
கடலின் முன்னே விரிந்திருக்கும் அடர்ந்த காட்டினுள்ளே குருதி கசிந்துலரா சரீரத்தோடு மூச்சடங்கி கிடந்தாள். அவளது வலதுகரம் திடுமென உயர்ந்து என்னை அழைத்தது. குண்டியிலிருந்து வழியும் காற்சட்டையைப் பிடித்தபடி அவளிடம் ஓடினேன். எனது கையைப் பற்றித் சிரசில் வைத்தாள். அவளது உச்சியில் உலோகத்தின் கொதி. பிடரி பிளவுண்டு மண்ணால் அடைக்கப்பட்டிருந்தது. சரீரத்தை தூக்கியபடி கடலை அடைந்த கணத்தில் மூச்சற்றாள். கடலில் வீசினேன். அலையின் ஒவ்வொரு மடிப்பிலும் உடல் சுருண்டு கடலுக்குள் போவதும் கரையொதுங்குவதுமாயிருந்தது. கழுகுகள் வானத்திலிருந்து கடல் நோக்கிச் சரிந்தன. அவற்றின் கால்களிலிருந்து ராட்சதக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. ஒரு பேரோசை எழுந்தது. அவளின் குரல் எழுந்து மடிந்தது. காலுக்கடியில் கிடந்த சிப்பியையெடுத்து கடல் மீது வீசினேன். கடலில் மிதக்கும் சரீரத்தில் அந்திச் சூரியன் சாய்ந்தது. அவளது கைகள் வான்நோக்கி உயர்ந்து சூரியனை அறைந்தன. ஒளி மங்கியது. இருண்ட பூமியில் மிதந்துகொண்டே இருந்தாள் சித்தி. இக்கனவை அம்மாவிடம் சொன்னேன்.
“எப்ப பாத்தாலும் உன்ர கனவிலதான் அவள் வாறாள். என்ர கண்ணிலேயே அவளின்ர உருவத்தைக் காட்டமாட்டாள் போல” அம்மா சொன்னாள்.
“நாளைக்கு கனவில சித்தி வந்தால், அம்மா இப்பிடி சொல்லிக் கவலைப்படுகிறா, அவாவிட்டையும் போங்கோ என்று சொல்லுறன்” என்றேன்.
“உந்த வாயாடித்தனம் அவளிட்ட இருந்துதான் உனக்கு தொத்தினது. அவளும் இப்பிடிக் கிரந்தங்கள் கதைச்சு கடுமையா பேச்சு வாங்கியிருக்கிறாள்”
“ஆரிட்ட?”
ஆரிட்ட வாங்கேல்ல சொல்லு. ஒருக்கால் தம்பியின்ர சந்திப்பில தளபதிமாரவே கூடி நிக்கேக்க ஈகை சொல்லியிருக்கிறாள் “ அண்ணை, உந்தக் குடாரப்பு தரையிறக்கச் சண்டை வெற்றியில “லீமா”ன்ர புத்தி எவ்வளவு முக்கியமானதோ, அதுமாதிரி இராணுவத்தின்ர புத்தியின்மையும் முக்கியமானது. ஏனெண்டு சொன்னால் அவங்கள் சண்டை செய்யிறதப் பார்த்தால் எங்களுக்கு பாவமாய் இருந்தது. ஏதோ வேட்டைத் திருவிழாவுக்கு வேஷம் போட்டுக்கொண்டு திரியிறவே மாதிரியெல்லே வந்தவே” என்றிருக்கிறாள். அதில நிண்ட தளபதியொருத்தர் முகம் மாறி, கோபப்பட்டிருக்கிறார்.
“தலைவர் என்ன சொன்னவராம்?”
அண்டைக்குப் பிறகு கனநாளாய் சந்திப்புக்கு ஆளை எடுக்கிறதில்லை. அதுக்குப் பிறகு ஒருநாள் வேறொரு சந்திப்பில ஈகையைக் கூப்பிட்டு “உன்ர பகிடியை விளங்கிச் சிரிக்கிற நேரத்தில, நாங்கள் இன்னொரு சண்டைக்கு வரைபடம் அடிச்சிடுவம். கொஞ்சம் வாயைக் குறை” என்றிருக்கிறார். “அதுக்கு இவள் சொன்ன பிரபலமான பதில கேள்விப்பட்டிருக்க மாட்டாய்” என்ற அம்மா என்னைப் பார்த்தாள். நான் பதிலென்னவென்று கேட்பதற்குள் தொடர்ந்தாள்.
