அவளும் நானும் முதன்முறையாக போகித்த போழ்து மழைபெருத்து இறங்கியது. அரவமற்ற இரவைத் துளிகள் பிளந்தொலித்தன. ஆவேசத்தின் வாசலில் வீசியடித்த காற்றிலும் சரீரங்களின் சுகச்சுருதி குலையாமல் வீற்றிருந்தது. அடங்காத குளிர் திசையெங்கிலும் திளைத்து தரித்தது. உயிர்த்து வீறிடும் உச்சத் தந்தியில் நறுமுகையின் கனம் தாங்கிக் கிடந்தேன். மழையின் நடுவே விழுந்து வளர்ந்தது மின்னல் எச்சம். அசதியிலும் நெரிந்து கிடந்தோம். அவிந்த புழுங்கல் அரிசியின் வாசனையைத் துளிர்த்தது ஊர்ந்திறங்கிய அவளது வேர்வை. நறுமுகை எழுந்து கூந்தல் முடிந்தாள். உடுப்புக்களைத் தேடியணிந்தாள். ஒளி குறைந்து மூலையில் தனித்திருந்த லாம்பையெடுத்து திரிதீண்டினாள். பேரொளியில் மூச்சின் நிறைவு சூழ்ந்தது. ஓயாமலும் தீராமலும் கிளர்ந்து பெருக்கும் மழையின் கனல் என்னிலேயே மூள்கிறது. நறுமுகையின் சரீரம் ஈகும் சுகந்தம் குருதிப் பூவென விரிகிறது. ததும்பிப் பெருகும் வெள்ளத்தின் ஓசையோடு நிலம் பிணைய, மீண்டும் நெளிந்து கிடந்து விழித்தோம் நம்பசி. கசியும் உடற்கிளையின் ஈரத்துடன் நறுமுகை கமழ்ந்திருந்தாள். கூடல் மகத்துவத்தின் தித்திப்பு. பசியமிழ்ந்த சர்ப்பம் போல் அசைந்தேன். நறுமுகையின் அதரங்கள் கனிந்து சிவந்தன. நீந்தி நீந்தி வளரும் மீன்தானோ காமம். எத்தனை சுழிப்புக்கள். எத்தனை உந்தல்கள். முயக்கத்தின் நரம்புகள் அலைகளாய் எழுந்து அதிர்ந்தன.
“நீங்கள் எனக்கொரு புல்லாங்குழல் வாங்கித் தருவியளோ?” நறுமுகை கேட்டாள்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்பு, என்னை நீ புல்லாங்குழல் என்றாயே. அது பொய்யோ” கேட்டேன்.
“அதுவும் உண்மைதான்”
“அடுத்த தடவை வருகிற போது, உறுதியாக புல்லாங்குழல் கொண்டு வருவேன்.”
“அந்த அடுத்த தடவை, எப்ப வரும்?”
“விரைவில் வரும்” என்று சொல்லி அவளிடமிருந்து விடைபெற்றேன்.
பிறகான நாட்கள் கடுமையான வேலைத்திட்டங்கள் இருந்தன. வீட்டிற்கு செல்லமுடியாமல் ஊர் ஊராகத் தங்கவேண்டியிருந்தது. மாதக்கணக்காக யாரையும் சந்திக்க முடியாமல் போயிற்று. மெல்ல மெல்ல வன்னிப்பெருநிலம் வதங்கிச் சுருண்டது. ஆக்கிரமிப்பாளர்களின் கொடும்பாதங்கள் முன்னேறி வென்றன. சமாதனத்திற்கான யுத்தம் என்றொரு நரகத்தின் இருள் எம்மில் இறங்கியது. ஊரை இராணுவம் ஆக்கிரமித்து நாட்கள் ஆகியிருந்தன. வீசப்பட்ட விதைகளைப் போல இடம்பெயர்ந்து சிதறியவர்களைத் தேடினேன். அம்மாவும் தம்பியும் சுகமாய் இருப்பதாக வழியில் கண்ட சொந்தக்காரர் சேதி சொன்னார். அவர்களிருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டுமென விரும்பினேன். ஆனால் தர்மபுரத்திலிருக்கும் என்னுடைய சிநேகிதனை ஏதோவொரு திருட்டுக் குற்றச்சாட்டில் காவல்துறை கைது செய்திருப்பதாக அறிந்து, அங்கு சென்றேன். அவன் மீது சந்தேகம் மட்டுமே இருப்பதாகவும் விசாரணை முடிந்து அனுப்பி வைப்பதாகவும் சொல்லிய காவல் அதிகாரியிடம் அவன் யாரெனச் சொன்னேன். சிநேகிதன் அடுத்தநாள் காலையில் விடப்பட்டான். அவனுடைய வீட்டிற்கு வந்த காவல் அதிகாரி, ஒத்துழைப்புக்கு நன்றியும் மன்னிப்பும் என்று வருத்தம் தெரிவித்தார். நான் தர்மபுரத்திலிருந்த மாவீரர் நினைவு மண்டபத்தில் நின்று வீதியில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தேன். அதுவொரு ஆசுவாசமான செயல். நகம் கடிப்பது போல, சிறு இளைப்பாறல். இடம்பெயரும் சனங்களின் நெருக்கமான வரிசை, வீழ்ச்சியின் நிமித்தமென்று உணர்ந்தேன்.
