இயற்கையிடம் பெருங்கருணை உள்ளது. ஆனாலும் அதனுடைய அனர்த்தங்கள் அப்படியான பண்புகளால் ஆனவை அல்ல. சென்னையை மிக்ஜாம் புயலுடன் கூடிய பெருமழை முறித்துப் போட்டிருக்கிறது. ஒவ்வொருவரின் அன்றாடமும் நெருக்கடியாய் மாறிவிட்டது. வீதிகள் பலவற்றில் பயணிப்பது சிரமமாகியிருக்கிறது. வீடுகளுக்குள் வெள்ள நீர் நிரம்பிய மக்கள் விழிவெறித்து நிற்கும் கோலம் அகலமறுக்கிறது.
புயல் வந்த தடயம் தெரியாது சில பகுதிகள் அதிஸ்டமாய் தப்பி பிழைத்திருக்கின்றன. வெள்ள நீர் வடிந்தோடி சுவடு காய்ந்த பகுதிகளும் உண்டு. புயல் நாளின் மாலையிலேயே சில பகுதிகளுக்கு மின்சாரம் வந்தது. குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படலாமென எண்ணிய அம்மா, மழை நீரைச் சேமித்து வைக்கச் சென்ற போது வயதானவர்களின் பதற்றமென்று கடிந்து கொண்டேன். இரண்டு நாட்களும் சேமித்த மழை நீரே சமையலுக்கும், குடி நீருக்கும் பயன்படுகிறது. அம்மா என்று வணங்கி மிடறு விழுங்கினேன்.
இன்னொரு பக்கம் நகரத்தை இயல்புக்கு அழைத்து வர உழைக்கும் துப்புரவு பணியாளர்களும், ஏனைய ஊழியர்களும் வணக்கத்துக்குரியவர்கள். பேய்மழை இறங்கிய நகரத்தில் பசிப்பிணியோடு கலங்குபவர்கள் எத்தனையோ பேர். அவர்களின் கையேந்தல்களை எதிர்கொள்ள முடியவில்லை. உறைவிடமற்று பாலங்களின் அடியில் வசித்தவர்கள் எங்கே உறங்குகிறார்களோ! மனம் பதைபதைக்கிறது. சில பகுதிகளில் நேற்று வரை வெள்ளநீர் கண்டேன். அங்கிருந்த பாதைகள் நீராலானவை. குழிகளைக் காண்பிக்க தடிக்குச்சிகள் எழுந்து நின்றன. வீட்டில் நிரம்பிய தண்ணீரை சிறிய பாத்திரத்தால் அள்ளி வெளியேற்றும் சிறுமியின் கண்களில் கரை கடக்காத பெருஞ்சூறை. அவளது நினைவுகளில் இந்த நாட்கள் துயரச் சகதியாலானவை. மறக்க நினைக்கும் ஒவ்வொரு கணமும் நினைத்தே பெருகும் அவலம்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தேசாந்திரி பதிப்பகத்தின் களஞ்சியத்திற்குள் வெள்ளம் புகுந்தது. புத்தகங்களை நீர் உறிஞ்சி விட்டது. எத்தனை பேரிழப்பு. அவரின் பொருளியல் இழப்பு ஈடு செய்யப்படவேண்டும். புத்தக கண்காட்சி நெருங்கும் நேரத்தில் இந்தச் சம்பவம் பெரும் கவலையைத் தருகிறது. நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன். நீரில் மூழ்கிய புத்தகங்களை முடிந்தவரை மீட்டு வந்திருந்தனர். அவற்றை உலர வைத்து எடுத்துக் கொள்ளலாம் என நம்புவது பெரும் உளச்சோர்வை தவிர்க்கும் அப்போதைய மார்க்கம் மட்டுமே. தண்ணீரில் மூழ்கிய புத்தங்களை அரைவிலைக்குப் போட்டாலும் எவரும் வாங்கிக்கொள்ளார். அத்தனை புத்தகங்களும் இழப்புத்தான். அவருக்கு துணை நிற்கும் வாசகர்களுக்கு நன்றியும் வணக்கமும். தேசாந்திரி பதிப்பகம் புத்துணர்ச்சியோடு எதிர்வரும் சென்னை புத்தக கண்காட்சியை எதிர்கொள்ள வாசகர்கள் ஊக்கமளிப்பார்கள்.
ஆகுதி ஒருங்கிணைக்கும் கூட்டங்களின் வழியாக இலக்கியச் சூழலில் அறியப்பட்ட நிவேதனம் அரங்கிற்குள் வெள்ள நீர் புகுந்தது. புயல் அன்றைக்கே அந்த வீதியில் முழங்கால் அளவுக்கு மேலே தண்ணீர் ஏறியிருந்தது. கவிஞர் குறிஞ்சி பிரபா புகைப்படம் அனுப்பியிருந்தார். இன்று அதனைச் சுத்தப்படுத்துவதற்காக பணியாளர்கள் வந்திருந்தனர். கதவைத் திறந்தால் ஈரவாடை, பளிச்சிடும் அந்த அரங்கின் தரையில் சேறும் சகதியும். எல்லாக் கதவுகளையும் திறந்து சுத்தப்படுத்தினார்கள். நீர் உட்புகுந்து ஒலிபெருக்கி, மேடையென எல்லாவற்றையும் பலியாடிவிட்டது. உள்ளே இருந்த நிறுவனத்தின் ஆவணங்கள் அனைத்தும் தண்ணீரில் மிதந்திருந்தன. நிவேதனம் உரிமையாளர் தியாக. குறிஞ்சி செல்வன் பெருங்கொடையாளி. கலைஞர்களை மதிப்பவர். சில இலக்கிய நிகழ்வுகளுக்கு குறைந்த அளவில் பணத்தை வாங்கி நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிப்பவர். ஆகுதியின் இலக்கியச் செயற்பாட்டோடு துணை நிற்கும் நிறுவனமது. இப்படியொரு இழப்பை சந்தித்திருக்கிறார்கள். அவர்களும் மேலெழ வேண்டும். ஒருவகையில் அது, ஆகுதியே மீள்வது போல.