
“இலக்கியம் ஒரு கனவு. காலம் காலமாகத் தொடரும் கனவு. கனவுகளை நமக்கு கையளிக்கும் கனவு. என்வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், நான் என்னவாக இருக்கிறேன்,என்னவாக இருக்கமுடியும், என்னவாக இருக்கப்போகிறேன் என்பதைப் புத்தகங்களே தீர்மானித்திருக்கின்றன.” – சி.மோகன்
மனித வரலாற்றை புனைவுகளின் வழியாய் அணுகினால் தான் மறைக்கப்பட்ட பக்கங்களில் புதைந்து கிடக்கும் நசுக்கப்பட்டவர்களின் ஓலங்களை முழுமையாய்க் கேட்கமுடிகிறது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சொல்லும் ஓவ்வொரு கதையிலும் வாழ்வின் பேசப்படாத சிறுபகுதி உண்மையொன்று எப்போதும் ஒளிந்து கிடக்கிறது. சொல்லப்படாத ஒவ்வொரு கதையிலும் புதைந்துகிடக்கும் உண்மைகள் இந்தபிரஞ்சத்தை விடவும் பிரம்மாண்டமானவை. நாம் உண்மைகளை எதிர்கொள்ள அச்சப்படுகிறோம், அதனாலேயே கதைகளைக் கேட்க மறுக்கிறோம்.
உலகின் மிக நீண்ட கழிவறை என்னும் இந்தத் தலைப்பு எல்லா நூற்றாண்டுகளுக்குமானதாக போரின் எச்சங்களையும் தழும்புகளையும் சுமந்துநிற்கும் எல்லாத் தேசங்களுக்குமானதாக கண் முன் விரிகிறது. ஜெர்மானியர்களின் முகாமில் வதைபட்ட யூதர்களுக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் எண்ணெய் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அரபு நாடுகளின் மனிதர்களுக்கும், சிங்கள பேரினவாதத்தால் சிதைக்கப்பட்ட ஈழ மக்களுக்கும் பொதுவானது இந்த மிக நீண்ட கழிவறைகள். ஆனால் மற்ற தேசத்தினரின் கண்ணீருக்கு செவிசாய்த்ததைப் போல் ஈழமக்களின் கண்ணீருக்கு உலகம் செவி சாய்த்திருக்கவில்லை.
நந்திக்கடலின் ஒவ்வொரு துளி உப்பும், காட்டமும் கொல்லப்பட்ட ஈழத்தவர்களின் குருதியால் நிரம்பியது தானே. அகரமுதல்வனை அறிந்த நாளிலிருந்து கதைக்காரனாகவே எப்போதும் தெரிகிறான். வாழ்வின் தீராத ரணங்களை கதைகளாக சொல்லிக்கடக்கும் அவனின் சொற்களுக்கு எப்போதும் வலிமையுண்டு. ஈழயுத்தத்தின் இறுதிக்காலத்தை ரத்தமும் சதையுமாய் எதிர்கொண்ட ஒரு தலைமுறையின் குருதிச் சாட்சி அவன். யுத்தத்தை எதிர்கொண்டவர்களுக்கும் வாசித்துத் தெரிந்துகொண்டவர்களுக்கும் ஏராளமான வித்தியாசங்களுண்டு. இழப்பின் துயரை ஒருவன் கதைகளின் வழியாய் உங்களுக்கு கடத்திவிடமுடியும், ஆனால் இழப்பு எத்தனை வீர்யமானது என்பது இழந்தவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. நிலத்தை, உறவுகளை,உடமைகள, அடையாளம் உட்பட அவ்வளவையும் இழந்து வேறொரு தேசத்தில் ஏதிலிகளாய் வாழும் மனிதர்களின் கதைகள் அசாதாரணமானவை இல்லையா!
