்டிக்காட்டும் விதமாக வெளியிடுகிறார்கள். இது இன்றைய சந்தைக்கு தேவையான ஊட்டம். அதனை நான் மகிழ்வுடன் ஊக்குவிப்பேன். ஒரு எழுத்தாளனை லட்சோப லட்ச வாசர்களுக்கு கொண்டு செல்லப்படும் ஊடக உதவியை சினிமா தான் முன்னெடுக்கிறது.

இன்னொரு தரப்பில் நேரடியாக மறுப்புச் சொல்லினர். திரைப்படத்திற்கு பாடல் எழுத அழைத்தபோது மரியாதைக்குரிய அய்யன் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் கூறிய “அம்மி கொத்த சிற்பி எதற்கு?” என்ற சீண்டலான கேள்வியை ரசித்து இறுகப்பற்றிக் கொண்டவர்கள் பலர். ஆனால் அவரிடமிருந்து கிளைத்தெழுந்த இளவல்கள் திரையிசைப் பாடல் துறையை முழுதாகக் கைப்பற்றி எவ்வளவு அருமையான பாடல்களை எழுதினார்கள் என்பதெல்லாம் வரலாறு. சினிமாவுக்கும் எழுத்தாளனுக்கும் ரொம்பத் தூரம் என்கிற கூற்று ஒரு மாயை. நவீன இலக்கியத்தோடும் கணையாழி போன்ற செம்மார்ந்த இலக்கிய சிறுபத்திரிக்கையில் தன்னை இணைத்துக் கொண்டும் திரைக்குப் பாடல் எழுதவந்த யுகபாரதி திரைப்பாடல்களின் மாமன்னனாக இன்று மிளிர்கிறார். “எள்ளு வய பூக்கலையே” என்றபாடல் திரையிசை வரலாற்றின் அழியாத் தடம்.

எல்லாத்தலைமுறையிலும் சினிமாவை சீண்டல் செய்யும் இலக்கியக்காரர்கள் இருந்து வருகின்றனர். வினோதம் என்னவென்றால் நம் நவீன இலக்கியப்பெருமைகளான எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் உட்பட ஒரு பெருநிரை தொடர்ந்து பணியாற்றிவருகின்றது.  திரைத்துறையில் எழுத்தாளர்களின் பங்களிப்பு எப்போதும் அவசியமாயுள்ளது.  தொலைக்காட்சித் துறையிலும் பல எழுத்தாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மலையாளத்தில் எனதருமை எம்.டி வாசுதேவன் நாயர் சினிமாவில் கோலோச்சியவர். அவர் அங்கெல்லாம் நீர்த்துப் போனவரில்லை. இங்கும் எந்த எழுத்தாளனும் சினிமாவுக்குச் சென்று நீர்த்துப்போகவில்லை என்பதே எனது கருத்து.

எழுத்தாளர்களான சுஜாதாவையும், பாலகுமாரனையும் தமிழ்த் திரையுலகம் மறுக்காது. ஆனால் நான் மேற்கூறிய நவீன எழுத்தாளத் தரப்பு மறுக்கும். ஏனெனில் அது இலக்கிய அர்த்தகங்களாலான வாதம். நவீன இலக்கியத்திற்கும் வெகுஜன இலக்கியத்திற்குமான மரபான தழும்பு. எனக்கு இந்த இருவரும் முக்கியமானவர்கள். தமிழ்  சினிமாவில் நாம் கொண்டாடும் பல படங்களுக்கு எழுதியவர்கள்.நாயகன், இந்தியன் போன்ற இரண்டு படங்களையும் உதாரணாமாக சுட்டிக்காட்டுகிறேன். நவீன இலக்கியத் தரப்பினால்  நிராகரிக்கப்பட்டு சினிமாவுக்கு சேவகம் செய்கின்றனர் என்று வசைபாடப்பட்டனர்.  அதன்பொருட்டு சினிமாவுக்கும் நவீன இலக்கியவாதிக்கும் தொடர்பில்லை என எல்லைகள் வகுத்தனர். சினிமாவுக்கு எழுதுபவன் வெகுஜன எழுத்தாளனென முத்திரை குத்தப்பட்டனர். இந்தத் தரப்பின் அர்த்தத்தில் பார்த்தால்  புதுமைப்பித்தனும், ஜெயகாந்தனும் எனத் தொடரும் நிரையே வெகுஜன ரசனை சார்ந்த எழுத்தாளர்கள் என்றல்லவா ஆகிவிடும். இந்த வறட்டுவாதத்தின் தொடர்ச்சியாகவே உங்களுடைய கருத்துக்களை சிலவற்றையும் இனங்காண முடிகிறது.

