அன்பின் அகரமுதல்வனுக்கு!

நான், தனியார் கல்லூரியொன்றின் மாணவன். எங்கள் கல்லூரியில் நடைபெறும் விழாக்களில் உரை நிகழ்த்த எழுத்தாளர்களை அழைத்து வர விரும்பினேன். என்னுடைய துறைசார்ந்த தலைமைப் பேராசிரியரிடமும் விருப்பத்தைத் தெரிவித்தேன். கண்டிப்பாக கூப்பிடலாமே என்று சில பெயர்களைப் பரிந்துரைத்தார். அவர்கள் எல்லோரும் பேஸ்புக்கில் நாளாந்தம் பதிவுகளை எழுதுபவர்கள். வேறு எந்த இலக்கிய மதிப்பும் அல்லாதவர்கள். “சார், இவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் இல்லை. பேஸ்புக் பதிவர்கள்” என்றேன். அவர் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. “அப்படியா, நீ எந்தமாதிரி எழுத்தாளர்களைச் சொல்கிறாய் ” என்று கேட்டார்.  உங்களையும் இன்னும் சில எழுத்தாளர்களின் பெயரையும் சொன்னேன். “இந்தப் பெயர்களையெல்லாம் நான் கேள்விப்பட்டதேயில்லையே, இவர்கள் எல்லாமும் பேஸ்புக்கில் இல்லையா” என்றார். உண்மையில் இவ்வளவு சலிப்பையும் சோர்வையும் தரக்கூடிய ஒரு அனுபவம் நேர்ந்திருக்ககூடாதென எனக்குள் நானே கலங்கிக்கொண்டேன்.

  • ப்ரேம்குமார்

வணக்கம் ப்ரேம்குமார்!

உங்களைப் போன்று இலக்கியத்தோடு தீவிர பிணைப்புக் கொண்ட மாணவர்கள் பலரையும் அறிவேன். அவர்கள் எல்லோருக்கும் இதைப்போன்ற வெவ்வேறு தன்மையிலான அனுபவங்கள் உண்டு. என்னுடைய வாசகராகவிருந்த மாணவரொருவர் தான் கல்வி பயின்ற தொழில்நுட்ப கல்லூரிக்கு விருந்தினராக அழைத்திருந்தார். என்னை அழைக்கும் போதே “அண்ணா, கல்லூரியில் குறைந்த அளவு தான் பணம் தருவார்கள். எனக்காக பொறுத்துக்கொள்ளுங்கள்” என்றார். நானொரு உண்மை வாசகனின் விருப்புக்காக மட்டுமே ஒத்துக்கொண்டு அங்கு சென்றேன். கூடியிருந்த மாணவர்களிடையே ஒருமணி நேர உரையாற்றினேன். தமிழின் உன்னதமான நாவல்களைப் பற்றிய பரந்துபட்ட அறிமுக உரையாக அமைந்தது.

உரைக்குப் பிறகு பேராசிரியர்கள் சிலர் “சிறந்த உரை, எங்களுக்கு பெரிய புத்துணர்ச்சியாக இருந்தது” என்றார்கள். இந்தப் பாராட்டுக்கள் சடங்கியலானவை. சுயமுன்னேற்ற உரையாளர்களிடம் சொல்லிப்பழகிய வார்த்தைகள். நான் அவற்றை பொருட்படுத்தவில்லை. கல்லூரிப் பெயர் அச்சிடப்பட்ட வெள்ளை நிற தபால் உறையை நீட்டி, “எங்களால் தர முடிந்தது” என்ற உயர் நிர்வாகியிடம் உண்மையான புன்னகை கூட இருக்கவில்லை. அவருடைய உடலில் யாசகமிடுபவனின் தோரணை. அவ்வளவு அருவருப்பான உடல் மொழியை எழுத்தாளன் சகிக்க வேண்டியதில்லை. அந்த தபால் உறையை கைநீட்டி வாங்காமல்,  உங்கள் கல்லூரி நடத்தும் சமூக சேவைகளுக்கேதேனும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றேன். இல்லையில்லை இது உங்களுக்கானது என்றார். கண்டிப்பாக நான் வாங்கப்போறதில்லை என்று மறுத்துவிட்டேன். கார் வரை என்னோடு வந்த மாணவன், உங்களுடைய எழுத்து, பேச்சு எல்லாவற்றையும் விட ஒருபடி மேலானது, இந்த எழுத்தாளக் கர்வமெனச் சொல்லி என்னை அணைத்துக் கொண்டார். “நீங்கள் இப்போது அளித்த இவ்வளவு பெரிய மானசீகமான சன்மானத்தை அந்த உறையில் வைக்க இயலாது அல்லவா” என்று புன்னகைத்து விடைபெற்றுக் கொண்டேன்.