போர் என்பது அதை எதிர்கொள்ளாதவர்களுக்கு வெறுமனே சாகசக்கதை. அதனால்தான் போரின் சாகசக்கதைகளை மட்டுமே பேசி அரசியல் செய்கிறவர்களை ஒருபெரும் கூட்டம் பின்தொடர்கிறது. யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களுக்கு செவிசாய்க்கவேண்டும், அவர்களின் கதைகளை வாசிக்கவேண்டும். உண்மைகளைத் தெரிந்து கொள்ளாமல் ஒருஅரசியலை நம்புவது மனிதசமூகத்தை சிந்திக்கலாயக்கற்றவர்களாக்கிவிடும். இந்தகுறுநாவல் தொகுப்பிலுள்ள ஐந்து கதைகளும் வெவ்வேறான காலகட்டத்தைப் பேசுகின்றன. சமாதானக்காலம் துவங்கி ஈழப்போரின் இறுதிநாட்களையும் போருக்குப்பிறகு இலங்கையின் அண்டை நாடான இந்தியாவிலிருக்கும் அகதி ஒருவனின் சமகாலத்தையும் பின்னணியாகக் கொண்டுள்ளன.
அகரமுதல்வனின் கதைகளில் வரும் பெண்கள் அபூர்வமானவர்கள். அவர்களே பிரதான கதைமாந்தர்களாக இருக்கிறார்கள். பெண்கள் சூழ வளரும் ஒருவன் கேட்கும் கதைள் தான் எத்தனையெத்தனை.? ஆஃப்கானில் பெண்கள் கல்வி கற்பதற்கும் புத்தகம் வாசிப்பதற்கும் முல்லாக்கள் விதித்த தடைகளையும் மீறிபெண்கள் மிர்மன்பஹீர் என்னும் ரகசிய இயக்கத்தை கவிதைக்காகவே உருவாக்கியதும் சமகாலத்தில்தான். காபூலில் ஒரு சின்னஞ்சிறிய அறையில் இருக்கும் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளருக்கு ஏதேதோ கிராமங்களில் இருந்து குறுஞ்செய்திகள் வழியாக தங்களின் சிலவரிக் கவிதைகளை அனுப்பி வைப்பார்கள். உண்மையில் எழுதுவதால் கொல்லப்படக் கூடிய சூழலில் வாழ்ந்தும் எழுதியவர்கள் அந்தப் பெண்கள்தான். அதனால் தான் அடக்குமுறைகளுக்கு ஆளான அவர்களின் கவிதைகள் வீர்யமிக்கவையாய் இருக்கின்றன. அகரமுதல்வனின் கதைகளில் வரும் பெண்களும் இப்படியானவர்களாகத்தான் தெரிகிறார்கள். அவர்கள் நேசிக்கப்படுகிறவர்களாக மட்டும் இருப்பதில்லை, சொந்தநிலத்தின் மீதுபெருங்காதல் கொண்டவர்களாகவும் யுத்தத்தின் ஒவ்வொரு அசைவையும் கவனமாக பின்தொடர்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். யுத்தகாலத்தை பெண்களைப் போல் கதைகளாகச் சொன்னவர்கள் எவருமில்லையோ என சமயங்களில் தோன்றும்.
யுத்தத்தின் இறுதிக்காலத்தில் இயக்கத்தால் படைக்கு சேர்க்கப்பட்ட இளைஞனின் கதையாக நீளும் “அகல்” ஒரேசமயத்தில் யுத்தம் முடிந்த பிறகு வதைமுகாமில் ஒரு போராளி அனுபவிக்க நேர்ந்த கொடுமைகளையும் அலசுகிறது. போரை மீறி வாழ்வதில் முழுவிருப்பு கொண்ட அந்த இளைஞனுக்கு ஒரு பெண்ணின் மீதிருக்கும் நேசமானது அவனை வாழச் சொல்கிறது. அழகான கனவாகவிருக்கும் இந்தவாழ்வை வாழ்ந்தே தீருவது என்னும் நோக்கம் கொண்ட அவனிடம் “நீ வாழ்வின் உவகையை அடையவேண்டுமானால் சாவின் சமீபத்தையாவது தரிசிக்கவேண்டுமென” ஒரு சகபோராளி புரியவைக்கிறான். தனது முந்தைய கதைகளில் இருந்தும் கதை மொழியிலிருந்தும் அகரமுதல்வனின் இந்தக் கதைகள் நிரம்பவே மாறியிருக்கின்றன. நீரற்று வறண்ட ஓடையின் கானலைப் போன்றதொரு வெக்கையையும் உள்ளே ஆழமாக மனித சமூகத்தின் மீதும், வாழ்வின் மீதுமான ஆழமான ஈரத்தையும் ஒரு சேர பேசும் மொழி. குறுங்கவிதைகளாகவே நீளும் பத்திகளென கதையை வாசிக்கிறவனோடு மிகநெருக்கமாய் உரையாடுகின்றன. அகரமுதல்வனின் கதைகளில் வரும் பெண்களைப் பற்றி எழுதும் இவ்விடத்தில் லதீஃப்ஹல்மட் என்னும் ஈராக்கிய கவிஞர் ஒரு பெண்ணின் இதயத்தைப் பற்றி எழுதின வரிகள் நினைவிற்கு வருகின்றன.
