எழுத்தாளர் அகரமுதல்வனுக்கு !
அன்பின் ஞானசேகரன்!
சமூக வலைத்தளங்களில் உருப்படியாக எழுதுகிற அரிதிலும் அரிதானவர்கள் இருக்கின்றனர். நீங்கள் குறிப்பிடுபவர்கள் பெருந்தொகையினர். அவர்கள் எழுத்து, இலக்கியம் என்பதெல்லாம் அறியாதவர்கள். ஒரு நாளின் இணைய வசதி தீர்கிற வரை (Data) எல்லாவற்றுக்கும் பதிவெழுதி தங்களுடைய இருப்பை அறிவிப்பவர்கள். அவர்களிடம் ஆழமாகவோ நிதானமாகவோ எந்த உரையாடலையும் உங்களால் நிகழ்த்த முடியாது. தமது சேகரத்தில் எப்போதும் வசவுகளும் அவதூறுகளும் குறையாதென்பது அந்தத் தரப்பின் நம்பிக்கை. ஏனெனில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற தமது தரப்பின் எண்ணிக்கையைப் பார்த்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர். “எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்று” என்பது சமூக வலைத்தள மனோபாவம். இது உருப்பெருத்து இன்று நோயாக மாற்றம் கண்டிருக்கிறது. என்னுடைய நண்பரொருவர் உறக்கத்திலிருந்து கண் விழித்ததும் முகநூலில் பதிவு எழுதுவார். உலகம் தன்னுடைய பதிவை வாசித்ததும் இயங்கத் தொடங்குகிறதென நீண்ட நாளாக நம்பி வாழ்கிறார்.
உண்மையில் சமூக வலைத்தளம் அரிய வாய்ப்பு. சிறந்த தளம். ஒவ்வொருவரும் தம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்தும் ஊடகவெளி. இப்போது போல கெடுபிடியான தணிக்கைகள் தொடக்கத்தில் இல்லை. அனைத்து தரப்புச் சக்திகளுக்கும் பொதுவான ஊடகமாக அமைந்தது. ஏனெனில் நம்முடைய சூழலில் இந்தமாதிரியான ஜனநாயகத் தன்மை பொருந்திய வெளிப்பாட்டுத் தளத்துக்கு முன்னுதாரணங்கள் இல்லை எனலாம். ஆனால் இங்கும் தர்க்கத்துடன் விவாதம் செய்வதை விடுத்து அவதூறுகளால் உரையாட முடியுமென கருதினார்கள். வசவுகளாலும், கீழ்மையான தனிமனித குணக்குலைப்புக்களாலும் எதிர்க்கருத்தை கையாளத் துணிந்தனர். திரைப்பட நாயகர்களின் ரசிகர்கள் மோதலில் ஈடுபடுவதை விடவும் அருவருக்கத்தக்க முறையில் வாதங்கள் நிகழ்ந்தன. கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. முகஞ்சுழிக்கும் சூழலை அங்கு வளர்த்தெடுத்த பெருமளவிலானவர்கள் தம்மை அறிவுஜீவிகளென சொல்லிக்கொண்டவர்கள். இலக்கிய வாசகர்களாக தம்மை முன்வைத்தவர்கள்.
எழுத்தாளரொருவரின் இலக்கியத்தின் மீது வெறும் காழ்ப்பைக் கொட்டி எழுதப்படும் பதிவுகளுக்கு ஆதரவு திரட்டி விருப்பக்குறி வாங்கியவர்களை எல்லாம் அறிவேன். அதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் உள்ளன. இன்றைக்கும் இப்படியான கீழ்மைகளை முகநூலில் விதைப்புச் செய்பவர்கள் அறிவுஜீவிகள் எனக்கருதப்படுகிறார்கள். “நாளுக்கொரு பிரச்சனை. நாளுக்கொரு நிலைப்பாடு. நாளுக்கொரு பதிவு ” என்பது அவர்களுக்கு பிராணம் ஆகிவிட்டது.
சமூக வலைத்தளங்களில் பதிவுகள் எழுதுவதாலேயே ஒருவர் எழுத்தாளராக புரிந்து கொள்ளப்படுவதாக உங்கள் நொம்பலத்தை தெரிவித்திருக்கிறீர்கள். அப்படி நிகழவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தீவிரமாக இலக்கியத்தை தரிசிக்க விரும்புவர்கள் இவர்களை எழுத்தாளர்களாக கருதுவதில்லை. சமூக வலைத்தளத்தில் சிலர் தங்களைத் தாங்களே “Opinion Makers” எனக் கருதுகிறார்கள். அவர்களுடைய கருத்துக்கு அங்கும்தான் ஒரு பெறுமதியுமில்லை. என்னுடைய இன்னொரு நண்பர் முகநூலில் குடியிருப்பவர். தன்னையொரு இலக்கியவாதியாக உள்ளூர நம்பக்கூடியவர். பெரிதாக இலக்கிய வாசிப்பற்றவர். வெகுஜன எழுத்துக்களை வாசித்து நிறைவடைபவர். அவர் எழுதும் பதிவுகளை நெருக்கமான நண்பர்களுக்கு அனுப்பி வைத்து ஒரு விருப்பக்குறியை கேட்டு வாங்கி வண்டி ஓட்டுகிறார். இவரைப் போல பலரை எனக்குத் தெரியும். இவர்களையெல்லாம் எழுத்தாளராக கருதினால் தமிழின் பல்லாயிரமாண்டு இலக்கியச் செழுமைக்கு நாம் செய்வது எத்தனை பெரிய துரோகமென்று அறிவேன்.