இன்னொரு சம்பவம். எனக்குத் தெரிந்த பேராசிரிய நண்பர். வாசிப்பு பழக்கம் கொண்டவர். தான் பணியாற்றும் கல்லூரிக்கு என்னை உரையாற்ற அழைக்க வேண்டுமென முயன்று கொண்டேயிருந்தார்.  அவரின் விருப்பத்தில் இன்னும் இரண்டு எழுத்தாளர்களும் அடக்கம்.  ஒருமுறை கல்லூரி நிகழ்வுக்கு எங்களை அழைக்கலாமென பரிந்துரைத்திருக்கிறார்.  ஏனைய நிர்வாகிகள் தொலைக்காட்சி பிரமுகர்களை அழைக்கலாமென கூறியிருக்கிறார்கள். இவர் எழுத்தாளர்களை கூப்பிடலாம், அதுதான் பயனுள்ளதாக இருக்குமென மீண்டும் வாதாடி இருக்கிறார். இறுதியில் தொலைக்காட்சி பிரமுகர்கள் வருகை உறுதியாகியிருக்கிறது. கல்லூரிக்கு உரையாற்ற வருவதற்கு பணப்பேரம் நடந்திருக்கிறது. கல்லூரி நிர்வாகம்  சொல்லும் பணத்திற்கு தொலைக்காட்சி பிரமுகர்கள் வரமுடியாதென கூறிவிட்டார்கள். உடனடியாக எழுத்தாளர்களையே கூப்பிடலாமென தாராள மனம் கொண்டு அதே பேராசிரியரிடம் வந்திருக்கிறார்கள். என்னையழைத்து எவ்வளவு பணம் கேட்கட்டும் என்றார். தொலைக்காட்சி பிரமுகர்கள் கூறிய தொகையை விடவும் பத்தாயிரம் அதிகம் கேளுங்கள் என்றேன். மொத்தப் பேரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். “எழுத்தாளக் கொழுப்பு” என்றிருக்கிறார்கள். “இருக்கட்டுமே, யாரோ எழுதிய வசனத்தை டிவியில நின்னு பேசுறவங்களுக்கே இம்மாம் பெரிய கொழுப்பு இருக்கும் போது, சுயமா எழுதவும் பேசவும் தெரிஞ்ச படைப்பாளிக்கு இருக்கட்டுமே” என்றிருக்கிறார் பேராசிரிய நண்பர்.

இரண்டு வருஷங்களுக்கு முன்பாக கல்லூரியொன்றின் தமிழ் துறைக்கு உரையாற்ற சென்றிருந்தேன். அந்தப் பேராசிரியர் மாணவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. இலக்கியமே வாசிப்பதில்லையென பழைய ஆர்மோனியத்தையே வாசித்தார். தேநீர் சாப்பிட்டுக் கொண்டே “சமீபத்தில் நீங்கள் என்ன வாசித்தீர்கள் அய்யா” என்று கேட்டதும், அவருக்கு தேநீர் கசந்து விட்டது. இப்போது புத்தகங்கள் படிப்பதே குறைந்து விட்டது. ஆனாலும் போனவாரம் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பை மீள்வாசிப்புச் செய்தேன் என்றார். இந்த மீள்வாசிப்பு பொய்களை இலக்கியவாதிகளே உதிர்ப்பார்கள். இப்போதுதான் ஒரு புத்தகத்தை முதன்முறையாக வாசிக்கிறேன் என்று சொன்னால் என்ன கெளரவக் குறைச்சலோ தெரியவில்லை. புத்துயிர்ப்பு நாவலா? சிறுகதையா? என்று கேட்டேன். “சிறுகதை தொகுப்புத்தான். ரெம்ப முன்ன வாசிச்சது, மறுபடியும்…” என்றார். எவருக்கும் குருவாகவிருக்க தகுதியற்ற பொய்யனென அவரை அடையாளம் கண்டேன். மாணவர்களுக்கு உரை நிகழ்த்தினேன். பிறகு உரையாடல் நிகழ்ந்தது. அங்கிருந்த சில மாணவர்கள் தீவிர இலக்கியத்தில் பிரபலமான சில புத்தகங்களை வாசித்திருந்தனர். அவர்கள் இன்னும் மேலெழுந்து வர சில ஆலோசனைகளைக் கேட்டனர். அந்த நாள் இனிமை தரக்கூடியதாக இருந்தது.

பொதுவாகவே கல்வி நிலையங்களுக்குள் எழுத்தாளர்களின் வருகைக்காக போராடுபவர்கள் இலக்கியம் அறிந்தவர்களே. அவர்கள் அளவில் மிக மிக சொற்பமானவர்கள். பலபேரோடு பொருதி எழுத்தாளரொருவரை அழைத்து உரையாற்ற வைக்கின்றனர். அவர்கள் எப்போதும் வணக்கத்துக்குரியவர்கள். கல்விப் புலத்தில் சிறு அசைவயேனும் நிகழ்த்த எண்ணுபவர்கள். இந்தச் சொற்பமானவர்களுள் மாணவர்கள், பேராசிரியர்கள், நிர்வாகிகள் எனப் பலருமுண்டு. அங்கு முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இவர்களின் பரிந்துரையைப் புரிந்து கொள்ளக்கூடியவர்களாக இருக்கவேண்டும். இல்லையேல் வழமை போல தொலைக்காட்சி, பட்டிமன்ற பிரமுகர்கள் ஆற்றும் நகைச்சுவை துணுக்குகள் மட்டுமே கல்வி நிலையங்களில் ஒலிக்கும். இது நம்முடைய காலத்தில் கவியும் ஊழ்.

இதனால் எழுத்தாளனுக்கோ, உங்களைப் போன்ற இலக்கிய வாசர்களுக்கோ தீங்கில்லை. ஒருவகையில் நீங்கள் கொடுப்பினைக்காரர்கள். இத்தனை அல்லலுக்கும் நடுவில் எழுத்தாளர்களை அழைக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் குரல் கொடுப்பதே உன்னதத்தின் கனவு தானன்றி வேறில்லை. நன்றி ப்ரேம்.

 

 

 

Loading
Back To Top