கடவுச்சீட்டு இல்லாமல்
நான் நுழையக்கூடிய ஒரேநாடு,
ஒரு பெண்ணின் இதயம்தான்.
அங்கு எந்த காவலனும்
எனது அட்டையை கேட்பதில்லை.
ருசியான துயரங்களும்,
தணிக்கை செய்யப்பட்ட கவிதைகளும்
சட்ட விரோதமான சந்தோஷங்களும்
நிறைந்திருக்கும் எனது பெட்டியை
யாரும் சோதனை செய்வதில்லை.
கனமான ஆயுதங்களை குவித்து வைக்காத
ஒரேநாடு,
ஒருபெண்ணின் இதயம்.
தனது போர்களை குடிமக்கள் போராடவேண்டும்
என்று அது வற்புறுத்துவதும் இல்லை.
ஒஸாமா என்னும் ஒரு மனிதனைச் சுற்றி பின்னப்பட்டதாக இருந்தாலும் “சித்தப்பாவின் கதை” சமாதான காலத்திலிருந்து புலிகள் மீண்டும் யுத்தத்தை நோக்கி நகர்ந்த காலகட்டத்தையும் பதிவு செய்கிறது. உலகின் மிக நீண்ட விடுதலைப் போராட்டங்கள் எல்லாம் துரோகங்களாலும் காட்டிக்கொடுப்பவர்களாலும் தான் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளன. ஆயுதப் போராட்டங்களிற்கான அறத்தை போராட நிர்ப்பந்திக்கப்பட்டவனின் சொற்களில் இருந்து தான் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது. இந்தக்கதையில் ஒஸாமா இயக்கத்தின் வெவ்வேறு சண்டைகள் அதிலிருக்கும் முக்கிய பொறுப்பாளர்கள் குறித்து சுவைபட கதை சொல்கிறவனாய் இருக்கிறான். எல்லோரிடமும் கதையளக்கிறவனைத் தான் எல்லோருக்கும் பிடித்துப்போகிறது. மனிதர்கள் அந்தரங்கமாய் சுவையான பொய்களை விரும்புகிறவர்கள்.(வரலாறு குறித்த புரட்டுகளை இதனாலேயே அதிகம் தேடி வாசிக்கிறார்களோ என்றுகூட தோன்றும்.) இயக்கத்தின் தீவிர ஆதரவாளனாகவும் பற்றாளனாகவும் வருகிற அதே ஒஸாமாதான் இயக்கத்தைக் காட்டியும் கொடுப்பவனாக இறுதியில் வருகிறான். நிஜவரலாறும் அப்படியானது தானே. நம்பிக்கைக்குரியவர்களின் வழிகாட்டுதலில் கிடைத்தது தானே சிங்களராணுவத்தின் இறுதிவெற்றி.