போர் விமானங்களின் அதிர்வொலிகள் வானிலிருந்து இறங்கின. அண்ணார்ந்து பார்த்தவர்கள் பலர். வீதியின் மருங்கிலிருந்த பதுங்குகுழிக்குள் பாய்ந்தவர் சிலர். பதிந்து இறங்கிய கிபிரின் கொஞ்சம் தூரத்தில் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. மூன்று போர் விமானங்கள் வீசிய ஆறுக்கு மேற்பட்ட குண்டுகளின் அதிர்வில் கிளைதரித்து நின்ற குருவிக்கூடொன்று கீழே விழுந்தது. வான் நோக்கி அலகுகளைத் திறந்து வைத்திருக்கும் குஞ்சுகளின் அப்பாவித்தனம் நினைத்து வருந்தினேன். எங்கள் குழந்தைகள் இந்தக் குருவிக்குஞ்சுகளா!
போர் விமானங்களின் மிலேச்சத்தனமான தாக்குதலில் காயப்பட்ட பொதுசனங்கள் தர்மபுரம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர் என்ற செய்தியறிந்து ஓடினேன். ஒரு சிறுமியின் குடல் சூனியத்தின் பெருவெளியில் தொங்கியது. அவளுடைய மூச்சிலும் கசிந்து வழிந்தது குருதி. நான் அவளைத் தூக்கிச் செல்லும் போது உயிர் நீத்தாள். காயப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க மருந்துகள் இல்லை. ஆனாலும் அறுவைச் சிகிச்சைகள் நடந்தன. மருத்துவமனையின் வாசலில் குவிக்கப்பட்டிருக்கும் உடலங்களைத் தாண்டி அதிவேகமாய் வந்தவொரு சிறிய வாகனத்திலிருந்து பெண்ணொருத்தி தூக்கி வரப்பட்டாள். அவளுடைய இரண்டு கால்களும் கந்தல் துணியைப் போல பிய்ந்திருந்தன. ரத்த வெடில் வயிற்றைக் குமட்டியது. அவளது கைகள் சோர்ந்து நிலத்தை தொட்டன. மருத்துவமனையின் தரையில் கிடத்தப்பட்டு அவளுக்கு சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன. கரும்புகையும் குருதிச்சேறும் அப்பியிருந்த அவளது முகத்தை துடைத்த பொழுதே நறுமுகை இவளென இனங்கண்டேன். நெஞ்சடைத்து மூச்சுக்குத் திணறினேன். அவள் பக்கமாய் ஓடிச்சென்று “என்ர நறுமுகை” என்று கதறினேன். துயரின் பாத்திரத்தில் நிறைக்கப்பட்ட பிச்சையா நம் நித்தியம்! நறுமுகை மயங்கிக்கிடந்தாள். ரத்தப்போக்கினை மருத்துவர்கள் கட்டுப்படுத்தினர் என்று நம்புவதற்கு இல்லை. அது முழுதும் தீர்ந்து போயிருந்தது.
இரண்டு நாட்கள் கழித்து சுயநினைவுக்குத் திரும்பிய நறுமுகை என்னை அணைத்து முத்தமிட்டு என்னுடைய புல்லாங்குழல் எங்கேயென்று கேட்டாள். “நான் வாங்கி வைத்துவிட்டேன், இப்போது இல்லை” என்றேன். எப்போது உன் விரைவு வருமென்று கேட்டுப் புன்னகைத்தாள். தன்னுடைய இரண்டு கால்களும் அகற்றப்பட்டது தொடர்பாக நறுமுகையிடம் எந்தவித அரற்றலும் இல்லாமலிருந்தது. அவ்வப்போது காயத்தின் வலியால் கண்ணீர் சிந்தினாள். பகலும் இரவும் அவளுடனே அமர்ந்திருந்தேன். பசுமரமொன்று விறகென ஆவதைப் போல நறுமுகையை ஆக்கியது போரா? விதியா?. யாருக்காக யார் அழுவர்.
