தா ஆடையுற்பத்தி நிறுவனத்தில் வேலை முடித்து வெளியேற இரவு ஏழு மணியாகியிருந்தது. பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்தாள். உந்துருளியில் வந்து சேர்ந்தான்  சமிந்த. ஏறியிருந்து அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள். சமிந்தவின் சீருடையில் கமழ்ந்த வாசனை நாசியை அரித்தது. லேசாக மழை துமித்தது. சமிந்தவின் தோளில் நாடி நிறுத்தி நெருக்கியிருந்தாள். அறிவியல் நகரிலிருந்து மாங்குளம் நோக்கி உந்துருளி மெல்ல விரைந்தது. ஆதாவுக்கு அப்போழ்து சுகமாயிருந்தது. இராணுவத்தினனோடு நெருக்கமாக அமர்ந்து ஆதா செல்வதை எதிர்த்திசையில் வந்த வைத்தியலிங்கம் கண்டார்.

அன்றிரவே “இவளொரு பட்டை வேஷை. ஆர்மிக்காரங்களோட படுத்து சீவியத்தைப் போக்கிறாள்” ஆதாவின் வீட்டின் முன்பாக நின்று வைத்தியலிங்கம் வெறிபிடித்துக்  கத்தினார். அவரோடு கூடியிருந்தவர்களும் பக்கப்பாட்டு பாடினார்கள். அவளுடைய வீட்டின் கூரையில் கற்கள் வீசினர். நாய்கள் குரைத்தன. பதிலுக்கு எதுவும் செய்யாமல் நகத்திற்கு வண்ணப் பூச்சிட்டுக் கொண்டிருந்தாள் ஆதா. சமிந்த அவளைத் தொடர்பு கொண்டான். அடுத்தமாதம் விடுமுறையில் வீட்டிற்குச் செல்லும் போது, அவளையும் வருமாறு அழைத்தான். வெளியே நாய்களின் குரைப்பொலி இன்னும் அடங்கவில்லை. ஆதாவுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. பார்க்கலாமெனச் சொல்லி அலைபேசியைத் துண்டித்தாள்.

அதிகாலையில் எழுந்து மதியத்திற்கும் சேர்த்து சமைத்து, வேலைக்கு புறப்படுகையில் காலை எட்டு மணியாகியிருந்தது. பேருந்து தரிப்பிடத்திற்கு ஓட்டமும் நடையுமானாள். வைத்தியலிங்கம் தனது வீட்டுக்கு முன்பாக அமர்ந்திருந்து ஆதாவை அவர் பெயர் சொல்லியழைத்தார். அவள் பொருட்படுத்தாமல் நகர்ந்தாள். வைத்தியலிங்கம் கொதித்து வெருண்டார். “எடியே வேஷை நில்லடி. உன்ர சாமானில அவ்வளவு கொழுப்போடி” என்றார். ஆதாவுக்குள் குருதியின் ஓட்டம் கலவரப்பட்டது. இறந்தகாலத்தின் நிழல் விழுத்திய சூரியோதயமென அவ்வளவு கம்பீரமான ஒளிக்கதிர்கள் திடுமென நிலமெங்கும் விரவியது. அழியாத காயத்தின் கண்களில் நீசப்படை எதிர்த்த வனத்திமிர். எதுவும் மிச்சமற்றவளின் சலிப்புடன் வைத்தியலிங்கத்தை நோக்கி வந்தாள். நெடும்பொழுதின் புயலென ஓருதையில் கீழே வீழ்த்தினாள். மல்லாந்து விழுந்த அவனின் நெஞ்சில் கால்கள் விரித்து அமர்ந்தாள். குரல்வளையில் உயிரின் மின்சொடுக்கு ஏறியிறங்கித் தவித்தது. கூந்தல் விரிந்த ஆதாவின் கைகள் நெரித்த குரல்வளையில் ஒருநொடி அசைவின்மை. “பிழைத்துப் போ மானங்கெட்டவனே” என்ற கட்டளையில் இருமிக்கொண்டெழுந்தது வைத்தியலிங்கத்தின் உடல்.