இன்னொரு திசையில் சமூக ஊடகங்களில் எழுதுவதற்கு வெளிகளற்றிருந்த புதிய சக்திகள் முளைவிட்டனர். அவர்கள் நம்பிக்கையளித்தனர். அந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களில் நானுமொருவன். அற்பமான விவாதங்களில் ஈடுபடுவதில்லை. என்னுடைய ஒரு கவிதையையோ, கதையையோ, ஒரு முக்கிய அறிவிப்பையோ அங்கு வெளியிடுவேன். இன்றைக்கு என்னை வாசிப்பவர்கள் பலரும் அங்கிருந்து என்னைத் தொடரத் தொடங்கியவர்கள். இந்தத் தலைமுறையில் முகநூலை தன்னுடைய சிறுபத்திரிக்கை போல ஆக்கிக் கொண்ட எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர் முகநூலில் எழுதினாரே தவிர, அது முகநூல் கோரும் தட்டையான எழுத்தல்ல என்பதை தொடக்கத்திலேயே இனங்கண்டேன். இன்று சமகால தமிழ் சிறுகதைகளின் முக்கிய முகமாக கார்த்திக் புகழேந்தி ஏற்றம் கண்டு மிளிர்கிறார் என்றால் மிகையில்லை. எனக்குத் தெரிய அத்தனை வாசகர்களை அவர் முகநூல் மூலமாக திரட்டியிருக்கிறார்.
எழுத்தாளர் நிலையென்பது முதன்மையாக நல்லூழ். எல்லையற்ற பொறுப்பு எழுத்தாளரிடத்தே வந்து சேர்கிறது. கொந்தளிப்புக்களாலும், அவலங்களாலும் துன்பம் சுமந்தும் மொழிக்கு அமுதூட்டும் சேவிப்பை எழுத்தாளர்களே செய்கிறார்கள். கபாடபுரம் எழுதிய புதுமைப்பித்தன் தமிழ் மொழிக்கும் இனத்துக்கும் முதுசம். எழுத்தாளன் குழாயடிச் சண்டைக்கெல்லாம் கருத்துச் சொல்ல வேண்டுமென எந்தக் கட்டாயமும் இல்லை. சமூக வலைத்தளங்களில் ஏதேனுமொரு பிரச்சனை பேசுபொருளாக இருக்கிறபோது உங்கள் கருத்தை எழுதுங்கள் என்கிற நண்பர்களை தவிர்த்து வந்திருக்கிறேன். அவர்கள் எழுத்தாளரை எப்படி எண்ணுகிறார்கள் என்று விளங்கவில்லை. ஆனால் எழுத்தாளர் என்பவன் அவர்கள் நினைத்ததைப் போலில்லை என்று உணர்த்தினேன்.
என் எழுத்தூழியப் பயணத்தில் அகச்சூறை குறையவில்லை. அதே கொதிப்பும் கொந்தளிப்பும் அடங்கவில்லை. என்னுடைய எழுத்துக்கள் ஊழியின் நினைவுகளாய் மட்டும் சுட்டிக்காட்டப்படாது. மாறாக அது போரை மறுக்கும் உலகளாவிய அமைதிக்கான குரலாக முதன்மையாக்கப்படும். கொடூரமான இனப்படுகொலையைச் சந்தித்த ஓரினத்தின் பண்பாட்டையும், அதன் தொன்மங்களையும் என் எழுத்துக்கள் சுமக்கின்றன. போரில் கொல்லப்பட்டு ஈமக் கிரிகைகள் செய்யாது கைவிடப்பட்ட என் சனங்களின் ஆன்மாக்களுக்கு நானளிக்கும் பலிச்சோறும் பிதிர்க்கடனும் என் இலக்கியம். முள்ளிவாய்க்கால் என் விளைநிலம். நான் அகத்துக்கும் சமூகத்துக்கும் மீண்டும் மீண்டும் அளிப்பது அறத்தை தவிர எதுவுமில்லை. இந்த நூற்றாண்டின் காயங்களுக்கும் தழும்புகளுக்கும் அறம் போல் மாமருந்தில்லை என்று சொல்லும் தகமை எழுத்தாளனுக்குத்தான் உண்டு. அதைத்தான் வள்ளுவன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்னான். இன்று நானும் சொல்கிறேன்.
“அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு”
நன்றி.