மிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமிலிருந்து தப்புவது சாதாரணமானது அல்ல. அடர்ந்து காட்டிற்குள் திசையறியாது சுற்றிச் சுற்றிச் உணவற்று மாண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் தாயம் கடலில் கலக்கும் நதியைப் போல, தடம் பிசகாமல் வீடு வருகிறான். எந்தச் சவாலுக்கும் ஈடுகொடுக்கும் உடல் வலிமை. எதற்கும் அஞ்சாத உளம். நிராயுதபாணியாக தப்பும் தன்னை, உங்கள் ஆயுதங்களாலும் தேடிக் கண்டுபிடியுங்கள் எனும் சவால். தாயம் புலிகளுக்கு பெரிய தலையிடியாக இருந்தான். பன்னிரெண்டு அடியளவில் உயர்த்தப்பட்ட பாதுகாப்பு வேலி, கண்காணிப்புக்காய் நிற்கும் போராளிகளின் விழிப்பு. இவற்றையெல்லாம் உச்சிவிட்டு எப்படி தப்புகிறானோவென்று தெரியாத குழப்பம் இயக்கத்திற்கு வந்தது. ஒவ்வொரு பயிற்சி முகாமிலிருந்தும் குறிப்பிட்ட நாட்களிலேயே தாயம் வெளியேறிவிடுகிறான் என்று கண்டடைந்தனர். முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவென எந்தப் பயிற்சி முகாமிலிருந்தும் அவனால் தப்பிக்க முடிவதை எங்களாலும் நம்பமுடியாமலிருந்தது.

ஒரு நாளிரவு இயக்கத்தின் ஆட்சேர்ப்பு பிரிவினர் வீட்டைச் சுற்றிவளைத்தனர். தாயம் தப்பித்தோட வாய்ப்பிருப்பதாக எண்ணியிருந்தார்கள். அவன் மாட்டிறைச்சி குழம்போடு இரண்டு றாத்தல் ரோஸ்ட் பாணைச் சாப்பிட்டு முடித்து அவர்களோடு போனான். ஊரிலுள்ளவர்கள் வியக்குமாறு தாயம் சாகசக்காரனாய் போராளிகளுக்கு நடுவில் நடந்தான். அமளிச் சத்தம் கேட்டு உறக்கமழிந்த தாயத்தின் தங்கச்சி சாதனா ஆயுதமேந்திய போராளிகளை விலக்கியபடி ஓடிப்போனாள். பொத்திய தனது கைக்குள்ளிருந்து இரண்டு தேமாப் பூக்களை தாயத்திடம் கொடுத்தாள். சாதனாவை முத்தமிட்டு “ அண்ணா, வெள்ளனவா வந்திடுவன். நீ குழப்படி செய்யாமல் அம்மாவோட இருக்கவேணும். போய் நித்திரை கொள்ளு” என்றான். வாகனம் புறப்பட்டது. சாதனா வீட்டின் முன்பாக நிற்கும் தேமா மரத்தடிக்கு லாம்போடு ஓடிச்சென்றாள். அங்கு மண்ணால் உருவாக்கப்பட்டிருந்த தெய்வ உருக்களின் முன்பு நின்று கண்ணீர் கசிந்து “கடவுளே அண்ணா, திரும்பி வந்திடவேணும். வந்தால் உனக்கு அவல் தருவேன்” என்றாள்.

வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டவனை கிளிநொச்சியிலுள்ள முகாமொன்றில் தங்கவைத்தனர். அவனுடைய தப்பித்தல் அனுபவங்கள் குறித்து போராளியொருவர் விசாரணை செய்து அறிக்கை தயாரித்தார். தாயத்தின் சொந்தக்காரர்கள் யார் இயக்கத்தில் இருக்கிறார்கள் என்பது வரை விசாரணை ஆழம் பாய்ந்து முடிந்தது. அதன்பிறகு நிலக்கீழ் அறைக்குள் தாயம் இறக்கப்பட்டான். “பூமியின் தடங்கள் மறக்கும் வரைக்கும் உள்ளேயே இருப்பீர்கள்” என்பது உத்தரவு. “இங்கிருந்து தப்ப இயலாது” என்பது எள்ளலாக வீசியெறியப்பட்டது. தாயம் பூமியின் கீழே விழிபிதுங்கி அமர்ந்தான். மூச்சுத்திணறியது. இருட்குகையில் மோதுண்டு அழியும் காற்றுப் போல கைகளை விரித்து சுவர்களை அறிந்தான். எத்தனை நாட்கள் இருள் தோயவேண்டும். இப்படியொருவன் மூச்சுத்திணற வைக்கப்பட்டு போராட்டத்தில் இணைக்கப்படவேண்டுமா? தாயம் உள்ளேயே சப்பாணிகட்டி அமர்ந்து கொண்டான். தன்னுடைய இறுக்கமான உள்ளாடையை கழட்டி எறிந்து நிர்வாணமானான். சாதனா கொடுத்த தேமா மலர்களை கைகளில் ஏந்தி இருளின் திரட்சியை அழிக்கும் வாசனையை முகர்ந்தான். வீட்டின் முன்பாக தங்கையோடு பூசை செய்து விளையாடும் பொழுதுகள் புலனில் உதித்தன. பூமியின் கீழே பாதைகள் இல்லை. ஆனாலும் தாயம் கண்ணீர் சிந்தவில்லை. அச்சப்படவில்லை. மெல்ல மெல்ல ஆசுவாசத்துக்கு திரும்பினான். போராளிகள் எதிர்பார்த்ததைப் போல கதறியழுது என்னை மீட்டுவிடுங்கள் என்ற இறைஞ்சுதல்கள் எதுவும் நிகழவேயில்லை. உள்ளேயே தாயக்கோட்டினைக் கீறி மண்ணை உருண்டைகளாக்கி தாயம் விளையாடத் தொடங்கினான்.

மூன்று நாட்கள் கழித்து பூமியின் மேல் இழுத்து வரப்பட்ட தாயம் ஒளியைக் கண்டு கூசினான். வெளிச்சம் பொல்லாத சாத்தானைப் போல அவனைத் தண்டித்தது. அவனது  உடலில் எந்தச் சோர்வும் இருக்கவில்லை. சாதனா தருவித்த இரண்டு தேமா மலர்களும் வாடாமலிருந்தன.  “எனக்குப் பசிக்கிறது உணவளியுங்கள்” என்கிற ஓலமான குரலைப் பொருட்படுத்த அங்கு எவருமில்லை.   பொறுப்பாளர் கீரன் உணவளிக்குமாறு உத்தரவிட்டார். நெத்தலித் தீயலும், குத்தரிசிச் சோறும் கொடுத்தார்கள். ஒரு சட்டித் தீயலை தின்றுமுடித்து, சோற்றுப்பானையைக் காட்டி கொஞ்சமிருக்கு ஏதேனும் பழைய குழம்பு இருக்கிறதா என்று கேட்டான். பருப்புக் குழம்பை கொடுத்தார்கள்.

இதுவரைக்கும் தப்பித்த பயிற்சி முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, எப்படித் தப்பினான் என்பதை விசாரணை செய்ய குழுவொன்று தயாராகவிருந்தது. தாயம் சரியென்று தலையசைத்தான். முத்தையன்கட்டிலுள்ள முகாமில் அதனைச் செய்து காட்டினான். அடிக்கணக்காக உயர்ந்து நிற்கும் முட்கம்பி வேலியில் ஏறி, கீழே குதித்து ஓடுவதை ஒன்றும் விடாமல் செய்து காட்டினான். மீண்டும் கிளிநொச்சிக்கு அழைத்து வந்து தாயத்தை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்தனர்.

“நான், ஏன் போகவேண்டும். எனக்கு வயிறு கொதிக்கிறது சாப்பாடு தாருங்கள்” குரல் உயர்த்தினான்.

“நீதானே பயிற்சி முகாமிலயிருந்து ஓடிப்போகிறாய். இப்ப நாங்களே உன்னை விடுகிறம். நீ போ” என்றனர்.

