அன்புள்ள அகரமுதல்வனுக்கு!

வணக்கம். தங்களின் சமீபத்திய பேட்டியை  (திரு. பரிசல் கிருஷ்ணா அவர்களால் எடுக்கப்பட்டது ) கேட்க கிடைக்கப்பெற்றது என்னின் நல்லூழ் என்றே சொல்வேன். ஆசிரியர் ஜெயமோகன் தளத்திலும், ஸ்ருதி டிவியிலும் தங்களைப் பற்றி மேலோட்டமாக அறிந்திருந்தாலும் இந்தப் பேட்டியின் வழியாக நீங்கள் யார் என அறிந்தேன். மிக்க நன்றி. நான் இவர்களை மட்டுமாவது வாசித்துவிட வேண்டும் என நினைத்திருந்த எழுத்தாளுமைகளில் நிச்சயம் நீங்களும் ஒருவராக ஆகிவிட்டிருக்கிறீர்கள். இந்த நேரத்தில் உங்களை அவரைப் போல நன்நெறியும் தீவிரமும் உள்ளவர் நீங்கள் என சிலரின் பெயர் குறிப்பிட்டு  சொல்ல நினைத்தேன். ஆனால் வேண்டாம் . நீங்கள் நீங்களாகவே இருப்பது எனக்கு மகிழ்ச்சி . பரிசல் கிருஷ்ணாவின் கேள்விகளும் தங்களின் பதில்களும் ‘போர் தெரிந்த வீரர்கள் இருவர் தனிப்பட்ட காழ்ப்பில்லாமல் போர் புரிவதைப்’  போலிருந்தது. எனது முதல் கடிதத்தின் வாயிலாக சில கேள்விகளையும் தங்களிடம் சமர்ப்பிக்கிறேன் . நேரம் இருப்பின் பதிலளிக்க வேண்டுகிறேன்

1) ஈழ வரலாற்றை அரசியல் குறுக்கீடு இல்லாமல் அறிந்து கொள்ள நூல்கள் எவை ?

2) தமிழ் பக்தி இலக்கியங்களை அறிய தாங்கள் பரிந்துரைக்கும் நூல்கள் / பாடத்திட்டம் என்ன ?

உங்களின் பேச்சை கேட்டவன் என்ற முறையில் நான் அவதானித்தது ‘நீங்கள் ஒரு சட்டகத்துக்குள் அடைபடக்கூடாதவர் ‘ அது ஈழ எழுத்தாளர் என்று கூட! இது எனது தாழ்மையான தனிப்பட்டக்  கருத்து ‘காதுள்ளோர் கேட்க கடவர் ‘ என நீங்கள் அதில் சொல்வீர்கள். உண்மையிலேயே அது உங்கள் பேட்டிக்கும் சரியாக பொருந்தும். கண்ணுடையோர் தங்களை படிக்கக் கடவர்.

அன்புடன்

கே.எம். ஆர் .விக்னேஸ்

 

அன்பின் கே. எம்.ஆர். விக்னேஸ்!

தங்களின் முதல் கடிதம் அவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது. எழுத்தாளராக இருப்பதில் அடையும் மேன்மை இதுபோன்ற கடிதங்களின் வழியாகவும் அமைகிறது. நீங்கள் சொல்வது போலவே அந்த நேர்காணல் பலரால் குறிப்பிடப்படுகிறது. பரிசல் கிருஷ்ணாவின் கேள்விகள் நல்ல நோக்கத்திலிருந்து பிறக்கின்றன. வாசகர்களுக்கு எழுத்தாளரை இன்னும் இன்னும் அணுக்கமாக, துலக்கமாக அடையாளப்படுத்தவே இந்த நேர்காணல் தொடர். எழுத்தாளர்களை தொடர்ந்து பேட்டி காணும் பரிசல் கிருஷ்ணாவுக்கு எனது பாராட்டுக்கள்.

