விஷ்ணுபுரம் இலக்கிய விருது -2023 ஆண்டுக்கான விழாவுக்கு சென்றேன். இரண்டு நாட்கள் நடைபெறும் இலக்கிய ஒன்றுகூடல். தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளிலிருந்து இன்று முளைத்தெழும்பிய படைப்பாளிகள் பலரும் பங்குகொள்ளும் நேர்த்தியான விழா. இந்த ஆண்டு விருது பெற்றவர் நேசத்திற்குரிய எழுத்தாளரும் கவிஞருமான யுவன் சந்திரசேகர். கவிதைகளுக்காக மட்டும் எம்.யுவன் என்று நாமம் தரித்தவர்.

சென்னையிலிருந்து நண்பர்களோடு காரில் பயணம். எழுத்தாளரான வாசு முருகவேல் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஒருவித பரபரப்போடு பயணம் முழுக்கவே இருந்தார். விஷ்ணுபுரம் விழாவில் உரையாடலை எதிர்கொள்வது சவாலான காரியம். பெரும்பாலானவர்கள் படைப்புக்களை வாசித்தே கேள்விகளைத் தொடுக்கின்றனர். எழுத்தாளர்கள் பெருமை கொள்ளும் தருணங்களை வழங்குகிறார்கள். உண்மையில் எழுத்தாளர் சாதாரணன் இல்லையென்னும் உன்னதமான அறிவிப்பை வாசகர்கள் தம் கேள்விகளால்  முழங்குகிறார்கள். ஒரு எழுத்தாளருக்கு காழ்ப்பையோ கசப்பையோ அந்தவுரையாடல் தந்துவிடக் கூடாது என்பதே முதல் எண்ணமாக அது நிகழ்ந்தேறும். ஏனெனில் அங்கு திரள்பவர்கள் இலக்கியத்தை ஒரு லட்சியமாக கருதுபவர்கள்.

இரண்டு நாட்களும் நடைபெறும் விழாவில் பங்குகொள்வதற்கு உலக நாடுகள் சிலவற்றிலிருந்தும் வாசகர்கள் எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். எதிர்ப்படும் எல்லோரிடம் புன்னகையும் தழுவல்களும் சுகவிசாரிப்புக்களும் நிகழ்ந்து கொண்டேயிருந்தன. ஒரு பொற்கனவின் ஒத்திசைவால் ஒன்று சேர்ந்த பெருந்திரள். எழுத்தாளர்கள் பலரையும் சூழ்ந்து கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டிருந்தனர். வாசகர்கள் சூழ்ந்து நிற்க இயல்பு குலையாமல் பேசுகிற எழுத்தாளர்களின் அழகை அறியவேனும் விஷ்ணுபுரம் சென்று வரலாம். குறித்த நேரத்திற்கு ஆரம்பித்து – முடியும் அமர்வுகள். தேனீர், உணவு என திருமண வீட்டின் உபசரிப்பு. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க, வாசகர்களுக்கு ஒலிவாங்கி தருவதற்கென ஒழுங்கு குலையாமல் தொண்டாற்றும் விஷ்ணுபுரம் நண்பர்கள். இலக்கியத்தில் கோருகிற அறத்தையும் ஒழுங்கையும் இலக்கிய விழாவிலும் நிகழ்த்தும் ஒரு லட்சியக் கூட்டம்.

சென்னையிலிருந்து கோவையைச் சென்றடையை நள்ளிரவு ஒரு மணியாகியிருந்தது. அன்புச் சகோதரர் மொழிபெயர்ப்பாளர் சிறில் அலெக்ஸ் கார் ஓட்டியதில் கொஞ்சம் சோர்வுற்றிருந்தார். பதினொரு மணிக்கு கொஞ்சம் முன்பாக சேலம் செல்வி மெஸ்ஸில் உணவுண்டோம். நாங்கள் தேடிச் சென்ற ஆடு தீர்ந்து போயிருந்தது. வழமை போல கோழியும், முட்டையும் தட்டில் விழுந்தன. கடை மூடும் நேரமென்றாலும் அதே ருசி. நல்ல உணவு என்பது பரிமாறப்படும் வகையிலும் ருசி பெறுகிறது. செல்வி மெஸ்ஸில் எப்போதும் ருசி நிறைந்திருக்கிறது. நாங்கள் கோவையை சென்றடைந்ததும் தேநீர் குடிக்க விரும்பினோம். ஆனாலும் அது வாய்க்கவில்லை. ஹோட்டல் அறைக்குச் சென்று அங்கிருந்த கேற்றிலில் தண்ணி சுடவைத்து கறுப்புக் கோப்பி அடித்தோம்.

