அதிபத்தன் இயக்கத்திலிருந்தவர். அம்மாவுக்கு நெருக்கமான ஸ்நேகிதன். என்னுடைய சிறுவயதில் அதிபத்தனோடு சுற்றிய இடங்கள் இப்போதும் நினைவிலுள்ளன. நீந்துவதற்குப் பயந்த என்னைக் குளங்களிலும், வாய்க்கால்களிலும் கொண்டு சென்று பயிற்றுவித்தார். ஒருநாள் செம்பியன்பற்று கடலுக்கு அழைத்துச் சென்று நீந்து என்றார். அலைகள் பொங்கி ஆர்ப்பரிக்கும் வெயில் பொழுதில் நீந்தத் தெரியாது என்றேன். “அலைக்குள்ள இறங்கினால் தான் நீந்த வரும். உள்ள போ” என்று தூக்கி வீசினார். கால்களை அடித்து, கைகளை வீசி மூச்சுத்திணறி எழுந்து நின்றேன். கரையில் அமர்ந்திருந்த அதிபத்தன் நீந்து…நீந்து என்றார். அலைசுருட்டி என்னை இழுத்துச் சென்றுவிடுமோவென அஞ்சி அழுதேன். என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறினேன். கடலின் பேரோசையில் ஒரு குழந்தைத் தும்மலென அடங்கியது என் குரல். “நீந்திக் கரைக்கு வா” என்றார். உடலை நீரில் கிடத்தி கால்களை அடித்து, கைகளை மாறி மாறி வீசினேன். அதிசயமாகவே இருந்தது. ஒரு கலமென என்னுடல் தண்ணீரில் நகர்ந்தது. “இவ்வளவு தான் நீச்சல், இன்னும் வேகத்தைக் கூட்டு” என்றார். கரைக்கு வந்ததும் கடலைப் பார்த்தேன். வடிவு வனைந்த திரவக்கோலமென அமைதியாய் அசைந்தது.
இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் பாரிய போர் நடவடிக்கையொன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் செய்தனர். அதே நாளில் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த வன்கவர் வெறிப்படையினர் ஆனையிறவை கைப்பற்றும் முகமாக தாக்குதல்களைத் தொடர்ந்தனர். ஆனால் தரைவழியாகவும், கடல் வழியாகவும் இயக்கம் முன்னேறிச் சென்றது. யாழ்ப்பாணத்தின் கடலோரக் கிராமங்களில் வதியும் சனங்களை இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு புலிகளின் குரல் பண்பலை அறிவிப்புச் செய்தது. யாழ் செல்லும் படையணியினரின் வியூகங்கள் வெற்றி அடைவதாக வன்னி முழுதும் பேச்சுக்கள் புரண்டன. பண்பலையில் யுத்தம் நேரடி வர்ணனை செய்யப்பட்டது. நாகர்கோவில், கண்டல், முகமாலையென போராளிகளின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க இயலாமல் வன்கவர் வெறிச் சேனைகள் பின்வாங்கிய செய்தி வந்து சேர்ந்தது. கடல் வழியாக படையணிகளை தரையிறக்கும் முயற்சியில் இயக்கம் தீவிரம் காட்டியது. அலைகளில் யுத்தப் பேரிகைகள் எழுந்தன. கடும்புயல் திகைப்போடு கந்தகம் குடித்தது கடல். போரிடும் பொருட்டுப் போராளிகளைப் பெருக்கினார்கள். பளையிலுள்ள வடபோர்முனை கட்டளைப் பணியகத்தில் கூடினார்கள். அவர்கள் கூடிய பளை எனும் இடம் யாழ்ப்பாணத்திற்கும் ஆனையிறவுக்கும் இடையில் இருந்தது.
