வீனத் தமிழ் புனைகதையெனும் பெருவெளியில் நிரையான சாதனைகளும் மகத்துவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. இன்றும் அந்த மாட்சிமை அறுபடாத தொடர்ச்சியுடன் அரிதாக இயங்குகிறது என்பதே மிகப்பெரும் ஆறுதல். ஆனால் இன்றுள்ள இலக்கிய இணைய இதழ்களில் பெருகிவழியும் புனைவுகளில் பலதும் கசடுகள். வெறுங்குறிப்புக்கள். எந்த இலக்கியப் பெறுமதியுமற்றவை. முகநூல் எழுத்துக் கலாச்சாரத்தில் ஜனித்தவை. சொல்லப்போனால் கலைகோரும் எந்தக் கூறும் மூக்குத்தி அளவும் இல்லாத சொற்குவிப்புக்கள். இந்தப் போதாமைகளை அச்சில் ஏற்றி, அதற்கொரு இலக்கிய அந்தஸ்து வழங்கவும் தமிழில் பதிப்பகங்கள் நிறைந்திருகின்றன. பி.ஓ.டி என்கிற தொழில்நுட்பத்தின் வருகை நவீனத் தமிழ் வாசனுக்கும் பெரும் சோதனைதான்.

எதை எழுதிச் சென்றாலும் புத்தகமாக ஆக்கிவிடும் பதிப்பகங்கள் மெய்யான வாசகனுக்கேனும் கருணையோடு நடந்து கொள்ளவேண்டும். இப்படியான இலக்கிய உள்ளீடற்ற புத்தகங்களைப் பதிப்பித்து விட்டு, புத்தக விற்பனை மந்தம், இப்போதெல்லாம் புத்தகம் யார் படிக்கிறார்கள் என்று அவநம்பிக்கையாக பேசுவதில் பலனில்லை. சில முக்கியப் பதிப்பகங்கள் பி.ஓ.டி முறையில் குறைவான தலைப்புக்களை உருவாக்குகின்றனர்.  அதன் தரம் அச்சுக்கு சோரம் போகாதது. ஆனால் வேறு பல பதிப்பகங்கள் பி.ஓ.டியில் மட்டுமே இயங்குகின்றன. அது ஒருவகை கல்லாக்கட்டும் தொழில். “எந்தக் கசடையும் எழுது, புத்தகம் போட வேண்டுமானால் காசோடு வா” என்று அழைப்புக்கோரும் பதிப்பங்களை அறிவேன். இலக்கியத்தை தீவிரத்தோடு முன்வைக்கும் ஒரு தரப்பை, மேற்சொன்ன தரப்பு அறிவதேயில்லை. இவர்கள் தமிழ் புனைகதையின் நீரோட்டத்தை, அதன் வளத்தை ஆக்கிரமித்து வளர்ந்து நிற்கும் ஆகாயத்தாமரைகள். ஆற்றின் அழகை மூடி நிற்கும் களைகள்.

இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் தான் ஒரு சிறந்த புத்தகத்தை இன்றுள்ள மெய்யான வாசகன் கண்டடைய வேண்டும். தவறவிடுவதன் வழியாக சிறந்த எழுத்தை, எழுத்தாளனை கண்டடையமுடியாத துர்ப்பாக்கியம் நிகழ்கிறது. இன்று சிறந்தவொன்றுக்கு நிகழ்பவை  பாராமுகம். புறக்கணிப்பு. கவனயீனம் அன்றி வேறில்லை. அரிதிலும் அரிதாகவே இன்று சிறந்தவைகள் அடையாளம் காட்டப்படுகின்றன. இலக்கியத்தைக் கொண்டாடும் புதுயுகத்தின் ஒரு திரள் இன்று உருவாகி வந்துள்ளது. அவர்களின் வழியாகவே சிறந்தவைகள் பொதுவெளியில் சுட்டிக்காட்டப்படுகின்றன. எந்தப் பேதமோ, குழுவாதமோ அற்ற வாசக நிலையினால் நிகழும் ஒரு தவமது.

சமீபத்தில் அப்படியொரு சிறந்த பிரதியை வாசித்து முடித்தேன். எழுத்தாளர் சித்ரன் எழுதிய பொற்பனையான் சிறுகதை தொகுப்புத்தான் அது. சித்ரன் தற்காலத்து சிறுகதை ஆசிரியர்களில் மிகச் சவாலானவர். அரிதிலும் அரிதான விசாரங்களை நிகழ்த்துகிறார். இந்தத் தொகுப்பு நம் கவனயீனத்தால் இன்றுவரை பெரிதாக அடையாளம் காணாதது. ஆறு சிறுகதைகளும், ஐந்து குறுங்கதைகளையும் கொண்டிருக்கின்றன.