“எப்ப பார்த்தாலும் ஒருத்தியை வேஷை, தாஷையெண்டால் தாங்குவாளோ. உவன் வைத்திக்கு இன்னும் எப்பன் கூடவா அடி கிடைச்சிருக்க வேணும்” மாடன் சொன்னதும் சூழவிருந்தவர்கள் கைதட்டம் கொட்டிச் சிரித்தனர்.

“அவளென்ன, வைத்தியலிங்கத்தின்ர நோஞ்சான் மனிசியே. இயக்கத்தில கொமாண்டோ ரெய்னிங் எடுத்தவள்.  பெரிய சண்டைக் காயெல்லே” மாடன் மீண்டுமுரைத்தான்.

அவள் எழுந்து மிகவேகமாக நடந்தாள். வேலைக்குப் போகப்பிடிக்காமல் பிரதான வீதியிலிருக்கும் வாதா மரத்தின் கீழே அமர்ந்திருந்து சமிந்தவைத் தொடர்பு கொண்டாள். நிர்வாக வேலையொன்றுக்காக முல்லைத்தீவுச் செல்ல ஆயத்தமாவதாகச் சொன்னான். கூடவருவதாக அவள் சொன்னாள். சமிந்த சிலநொடிகள் தயங்கி யோசித்தான் போலும்! ஆதாவுக்கு விளங்கியது. “சரி நீ போய்விட்டு வேகமாகத் திரும்பி வா. நான் காத்திருக்கிறேன்” என்றாள்.

இலைகள் உதிர்ந்தன. வீதியில் வாகனங்களின் மூர்க்க இரைச்சல். நிலத்தின் அடியில் வேட்கைச் சுவடுகளின் நடப்பொலிகள் அலைந்து ஓயமறுக்கும் சப்தத்தை கேட்டுத்துடித்தாள். நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக, என் தாயார் என்னைப் பெற்றநாள் ஆசிர்வதிக்கப்படாதிருப்பதாக! உமக்கு ஒரு பெண்பிள்ளை பிறந்ததென்று என் தாய்க்கும், தகப்பனுக்கும் நற்செய்தி அறிவித்து அவர்களை மிகவும் சந்தோசப்படுத்தினவர்கள் சபிக்கப்படக்கடவர். என் தாயார் எனக்குப் பிரேதக் குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூழலுமாய் இருக்கும்படியாய் கர்ப்பத்திலே நான் கொலை செய்யப்படாமற் போனதென்ன? என்று கலங்கினாள். ஒளியுள்ள ஒரு மேகம் அவள் மேல் நிழலிட்டது.  யுத்தம் சூதாடிக் கழிந்த சபையில் மிச்சம் வைக்கப்பட்ட கிருஷ்ணை. விடுதலை யாகத்தின் தீயில் தோன்றியவளின் முன்பாக எல்லாச் சிறுமைகளும் சாம்பலாகும். கருக்கலின் பாதையில் சமிந்த வருவது தெரிந்தது. விம்மிக் கசியும் தனது விழிகளைத் துடைத்து பெருமூச்செறிந்தாள். ஆவேசமாகச் சுழன்று வீசிய காற்றில் புழுதி கிளம்பியது. தூசெழுந்த வெளியில் வாதையின் சிலுவை சுமந்து நின்றாள் ஆதா!

சமிந்த யுத்தக் களத்தில் பெரிய அனுபவம் கொண்டவனல்ல. ஆனாலும் இறுதியாக நடந்த யுத்தத்தில் பங்கெடுத்திருக்கிறான். புதுக்குடியிருப்பு பகுதியில் போராளிகளோடு நடந்த மோதலில் காயப்பட்டுமிருக்கிறான். ஆதாவுக்கும் அவனுக்குமிடையே காதல் பிறந்த தொடக்க நாட்களில் இருவரும் தங்களுடைய போர்முனை அனுபவங்களை கதைப்பது வழக்கமாயிருந்தது.

