வெயிலைத் தாங்கமுடியாது வீதியின் நிழலில் கொஞ்சம் இளைப்பாறுகிறார்கள். சென்னை நகர் முழுதும் இளநீரும், நொங்கும் விற்பனையில் சூடு பிடித்திருக்கிறது. நன்னாரி சர்பத்துக்கும் இந்தப் பருவம் மவுசு கூடுதலாகிவிடும். சிறுநிழல் மணல் கும்பியில் நாய்கள் சோர்ந்து கிடக்கின்றன. குளம்புகளில் கொதியேற மாடுகள் எங்கு போவதெனத் தெரியாமல் சுவரோரம் அசையாமல் போய் நிற்கின்றன. நிழல் தேடி அலைபவர்கள் ஒதுங்க மரங்கள் போதவில்லை. கூடை சுமந்து மீன் விற்கும் அக்கா வெயிலைக் குடித்தபடி கூவுகிறாள். அவளது மகளொருத்தி செதில்களை அகற்றி கழுவிக் கொடுக்கிறாள். அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து வாளியில் கயிறைக் கட்டி கீழே விடுகிறார்கள். துண்டங்களாகிய மீன், கயிறு வழியாக மேலே ஏறுகிறது. அடுக்குமாடியில் இருக்கும் வாடிக்கையாளர் கீழே வந்தால் வெயில் சுட்டுவிடும் என்கிறார்.

பூங்காக்கள் பலதும் மாலையிலேயே திறக்கப்படும் என்று அறிவுப்பு பலகையோடு முகப்பு வாசலை சாத்தி நிற்கின்றன. வெப்பம் தாங்காது நிழல் தேடியலைவது துர்சகுனம் போலிருக்கிறது. மனிதர்களின் ஆதிக்கத்தால் துன்பப்பட்ட இயற்கை தனது பிரார்த்திப்பை தொடங்கிவிட்டது போலும்! வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சத்தோடிருங்கள் என்ற சமயக்கூற்றை இயற்கையும் நம்மிடம் அறிவுப்புச் செய்கிறதோ அறியேன்.

கட்டுமானங்களுக்காகவும், அபிவிருத்திகளுக்காகவும் மரங்களை வெட்டி வீழ்த்தி, ஆற்றின் வயிற்றை அகழ்ந்து வளங்களை விற்பனை செய்து, ஏரிகளையும், குளங்களையும் புதைத்து அடுக்குமாடிகள் கட்டி இயற்கையைத் துண்டு துண்டாய் இல்லாதொழித்தவர்கள் நாம் தானே! உலகம் முழுதும் காலநிலை மாற்ற எச்சரிப்புக்கள் வந்தவண்ணமுள்ளன. இயற்கை ஆர்வலர்கள் கூறும் அறிவுறுத்தல்களை “நகைச்சுவை மீம்ஸ்” ஆக்கி நக்கல் செய்பவர்களை சகித்துக் கொள்ளும் தாராளவாதிகள் நாம் தானே! தண்ணீரை வீணாக்காதீர், பிளாஸ்டிக் கழிவுகளை கீழே போடாதீர்கள். மக்கும் குப்பையைத் தனியாகவும், மக்காத குப்பையை தனியாகவும் போடுங்கள் என்றால் எல்லாமும் குப்பைதானே என்று வியாக்கியானம் பேசுபவர்களை கடந்து சென்றவர்கள் நாம் தானே! வளங்களுக்காவும், வன உயிரினங்களுக்காகவும் குரல் கொடுப்பவர்களை இவர் பெரிய புரட்சியாளர், சும்மா போவியா என்று சீன்டியவர்கள் நாம் தானே! யானை டாக்டர் என்றொரு கதையை எழுதிட்டு பெரிய இயற்கை காவலராய் சீன் போடுகிறாரே என்று எழுத்தாளனை கிண்டல் செய்ய வேடிக்கை பார்த்தவர்கள் நாம் தானே! வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலாரின் காருண்யத்தை கணக்கிலும் கொள்ளாமல் வாழ்பவர்கள் நாம் தானே! பாழுக்கு உடைந்தையானவர்கள் நாம்.

எத்தனையோ நவீன அறிவாற்றல்களையும், தத்துவங்களையும் , அறிவுத்தளங்களையும், இலக்கியங்களையும், இசையையும், கோட்பாடுகளையும்  அறிந்தும் பேசியும் வந்தாலும் இந்தப் பூமியில் ஒரு மரத்தை இன்னுமே நடாதவர், இந்தப் பூமியில் ஒரு விதையை துளிர்க்கச் செய்யாதவர் எவராயிருப்பினும் அவர் வாழ்வு முழுமையில்லாதது. இயற்கையை ஆராதிக்கவும் அரவணைக்கவும் தெரியாமல் இந்தப் பூமியில் மனித  இனம் நீண்ட காலம் தரிக்காது. மரத்திற்கு வேர் எவ்வளவு தேவையோ, மனிதருக்கு  இயற்கையின் கருணை அவ்வளவு தேவை. இயற்கை அளிக்கும் பிச்சையே மனித வாழ்க்கை.