“உனக்கு ஒன்று சொல்லமறந்து விட்டேன். என் கால்களின் எலும்புகளில் புல்லாங்குழல் செய்து வாசிப்பதைப் போல, சில நாட்களுக்கு முன்னதாக ஒரு கனவு கண்டு மகிழ்ந்தேன். உடல் பிளந்து எலும்புகளை நொறுக்கிய குண்டுச் சிதறல்களின் குரூரக் குதூகலம் என் நினைவுகளில் வெடிக்கின்றது” என்றாள்.
அவளை இறுக அணைத்துக் கொண்டேன். கண்ணீருக்கு வந்தனை செய்யும் காலத்தின் வலியுறும் சடங்கில் கரைந்தோம்.
“உன் புல்லாங்குழலுக்காகவே உயிர் பிழைத்திருக்கிறேன். எப்போது தருவாய்?”
“இடத்திற்குச் சென்று எடுத்து வரவேண்டும். நாளைக்கு செல்கிறேன்” என்றேன்.
“எனக்கு இரண்டு கால்களும் போய்விட்டதென்று மயக்கமடைவதற்கு முன்பாகவே தெரிந்துவிட்டது. நெருப்புத் திறந்து என்னை நோக்கி வருகையில் ஓடமுடியாமல் நிலத்தில் தளும்பிய குருதியின் மீது தத்தளித்தேன். அப்போது உன்னையே நினைத்தேன். நீயென்னை குருதிப் பூவென்று கூடலில் வியந்தாய் அல்லவா” என்று கேட்டு சிரித்தாள்.
நறுமுகை உருவம் அழிந்திருக்கிறாள். கதைகள் தீர்ந்து போகுமொரு யுகத்தின் பாதச்சுவட்டின் மீது அங்கவீனமாய் கிடத்தப்பட்டிருக்கிறாள். இருளின் வீறல்கள் பெருகி, வெறிக்கச் செய்யும் திகைப்புகள் விழிக்கூட்டில் திடுக்கிட்டு பதுங்கின. பிணத்தின் பிம்பமென நிலம் தவித்தது. நறுமுகைக்கு மருந்துகள் ஏற்றப்பட்டன. வெளிறிய அவளுடலில் தடமின்றி உள்ளிறங்கிய யுத்த நடுக்கங்களை வெட்டியெடுக்க முடியாது. நறுமுகைக்கு இளநீரும், தண்ணீரும் கொடுத்தேன். இடியப்பம் வாங்கிவந்து தாயார் தீத்திவிட்டாள். புல்லாங்குழலை எங்கே வாங்கமுடியும்? திசையறுந்து ரத்த நாளங்கள் அதிரும் ஊழ்வெளியில் புல்லாங்குழலைத் தேடி அலையும் பித்தன் நான். அதிகாலையிலேயே மருத்துவமனையிலிருந்து புறப்பட்டேன். ஈருருளியைப் பழுது பார்க்கவேண்டும். முன்னஞ்சில்லு அங்குமிங்கும் ஆடியது. தர்மபுரத்திலிருந்து விசுவமடு செல்லும் வழியிலிருந்த தேத்தண்ணிக் கடையில் சாயம் கூடவாப் போட்டு ஒரு தேத்தண்ணி என்றேன். வாங்கில் அமர்ந்திருந்து ஈழநாடு நாளேட்டினை அவதானமாக வாசித்துக்கொண்டிருந்தவர் “ பெடியள் என்ன செய்யப்போறாங்கள் எண்டு விளங்கேல்ல. இப்பிடி ஒவ்வொரு இடமாய் விட்டுவிட்டு பின்னால வந்தாங்கள் எண்டால், இவங்களை நம்பியிருக்கிற சனங்களுக்கு என்ன கதியோ” என்றார். ஆவி பறந்தது. தேத்தண்ணிக்கு கொஞ்சம் சீனி தேவைப்பட்டது. ஆனாலும் கசந்து குடித்தேன். புராதனச் சூரியன் கிழக்கில் எழுந்தான். பறவைகள் பகல் வானின் சிறகசைக்கும் நட்சத்திரங்கள். உதித்த பகலின் திருமுகப்பில் வன்னியின் வடிவுத் திமிர் உறக்கத் தியானம் முடித்தது. நறுமுகைக்கு ஒரு புல்லாங்குழலை எப்படியேனும் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
உடையார்கட்டு புலவர் மாமா வீட்டிற்கு அருகிலிருந்த இசை வித்துவானைச் சந்தித்து புல்லாங்குழல் வேண்டுமென்றேன். நான்கு புல்லாங்குழலை எடுத்து வந்து காட்டினார். பார்ப்பதற்கு வடிவான ஒன்றைத் தெரிவு செய்தேன். ஐயாயிரம் ரூபாய் என்றார். பேரம் பேசினேன். படிவதாயில்லை. அவ்வளவு காசு என்னிடமில்லை என்று கூறினேன். எப்போது ஐயாயிரம் ரூபாய் இருக்கிறதோ, அன்று வாருங்கள் தருகிறேன் என்றார். நறுமுகைக்கு நேர்ந்தவற்றைக் கூறி, அவளுக்காகத் தான் இதனை வாங்குவதாகவும் சொன்னேன். அதனாலென்ன காயப்பட்டிருப்பதாக சொல்லுகிறீர்கள் ஒரு ஐநூறு ரூபாய் குறைக்கிறேன் என்றார். என்னிடம் ஆயிரத்து இருநூறு ரூபாய் மட்டுமே இருக்கிறது என்றேன். வாய்ப்பில்லை என்று வழியனுப்பினார்.