யுத்தகாலத்தின் அத்தனை கெடுபிடியிலும் மருத்துவமனைக்கு செல்கிற சாக்கில் அரச பகுதியிலிருந்து தமிழர் பகுதிக்கு கள்ளமாக தங்கச் சங்கிலிகளை கடத்திவரும் நுட்பமான விவரங்களில் இருந்து சமாதானகாலத்தில் ஊரின் ஒவ்வொரு வீதிகளையும் வீடுகளையும் மிக கவனமாக பதிவுசெய்திருக்கிறார் அகரமுதல்வன். “உலகின் மிக நீண்ட கழிவறை” என்னும் குறிப்பிட்ட கதை வாசித்த பிறகு சிலநாட்கள் உறங்கமுடியாதபடி கடும்மனவுளைச்சலை ஏற்படுத்தியது. இங்கு ஐ.பி.எல்லும் சினிமாக்களுமாய் கொண்டாட்டமான வாழ்வை எதிர்கொண்டிருந்த அதே நாட்களில் முள்ளிவாய்க்கலின் கடற்கரையில் அதிகாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் காலைக் கடன்களை முடித்துக் கொள்வதற்காக சொளகுகளை வைத்து குறியை மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்த அந்த குரூரமும் நடந்துதான் இருக்கிறது. அதுவும் கூப்பிடு தூரத்திலிருந்த நிலத்தில்.
இதுவரையிலுமான அகரனின் கதைகளில் இதை முக்கியமானதென்று கூட சொல்லமுடியும். வெறுமனே துயரையும் வலியையும் எழுதுவதால் மட்டுமல்ல, ஒரு கதையின் வாயிலாக கதைசொல்லி முன்வைக்கும் அரசியலாலும் நாம் நம்பிக்கொண்டிருக்கும் அறம் எத்தனை போலியானது என்பதை உடைத்தெறிவதிலும் தான் அந்தக் கதை முக்கியமானதாகிறது. இந்தக்கதை நம்பமுடியாத உண்மைகளை முகத்திலறைவது போல் சொல்வதால் நாம் வாழ்வின் அறம் குறித்த வழமையான நம்பிக்கைகளை எல்லாம் அந்த நொடிகளிலேயே கைவிட வேண்டியிருக்கிறது. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து ராணுவத்திடம் தஞ்சம் கேட்டுச் சென்றவர்களை புலிகள் சுட்டுக்கொன்றதான குறிப்புகளை ஏராளமாய் வாசித்திருப்போம். ஆனால் இந்தக்கதையில் போராளிகளே மக்களை பாதுகாப்பான வழிக்கு அனுப்பி வைப்பதையும் நாம் வாசிக்கையில் எது உண்மை என்பதில் ஒரு குழப்பம் வரலாம். முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களையும் கடந்து தடுப்பு முகாம்களிலும் வதைபட்ட ஒருவன் கடந்து வந்த தருணங்கள் தானே இவையெல்லாம்.
தங்களிடம் வந்து சேர்ந்த மக்களிடம் புலிகள் குறித்த அவதூறுகளை போலிவாக்கு மூலங்களாக ராணுவம் சேகரித்த குறிப்புகளையும் இந்தக்கதையில் காணமுடிகிறது. யுத்தத்தில் புலிகள் இயக்கத்தின் தோல்விகளுக்கான காரணங்கள் குறித்து அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து பேசுகிற ஒவ்வொருவருக்கும் தாங்கள் சொல்வது மட்டுமே இறுதியான உண்மை என்கிற பிடிவாதமிருக்கிறதோ என்று பலசமயம் தோன்றும். அதனால் தானோ என்னவோ இங்கு உண்மைகளும் அவரவர்களுக்கானதாய் இருக்கிறது.
கதையின் துவக்கத்தில் ஒருகுளம் வருகிறது. ஊரின் பொதுவான அடையாளமான அந்தக்குளம் பின்பு ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும்போது அந்தக் குளத்தில் குளிப்பதையே தன் வாழ்நாளின் ஆகச்சிறந்த சந்தோசமாக நினைத்துக் கொண்டிருக்கும் இன்பம் குளத்தின் தன்மை மாறி இருப்பதைப் புரிந்துகொள்கிறாள். சந்தேகங்கொண்டு குளத்தை தோண்டினால் ஏராளமான மனிதர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கின்றன. முள்ளிவாய்க்காலில் தொலைந்து போனதாக நம்ப்பப்பட்ட ஏராளமான மனிதர்களின் எலும்புக்கூடுகள். இந்த இடத்தை வாசிக்கையில் நோம்ப்பென்னின்( கம்போடிய தலைநகர்) யுத்த அருங்காட்சியகத்திலிருந்த நிமிடங்கள் சடாரென நினைவிற்கு வந்தன.