தாயத்தினால் இப்படியொரு பரிவை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“அண்ணே, என்னை நீங்கள் பிடிச்சுக்கொண்டு போய் பயிற்சி தந்தால் ஓடிப்போவன். இப்பிடி நீங்கள் போகச்சொல்லுறது எனக்கு அவமானம். இப்ப நான் போகமாட்டன்”

“சரி, அப்ப நீ இஞ்சயே இரு. உனக்கு எப்ப போகவேணுமெண்டு இருக்கோ. அப்ப வெளிக்கிடு”

தாயம் எதிர்பாராததை இயக்கம் வழங்கியது. அவனால் முகாமை விட்டு வெளியே போகமுடியவில்லை. அங்கிருக்கும் சில வேலைகளைச் செய்து வந்தான்.  பொறுப்பாளர் கீரனோடு வெளியே சென்று வரத்தொடங்கினான். தாயனைப் பார்த்த ஊரவர்கள் சிலர், “என்னடா இயக்கமாகிட்டுயோ” என்று கேட்டார்கள். எதுவும் பதிலளிக்காமல் தாயம் குமைந்தான். அரசியல் போராளிகளோடு வெவ்வேறு இடங்களுக்கு பயணமானான். இயக்கத்திற்கென இழுத்து வரப்பட்டவர்கள் குவிக்கப்பட்டிருக்கும் முகாமொன்றிற்கு சென்ற தாயம் திடுக்குற்று பொறுப்பாளர் கீரனிடம் “ அண்ணை, இப்பிடி பிடிச்சுக் கொண்டு போய், சண்டை செய்துதான் நாட்டை மீட்கவேணுமே” கேட்டான்.  இதுக்கு நான் பதில் சொன்னால் இயக்கத்துக்கு துரோகியாகிவிடுவன். என்னை நீ பூமிக்கு கீழ வைக்கப் பார்க்கிறாய்” என்றார் கீரன்.

“உங்களுக்கு இதில உடன்பாடு இல்லைத்தானே, பிறகு ஏன் செய்கிறீர்கள். கட்டாய ஆட்சேர்ப்பின் தீவினை குறித்து தலைமைக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்” என்றான்.

“எல்லாம் கைமீறிப் போய்ட்டுது. உன்னைப் போல எத்தனயோ பிள்ளைகள் பயந்து நடுங்கியிருக்கிறாங்கள். அது தெரியாமல் யாரும் இல்லை” கீரன் சொன்னார். தாயம் தன்னுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு பயிற்சி முகாம் நோக்கி செல்லும் அணியில் கலந்தான்.]

ஆனைவிழுந்தான் குளத்தில் நீராடி முடித்து தாயம் கரையேறி ஈரந்துடையாமல் வீதிக்கு வந்தான். மாடுகளை சாய்த்தபடி எதிர்திசையில் வந்த பீதாம்பரம் “ எடேய் பெடியா, இயக்க வாழ்க்கை என்ன சொல்லுது” என்று கேட்டார். “இவ்வளவு நாளும் பயிற்சி அண்ணை, இனிமேல் தான் சண்டைக்கு போகவேணும்” என்றான். “அப்ப நீ இன்னும் ஒரு சண்டைக்கும் போகேல்லையோடா, அங்க போயும் சும்மா தான் இருக்கிறாய் என்ன” என்றார் பீதாம்பரம். ஊரியிலான வீதியைக் குறுக்கறுத்து திடுமென அசையாது நின்ற சாரைப்பாம்பில் வன்னி வெயில் ஊர்ந்தது. பீதாம்பரத்துக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் விலகி நடந்து, வீதியோரத்தில் அடர்ந்திருந்த பற்றைகளில் நாயுண்ணிப் பழங்களை பிடுங்கி உண்டான்.

காலையிலேயே கழுத்து வெட்டி சாவல் குழம்போடு இருபது இடியப்பத்தை தீர்த்த பிறகும் வயிறு கொதித்தது. சாப்பாட்டு இடிஅமீன், இந்தப் பட்டப்பெயரைத் தாயத்துக்கு சூட்டியது மாஸ்டர் கனல் குன்றன். பயிற்சி முகாமில் வழங்கப்படும் அளவுச் சாப்பாடுகள் போதாதுவென தாயம் உண்ணா நோன்பிருந்தான். எருமை மாட்டிறைச்சி குழம்பில் மூவருக்கு வழங்கப்படும் அளவிலான துண்டங்களை இவனுக்கு வழங்குமாறு மாஸ்டர் உத்தரவளித்தார். தாயத்திற்கு வழங்கப்பட்ட விடுப்பு நாளையுடன் முடிவடைகிறது.