அன்றிரவே தாவீது அண்ணாவின் வீட்டிற்குச் சென்றேன். எனக்கொரு புல்லாங்குழல் வேண்டும். அந்த வாத்தியக்காரன் இவ்வளவு விலை சொல்கிறான் என்று கடிந்தேன். தாவீது அண்ணா கடுமையான நிர்வாகப் பணி அழுத்தங்களில் இருந்தார். கிளிநொச்சி விடுபட்டால் எல்லாமும் போய்விடுமென இயக்கத்திலிருந்தவர்கள் பலர் அஞ்சியிருந்தனர். தாவீது அண்ணா எனக்கு உதவுவதாகக் கூறினார். ஆனால் நாளைக்கு காலையிலேயே தனக்கு பணியிருப்பதாகவும், முடித்துவிட்டு வருவதாகவும் கூறினார். நான் அங்கேயே தங்கியிருந்தேன். தாவீது அண்ணாவின் திருமணப் புகைப்படமொன்று பெரிய அளவில் ப்ரேம் செய்யப்பட்டிருந்தது. அண்ணியின் முகத்தில் செறிந்து இறங்கிய வடிவும் சந்தோசமும். அவள் வித்துடலாக இருந்தபோதும் இப்படித்தான் இருந்தாள். தலைவர் இரட்டை நாடி தெரிய புன்னகைத்தபடி மணமக்களோடு நின்றார்.
தாவீது அண்ணா இரவாகியும் வரவில்லை. அவர்களுக்கு இயக்க வேலைதான் முக்கியம். பிறகுதான் எல்லாமும். தாவீது அண்ணா அதிலும் மோசம். வீடு மறந்து இயக்கமே தவமென இருப்பவர். பத்து மணியிருக்கும் வாகனமொன்று வீட்டு வாசலில் நின்றது. அதிலிருந்து இறங்கிய போராளிகள் இருவர் வீட்டினுள் நுழைந்து ஆவணங்கள் சிலவற்றை எடுத்தனர். அவர்களிடம் சென்று “தாவீது அண்ணா இண்டைக்கு வரமாட்டாரா” என்று கேட்டேன். “இனிமேலும் வரவேமாட்டார்” என்றார். அய்யோ எனக்கு புல்லாங்குழல் வேண்டும். நறுமுகைக்கு என்ன பதில் சொல்வேன் என்ற பதற்றம் மட்டுமே சுழன்றடித்தது. “பெரிய பொறுப்பாளர் வீரச்சாவு என்கிறேன், நீ புல்லாங்குழல் வேண்டுமென அழுகிறாயே, உனக்கு தாவீது அண்ணாவின் மீது பாசமில்லையா” என்று போராளி கேட்டார்.
“பாசமிருக்கு. நீங்கள் சொன்ன செய்தி துயரத்தை தருகிறது. ஆனால் அவர் சாவதற்கு தயாரானவர். நறுமுகை அப்பிடியில்லை. அவளுக்கு கால்களிரண்டும் போய்விட்டது. அவளது புல்லாங்குழல் எரிந்துவிட்டது. தாவீது அண்ணாவிற்கு வீரவணக்கம். எனக்கு புல்லாங்குழல் வேண்டும். அவர் வாங்கித் தருவதாகச் சொல்லிவிட்டு போனவர். நீங்கள் அவரின் கனவுகளை, சத்தியங்களை பின் தொடர்பவர்கள் தானே. எனக்கு அந்த வாத்தியக்காரரிடமிருந்து புல்லாங்குழலை வாங்கித் தாருங்கள்” என்றேன்.
