
01
செம்பருத்திப் பூவின் வெளிச்சத்தோடு
காமத்தின் உப்புக்கூட்டி
என் பெயர் சொன்னாள்.
உன்னால் ஒரு சூரியனைப் போல எழவும்
உன்னால் ஒரு காயத்தைப் போல உலரவும்
காத்திருப்பவன் நானென்றேன்.
என் குருத்துக்களின் இனிப்பையும்
என் கனிகளின் ஸ்பரிசத்தையும்
சமையல் செய்தவன் நீ தானென்றாள்.
நம்முடலை தூய்மையாக்கும்
அத்தனை சுடர்கள்
அத்தனை மலர்கள்
எங்கும் ஒளிர்ந்தன
எங்கும் மலர்ந்தன.
சொற்கள் உறங்கின.
02
நடுப்பகல் கலவியில்
மூச்சின் நறுமணம்
சரீரத்துக் கனலில்
துள்ளும் சிறுபடகு
காமத்தின் கரத்தில்
வந்தமரும் தும்பி
இறைக்கைகள் அதிர
அறையில் புலர்கிறது
ஏகபோகம்.
03
எனக்கும் அவளுக்குமிடையே
நிகழ்ந்தது ஒரு பகல்.
அமுதம் கடைந்தருந்திய
களிப்புடன் பாடினாள்
என், இனிய மேய்ச்சல்காரனே
என்னைக் கூட்டிச்செல்லும்
மலையுச்சியில்
மலர்ந்திருக்கும் நீலமலரால்
கொஞ்சம் நிழலூட்டு.
ஜீவனின் வேட்கையைத் தாங்காது
நம்முடல்.