மனிதரால் எதுவும் முடியுமென்ற மிதப்பை, மனிதவாதத்தின் ஏகத்தை இல்லாதொழித்த சமீபத்திய அனர்த்தம் கொரோனா கொள்ளை நோய். மனிதர் இயற்கையை வென்றுவிட்டார்கள், நிலவில் தரையிறங்கி விட்டார்கள். செவ்வாயில் சோதனை செய்துவிட்டார்கள். அணுகுண்டுகளை கண்டுபிடித்து விட்டார்கள். வானிலிருந்து வானில் யுத்தம் செய்யப் பழகிவிட்டார்கள். கனரக ஆயுதங்களை கண்டடைந்து விட்டார்கள் என்று பெருமைவாதம் பேசிய ஒட்டுமொத்த மானுடத் திரளின் மீதும்  ஒரு கொள்ளை நோய் ஏற்படுத்திய தாக்கமும் வீழ்ச்சியும் சொல்லி மாளாது. அறிவியல், மருத்துவம், அரசியல் என எல்லாமும் சீர்குலைந்து ஸ்தம்பித்த நோய்க்காலம்.

மனிதவாதம் கண்ணுக்கு தெரியாத ஒரு வைரசிடம் நிபந்தனையற்ற வகையில் மண்டியிட்டுக் கதறியது. கிருமி மனிதரை விடவும் மோசமானது. அழிப்பின் வழியாகத் தனது இருப்பையும், பலத்தையும் பன்மடங்கு பெருக்கவல்லது. முகக்கவசங்களும், கிருமி நீக்கிகளும் இயற்கையை மிஞ்சியதாக நினைத்த மனிதர்களாகிய எம்மைப் பாதுகாக்கும் என எண்ணினோம். பிற மனித உயிரியோடு இடைவெளியைப் பேணிப் பேசினோம். பிற ஒவ்வொருவரையும் நோய் பரப்பும் கிருமியின் முகவராக எண்ணி அஞ்சினோம். பெற்ற தாயோ, சுமந்த குழந்தையோ அதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொருவருக்கும் அவரவர் உயிர் முக்கியமென தமது தனிமைப்படுத்தலில் புகுந்தனர்.

கண்ணுக்குத் தெரியாத கிருமியொன்று பூமியை இருட்குகையாக்கி அதற்குள் எல்லோரையும் அடைத்திருந்தது. இந்தக் கொள்ளை நோய்க்கான காரணங்களின் முழு உண்மை இன்னும் அறிய முடியாத மர்மங்களைக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இதன் தோற்றம் கூட மனிதவாதத்தின் அழிப்புக் கோட்பாட்டினால் உருவாகியிருக்கலாம் என உலகளாவிய ரீதியில்  கருத்துண்டு. மனிதவாதம் பெருமளவில் வீழ்ச்சியும் பலமும் குன்றிப் போனதில் அறிவுப்புல – ஜனநாயக ஆர்வலர்களுக்கு பெருத்த மகிழ்ச்சி. ஏனெனில் பூமியை அழித்தொழிக்கும் தன்னுடைய வேட்டைக்காடாக மனிதவாதம் நினைத்திருந்தது. ஆனால் மீண்டும் இன்று மனிதவாதம் தனது வீழ்ச்சியை சரி செய்துகொண்டு கொடுமைகளைத் தொடர ஆரம்பித்திருக்கிறது. அது முன்னைப் போல பலம் பெறாது என்பது எனது துணிபு.

இயற்கையை மனிதத் திரளினால் வென்றெடுக்க முடியாது. மனிதனுக்காக இயற்கை அல்ல. இயற்கைக்காகவே மனிதன். காலநிலைகளின் அதிரடி சுழற்சி மாற்றங்கள் நமக்கு உணர்த்துவது நல்ல புத்தியைத் தான். இயற்கையைப் பேணுங்கள் என்கிற எச்சரிக்கை அறிவிப்பைத் தான். ஆனால் அதனை விளங்கிக்கொள்ளும் அறிவு நம்மிடம் இல்லை. மழை வந்தாலும் மூடுகிறது. வெயில் வந்தாலும் கருக்குகிறது. இயற்கையின் கொதிப்பை புரிந்து கொண்டால் அடுத்த தலைமுறையை இயற்கையிடமிருந்து காப்பாற்றி விடலாம். இல்லையேல் அவர்களுக்கு நாம் அளிக்கப்போவது எதற்கும் ஆகாத ஒரு பூமியை. அவர்கள் என்றைக்கும் வாழ இயலாத வெறுந்தரையை. ஒவ்வொருவரும் பூமியில் மரங்களை நடுங்கள். வானம் நீர் ஊற்றும். ஒவ்வொருவரும் இயற்கையை வணங்குங்கள். கேட்டதை அருளும்.

வெப்ப அலை என்கிற சொல்லைத்தான் நம் பிள்ளைகளின் சொல்லகராதியில் புதிதாக சேர்த்துக் கொண்டோம் அன்றி வேறு எந்தப் புண்ணியத்தையும் அவர்களுக்கு ஈயவில்லை என்ற கவலை மேலோங்குகிறது. கடல் அலையில் விளையாடி, மணலில் வீடு கட்டி ஈரம் படர்த்திய வாழ்வு எமது. ஆனால் இன்று வளங்களைக் கைவிட்டு காவுகொடுத்து எஞ்சியது என்னவென்று அறிவீரோ!

ஊழியாகும்  மழையும் ! அலையாகும் வெப்பமும்! நஞ்சாகும் காற்றும்!

Loading
Back To Top