“நம்பிக்கையோடு இருப்பதற்கு எண்ணற்ற சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் அவை நமக்கானவை அல்ல”  என்ற காப்காவின் அவநம்பிக்கையான இந்த வாக்கியத்தையும் சித்ரனின் கதைகளையும் பொருதவிட்டால், ஒரு தரிசனம் கிடைக்கிறது. நேர்மறைப் பெருக்கு மொழியின் சுழி குவிந்து ஓடும் கதைகள் இவருடையது.  ஒருவகையில் யதார்த்தவாதத்தின் மரபார்ந்த கதைகூறலை தன்னுடைய பலமாக நிர்மாணிக்கிறார். ஒரு மரங்கொத்தியின் நுணுக்கத்தோடும் கூர்மையோடும் அந்த யதார்த்தவாதத்தின் மீது தனது மொழி அலகால் துளையிட்டு ஒரு மாயத்தை நிகழ்த்துகிறார். “புங்கமரத்தாயி” என்கிற சித்ரனின் குறுங்கதை தமிழில் எழுதப்பட்டவற்றுள் முதன்மையான நிரையில் நிற்கும் சத்தியுடையது. கருகிய மரம் துளிர்த்த மறுநாள் என்பது எவ்வளவு ஆறுதலான படிமம். இந்தக் கதை எழுதப்பட்டிருக்கும் விதம், எந்த வடிவச்சோதனையுமற்றது. ஆனால் ஒரு கதை யதார்த்தவாத கதையாக எழுதப்பட்டு வாசிப்பின் முடிவில் மாய – யதார்த்தவாதமாக திரண்டு வருவதெல்லாம் எழுத்தாளன் நமக்கருளும் அனுபவம்.

இந்தத் தொகுப்பு குறித்து மொழிபெயர்ப்பாளர் நரேன் எழுதிய கட்டுரையை வாசித்தேன். “சித்ரனுக்கு கைகூடியிருக்கும் மொழி அழகும், இலகுவாகக் கதையை தன் போக்கில் விவரித்தபடியே செல்லும்  பாங்கும், புறவுலகின் இயல்பான சூழலில் கூட மர்மங்களைக் கண்டறியும் ஆர்வமும் அவரின் படைப்புகள் மேல் ஆர்வத்தை உருவாக்குகிறது” என்கிறார். சிறந்த அவதானிப்பின் வெளிப்பாடு.

சித்ரனின் கதைகள் ஆழமான உறங்குநிலையிலுள்ள கனவினைப் போன்றவை. ஏனெனில் உலகின் விசையோடு, அது சேர மறுக்கிறது. மையக் கதாபாத்திரங்கள் பலதும், வேறுலகில் இணைந்திருப்பவை. இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்றாக அடையாளமிட்டுச் சொல்ல விரும்புவது “உடல் இயற்கை துறவு எனும் ஃ” கதையைத்தான். சேகர் என்ற கதாபாத்திரம் தேவதேவியரின் ஆலிங்கனச் சிற்பங்களை செதுக்கும் காட்சி மாயத்தன்மையின் கலையுச்சம். தர்க்கங்களை கோரும் வறட்டுவாதிகளுக்கு அகப்படாத கலையின் செழுஞ்சுடர் பரவி நிற்கும் கதை. சித்ரன் இன்று எழுதும் பலருக்கும் சவாலானவர் என்பதற்கு இக்கதை ஒரு சான்று.

சில கதைகளில் சம்பவங்கள் அடுக்கப்படுகின்றன. சிலவேளைகளில் அவர் கைக்கொள்ளும் உத்தியாகவும் இருக்கலாமெனத் தோன்றுகிறது. ஆனால் புனைவில் சம்பவங்களின் எண்ணிக்கையை விடவும் முக்கியமானது, அவற்றின் அவசியம். எழுத்தாளனின் தன்னனுபவமாக மட்டுமே வாசகரின் மனதில் எஞ்சிவிட்டால் எல்லாமும் வீண். சித்ரனின் ஓரிரண்டு கதைகளில் இந்த ஆபத்து நேர்கிறது. அது வெறுமென கதை சொல்லியின் தன்னனுபவமாக மட்டுமே எஞ்சும் .

“பரிதவிக்கும் தன் காலத்துக்கான கனவுகளைக் கண்டடைபவனே இன்றைய படைப்பாளி” என்கிறார் இலக்கிய ஆளுமை  சி. மோகன். இத்தொகுப்பு அப்படியொரு படைப்பாளியினுடையது. தமிழின் சமகால புனைவெழுத்து முன்னேறிச் செல்லும் பாங்கையும், வேகத்தையும், திக்கையும் கண்டறிய உதவுபவை பொற்பனையான் சிறுகதைகள். தற்காலத்தின் சிறந்த தொகுப்பு.  சித்ரனின் கதைகூறல் முறையும், அவர் தேர்வு செய்யும் களங்களும் புதிதாகவுள்ளன. அணுகுமுறை இந்த யுகத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. சித்ரன், மண்ணையள்ளி மொழியில் அப்பி, கதைகள் வனையும் அசல் கலைஞன். வாழ்த்துக்கள் சமகாலத்தின் பொற்பனையான்.

இத்தொகுப்பினை வெளியிட்ட யாவரும் பதிப்பகத்திற்கு நன்றி. சிறந்த புதுயுகத்தின் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் இந்தப் பதிப்பகத்தின் எண்ணங்கள் வெல்லட்டும்.

  • அகரமுதல்வன்

 

 

Loading
Back To Top