நேரத்துக்கு எழுந்து குளித்து காலையிலேயே விஷ்ணுபுரம் விழா நடைபெறும் அரங்கிற்கு சென்றேன். போன தடவை விருந்தினராக கலந்து கொண்டதனால் அறிமுகமான பலரை சந்திக்க முடிந்தது. காலையிலேயே பெங்களூரில் இருந்து நண்பர் பாலாஜி வந்திருந்தார். உரையாடலின் வழியாக அடைந்த நட்பு. போதமும் காணாத போதம் தொடர் குறித்து சிலாகித்தும், அதனுடைய ஆழத்தைப் பற்றியும் மதிப்புமிகுந்த ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் கருத்தினைப் பரிமாறியது மகிழ்ச்சியைத் தந்தது. என்னுடைய ஏனைய படைப்புக்கள் பற்றியும் சிலர் தங்களுடைய வாசிப்பனுபவத்தை தெரிவித்தனர். ஒவ்வொரு எழுத்தாளர்களையும் சூழ்ந்து நிற்கும் வாசகர்கள். தீவிரமான வாசிப்பின் வழியாக எழுத்தாளர்களை கொண்டாடுகிறார்கள். இந்தக் கனவைப் படைப்பதற்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் லட்சியத்தன்மையே காரணமெனக் கருதுகிறேன்.

இலக்கியக் கூட்டமென்றால் முப்பது பேர் வந்தாலே போதும் என்பார்கள். இந்த பேச்சில் ஆரம்பத்திலிருந்தே எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. ஆகுதி ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளுக்கு எப்படியேனும் ஒரு திரளை அழைத்து வர முழுமுயற்சியையும் செய்வேன். குறிப்பிட்ட கட்டத்திற்குப் பின்னர் தானாகவே ஆகுதி ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளுக்கு வாசகர்கள் வரத்தொடங்கினர். பெருநகரத்தில் இதனை ஒரு இலக்கிய அமைப்பாக சாத்தியப்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. அரங்கு நிறைந்து வழிந்த எத்தனையோ நிகழ்வுகள். வாசகர்கள் இலக்கிய அமைப்புக்களின் தரத்தை அளவிடுகிறார்கள். அதன் பொருட்டே ஒரு நிகழ்விற்கு செல்லலாமா வேண்டாமாவென முடிவு செய்கிறார்கள்.

விஷ்ணுபுரம் விருது நிகழ்வில் வியப்புக்குரியது என்னவென்றால் புதிய வாசர்களின் வருகை. ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய வெளிக்குள் நுழையும் புதியவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட முதல் நிகழ்வாக விஷ்ணுபுர விருது விழாவினை சுட்டுகிறார்கள். ஒருவகையில் தமிழ் இலக்கியத்திற்கு புதிய சக்திகளை போந்தளிக்கும் அமைப்பாக விஷ்ணுபுரம் உருவாகியிருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகனைச் சூழ்ந்து ஒரு பெருந்திரள் பாதை நெடுக பயணிக்கிறது. அந்தக் காலடிகளுக்கு உந்துதல் அளிப்பது சிருஷ்டியின் சொற்கள்.

உடம்பு கொஞ்சம் சுகவீனப்பட்டிருந்தது. ஆதலால் அறைக்கு சென்று உறக்கம் வரத்துடித்தேன். தம்பிகளும், நண்பர்களும் பேசிக்கொண்டே இருந்தனர். எல்லோரிடமும் தீவிரமான கனவும், அதற்கான பயணம் பற்றிய பயமும் இருப்பதை உணர முடிந்தது. அவர்களில் சிலர் புறப்பட்டதும் உறக்கத்திற்கு வழியமைத்த இயன்முறை மருத்துவர் நவீனின் சிகிச்சை தெய்வத்தின் வருடல். உறங்கியது தான் தெரியும். காலையில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த வாசு முருகவேலின் முகத்தில் முழித்தேன்.

“வாசு நேற்றைக்கே உங்கள் அமர்வு முடிந்துவிட்டதே, இப்ப என்ன நடுக்கம் வேண்டிக் கிடக்கு” என்று கேட்டேன்.

எப்போதும் போல ஒரு பார்வை. எதுவும் பேசாதே என்ற சைகை. இரண்டு காதுகளையும் அடைத்து வைத்திருந்த குளிர் விரட்டியை மீண்டுமொரு தடவை இறுக்கி அழுத்தினார்.

“வாசு, ஏதேனும் கதையுங்கள். குளிர் தெரியாமல் இருக்கும்” என்றேன்.

எதனையும் பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தார்.

விஷ்ணுபுரம் விருது விழாவின் மேடையில் ஏறி உட்கார்ந்ததற்கு பிறகு, உடல் மொழியில் எத்தனையெத்தனை கம்பீரம். ஒரு அறிவார்ந்த சபை எழுத்தாளராக கருதியதன் சாட்சி. குளிரில் நடுங்கியபடியிருக்கும் எழுத்தாளனின் உள்ளே கனல்வது ஒரு பெருங்கனவு. அது அவனது படைப்பூக்கத் தழல். அதனை அணையாது மூட்டும் பெருஞ்செயல் விஷ்ணுபுரம் விருது விழா என்றேன்.

அது வாசுவுக்கு கேட்டிருக்க வேண்டும். ஓம் என்பதைப் போல தலையசைத்தார்.

 

 

 

Loading
Back To Top