அகரமுதல்வனுக்கு! ஒரு சந்திப்பில் நீங்கள் பரிந்துரைத்த புத்தகங்கள் சிலவற்றை வாசித்து முடித்திருக்கிறேன். இந்த அனுபவத்துக்கு பிறகு இலக்கிய வாசிப்புக்கு வழிகாட்டல் அவசியமென எண்ணுகிறேன். உங்களைப் போன்ற இலக்கியவாதியொருவர் பரிந்துரைக்கும் புத்தகங்களை வாசித்தாலே போதுமெனத் தோன்றுகிறது. அடுத்த கட்டமாக சில நூல்களை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • கிருஷ்ணா

வணக்கம் கிருஷ்ணா! நான் பொதுவாகவே நூல்களைப் பரிந்துரைப்பதில்லை. ஏனெனில் வாசிப்பின் தொடக்கத்திலிருக்கிற ஒருவர் முட்டிமோதிக் கண்டடைய வேண்டுமென விரும்புவேன். எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப்படும் நூல்களை மட்டுமே வாசிப்பவர்கள் இன்று பெருகியுள்ளனர். இவர்கள் ஒரு வகையினர். இந்தப் போக்கின் மீது எனக்கு சில விலகல்கள் உண்டு. ஞானத்தை தேடுபவன் கண்டடைவான். பரிந்துரைகளிலும், பட்டியல்களிலும் நிறைவு கொள்பவர் வாசிப்பவராக இருக்கலாம். ஆனால் ஒருபோதும் இலக்கியத்தை தீவிரமாக்கி கொண்டவராக ஆகிவிடார். ஒருவர் என்னிடம் புத்தகங்களை பரிந்துரையுங்கள் என்றால், இதற்கு முன்பு என்ன வாசித்திருக்கிறீர்கள் என்று கேட்பேன். அதன்பிறகு தான் என்னுடைய பரிந்துரைகளைக் கூறுவேன். உங்களிடமும் அப்படித்தான் சில நூல்களை பரிந்துரை செய்தேன். நான் கூறியவற்றில் சிலவற்றை வாசித்திருக்கிறீர்கள். அந்த வகையில் மகிழ்ச்சி. இனி நீங்களே கண்டடையுங்கள். இதுவரை வாசித்த எழுத்துக்களில் இருந்து – படைப்பாளிகளை இனங்காண முடியுமென நீங்கள் நம்பினால்  அவர்களின் ஏனைய நூல்களையும் வாசியுங்கள். அதுவே சிறந்த செயல்.

எழுத்தாளர்கள் பட்டியலிடும் புத்தங்களை மட்டுமே படிப்பேன் என கங்கணம் கொள்ளாதீர்கள். அது உங்களின் இயல்பான விசையை அழித்துவிடும். மோதுண்டு கண்டடையுங்கள்.  ஒருவகையில் நல்ல இலக்கியத்தை வாசிப்பின் வழியாகக் கண்டடைவதே பேரானந்தம் . அப்படித்தான் நான் பலரைக் கண்டடைந்தேன். அவர்களில் பலரையும் எந்தப் பட்டியல்களோ, பரிந்துரைகளோ சொன்னதேயில்லை.

நன்றி.

 

Loading
Back To Top