அந்த நாட்களில் ஓரிரவு அவருக்குப் பிடித்தமான நெஞ்சொட்டி பாரை மீனுடன் வீட்டிற்கு வந்திருந்தார் அதிபத்தன். சமையல் முடித்து உணவைப் பரிமாறிய அம்மா “வெள்ளனவா, யாழ்ப்பாணம் போயிடுவமோ” என்று கேட்டாள். உறக்கம் கண்களைச் சொருக அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்தார். அம்மா எதையோ புரிந்து கொண்டவளைப் போல சரி, “மீன் துண்டைப் போட்டுச் சாப்பிடுங்கோ” என்றாள். அதிபத்தன் விடைபெறும் போது “சோதி பார்க்கலாம். போயிட்டுத் திரும்ப வாறனோ தெரியாது” என்றார்.
“இதென்ன புதுப்பழக்கம். போனால் வரத்தானே வேணும். வாங்கோ” அம்மா சொன்னாள்.
“நாளைக்கு கடலூடாக ஒரு அணியைக் கூட்டிக்கொண்டு வெளிக்கிடுகிறன். உயிர் மிஞ்சினால் ஆச்சரியம் தான்” என்றார்.
நற்செய்திக்காய்ப் பொருதும் வாழ்வு. சனங்களுக்கு எதிரான அக்கிரமக்காரர்களை அஞ்சாமல் வதம் செய்யும் அதிபத்தன் போன்றவர்களின் நெஞ்சுரத்தில் நிலம் விளைகிறது. சாவினைப் பற்றிய கவலை நெரிக்க, எங்கள் பகைவர்கள் இழப்புக்குள்ளாவர். தாய்மண் விடுதலையால் இரட்சிக்கப்படுமென்ற ஆசையோடு வழியனுப்பினோம். அம்மா வீட்டிற்குள் நுழைந்து படத்தட்டிலிருந்த விளக்கை ஏற்றிவைத்தாள். சுடர் பெருத்த நள்ளிரவின் வெளிச்சம் காலாதீதமாய் சுடர்ந்து எரியட்டும் என்றாள். “அதிபத்தனுக்கு எதுவும் நடக்காது. அவன் திரும்பி வருவான். அவன் வரும்வரை அணையாமல் எரியட்டும் இச்சுடர்” என்ற அம்மாவிடமிருந்து உயிர் உருகி கண்ணீராய்ச் சிந்தியது. வன்னியெங்கும் இச்சுடரின் ஒளி பெருகியது. போர்ப் படகுகள் அலைகளைப் பிளந்தன. அதிபத்தன் விண்மீனை வணங்கினான்.
மூன்று நாட்களாக நடந்து வந்த மோதல்களில் போராளிகள் வாகை சூடினார்கள். நூற்றுக்கணக்கான பகைவர்கள் கொன்று குவிக்கப்பட்ட செய்தியறிந்து வன்னிச் சனங்கள் பெரிதும் மகிழ்ந்தனர். அதிபத்தன் கடலில் நின்றான். வன்கவர் வெறிப்படையின் போர்க்கப்பல்கள் கடற்புலிகளில் படகுகளை முற்றுகையிட்டன. எங்கும் தப்பவியலாதவாறு இருதரப்பினரும் அழியும் வரை போரிட்டனர். அதிபத்தனின் கட்டளையேற்று நடந்த முறியடிப்புச் சமரில் போராளிகள் வென்றனர். இரண்டு போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. வானிலிருந்து அக்கினி வீழ்ந்த கடலின் மீது போர் விமானங்கள் பறந்து போயின. போராளிகளின் படகுகள் சுக்குநூறாய் சிதறின. தகன பலியிடும் பீடமென கடலில் ஆயுதமும் மாமிச துண்டங்களும் மிதந்தன. அதிபத்தனின் படகு சேதமடைந்திருந்தது. அவருடைய முழங்கையில் சிறிய காயம் ஏற்பட்டிருந்தது. தேசத்தின் சிறப்புக்குரிய ஊழியன் போரில் காயப்படுகிறான். நிலம் விசுவாசித்தவன் உயிர் துறக்கிறான். அடுத்தடுத்த நாட்களிலேயே களமுனையின் நிலவரம் பீதியாயிற்று. போராளிகளில் ஒரு தொகையினர் காயப்பட்டனர். யாரும் எதிர்பாராத முற்றுகை அகழிக்குள் அகப்பட்ட போராளிகளை பகைவர் கொன்று தீர்த்தனர். தரைவழியாகவும், கடல் வழியாகவும் பலவீனப்பட்டு இயக்கம் பின்வாங்கியது. தெய்வமே! உன்னுடைய சனங்களுக்கு நல்லவராயிருமென்று வன்னிச் சனங்கள் சோகம் தாளாது வேண்டினர். பார்க்கிறவர்களின் எலும்புகள் நடுங்குமளவுக்கு போராளிகளின் வித்துடல்கள் குவிக்கப்பட்டன. குணப்படுத்த முடியாதளவு நிலத்தின் சித்தம் பிறழ்ந்திருந்தது. மகா உன்னதமான தியாகம் தனது சிரசில் இத்தனை வித்துடல்களாலேயா மகுடம் அணிய வேண்டும்!