“அண்ணை, எங்கட தளபதிமாருக்கு பகிடி விடுகிறது, சிரிக்கிறது எல்லாம் தேசத்துரோகம் இல்லையெண்டு உறுதிப்படுத்திச் சொல்லுங்கோ. அதுவும் உங்களுக்கு முன்னால சிரிக்க சிலர் அம்மானிட்ட கடிதம் வாங்கோணுமெண்டு நினைக்கினம்” என்றிருக்கிறாள். சுற்றியிருந்த ஏனைய போராளிகளும் ஈகை சொன்னதைக் கேட்டுச் சிரித்தனராம்.
ஈகை சமர்க்களத்தில் பகைவர்க்கு கொடியவள். எளிய வியூகங்களால் எதிரியின் முன்னேற்றத்தை முறியடிப்பவள். வேவு அணியிலிருந்த அனுபவம் அவளது படையியல் வலிமை. ஒருமுறை பூநகரியில் நடந்த வன்கவர் படையினருடனான மோதலில் ஈகையின் சிறப்பான முடிவுகள் இயக்கத்துக்கு பாரிய வெற்றியைப் பெற்றுத்தந்தது. ஈகை புலியில்லை சூழலுக்கு ஏற்றவாறு வேட்டையாடும் சிறுத்தை.
ஒருநாளிரவு போராளிகளின் காவலரண்கள் மீது தாக்குதல் தொடங்கியது. நிலை கொண்டிருந்த தனது அணியினரிடம் பதிலுக்கு தாக்காமல் அமைதியாக இருக்குமாறு கட்டளை பிறப்பித்திருக்கிறாள் ஈகை. அந்தப் போர்முனையின் தளபதி ஈகையை அழைத்து இப்படி முட்டாள்தனமாக எதுவும் செய்யாதே என்று திட்டித் தீர்த்திருக்கிறார். தான் நினைத்தது போலவே எதிரியானவர்கள் தாக்குதலில் மும்முரமாக இருந்த வேளையில், தன்னுடைய சிறப்பு அணியினரை ஈகை முன்னேறச்செய்திருக்கிறாள். ஒரு கள்ளப்பாதை வழியாக உறுமறைக்கப்பட்ட இருபது போராளிகள் காட்டிலுள்ள மரங்களைப் போல நின்றிருந்தனர். பின்னர் ஒரே நேரத்தில் பின்னணிச் சூட்டு ஆதரவோடு பதுங்கியிருந்த அணியினர் தாக்குதலை தொடங்கினர். ஈகைக்கு இந்தச் சமரில் பெரிய பெயர் கிட்டிற்று. கிட்டத்தட்ட நாற்பது சடலங்களையும், ஒரு வன்கவர் வெறிப்படையினனை உயிரோடும் கைப்பற்றினார்கள். அவனை உரிய மரியாதையோடு பின்தளத்துக்கு அனுப்பி வைத்தாள். பிறகொரு நாளில் கைதிப்பரிமாற்றம் செய்யப்பட்ட அந்தப் படையினன் தன்னுடைய சொந்தவூருக்குச் சென்று, இயக்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் ஈகையாளின் போர் அறத்தைப் பற்றி அவன் நினைவு கூர்ந்தது மறக்க இயலாதது” என்றாள் அம்மா.
ஈகையாள் சித்தியை உங்களுக்குத் தெரிந்திருக்காது. வன்னியிலிருந்தவர்களே பெரியளவில் அறிந்திருக்கவில்லை. இயக்க உறுப்பினர்களுக்கும் அதே கதிதான். இறுதியாக ஈகையாள் சித்தியை முள்ளிவாய்க்காலில் வைத்துச் சந்தித்தோம்.
“இனி மிச்சமிருக்கப்போவது தாய் நிலமல்ல, ஓர் உன்னதச் சகாப்தத்தின் நிர்மலமான இறந்தகாலம் மட்டுமே. வெறுமென அதற்காகவே காத்திருக்கிறோம்” என்றாள்.
சிறகாறா பறவையின் சோர்வு சித்தியில் கிளையோடியிருந்தது. அவளுக்கு அனைத்தும் அர்த்தமற்றதாக தோன்றிவிட்டதா? தியாகமென்பது இனி சொல்லின் ஞாபகமா? விடுதலையென்பது இனி கொடுஞ்சூட்டின் சீழா? பலவீனமடைந்த வீரயுகத்தின் நிர்மலம் தேயாதிருக்கட்டும். நம் வாழ்வு புதைக்கப்படுவதற்கும், விதைக்கப்படுவதற்கும் படைக்கப்பட்டது. நிதமும் துக்கத்தில் தத்தளிக்கும் பூர்வீகரோ நாம் என்று யாரோடு நோவது? யார்க்கெடுத்து உரைப்பது!