ஈழ வரலாற்றை அரசியல் குறுக்கீடு இல்லாமல் அறிய முற்படுவது சாத்தியமற்றது. ஏனெனில் வரலாறு நெடுகிலும் அரசியலால் சூழப்பட்டதொரு தீவு அது. ஈழம் என்கிற சொல்லாடலை இன்றுவரை தமது அரசியல் நிலைப்பாடுகளால் உச்சரிக்க மறுக்கிற பலருண்டு. ஆதலால் ஈழம் என்றுமே அரசியல் அர்த்தம் கொண்டதொரு சொல்லாகவே முதன்மை பெறுகிறது. இன்றுள்ள தலைமுறைக்கு இதுபோன்ற அறிவுத் தேடல்கள் இருக்கவேண்டுமென விரும்புகிறேன். ஏனெனில் நீங்கள் கேட்டிருக்கும் இரண்டு கேள்விகளும் வேறுவேறானவை அல்ல. இரண்டுமே ஒன்றோடொன்று பிணைந்தவை. “சைவமும் தமிழும்” என்பது காலனியவாதிகளை எதிர்த்த ஈழத்தமிழர்களின் விடுதலைப் பேரிகையின் கோஷம்.  இதுபற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

நான் சில புத்தகங்களை உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.  இவற்றினை வாசித்தாலே ஒட்டுமொத்த இலங்கைத் தீவின் வரலாற்றையும் அரசியல் சம்பவங்களோடு அறிந்து கொள்ளமுடியுமெனக் கருதுகிறேன்.  ஈழ வரலாற்றை அறிய முற்படுவோருக்கான சில அடிப்படையான புத்தகப் பரிந்துரைகளை தருவிக்கிறேன். இந்த புத்தகங்கள் விஸ்தீரணமான சித்திரத்தை வழங்கும் என்பதே துணிபு.

1 ~ இலங்கை வாழ் தமிழர் வரலாறு  ~ பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை

2 ~ ஈழத்தவர் வரலாறு ~ கலாநிதி க. குணராசா

3 ~ இலங்கைத் தமிழர் யார்? எவர்? – அறிஞர் கா. சிவத்தம்பி

4 ~ வரலாற்றில் வாழ்தல் –  எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை

5 ~ யாப்பு – டொனமூர் முதல் சிறிசேனா வரை –  அறிஞர் மு. திருநாவுக்கரசு

6 ~  சமஷ்டியா? தனிநாடா? – அறிஞர் மு. திருநாவுக்கரசு

7 ~ இலங்கைத் தமிழரின் அரசியல் வரலாறு –  அறிஞர் மு. திருநாவுக்கரசு

8 ~ இலங்கை இனப்பிரச்சனையின் அடிப்படைகள் – அறிஞர் மு. திருநாவுக்கரசு

9 ~ இந்து சமுத்திரப் பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும் ~ உதயன் –விஜயன்

10 ~ போரும் சமாதானமும் – கலாநிதி அன்ரன் பாலசிங்கம்

11 ~ ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி. புஸ்பராஜா

தமிழ் பக்தி இலக்கியங்கள் என்பது பெருவுலகு. அங்கே நானறிந்ததெல்லாம் சைவப் பதிகங்களை மட்டுமே. அதனை ஒரு மரபார்ந்த கற்கை நெறியில் பெற்றேன் என்ற பெருமிதமும் உண்டு. ஆனால் வேறு பக்தி இலக்கியங்கள் பற்றி விளக்கம் அளிக்கும் அருகதை எனக்கில்லை. வைணவர்களின் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் குறித்து நவீன மனத்தோடு அதனது அழகியல் செழுமைகளை உணர்த்தவல்லவர் இலக்கியத் திறனாய்வாளர் ஜா. ராஜகோபாலன். அவருடைய உரையொன்றை கேட்டிருக்கிறேன். ஆழ்வார்களின் மொழியழகில் மயக்கமுற்று அமர்ந்திருக்கிறேன். ஆனாலும் என் சைவ மனம் விழித்துக் கொண்டு “என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந்தான் ஈசன் ” என்று பாடத்தொடங்கிவிட்டது.