அணையாமல் எரிந்து கொண்டிருந்தது விளக்கு. இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல எங்கள் தேசத்தை அழிக்கமுடியும் என்ற பகையின் இறுமாப்பை சில்லுச்சில்லாக உடைத்தவருள் அதிபத்தன் தலையாயவர். வீரச்சாவு அடைந்தவர்களின் விபரங்களை வாசித்து அறிந்தோம். அதிபத்தனின் பெயரில்லை. “வந்திடுவான். இப்பிடித்தான் இந்தியாமி காலத்திலையும் அவனுக்காக காத்திருந்தனாங்கள்” என்றாள் அம்மா. நாங்களிருந்த கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. வேறொரு திசையிலிருந்து பகைவர் முன்னேறத் திட்டமிட்டிருப்பதாக போராளிகள் கூறினர். அந்த விளக்கை ஏந்தியபடி அம்மா இடம்பெயர்ந்தாள். காற்றிலும் அணையாதவாறு தன்னுடைய வலது உள்ளங்கையைப் பக்கவாட்டில் குவித்து நடந்தாள். இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த, கிளிநொச்சியில் “அதிபத்தனின் அணையா விளக்கு” வைப்பதற்கு அம்மாவொரு பீடத்தைக் கட்டினாள். வேப்பமரத்தின் கீழே எல்லாப்பொழுதும் சுடரும் விளக்கைப் பார்த்து இது எந்தத் தெய்வத்திற்கு என்று கேட்காதவர்கள் மிகக் குறைவு. இது எங்கட தெய்வம். என்ர ஸ்நேகித தெய்வம் அதிபத்தன்ர அணையா விளக்கு” என்றாள். சமுத்திரத்தின் நட்சத்திரமே அதிபத்தா! என்று அடிக்கடி உச்சரிக்கத் தொடங்கினாள். போர் சகிக்கவியலாத அகோர வேதனை.
அம்மாவிடம் வந்திருந்த முக்கிய போராளியொருவர் இயக்கத்தின் போக்குகள் பிடிக்கவில்லையென கூறினார். ஆயுத, ஆளணி பலமற்று சண்டையில் இறங்கினால் இப்படித்தான் விளைவுகள் தொடருமென்றார். அவரின் சொற்கள் உண்மையும் தூய்மையுமானவை. நெருப்பில் ஏழுமுறை உருக்கித் தூய்மையாக்கப்பட்ட வெள்ளியைப் போல தூய்மையானவை. அம்மா எதுவும் கதையாமல் உணவைப் பரிமாறினாள். நடந்து முடிந்த சண்டையில் அதிபத்தன் வீரச்சாவு என்ற செய்தியைச் சொன்ன போதுதான், அவரைக் கடிந்து கொண்ட அம்மா “அவன் வீரச்சாவில்லை. வருவான்” என்றாள். எனக்குமே அவர் சொன்னதில் உடன்பாடில்லை. வீரச்சாவு என்றால் இயக்கமே அறிவித்திருக்கும். மறைப்பதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்குமாவெனக் கேட்டேன். “ஆள் காயப்பட்டிருக்கு. அவரோட படகில இருந்த ஒரேயோருத்தர் மட்டும் வந்திருக்கிறார். அவன்ர தகவலின் படி ஆள் மிஸ்சிங்” என்றார்.
“மிஸ்சிங்கா?”