***

ஒருநாள் இருவருமாகச் சேர்ந்து புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவிலுக்குச் சென்று திரும்பிய மாலைப் பொழுதில் மழை பெய்யத் தொடங்கிற்று. இருவரும் தொப்பலாக நனைந்து வீடு திரும்பினர். அவளை வீட்டில் இறக்கிவிட்டு இராணுவ முகாமிற்கு செல்ல ஆயத்தமானான் சமிந்த. ஆனால் அவனை வீட்டிற்குள் வருமாறு அழைத்தாள். சமிந்த வேண்டாமென மறுத்தான். தன்னால் ஆதாவுக்கு எந்தக் கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாதென எண்ணினான். பொழியும் தூரவானின் பொருள் விளங்கிய காதலின் பாலிப்பு. சமிந்தவின் தலையைத் துவட்டிவிட்டு ஆடைகளை மாற்றுமாறு பணித்தாள். ஏற்கனவே அவனுக்கு வாங்கி வைத்திருந்த புத்தாடைகளைக் கொடுத்தாள். சுகநாதம் சூடிக்கொண்ட கூந்தலாய் அப்பொழுது குளிர்ந்தும் உலரத்தொடங்கியது. சமிந்த ஆடையை மாற்றும் போதுதான் முதுகிலிருந்த காயத்தழும்பைக் கண்டாள்.

“சமிந்த, இதுதான் புதுக்குடியிருப்பு காயமா?” என்று தழும்பைத் தொட்டுக் கேட்டாள். அவன் ஓமெனத் தலையசைத்து, உங்களுடைய “பசீலன் ஷெல்தான்” சொல்லிச் சிரித்தான்.

“நீங்கள், எங்களைக் கொல்ல இஸ்ரேல், இந்தியாண்டு ஓடியோடி ஆயுதம் சேர்க்க, நாங்கள் மட்டும் பனை மட்டையை வைச்சு உங்களைச் சுட ஏலுமோ. அதுக்குத் தான் இதுமாதிரியான ஏற்பாடுகள் எல்லாம். எங்கட ஒரு பசீலன் ஷெல்லுக்கு முன்னால உங்கட ஆயுதங்கள் எல்லாம் கொஞ்சம் சிறிசு தான்” ஆதா சொன்னாள்.

“பட்ட எனக்கு நோவு தெரியும். நீ சொல்வதை ஒத்துக்கொள்கிறேன்” என்றான் சமிந்த.

இருவரும் ஒன்றாக அமர்ந்திருந்து தேத்தண்ணி அருந்தினர். அரியதரமிரண்டையும் எடுத்து வந்து கொடுத்தாள். “கொஞ்சம் இனிப்புக் குறைந்து போய்விட்டது, அடுத்த தடவை சரியாய் செய்வேன்” என்றாள். மழை குறையவேயில்லை. வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமிந்தவின் உந்துருளியைப் பார்த்துச் சென்ற சிலர், அந்த மழையிலும் விடுப்புக் கதைத்துக் கொண்டு போயினர்.

வெளியிலொரு வெளியிருப்பதை வீட்டினுள் இருந்த இருவரும் மறந்தனர். ஆதா தன்னுடைய போர்முனை அனுபவங்களின் சுவாரஸ்யமான கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள். ஐந்து தடவைகளுக்கு மேலாக களத்தில் விழுப்புண் அடைந்ததை அறையதிரும் வண்ணமுரைத்தாள். இனியும் என் நிலத்திற்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன். புகையிட்டு வேட்டையாடும் தேனடை போல பொஸ்பரஸ்களால் இரையாக்கப்பட்ட உடல்களின் மீந்த துண்டு நான். ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் ஓடிச் சிதறிப்போன என் தேசம் யாராலும் கடந்து போகாதவண்ணமாக பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றது.  என் காயங்களின் மீது நட்சத்திரங்கள் நிரம்பியிருக்கின்றன. அவையொருநாள் அதிகாலை வானில் விடியலோடு ஒளிரும் என்றாள். சமிந்த அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டான். பேரூழின் அவயங்கள் நதிமறந்து நீந்தத்தொடங்கின. ஆதாவின் மேனி திறந்தது. தீயின் சண்டமாருதம் இறங்கி அமர  திடுமென மழை விட்டது. ஆதாவின் வீட்டுப்படலையை தட்டும் சத்தம் கேட்டு விழிப்புச் சீவியது. ஆதா ஆடைகளை சரிசெய்தபடி கதவைத் திறந்து வெளியேறினாள். வாடியுதிர்ந்த முகத்தோடு பிச்சை கேட்டு நின்றாள் சிறுமியொருத்தி. அவளுடைய தந்தை இரண்டு காலுமற்று முச்சக்கர சைக்கிளிலிருந்தார். தன்னிடமிருந்த காசையும், சமிந்தவிடமிருந்த காசையும் வாங்கி வீட்டிலிருந்த உணவுப் பொருட்களையும் கட்டிக்கொடுத்தாள்.