என் திரைத்துறை அனுபவத்தில் சொல்கிறேன். எழுத்தாளன் சினிமாவுக்காக மண்டியிடுவான். சலாமிடுவான் என்பதெல்லாம் கண்மூடித்தனமான ஊகங்கள். அடையமுடியாத தூரத்தைப் பற்றிய பயத்தின் வெளிப்பாடு. எனக்குத் தெரிந்து திரைத்துறையில் பணியாற்றிய, பணியாற்றும் எந்தவொரு எழுத்தாளனும் சலாம் போட்டு வயிறு போற்றும் ஆளில்லை. அங்கு அவனுக்கு எது தேவையோ, வழங்கப்படுகிறது. எழுத்தாளனின் செளகரியம் முக்கியமானதாக இருக்கிறது.  இந்திய சினிமாவின் பெருமைமிகு இயக்குனரான மரியாதைக்குரிய மணிரத்னம் அவர்களோடு  பணிபுரிந்திருக்கிறேன். ஒரு எழுத்தாளனாக எப்போதும் என்னை மதிக்கிறவர். எழுத்தாளர் ஜெயமோகனை அவர் வரவேற்பதையும், விடைகொடுப்பதையும் பல தடவைகள் அலுவலகத்தில் பார்த்திருக்கிறேன். எழுத்தாளன் எங்குமே சிறந்தவனெனும் மாண்பும் மரபும் அறிந்தவர்கள் சினிமாத்துறையில் இருக்கின்றனர்.

இலக்கிய விமர்சகர் வெங்கட்சாமிநாதன் சொன்னதைப் போல எழுத்தாளன் மாற்றப்பட்டுவிடுவான் என்பதெல்லாம் அதிரடிக் கருத்து. அதற்கு எந்தப் பெறுமதியும் இல்லை. சினிமா என்பது வணிகம். அங்கு சென்ற எழுத்தாளன் நாவல் எழுத முடியாது. வெகுஜன ரசனைக்கு ஏற்ப சிலவற்றை எழுதத்தான் வேண்டும். என்னுடைய இலக்கிய கோட்பாட்டை நிலைநிறுத்த இன்னொரு இயக்குனரின் பசியில் உலைவைக்க முடியாது. அங்கு நானொரு ஊழியன். அந்தக் கலைக்கு என்னுடைய உதவி தேவைப்படுகிறது. ஊதியத்துடன் உதவி. அவ்வளவு தான். அங்கு சலாம் போட்டு ஊன் வளர்க்கும் நிர்க்கதி எதுவும் எழுத்தாளனுக்கு இல்லை. அப்படிச் சலாம் போடச் சொல்லும் இடங்களில் அசலான எழுத்தாளனால் தங்க முடியாது.

இன்றைக்குள்ள திரைத்துறை என்பது மிகத்தீவிரமான இலக்கிய ஆக்கங்களையும், அதனை எழுதும் படைப்பாளிகளையும் நோக்கி வந்துவிட்டது. ஓ.டி.டி தளங்களின் வருகை கதைகளுக்கான தட்டுப்பாட்டை வழங்கிவிட்டது. இத்தனையாண்டு காலம் திரைப்படங்களில் நிகழ்த்தப்பட்ட கதாநாயகன் – வில்லனைக் கொன்று தர்மத்தை நிலைநிறுத்துகிறான் என்ற கதையுலகு அலுத்துவிட்டது. அப்படியாயின் இங்கே எழுத்தாளர்கள் தேவைப்படுகிறார்கள். சினிமா வேண்டுவெதெல்லாம் அதிசிறந்த கதையைத் தான். அதிசிறந்த கதையை இலக்கியத்தில் தான் கண்டு பிடிக்க முடியும்.

மிகச் சமீபத்தில் எழுத்தாளர் இமையத்தின் “தாலி மேல சத்தியம்” என்ற சிறுகதை தொகுப்பிலுள்ள “கவர்மண்ட் பிணம்” என்றொரு கதையை வாசித்தேன். நாம் சந்தித்த கொள்ளை நோய் காலத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. மிகமிகச் சிறப்பான கதை. இன்றுவரை எத்தனையோ இயக்குநர்களிடம் அது குறித்து சிலாகித்திருக்கிறேன். ஒருசில இயக்குனர்கள் உடனடியாக வாங்கிப் படித்து என்னிடம் அந்தக் கதை குறித்து உரையாடினர்.

இன்றைக்கல்ல என்றைக்குமே சினிமாவுக்குத் தான் எழுத்தாளன் தேவைப்படுகிறான்.  ஆனால் இன்று நிகழ்வது எழுத்தாளர்களின் சினிமா யுகம். எங்கு சென்றாலும் அடித்துச் செல்லப்படும்  கூழாங்கல் அல்ல எழுத்தாளன். பாறாங்கல். அவன் பேரலைகளால் நீராட்டப்பட்டவன்.

  • அகரமுதல்வன்

 

 

 

 

 

 

Loading
Back To Top