சைவ பக்தி இலக்கியங்களில் தேவராப் பதிகங்கள் முதன்மையானவை. பதிகங்களை வாசிக்கவோ படிக்கவோ  சிறந்த பொழிப்புரைகள் கொண்ட புத்தகங்களே போதுமானவை. ஆனால் அதனோடு உறவைப் பேண, தொடர்ந்து அமைய பக்தியுடன் கூடிய பயிற்சி தேவை. பதிகங்களை இசைக்கும் போதே மனத்துள் மொழியூறுகிறது. தெய்வம் எழுகிறது. கண்ணீர் ததும்பும் அருங்கணங்கள் மொழியால் இறைவனுக்குப் படைக்கப்படுகின்றன. நான் முறையாக திருமுறைகளை கற்ற நாட்களில் என் புலன்களோடு இருந்த சொற்கள் இனியவை மட்டுமே. சைவ அறநெறி வகுப்புகளில் பதிகங்களை இசைக்கும் போது கடைப்பிடிக்கப்படவேண்டிய விதிமுறைகள் சில இருந்தன. பண்ணிசை வகுப்புக்களில் தாளம் பிசகிப் பாடினால், அப்பருக்கு நேர்ந்த சூலை நோய் எனக்கு வந்துவிடுமென அஞ்சிய நாட்களுமுண்டு. எல்லாமும் பக்தியாலும் மொழியாலும் உண்டான உணர்வுகளே. ஆசான்களும் ஓதுவார்களும் அப்படித்தான் என்னைப் பதியமிட்டனர்.

திருமுறைகளை பல ஓதுவார்கள் இசைத்து செயலி வழியாக பதிவேற்றம் செய்திருக்கின்றனர். மிக மிக அற்புதமான பணி. Shaivam.org என்கிற செயலியை பதிவிறக்கி வைத்துக் கொண்டால் பெருந்துணை கிட்டும். விஜயா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் திருமுறை பதிப்பை வாங்கிக் கொள்ளலாம்.  “சொல்லரசு புலவர் வீ. சிவஞானம் எம். ஏ.பி.எட்” உரையில் தினந்தோறும் இரண்டு பாடல்களை வாசித்தும் கேட்டும் கற்கையை தொடங்கலாம். இதுவே இன்றுள்ள எளியதும் சிறந்ததுமான வழி.

தொடக்கத்தில் சுலபமான பதிகங்களை வாசித்துக் கேட்டு அறிந்து கொள்வது ஒரு ஊக்க மருந்து. உதாரணமாக “நத்தார் புடை  ஞானன் பசு” வரிசையில் சுந்தரர் அருளிய திருக்கேதீஸ்வர பதிகங்களை குறிப்பிடுகிறேன்.  அதுபோல திருஞான சம்பந்தர் அருளிய “சூலம்படை சுண்ணப்பொடி சாந்தஞ்சுடு நீறு” நின்றியூர் திருத்தலப் பதிகங்களையும் சொல்லலாம். அப்பரின் “சொற்றுணை வேதியன், சோதி வானவன்” என்று பலராலும் அறிந்த பதிக வரிசையையும் குறிப்பிடுகிறேன்.

ஒவ்வொரு நாளும் இசைக்க வேண்டிய பதிகமென” திரு அங்கமாலை”யைக் குறிப்பிடுவேன். சிறுவயது தொட்டு இன்றுவரை பாடாத நாளில்லை. அவ்வளவு நெருக்கமான பதிகங்கள். தலை, கண், காதென உடலைப் பாடிமுடித்து இறையை எங்கே கண்டுகொள்கிறோம் என்று பாடல். மெய்சிலிர்க்க கோவிலை வலம்வந்து பாடிய சிறுவனாகிய என்னை இன்று நினைத்தாலும் மதிக்கிறேன். பெருமை கொள்கிறேன். என் பிள்ளை வளர்ந்து “தோடுடைய செவியன்” பாடத்தொடங்குகையில் அவனிலும் அதே சிறுவனாகிய என்னையே காண்பேன். அதுவே இறை எனக்குத் தரும் அருள் பாலிப்பு.

நன்றி! கே. எம்.ஆர். விக்னேஸ்.தொடர்ந்து வாசியுங்கள். உரையாடுங்கள். உங்கள் எல்லா முயற்சிகளுக்கும் இறையருள் கிட்டும்.

 

 

 

 

 

 

 

Loading
Back To Top