போரின் குமுறல் ஓசை கூவி முழங்கியது. அம்மா கஞ்சி வைத்தாள். சேமிப்பிலிருந்த குத்தரிசியின் கடைசிச் சுண்டு உலையில் கொதித்தது. கொடூரமான ஏவுகணைகள், பீரங்கிகள் சிதறி வீழ்ந்தன. கஞ்சி கலயங்களோடு சித்தியும், நானும், அம்மாவும் பதுங்குகுழிக்குள் இருந்தோம்.
“இந்த நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலவும் உலர்ந்து போகும் புல்லைப் போலவும் இருக்கின்றன” என்றேன்.
“ஓமடா தம்பி! எங்கள் பிதாக்கள் யுத்தத்தின் விளைவுகளை அசட்டை செய்தனர். ரத்த தாகத்தோடு வல்லமையோடிருந்த யுத்தமோ தன் புழுதியால் நம்மை அழிவிக்கிறது. சிவந்த சமுத்திரத்தின் ஓரத்திலே பொஸ்பரஸ்களால் கொல்லப்பட்ட குழந்தைகள் மிதக்கின்றனர். இவ்வுலகில் எங்களுக்கு நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை. அக்கிரமக்காரர் பால்சோற்றைப் பட்சிக்கிக்கிறதைப் போல் சனத்தைப் பட்சிக்கிறார்கள். யுத்தம் எங்களை வெறுத்து தோல்வியை தண்டனையாக அளித்தது. எங்கள் பிதாக்களை அது வெட்கப்படுத்தியது. கரைந்துபோகிற நத்தையைப்போல ஒழிந்துபோகாத பெருங்கனவின் பாதத்தில் சந்ததியைப் பணிய வைத்தார்கள். இன்னும் சில தினங்களில் பட்டயத்தின் கருக்கை மழுக்கிப்போட்டு திக்கற்ற யுத்த அநாதைகளாக ஆகுவோம்” என்ற சித்தியை அன்றிரவே கட்டியணைத்து வழியனுப்பினாள் அம்மா.
இரண்டு நாட்கள் எங்களோடு இருங்கள், அதன்பிறகு போகலாமென்று சொல்லியும் சித்தி கேட்கவில்லை. கூடாரங்களும் அழுகுரல்களுமாய் பரவியிருந்த நிணவெளியை ஊடறுத்து தனது கைத்துப்பாக்கியோடு நடந்து மறைந்தாள்.
மானுடத்திற்கு விரோதமான பெலனுடன் யுத்தம் தொடர்ந்தது. மண்ணின் விடுதலைக்காய் நீதிமானாய் களம் புகுந்தவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். சுழல்காற்றின் பழிவாங்கல் போலவே கந்தகத் தீயின் சுவாலைகள் ரத்தத்தில் மூண்டன. நாங்கள் யுத்தத்தின் மீது சிறுசொட்டும் நம்பிக்கையாயிராமல் எதன் மீது நம்பிக்கையாயிருக்க வேண்டுமென தீர்மானிக்கமுடியாத அபயமற்றவர்கள். மெய்யாய் பூமியிலே யுத்தம் அழியட்டுமென சபித்து அழும் மனுஷத் திரளின் பட்டயத்தை எதனாலும் தாக்க இயலாது. ஈகையாள் சித்தியை நினைத்து அழுதபடியிருந்தேன். என்னைத் தூக்கி வளர்த்த வரிப்புலித் தாயவள். ஆய்ந்த விரல்களில் வாசம் வீசும் காட்டுப் பூ அவளது நறுமணம். என் தலையில் பேன் பார்த்து, குளிப்பாட்டி என்னையே மகவென தரித்தவள். அவள் எப்போதும் இறந்து போகமாட்டாள் என்று எண்ணிய என் குழந்தைப் பருவத்தின் ஒரு பெளர்ணமி நாளில் சித்தி சொன்னாள்.
“மகன், நீ வளர்ந்து வந்ததுக்குப் பிறகு, உனக்கொரு சித்தப்பா வருவார். அவரிட்ட நீதான் என்ர பிள்ளையெண்டு நான் சொல்லுவன்.”
“நான், உங்கட பிள்ளைதானே சித்தி “ என்றேன்.
சமர்க்களத்தில் காயப்பட்டு கருப்பை முற்றாகச் சிதைந்து உயிர் மீண்ட ஈகை சித்தி என்னையே கருவாகச் சுமந்தாள்.
