
நவீனமளிக்கும் துக்கிப்பின் புழுக்கம் தாளாது மூச்சுத்திணறுகிறார்கள் மனிதர்கள். இழந்த ஞாபகங்கள் திடுக்குற வைக்கும் அவர்களிடம் மிஞ்சியிருப்பது கசப்பும் மீளமுடியாத இருள் திசையும். அறவீழ்ச்சிகளின் சிதிலங்களின் மீது அதிநவீனத்தின் நுகர்வு வெளிச்சம். அனைத்து தனித்துவங்களும் அழிந்து போனதொரு நிலவெளியில் நிறுத்தப்பட்டிருப்பவர்களின் பன்னெடுங்கால மரபையும் மனோபாவத்தையும் கதைகளின் வழியாக நினைவூட்டுவது எளிய இலட்சியமன்று. எல்லோருக்கும் ஒரு வாழ்வு இருக்கிறதென கரிசனம் கொள்ளும் எழுத்துக்கள் கலையின் அர்த்தத்தோடு முதன்மை பெறுகின்றன. கார்த்திகை பாண்டியனின் “ஒரு சாகசக்காரனின் கதை” என்கிற சிறுகதைத் தொகுப்பு பரிதவிக்கும் கனவுகளின் ஆத்மார்த்த வாழ்வுக்காய் தன்னைப் படையல் அளிக்கிறது.
“மனத்தின் மிகச் சுருக்கமான பகுதியோடு கொண்டிருக்கும் தொடர்பையே நான் என எண்ணி இயங்குகிறான் மனிதன்” எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் கூற்றினை அடிக்கடி நினைத்துக் கொள்ளும் வாய்ப்பை இந்த தொகுப்பிலுள்ள கதைகள் நல்கின. ஏனெனில் வாழ்வின் எண்ணற்ற சித்திரங்களாக உழன்று எரியும் மனிதர்களின் சிதையருகில் அமர்ந்திருந்து வெறிக்கின்ற கதைசொல்லியின் இயலாமை மானுட அல்லல். “நான்” என்கிற அகங்கார அடையாளத்தின் மீது கோடாரியால் பிளக்கும் காலத்தைத்தான் கார்த்திகை பாண்டியன் கதைகள் தமது உலகெனக் கருதியுள்ளன. அனைவர் சுயமழிக்கும் லட்சியத்தோடும் இயங்கும் அரூபம் இறைவன் அல்ல. அது உலகமயமாக்கல் எனும் ஒரு பிசாசு. எல்லா அடையாளங்களும் அழிவுற்ற பிறகு, அது கடைசியில் மனிதர்களை விழுங்கிக் கொள்ளும் சுகத்திற்காக காத்திருக்கிறது.
காப்காவின் கரப்பான் பூச்சி படிமம் துர்சகுனத்தின் அபாய சமிக்ஞை. மனித குலம் இன்று எதிர்கொள்கிற மூச்சுத்திணறல்களை அந்தப் படிமம் அப்படித்தான் எதிர்வு கூறியது. அவ்வளவு வெறுமையும், அழுத்தமும் கூடிய நூற்றாண்டொன்றில் உருவான கரப்பான் பூச்சி நடப்பு நூற்றாண்டில் வண்ணத்துபூச்சியாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. கார்த்திகை பாண்டியனின் “வண்ணத்துப்பூச்சிக்கெல்லாம் ஒரே நிறம்” என்ற சிறுகதை வாசகனுக்கு அளிக்கும் பதற்றம் நேரடியானது அல்ல. மாறாக வெறுமையையும் கசப்பையும் தணிக்க இயலாது குறுகும் மனத்தின் எதிர்வினையை எங்ஙனம் எதிர்கொள்வது எனும் கொந்தளிப்பே எழும். இதுபோன்ற மனோபாவங்களைக் கொண்ட கதைகளைப் படைப்பது சாதாரணமல்ல. ஒரு தனியுலகையே சவாலுக்கு அழைக்கும் திராணி வேண்டும். அது கார்த்திகை பாண்டியனுக்கு நிறையவே உண்டு.
ஒரு படைப்பாளி உளவியலை எவ்வாறு கையாள்கிறான் என்பது மிக முக்கியமானது. அதுகுறித்த அவனின் வெளிப்பாடுகள் ஒரு மரபை அடியொற்றி நிகழ்கிறதாவென ஆராய்வேன். பிராய்ட்டின் சில கருத்துக்கள் நமக்கு ஒத்துப்போகாதவை. காலங்காலமாக நிலம்புகுந்து கிளைவிரித்த மரபின் மீதே எம் இலக்கியங்கள் அமைகின்றன. துரதிஸ்டவசமாக நாம் இழந்த கதைகளும், நம்பிக்கைகளும், அறங்களும் ஏராளம். சட்டங்களின் முன்பாக குற்றமாக்கப்பட்ட சாமானியர்களை அர்த்தமான பாத்திரங்களாக ஆக்கியதில் ஆச்சரியப்பட வைக்கிறார் கார்த்திகை பாண்டியன்.