குளத்திலிருந்து வீட்டிற்கு வந்ததும் புதிய ஆடைகளை அணிந்து, திருநீற்றை அள்ளி பூசினான். சாதனா தேமா மரத்திற்கு அவனை அழைத்துச் சென்று மந்திரங்கள் ஓதுமாறு சொன்னாள். தாயம் “கஜானனம் பூத கணாதி ஸேவிதம், கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம், உமாஸுதம் சோக வினாச காரணம், நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் “ என்று பாடினான். சாதனா திருநீறள்ளி பூசிவிட்டாள். சுடச்சுட வேர்க்கொம்பு போட்ட தண்ணியை ஆக்கி கொடுத்தாள் தாய். அவனுக்கு வயிறு கொதித்தது. “இடியப்பம் இருக்கே” என்று கேட்டான். “முடிஞ்சுது, சோறு வடிச்சிடுவன். கொஞ்சம் பொறு” என்றாள் தாய். வீட்டின் முன்பாகவிருந்த பூவரசமரத்தின் கீழே அமர்ந்திருந்து வேர்க்கொம்புத் தண்ணியை உறிஞ்சிக் குடித்தான். சாதனா அவனிடம் கேட்டாள்.

“அண்ணா, சண்டைக்கு போக உனக்குப் பயமா இல்லையோ”

“பயமில்லையோ. சரியான பயமாய் இருக்கு”

“பயப்பிடு. மாமாவைப் போல பயமில்லாமல் சண்டை செய்து சாகாத.”

“சாதனா, நான் செத்துப்போனால் நீ எத்தனை நாள் அழுவாய்”

“இப்பிடி பயந்தால் சாகமாட்டாய். எனக்கு அழுகிற வேலை இல்லை”

“எடியே, எனக்கு பயமே இல்லை. நான் செத்துப்போடுவனெண்டு சும்மா வைச்சுக் கொள்ளன். எத்தனை நாள் அழுவாய்”

“அண்ணா, நீ சாகவே மாட்டாய். பயப்பிடாதவன் சாவுக்குப் பிறகானதை பற்றி கதைக்க மாட்டான்” என்று சொல்லிச் சிரித்தாள்.

“சரி நீ செத்துப்போனால் நான் எத்தன நாளைக்கு அழ வேண்டும் சொல்”

“நீ அழவே கூடாது சாதனா”

“சரி, நான் தேமாவுக்கு பூசை செய்து, உன்ர பெயரை நூற்றி எட்டுத் தடவை சொல்லுறன். காணுமே”

“நான் என்ன கடவுளே”

“செத்தால் எல்லாரும் கடவுள் தான்”

“சரி அலட்டாத. காணும்” என்றான். சாதனா தன்னுடைய கைக்குள்ளிருந்த இரண்டு தேமா மலர்களை அவனுக்கு கொடுத்து எப்பவுமே உன்னோட வைச்சிரு என்றாள். தாயம் அவளைக் கொஞ்சி தலையில் குட்டினான்.

ஒரு வருடத்திற்கு முன்பான மாலை வேளையொன்றில் தாயம் இயக்கத்தில் சேர்ந்தான். அவன் எழுதி வைத்துச் சென்ற கடிதத்தில் “அம்மா, நான் இயக்கத்துக்கு போகிறேன். நீ கவலைப்படாமல் சாப்பிடு. சதனாவை, தேமா மரத்தை பார்த்துக் கொள். நான் போயிட்டு வாறன்” என்று எழுதப்பட்டிருந்தது. லட்சியத்தை நோக்கிய தாயத்தின் புறப்பாடு  ஊரையே அதிர்ச்சியாக்கியது. “இவனையெல்லாம் படையில சேர்த்தால் மற்ற இயக்கப் பிள்ளையளுக்கு சோறும் மிஞ்சாது. சொதியும் மிஞ்சாது. இவன்ர வயிறு ஊரெழுக் கிணறு மாதிரி. அடிதெரியாமல் போய்க்கொண்டே இருக்கும்” என்றார் கொய்யாத்தோட்டம் பூசாரி. கோவில் அன்னதானங்களில் தாயம் உக்கிரம் காண்பான். அள்ளியெறிய ஏந்திக் கொள்ளும் பாதாளமாய் அவனது வயிறு திறந்துவிடும். எங்கிருந்து பொங்கிவரும் பசி இவனுள்ளே ஓடிநிரம்புகிறது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்பார்கள்.