போராளியொருவர் கைதட்டிச் சிரித்தார்.
தாவீது அண்ணா வாகனத்தை விட்டு இறங்கி வந்தார்.
“ஏனடா நான் செத்துப்போனாலும் பரவாயில்லை. உன்ர ஆளுக்கு புல்லாங்குழல் வேணும். அப்பிடித்தானே”
“உறுதியாய் அப்பிடித்தான் அண்ணா” என்றேன்.
என்னை இறுக கட்டியணைத்து உன்னோடு கதைத்து வெல்லமுடியாது என்றார். பையிலிருந்து புல்லாங்குழலை எடுத்துத் தருவித்து “உன்ர நறுமுகையிட்ட கொண்டு போய்க் குடு” என்றார்.
நள்ளிரவில் புறப்பட்டேன். வீதியில் சனங்களின் நடமாட்டம் பெரிதாகவில்லை. போராளிகளின் வாகனங்கள் நிமிடத்திற்கு நிமிடம் கடந்து போயின. போர்விமானங்களின் இரைச்சல் வானத்திலிருந்து இறங்கியது. ஈருருளியை நிறுத்தி மேல் நோக்கிப் பார்த்தேன். எதுவும் தெரியவில்லை. உக்கிரமான அதிர்வோடு இரவின் கனவு குலைந்தது. மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்தன. ஊகத்தில் திசையுணர்ந்தேன். விசுவமடு, வட்டக்கச்சி, நெத்தலியாறு, பிரமந்தனாறு இங்கே தான் எங்கேயோ என நினைத்தேன். வழியோரத்து மரங்களின் கீழே போராளிகள் சிலர் நின்று கொண்டிருந்தனர். போர் விமானங்களின் தாக்குதலை முறியடிக்கும் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களது பாரத்தையும் சேர்ந்து சுமந்தது இரவு.
பத்து நிமிடங்கள் கழித்து காயக்காரர்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் விரைந்து போயின. அழுகுரல்களால் நிறைந்த வழியில் தனியனாக நின்று கொண்டிருந்தேன். தெய்வமே! குழந்தைகளுக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்று வேண்டினேன். நான் நெத்தலியாற்றுப் பாலத்தை தாண்டும்போது வீதியில் நின்ற ஒருதொகைச் சனங்கள் “தர்மபுரம் ஆசுபத்திரியல தான் கிபிர் அடிச்சிருக்கு” என்றார்கள்.
அய்யோ! என் நறுமுகையென ஈருருளியை வேகங்கொண்டு உழக்கினேன். மருத்துவமனை எரிந்துகொண்டிருந்தது. போராளிகள் சனங்களுக்கு உதவிக்கொண்டிருந்தனர். “நறுமுகை… நறுமுகை…” என்று கதறியழுதபடி அனல் ஊற்றுக்குள் புகுந்தேன். அவள் கிடத்தப்பட்ட இடத்திலேயே இருந்தாள். தீயின் வெக்கையில் சிவந்திருந்தாள். அவளுடைய கைகளில் புல்லாங்குழலை வைத்தேன். நறுமுகை! உனக்காக வாங்கி வந்த புல்லாங்குழல். நீ இசையடி. என்னுயிரை நீ இசையடி நறுமுகை என்று சொன்னேன். அவளுடைய உதடுகள் திறவாமல் கிடந்தன. கண்கள் புல்லாங்குழலின் துளைகளைப் போல விழித்திருந்தன. யுத்தத்தின் எலும்புகள் நாம். எம்மைத் துளையிட்டு விரல் வைத்து அது ஊதுகிறது. எல்லாமும் சூனிய இரைச்சல். எல்லாமும் சூனியச் சுரம்.
குருதிப் பூவென விரிந்து தகிக்கும் இந்தத் தீ வெளியில் நறுமுகையை அணைத்துகொண்டு உதடுகளை முத்தமிட்டேன். புல்லாங்குழலிலிருந்து எழுந்தது அவளது நாதம். யுத்தம் தப்பி ஓடும் சாத்வீகத்தின் இழையை இசையால் நெய்தாள்.
“மனிதக் காயங்களில் எரியும் யுத்தம் நாதத்தினால் அழியும்”
“யுத்தம் அழியட்டும் சகியே!”
“என் குருதிக்காயத்தின் புல்லாங்குழல் துளைகளை மூடவும் திறக்கவும், யுத்தம் அழியும்”
“யுத்தம் அழியட்டும் என் குருதிப் பூவே” என்றது நானா? நிலமா? யாரறிவார்!