உதாரணாமாக “பிளவு” கதையில் வருகிற மாரிச்சாமி அண்ணாவின் பாத்திரம். எத்தனை தடவை சொன்னாலும் ஆறாத ரணங்களால் ஆனவை. எழுத்தாளர் ஜி.நாகராஜனின் “ஓடிய கால்கள்” கதையின் நீட்சி. “அடி, உதை, அவமானம், இன்னும் குறையாத போதை, இத்தனைக்கும் கீழே ஒரு வகையான விகாரமற்ற அமைதி, இத்தனையையும் பொறுத்துக்கொண்டு விட்டோமே என்ற உள்ளார்ந்த எக்களிப்பு, இவற்றின் விளைவால் உறங்கிக் கொண்டிருந்தான் கைதி” என்று ஜி.நாகாராஜன் எழுதியிருக்கிறார். இந்தக் கதையில் வருகிற மாரிச்சாமி தனது மகளைக் காணவில்லையென முறைப்பாடு அளிக்கச் சென்ற போது அடையும் அவமானமும் வதையும் மாபெரும் தத்தளிப்பு. ஆற்றமுடியாத சீழ்ப்புண். சாமானியனை வீழ்த்தும் அதிகாரத்தின் வன்முறையை சகிக்க இயலவில்லை. ஓடிய கால்களுக்கும் பிளவுக்குமிடையே சரியாக முப்பத்தாறு ஆண்டுகள் கரைந்திருக்கின்றன. ஆனால் மாரிச்சாமி போன்றவர்கள் அடைந்த காயங்கள் ஆறாத தழும்புகள்.
மனிதனின் உலகியல் ஆசைகளுக்கும் ஏக்கங்களுக்கும் இடையே அதிகாரம் பின்னிய கண்ணியில் இரையாகும் மாரியின் உளத்தவிப்பு நாகரீகமான லட்சிய மனம்கொண்ட மனிதர்களை தலைதாழ்த்தச் செய்கிறது. கார்த்திகைப் பாண்டியனின் இந்தக் கதை மிகமிக முக்கியமானது. ஏனெனில் இதில் நிகழக்கூடிய குற்றங்கள் ஆழமானவை. கலையம்சம் பிசகாது வாசக நேர்த்தியைக் கோரும் கதை. தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் விவாதிக்கப்படவேண்டிய அவதானிக்கப்படவேண்டிய கதையாகவே அறிவிக்கிறேன்.
“இருள் உலகின் தெய்வங்களுடன் நிரந்தரமாக போரிட்டபடியே வாழ்ந்தவர்” தாஸ்தோவெஸ்கி என்கிறார் நீட்சே. ஏனெனில் குற்றங்கள் பற்றிய அவரின் கலைத்துவச் செழுமை கண்டு வியக்காதவர் எவர்? கார்த்திகை பாண்டியன் வெறுமையும் கசப்புமாய் அலைதிரட்டும் கடலின் அலைகளில் குற்றங்களோடு மிதப்பவர்களைப் பார்க்கிறார். அவர்களில் அரிதிலும் அரிதாக சிலரை மட்டுமே தன்னுலகிற்குள் அழைத்து வருகிறார். அதன் விளைவாகவே இந்தத் தொகுப்பின் ஏனைய கதைகளிலும் நினைவுகளும், குற்றங்களும் தகிக்கின்றன. நினைவே பெருங்குற்றம் என்பதும் உண்மை. “உயரமாய் நின்றிருந்த மரத்தேரின் சக்கரங்கள் இறந்தகாலத்தில் உறைந்திருந்தன” என்ற வரிகள் இந்தத் தொகுப்பின் முகவரியாகவே எனக்குத் தோன்றுகிறது. மூளைகள் பெருகிவிட்ட தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் உளத்துக்கு உற்றதுணையாகும் ஒருவித மீட்சியே இத்தொகுப்பு.
கார்த்திகை பாண்டியன் சிறுகதை வடிவத்தின் மீது தீராத ப்ரியம் கொண்டவர். அவருடைய எந்தக் கதைகளிலும் பொருள் மயக்கமில்லை. விளக்கங்கள் அளிக்கும் கலைக்குதவாத அபத்தச் சேட்டைகள் இல்லை. வலிகளைச் சகித்து தீவிரமாகப் பாதிக்கப்பட்டு குரல் நெரியுண்டிருக்கும் சமகால வாழ்வின் கீழ்மையைப் பற்றி துல்லியமாக எழுதுகிறார். “நான் தோற்று விட்டேன். எல்லாவற்றிலும். வாழ்க்கையிலும். இதிலிருந்து என்னால் ஒருபோதும் மீள முடியாது.” எனும் குரல்கள் இந்தத் தொகுப்பின் எழுத்தாளருக்கு மட்டுமே கேட்கின்றன. ஏனெனில் இவை எல்லோரையும் வந்து சேர்வதில்லை. ஏன்? அதுவொரு அசாதாரண கொடை. தமிழ்ச் சிறுகதையுலகில் கார்த்திகை பாண்டியனின் பங்கு தொடர்ந்து சிறந்து விளங்கவேண்டுமென்பதே எனது இனிய அவா.
- அகரமுதல்வன்