“இவன் வயித்தில இருக்கேக்க, கடுமையான யுத்தம். ஆசைக்குத் தின்னக்கூட சோட்டைத்தீன் இல்லை. அரசாங்கம் ஒண்டையும் உள்ள விடேல்ல. என்ன கிடைச்சுதோ அதைத் திண்டு பசி போக்கினேன். முனுசு தோட்டத்தில விழுந்த குரும்பட்டியையும் எடுத்துக் காந்துவன்” என்றாள் தாயத்தின் தாயார்.

எனக்கும் தாயத்துக்கும் இடையே சிநேகிதம் உண்டாகிய தொடக்கத்தில் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன். அவனுக்கு ஒடியல் புட்டும், மீன் குழம்பும் பிடித்தமானது. பீங்கான் தட்டில் உணவைப் பரிமாறி அளிப்பேன். குழைத்து உண்ண வசதி இல்லையென, வாழை இலை கேட்பான். மான் இறைச்சியோடு கீரைப்புட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். தட்டில் உணவைக் கண்டாலே பதற்றமுற்று குழைத்து உள்ளே தள்ளுகிறான். விக்கல் எடுத்தாளும் நீரருந்தேன் என்கிற சத்தியமாயிருக்கும். கறித்துண்டுகளை, எலும்புகளையும் அரைத்து விழுங்கினான். ஏனென்று தெரியாத கடலின் மூர்க்கம் போல உடல் முழுதும் வெக்கை கொள்கிறது. வழியும் உடலின் ஈரத்தில் ஒருவர் தாகம் தீருமளவு வியர்வை. அன்றுதான் தாயம் இயக்கத்தில் இணையவிருப்பதாக என்னிடம் சொன்னான். அப்போது நானும் நம்பவில்லை. ஆனால் இன்று தாயம் ஒரு விடுதலைப் போராளி. அதனை நம்பாமல் இருக்கமுடியவில்லை.

தாயம் விடுப்பு முடிந்து வட போர்முனைக் களத்திற்கு புறப்பட்டான். கிளிநொச்சி வரைக்கும்   அவனை உந்துருளியில் அழைத்துச் சென்று இயக்க வாகனத்தில் ஏற்றினேன். “சரி மச்சான், அடுத்தமுறை வந்தால் சந்திப்பம்” என்றான். “வராமல் எங்கையடா போகப்போறாய், உதில இருக்கிற முகமாலை தானே. விடுப்பு கிடைக்காட்டி ஓடி வா” என்றேன். தாயம் பதில் எதுவும் கதையாமல் என்னைப் பார்த்துச் சிரித்தான். வாகனம் முன்நகர்ந்தது.

சில மாதங்களுக்கு பின்னர் தாயத்தின் வீரச்சாவு செய்தி வந்தடைந்தது. வீட்டின் தேமா மரத்திற்கு பூசை செய்து கொண்டிருந்த சாதனாவுக்கு தெரியவேண்டாமென அவளை வட்டக்கச்சிக்கு அழைத்துச் சென்றோம். அவனுடைய வித்துடல் கிடைக்கவில்லை. வெறும் புகைப்படமாக மட்டுமே வந்தடைந்தான் “வீரவேங்கை நளன்.”  எல்லாவிதமான நிகழ்வுகளும் முடிவடைந்து ஆறாவது நாள், சாதனாவை வீட்டுக்கு கூட்டி வந்தோம். ஓடிச்சென்று தேமா மரத்தின் கீழேயிருந்து மந்திரங்கள்  ஓதி, பதிகம் பாடி அமைந்தாள். பூக்களை ஏந்தி வந்து வீட்டினுள்ளே புலிச்சீருடையில் புகைப்படமாய் இருக்கும் தாயத்தின் முன்பு படைத்து “ அண்ணா, நீ வெள்ளனவா ஓடி வா, பூசை செய்து விளையாட வேண்டும்”  என்றாள். வீரச்சாவு அடைவதற்கு இரண்டு வாரம் முந்தி தாயம் எனக்கு கொடுத்தனுப்பிய கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

“அன்பின் மச்சான்!