சித்தி புறப்பட்டு எட்டாவது நாளில் எல்லாமும் அழிந்திற்று. அழிவின் வெறுங்காலில் மிதிபட்டோம். கடலோரம் மண்டியிட்டவர்களை கண்முன்னே கொன்று போட்டனர். நாயகர்களின் பட்டயங்கள் மண்ணில் புரண்டு வீழ்ந்திருந்தன. பெருத்த காயங்களுக்கு உள்ளானவர்கள் தங்களுடைய ஆயுதங்களால் தம்மையே கொன்றனர். பிள்ளைகளை ஒருமிக்கச் சாகக்கொடுத்த தாய்நிலமும் தன்னையே வெடிவைத்து தகர்த்துக் கொண்டது. அம்மா, சித்தியை தேடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு நெருக்கமான மிகச்சிலரில் ஒருவரை மட்டுமே காணக்கூடியதாய் இருந்தது. ஈகை பற்றி எந்தத் தகவலும் தெரியாதென கை விரித்தார். பிறகு இன்னொருவரின் தகவலின் படி, முக்கியமான இடத்தில் நேற்றுவரை இருந்ததாக அறியமுடிந்தது.
அம்மாவும் நானும் கடைசித் தடவையாக ஒரு சுற்றுத் தேடிவிட்டு வன்கவர் வெறிப்படையின் வேலிக்குள் போகலாமென முடிவெடுத்தோம். நந்திக்கடல் கண்டல் காடு வரை நடந்து போகலாமென எண்ணினேன். அம்மா வேறொரு திசையில் நடக்கத் தொடங்கினாள். சனங்களின் அழுகுரல் வெடியோசைகள் எல்லாமும் வெறுமை கப்பிய பதற்றத்தை தந்தது. கும்பி கும்பியாக காயப்பட்ட போராளிகள், உப்புக் களிமண்ணையள்ளி காயத்தில் திணித்தனர். எவ்வளவு காயங்களால் அரண் அமைக்கப்பட்டிருந்த மண். ஒரு காயத்தின் குருதியைக் கட்டுப்படுத்த முடியாமல் வெட்கித்து அழுதது.
ஈகை உயிரோடு தானிருக்கிறாள். ஆனால் எங்கேயோ தப்பி போயிருக்கலாமெனத் தோன்றுகிறது என்று அம்மா சொல்லத்தொடங்கினாள். நடந்தவற்றை சொல்லுவதா வேண்டாமா என்ற குழப்பம். அம்மாவுக்கு ஈகை சித்தி உயிரோடு இருக்க வேண்டுமென ஆசை. எப்பிடியாவது ஒருநாள் ஈகை வந்துவிடுவாள் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளவும் செய்கிறாள்.
ஆனால் இத்தனை வருடங்களாகியும் அம்மாவிடம் சொல்லாத சேதியொன்றை உங்களிடமும் சொல்லவேண்டும். அன்றைக்கு முள்ளிவாய்க்காலில் நானும் அம்மாவும் திசைக்கொன்றாக பிரிந்து தேடினோம் அல்லவா! நான் போன திசையிலிருந்த கண்டல் பற்றைக்குள் ஈகை சித்தியைக் கண்டேன். அவளது வயிற்றை ரத்தம் மூடியிருந்தது. சித்தியின் மூச்சு சீரற்றுத் திணறியது. அவள் என்னை இனங்கண்டு கொண்டாள்.
தன்னுடைய கழுத்தில் கிடக்கும் சயனைட் குப்பியை எடுத்து வாய்க்குள் திணிக்குமாறு கன்களால் இரந்து கேட்டாள். வீரயுகத்தின் கம்பீர மாண்பையும், எக்கணத்திலும் அஞ்சாத திண்மையையும் தந்தருளிய ஆலம். வாழ்நாள் முழுவதும் சமரில் எதிரிகளையும், துரோகிகளையும் துளி அச்சமுமின்றி நேராய் சந்தித்த அதே கண்களால் சித்தி என்னிடம் கெஞ்சினாள்.என்னால் முடியாது சித்தியென்று கதறியழுதேன். ஊழி பெருத்தோடும் கணம்.
மீட்சியற்ற பாழ்வெளியில் நாமிருந்தோம். முலையூட்டாத என் தாயின் மகிமைக்கும் மேன்மைக்குமாய்…! ஒரு மகவூட்டும் அமிழ்தமென மண்ணோடு அவளையும் சேர்த்து அள்ளிக்கொண்டேன். முத்தமிட்டேன். அவளது மார்பின் மீது கிடந்த குப்பியை வெளியே எடுத்துக் கொடுத்தேன். கண்களை மூடினேன். உயிர் நொருங்கியது. ஒளிபொருந்திய முகம் திரும்பிய ஈகையாள் சித்தி கண்களை விரித்து என்னையே பார்த்தாள். அசைவற்ற ஒரு இறுமாப்புடன் அவள் மானத்துடன் தப்பித்திருந்தாள். அவளுடைய வயிற்றின் மீதிருந்த குருதியை என் உடலெங்கும் பூசிக்கொண்டு நந்திக்கடலில் இறங்கினேன்.
காலத்தின் ஊழ், போரின் பலியாடுகளாய் தோற்ற சனங்களை மேய்த்தது.