ருபத்தைந்து வாரங்கள் தளத்தில் வெளிவந்த போதமும் காணாத போதம் நிறைவடைந்தது. என் இலக்கிய ஊழியத்தில் மறக்கவியாலாதவொரு நிறைவை அளித்த படைப்பு. மூதாதையர்களால் ஏவிவிடப்பட்ட நல்லருள் என்னை வந்தடைந்த நாட்கள் இவைதான் போலும்! ஈழரின் பண்பாட்டு ஆழத்தில் அலைமடிந்திருக்கும் நம்பிக்கைகளும், தொன்மங்களும் போரியல் வாழ்வோடு பின்னப்பட்ட வீரயுக காலத்தின் மாந்தர்களையும் நாயகர்களையும் எழுதினேன். என் தெய்வங்களை நொந்தேன். பிரார்த்தித்தேன். கைவிடப்பட்டவர்களின் கூக்குரல் வெறும் அரசியல் தன்மை கொண்டது மட்டுமல்ல. அதன்பின்னே திரளத்தொடங்குவது ஆற்றமுடியாத இழப்பின் தொன்மம்.

ஒவ்வொரு வாரமும் வாசித்து கடிதங்களாகவும், நேர் பேச்சிலும் வந்தடைந்த பாராட்டுதல்களும் மதிப்பீடுகளும் பெறுமதியானவை. தொடர்ச்சியாக இலக்கிய வாசிப்பில் உள்ளவர்களின் ஒவ்வொரு அவதானமும் மதிப்புக்குரியன. ஆறு மாத காலமாக கூர்மையான தீவிரத்தோடு தளத்தில் சரியான நாளில் நேரத்தில் பதிவேற்றம் செய்தேன். ஏற்றுக்கொண்ட செயலுக்கு ஒப்புக்கொடுப்பதில் கர்வம் கிளைக்கிறது. மொழியையும், தன்னுடைய படைப்பின் தருணங்களையும் பிணைத்துக் கொடியேற்றும் படைப்பாளர் லட்சியத்தீவிரம் கொண்டிருக்க வேண்டுமென்னும் பள்ளியைச் சேர்ந்தவன் நான். என் எழுத்துச் செயலின் வடத்தை அப்படித்தான் பற்றியிருக்கிறேன்.

என்னுடைய வாசகர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். இது மிகையான அறிவிப்பு அல்ல. படைப்புக்கள் வெளியானதும் அதனை பதிவு செய்து வாங்கி படிக்கிறார்கள். ஈழ இலக்கியமென்கிற வெளிக்கு போதமும் காணாத போதம் மேலான பேராற்றலையும் புதிய வழியையும் விசையையும் அளித்திருக்கிறது என்பேன்.

ஒவ்வொரு மூத்தோரையும் பணிந்து மொழியின் திருவடிகளை வணங்குகிறேன்.

  • அகரமுதல்வன்

 

Loading
Back To Top