“மலர்களை ஏந்திநின்று புன்னகைக்க வேண்டிய இந்தச் சிறுமியின் கையில் திருவோட்டைக் கொடுத்து, பிச்சை கேட்க வைத்தது யுத்தம்தான். நீ அதனை உணர்கிறாயா சமிந்த?” ஒத்துக்கொள்வதைப் போல தலையாட்டினான் அவன்.

***

இன்றைக்கு காலையில் வைத்தியலிங்கத்தை அடித்ததை சமிந்தவிடம் சொன்னாள். முல்லைத்தீவுக்குச் சென்று திரும்பிய களைப்பிலிருந்தவனுக்கு அவள் சொன்னதைக் கேட்டதும் கலக்கமாயிருந்தது.  அவன் உயிருக்கு ஏதும் தொந்தரவில்லையே என்று கேட்டான். செல்லமாக அவனுடைய காதைப்பிடித்து திருகி “என்னைப் பார்த்தால் கொலைகாரி மாதிரியா இருக்கு?” என்று கேட்டாள்.

“இல்லையா பின்ன. ஒருநாள், நீ எத்தனை ஆர்மிய சுட்டுக்கொன்றிருப்பாய் என்று கேட்ட போது, நானூறுக்கும் மேலே இருக்கும் என்றாயே”

“ஓம். ஆனாலும் இந்த எண்ணிக்கையில் இப்போது ஒன்று அதிகமாக வாய்ப்பிருக்கு” என்றாள்.

“இனியுமா!”

“ஓம், இப்ப நினைச்சாலும் – இந்தக் கணமே நானூற்று ஒன்றாய் ஆக்குவேன்” என்று விளையாட்டாக அவனது குரல் வளையைப் பிடிக்கப்போனாள்.

சமிந்த அவளை இறுக அணைத்துக் கொண்டான். இருவர் உயிருனுள்ளும் ஊர்ந்து தொங்கும் மதுரக் குலையிலிருந்து ஏந்தவியலாதபடிக்கு துளிகளின் சொட்டுதல். விரல்கள் நெய்யும் துணியென உடல்கள் விரிந்தமை பெரிய ஆறுதலாயிருந்தது. காலாதீதத்தின் நறுமணம் உதடுகுவித்து இருவரையும் முத்தமிட்டது. கனவில் தளிர்த்துப் பெருகும் சுடர் செடியைப் போல சமிந்தவின் சரீரத்தில் நீண்டிருந்தாள் ஆதா. அவர்கள் எப்போதும் சந்தித்துக் கொள்ளுமிடமிது. எவரின் வருகையும் நிகழாத துரவடி. தண்ணீரும் மரங்களும் சாட்சியாய் நாணமுற்று பார்க்க கூடினர். ஆதாவின் சரீரத்துக் காயத்தழும்புகள் போரின் கொம்புகள். மொழியின் தொன்ம எழுத்துக்கள். வயிற்றைக் குறுக்கறுத்து கொழுத்த நீளமெழுகுப் புழுவெனத் திரண்டிருக்கும்  தழும்பின் மீது சமிந்த கைகளைப் பதிந்தான். கற்பாறையின் தகிப்பு. விசுக்கென கைகளை மீட்டான்.

