ழுத்தாளர்களை நேர்காணல் செய்வதற்கு சிலருக்கு எந்த ஆயத்தங்களும் வேண்டியதில்லை. அவர்களே எப்போதுமுள்ள சில ரெடிமெட் கேள்விகளோடு சந்திக்க துணிவார்கள்.  என்னை நேர்காணல் செய்ய விரும்பி வந்த பல அழைப்புக்களை மறுத்திருக்கிறேன். சோர்வு தரக்கூடிய சடங்கான கேள்விகளைக் கேட்பார்கள் என்கிற தயக்கமே காரணம். “உங்களுடைய இளமைக்காலம் குறித்துச் சொல்லுங்களேன்” என்பதே அந்தச் சடங்கின் நமஸ்கார கேள்வி. நான் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவே எண்ணுவேன். ஒரு படைப்பாளிக்கு இவ்வளவு கூர்மை அவசியமாவென நண்பர்கள் கேட்பதுண்டு. நான் பன்மடங்கு உறுதியோடு ஆமாம் என்பேன்.

மேற்சொன்ன எந்த தயக்கமோ, அசம்பாவித எச்சரிக்கையுணர்வோ அல்லாமல் இந்த நேர்காணலை மனமுவந்து மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டேன். ஏனெனில் அழைத்தது அன்பு நண்பர் எழுத்தாளர் பரிசல் கிருஷ்ணா. புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவின் தலைமை பொறுப்பதிகாரியாக பதவி வகிக்கிறார். இலக்கிய வாசிப்பும்  சேவிப்பும் கொண்டவர். தன்னுடைய கையெழுத்தின் வழியாக நூற்றுக்கு மேற்பட்ட கவிஞர்களின் கவிதைகளை எழுதி இணைய வெளியில் பேசு பொருளாக்கியவர். அலங்காரமாயும் உறுப்பமைந்தும் காணப்படும் கையெழுத்தால் பெயர் பெற்றவர். இந்த நேர்காணல் அவரின் கையெழுத்தைப் போலவே உறுப்பெழுத்தாக துலங்கி வந்திருக்கிறது.

பொதுவாகவே ஈழத்தமிழ் எழுத்தாளர் என்பதால் எதிர்கொள்ளும் வாடிக்கையான கேள்விகள் இந்த நேர்காணலில் இல்லை. பரவிப் பாய்ந்து பல்வேறு விஷயங்களை உள்வாங்கிக் கொண்டது. நேர்காணலாகத் தொடங்கி பின் உரையாடலாக முடிந்ததொரு சுகச்செய்தியாக மாறிற்று. இயல்புடன் திளையும் நேசமும், இலக்கியமும் அந்தச் சுகத்தை தந்தது. அறிவியக்கத்தின் சுக நீட்சி.  கேள்விகளாலும் பதில்களாலும் ஆவதென்ன? என்ற கேள்விக்கு  ஏற்கனவே உருவான கேள்விகளும் பதில்களும் ஆக்கியது என்ன? என்ற பதில் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் கேள்வி பதில்கள் எழட்டும். உரையாடல் நீளட்டும். வாய்ப்பிருப்போர் காண்க!

Loading
Back To Top