“கடுமையான சண்டை நடந்து, சிதறிப் போயிருக்கினம். அதிபத்தன் மட்டும் தனியொரு படகில நிண்டு சண்டை செய்திருக்கிறார். அதுமட்டுந்தான் இறுதித் தகவல்.” என்றார். அம்மா விளக்கிற்கு எண்ணெய் விட்டதும் திரிச்சுடர் பிரகாசம் கொண்டது. பகலின் மீது சிறிய விதையென அது வளர்ந்து அசைந்தது.
ஒரு வேலையாக மாங்குளம் சென்று வீட்டிற்குத் திரும்ப இரவாகியது. அம்மா வெளியே அமர்ந்திருந்தாள். “முகம், காலைக் கழுவிட்டு வா. சாப்பிடலாம்” என்ற அவளுடைய குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது. அன்றிரவு படுக்கையில் கேவி அழுத அம்மாவுக்கு ஆறுதல் சொன்னேன். அவருக்கு எந்தத் தீமையும் நேர்ந்திருக்காதென்று தெம்பூட்டினேன். அதிகாலையில் எழுந்து விளக்கு வைத்திருக்கும் பீடத்திற்குப் போனாள். அவளுடன் நான் செல்லாமல் படுக்கையில் விழித்திருந்தேன். அம்மா விளக்கில் திரிதீண்டி எண்ணெய் விட்டாள். அதிபத்தா! உனது கால்களால் அளந்த வன்னி நிலம் பதைபதைக்கிறது. நீ களமாடி வென்ற மண்ணின் பகுதிகள் பல பறிபோய்விட்டன. ஏன் இந்த நிலத்திற்கு நீயும், உனக்கு நிலமும் முக்கியமானது? ஏன் இந்தச் சனங்கள் முக்கியமானவர்கள்? உன்னை அவர்கள் பிரிந்து தவிக்கிறார்கள். சிலர் நினைவுகூருகிறார்கள். ஆனால் நீயோ நிலவாகவும் சூரியனாகவும் வானில் எழுந்து ஆச்சரியப்படுத்துகிறாய்! உன் வருகைக்காய் காத்திருக்கிறது இந்தச் சுடர் பீடம். நீ கெதியாக வா. உனக்குப் பிடித்த நெஞ்சொட்டி பாரை மீன்கள் என் கனவில் நீந்துகின்றன என்றாள்.
கிளிநொச்சியை விட்டு இடம்பெயருமாறு சனங்களுக்கு உத்தரவு வந்தது. அம்மா அதிபத்தனின் அணையா விளக்கை ஏந்திக் கொண்டு நகர்ந்தாள். கிளிநொச்சி பகைவரிடம் அணைந்தது. தரையிலிருந்த மக்கள் கடல் நோக்கி ஒதுக்கப்பட்டனர். இயக்கத்தினர் ஆயுதங்களையும், முகாம்களையும் மாற்றிக்கொண்டனர். சனங்கள் வீதிகளிலும், காடுகளிலும் கூடாரங்களை அமைத்தனர். போர் விமானங்கள் தினமும் நான்குமுறை மக்கள் குடியிருப்புக்களின் மீது குண்டுகள் வீசின. அவலப் பேராற்றின் தெருக்களில் அணையா விளக்கோடு நடந்து சென்ற அம்மாவை எல்லோரும் புதினமாகப் பார்த்தார்கள். என்ன வேண்டுதலோ என்று சிலர் குசுகுசுத்தார்கள். முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நான்கடி நீளமும் மூன்றடி ஆழமுமான பதுங்குகுழிக்குள் நானும் அம்மாவும் விளக்கை பாதுகாத்திருந்தோம். அம்மாவுக்கு விலக்கான நாட்களில் பதுங்குகுழிக்குள் சிறிய குழி தோண்டி விளக்கை வைத்தாள்.
“நிலத்துக்கு கீழ இருந்தால், அதை மனுஷத் தீட்டு தீண்டாது” என்றாள்.