“என்ன! தாங்கமுடியாதபடி சுடுகுதோ” ஆதா கேட்டாள்.

“ஓம் ஏன் இப்பிடிச் சுடுகுது” என்றான்.

“இது என்ர கடைசிக் காயம். இரணைப்பாலையில நடந்த சண்டையில வந்தது. மிச்ச எல்லாக் காயத்துக்கும் ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் இதுக்கு எதுவும் இல்லை. எல்லாமும் தலைகீழானதற்கு பிறகு, கனவும் பசியுமாக தியாகத்தின் முன்னே பலிகொடுத்த குருதியூற்று இங்கிருந்துதான் பீறிட்டது.” என்றாள்.

சமிந்த அந்தக் காயத்தின் மீது முத்தம் ஈன்றான். இருவரில் பெருகும் கண்ணீரால் சரீரங்கள் சிலும்பின. உலை மூண்டு கொதித்தது. பட்டயங்களும், துப்பாக்கிகளும், ஆட்லறிகளும், வன்புணர்வுகளும், பெருங்கொடுமைகளும், போரும், போராட்டமும், மிலேச்சத்தனங்களும்   இருளில் நின்று மிரண்டு பார்த்தன. கூடலின் முயக்கவொலியில் அலையோசை கனன்று பெருங்கடல் தாகித்தது.

“நீயும் நானும் காதலிப்பதை உன்னுடைய ஊரவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். வைத்தியலிங்கம் மாதிரியானவர்கள் கடுமையான வசவுகளால் உன்னைத் திட்டுகிறார்கள். எனக்காக நீ எவ்வளவு துன்பப்படுகிறாய் என்று நினைத்தால் பெருந்துயரமாய் இருக்கிறது” சமிந்த சொன்னான்.

“துயரப்படு. சனங்கள் கோபப்படுவதில் நியாயம் இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக எங்களை வன்புணர்ந்து கொன்று புதைத்த வன்கவர் வெறிப்படையைச் சேர்ந்தவன் நீ. அவர்கள் சந்தேகப்படுவார்கள். எதிர்ப்பார்கள். உன் பொருட்டு என்னையும் விலக்குவார்கள். அது சரியானதுதான்”

“இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் நாம் ஏன் காதலித்தோம் ஆதா!”

“படபடக்காதே. காதலிப்பதற்கு நெருக்கடிகள் அவசியமானவைதான். நீயும் நானும் வாழ்ந்து முடியும் வரை நெருக்கடிகள் நீளும் பெலன்கொண்டவை. அதற்காக…அழிந்து போன போரின் தனிமையை நீ விட்டுச் செல்வாயா, சொல்!”

“போரின் தனிமையா?”

நீ புணர்ந்து பருகிய தழும்பின் நறுமணம் சுரந்த உன்னுடைய ஆதா போரின் தனிமையல்லாமல், வைத்தியலிங்கம் சொன்னதைப் போல வேஷையில்லை என்பது உனக்குத் தெரியாதா!

“ஆதா!”

என் தனிமையின் வெறுமை எரியட்டும். அதன் சடசடப்பொலியில் எறிகணைகள் வீழ்ந்து தோன்றிய பள்ளங்கள் தூர்ந்து போகட்டும். என் கடைசிக்காயத்தின் தழும்பில் முத்தம் ஈன்று மூர்ச்சையாகும் வரை இயங்கி முயங்குவோம் என்றாள்.

ஆதா!….எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் சத்தம் கேட்கிறது.

“எனக்கும் கேட்கிறது. ஆனால் நாம் எதிரும் புதிருமாய் போரில் மிஞ்சியவர்கள். இனிமேலும் காயப்படமாட்டோம் பயப்பிடாதே” என்ற ஆதாவின் வார்த்தைகள் நிலத்திற்கு ஆசுவசமாய் இருந்தது.

 

 

 

Loading
Back To Top