வாழ ஆசையாக இருக்கிறது. ஆனாலும் இந்த நிர்ப்பந்தம், கெடுபிடி, போர், பேரழிவு இல்லாமல் இந்தப் பிறவியில் வாழ முடியாது என்றே தோன்றுகிறது. நீ அடிக்கடி சொல்வதைப் போல, இந்த வாழ்க்கையில் எத்தனை நாணயங்களை சுழற்றினாலும் பூவோ, தலையோ எமக்கில்லை. தாயம் வீரச்சாவு அடைந்தான் என்றால் அதில் பெருமை கொள்ளாதே. நான் வீரன் இல்லை. வாழ ஆசைப்படும் அற்பன். இந்தக் குருதியூற்றில் தேமா மலர்களோடு அமர்ந்திருந்து பதிகம் இசைக்க எண்ணும் சாதாரணப் பிறவி. என்னை நீ வீரனாக எழுதாதே. உன் கவிதைகளில் என்னைப் பாடாதே. இத்தனை பேர் உயிரைத் தியாகம் செய்யும் இக்களத்தில் நடுநடுங்கும் என்னை ஒரு சொல்லாலும் புகழாதே. யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவம் ஒவ்வொரு நாளும் முன்னேறத் துடிக்கிறான். போராளிகள் களமாடுகிறார்கள். என்னுடைய துவக்கை இயக்குவதற்கு கூட துணிச்சல்  இல்லாமல் ஒடுங்கியுள்ளேன். சாதனா என்னிடம் சொன்னதைப் போலவே பயந்தவன் சாவதில்லையென்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இங்கு வீரர்கள், கோழைகள், எதிரிகள், எல்லோரும் சாகிறார்கள். நான் வீரனுமில்லை எதிரியுமில்லை. செத்தால் எல்லாரும் கடவுள் என்ற சாதனாவுக்கு நான் கடவுளாக தெரியக்கூடாது. அண்ணனாகவே இருக்க விருப்பம். அவளைக் கவனமாகப் பார்த்துக் கொள். அம்மா தவித்துவிடுவாள். அதற்காக தாயகத்திற்காக தாயம் தன்னுயிரை ஈகம் செய்தானென்று மட்டும் அவளிடம் ஆறுதல் சொல்லாதே. தாய்மார்கள் அழட்டும். அவர்களின் கண்ணீராலேனும் மண்ணின் பாவங்கள் கரைந்து மூழ்கட்டும். சாதனாவுக்கு தேமா மரத்தில் பூசை செய்து விளையாட ஆளில்லை. எப்போதாவது நேரம் வாய்த்தால் அவளது பூசையில் பங்கெடு. ஆக்கினைகள் எல்லாமும் உதிரட்டும். பூக்கள் மலரட்டும். அவள் தந்தனுப்பிய இரண்டு தேமா மலர்களை என்னுடைய ஆயுத அங்கியில் வைத்திருக்கிறேன். இத்தனை ஆயுதங்களுக்கு மத்தியில் இரண்டு பூக்களோடு அமர்ந்திருக்கிறேன். எதிரியானவன் எப்போது வந்தாலும் தேமா மலர்களை நீட்டி, வணக்கம் சொல்வேன். அவனிடமிருக்கும் துவக்கு என்னிடமுமிருக்கிறது. அவனிடமும் மலர்கள் இருந்திருந்தால் என்னிடம் இயக்கம் துவக்கை தந்திருக்காது அல்லவா!

இப்படிக்கு

நளன் ( தாயம்)

ராதா வான்காப்பு படையணி

முகமாலை, வடபோர் முனை.

Loading
Back To Top