முள்ளிவாய்க்காலில் விளக்கெரிக்கும் எண்ணெய் தீர்ந்து கொண்டிருந்தது. விளக்கை அணையவிடக் கூடாதென அம்மா உறுதி பூண்டிருந்தாள். ஒரு போராளியிடம் கோரிக்கையாக “விளக்கெரிக்க எண்ணெய் வேண்டும், உங்களிடம் இருந்தால் தாருங்களேன்” என்றாள். இருந்தால் கொண்டுவந்த தரச்சொல்லுகிறேன் என்றார். மூன்று நாட்கள் கழித்து அம்மாவுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. “நந்திக்கடல் போய் நீரெடுத்து வரலாம். அந்த உப்பு நீரில தானே, வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் விளக்கெரிக்கிறவே” என்றாள்.
“அம்மா அது கோவிலுக்கு எரியும். இந்த விளக்குக்கு எரியுமே” கேட்டேன்.
“அந்தத் தெய்வத்துக்கே தெரியுமடா, சனங்களைக் காக்கிறது எந்த தெய்வமெண்டு. இந்த தண்ணியில விளக்கு எரியாட்டி கண்ணகியின்ர அற்புதமெல்லாம் பொய்யிலதான் சேர்மதி கேட்டியோ” என்றாள்.
நானும் அம்மாவும் விளக்கை எடுத்துக் கொண்டு நந்திக்கடலுக்கு போகும் பாதையில் நடக்கத் தொடங்கினோம். கடுமையான மோதல் நடந்து கொண்டிருந்தது. தலையைத் தூக்கி நடந்தால் மரணம். சிறிது தூரத்திலேயே நானும் அம்மாவும் நிலத்தோடு நிலமாக ஊர்ந்தோம். அம்மா தன்னுடைய கையில் விளக்கைச் சுமந்திருந்தாள். நாங்கள் நந்திக்கடலை அடையமுடியாதவாறு கடுமையான மோதல் தொடர்ந்திருந்தது. அப்படியே நானும் அவளும் நிலத்திலேயே படுத்துக் கொண்டோம். போராளிகள் சிலர் எங்களைப் பார்த்ததும் “ஓடுங்கோ அம்மா. இனிமேலும் இஞ்ச இருக்கமுடியாது. நாங்கள் குப்பி கடிக்கப்போகிறோம் “என்றனர். அம்மா ஒரு போராளி அக்காவை அழைத்து “எனக்கு கொஞ்சம் நந்திக்கடல் தண்ணி வேணும் மோளே, எடுத்து தருவியளோ” என்று கேட்டாள். “அந்தத் தண்ணி எதுக்கென இப்ப” கேட்டாள். அம்மா விளக்கை காட்டி, “இந்த விளக்கை அணையவிடக் கூடாது மோளே, இது அதிபத்தன்ர அணையா விளக்கு” என்றாள்.
அந்த அக்காவுக்கு அம்மா சொன்னது விளங்கவில்லை. ஆனாலும் அவள் நந்திக்கடல் தண்ணீரை ஒரு வெடிகுண்டின் வெற்றுக் கோதில் நிரப்பிக்கொண்டு வந்து கொடுத்தாள். கடுமையாய் சுடுகுது என்றாள் அம்மா. அணையைத் துடிக்கும் சுடரின் அடித்திரி வேரில் நீரூற்றினாள். சுடர் எழுந்தது. வெற்றுக்கோதில் இருந்த மிச்சத் தண்ணீரை தாங்கியபடி அப்படியே நிலத்தில் கிடந்தோம். நந்திக்கடல் நீரில் அதிபத்தனின் அணையா விளக்கு நின்றெரிந்தது. நிணத்தில் எரிந்த நிலம் கருகி வீழ்ந்தது.
அம்மாவின் ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக்கிய சிப்பாய், அவளது அடிவயிற்றில் சிவந்து தகிக்கும் பகுதியை சந்தேகித்து துப்பாக்கியின் நஞ்சுக் கத்தியால் குத்திக் கிழித்தான்.
அவளினுள்ளே ரத்தத்தில் எரியும் சுடர் விளக்கு அசைந்தணைய அதிபத்தனின் நெஞ்சொட்டிப் பாரைகள் நந்திக்கடலில் செத்து மிதந்தன.