
செந்தடி கருப்புக் கோவில் விழா அன்று வழக்கத்தை விடப் போலீஸ் அதிகம் நின்றிருந்தார்கள். ஏதோ நடக்கப்போகிறது என்று மக்கள் ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள்.வெயிலான் வேஷமிட்டு வருகிறானா என்று பார்ப்பதற்கு ஆள் நியமித்திருந்தார்கள். லட்சுமியாபுரத்து புலி. செக்கடி கிராமத்து புலி எனப் பல புலிகள் இறங்கி விளையாட்டு காட்டின. காசியாபுரத்துப் புலியாகத் தங்கமாரியப்பனின் இரண்டாவது மகன் பிரபு இறங்கி வந்தான். தாள முழக்கம் வேகம் எடுக்க அவன் ஆடி வந்த போது தெற்குதெரு மாடி ஒன்றிலிருந்து தாவிக் குதித்தது ஒரு புலி. அது ரெக்கை கட்டிய புலி. பிரபுவிற்கு எதிர்புலி போட வெயிலான் இறங்கினான். அப்படி ஒரு ரெக்கை விரித்த புலியை ஊர்மக்கள் கண்டதேயில்லை. சிகிலனின் வாரிசு என்பது போல வெயிலான் ஆவேசமாக நின்றிருந்தான். அவனது கோபத்திற்குத் துணை சேர்ப்பது போல வெயில் உக்கிரமாகத் தனது ஆட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தது.