மனிதர்கள் எவ்வாறு அங்கு கொண்டு வரப்பட்டு கொல்லப்பட்டு குழிகளுக்குள்ளும் குளங்களுக்குள்ளும் அப்படியே எறியப்பட்டார்கள் என்பதை ஒவ்வொரு இடமாக நாம் கடக்கும் போது ஆங்காங்கு தகவல் பலகை இருக்கும். உங்கள் காலுக்கருகில் நானூறுக்கும் அதிகமான மனிதர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன என்று. முள்ளிவாய்க்காலின் கடற்கரையை அப்படியாக நாம் தோண்டினால் எத்தனையெத்தனை மனிதர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்குமோ என்னும் அச்சம் எழும்புகிறது.
“எனக்கு சொந்தமில்லாத பூமியின் கடல்” என்னும் இறுதிக்கதை தமிழகத்திலிருக்கும் ஈழஅகதிகளின் ஒரு பகுதியினரின் வாழ்வை பிரதிபலிப்பதாக உள்ளது. தமிழகத்தின் அகதி முகாம்களில் சொல்லொன்னாத் துயரங்களை அனுபவிக்கும் பெருங்கூட்டம் குறித்து பொது சமூகத்திற்கு மட்டும்மல்ல பொறுப்பிலிருப்பவர்களுக்கும் கூடபெரிதும் அக்கறை இருப்பதில்லை. இந்தநிலையில் சென்னை போன்ற ஒரு பெருநகரத்தில் அவர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதும், வேலைக்குச் செல்வதும் எத்தனை சவாலான காரியம்? இந்தியாவிலிருந்து படகுகளின் மூலமாக ஆஸ்திரேலியாவிற்கு செல்வதற்காக இன்றளவும் அகதிகள் பெருந்தொகை கொடுத்து காத்திருக்கிற செய்திகள் வெளியானபடியேதான் இருக்கின்றன.
சிலநாட்களுக்கு முன் இலங்கையிலிருந்து நான்காயிரம் கிலோமீட்டர்கள் கடலில் பயணித்து பிரான்சின் ஒரு தீவில் ஒதுங்கிய அத்தனை தமிழர்களையும் ஊருக்கு திருப்பி அனுப்பப் போவதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவிக்கிறது. வாழ்வா சாவா என்கிற பெரும் சாவாலை எதிர்கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிற இவர்களுக்குத் தேவையானதெல்லாம் என்ன பாதுகாப்பானதொரு வாழ்க்கைதானே? அதற்காக எத்தனை ஆயிரம் மைல்களுக்கு இவர்கள் பயணிக்கவேண்டியுள்ளது.?
இந்தக்கதையில் முன்னாள் போராளிகளை டயாஸ்புராவிலிருக்கும் ஆட்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்கிற விமர்சனமும் வருகிறது. ஆனால் இந்தக்கதை வெவ்வேறான சிக்கல்களை சொல்லமுயன்று எந்தவொன்றிலும் கவனம் செலுத்தாமல் முடிந்து போவதால் மற்ற கதைகள் தந்த அழுத்தத்தைத் தரவில்லை. இந்தக் கதைகளின் மிக முக்கியமான பொதுத்தன்மை இவை முழுக்க முழுக்க கதைசொல்லியின் பார்வையிலேயே சொல்லப்படுகின்றன. அதனாலேயே என்னவோ சிலஇடங்களில் மிதமிஞ்சிய வர்ணனைகள் கதையை மீறி இருப்பதான தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது. தனக்கிருக்கும் அரசியல் நம்பிக்கைகள், லட்சியங்கள் எல்லாவற்றையும் கதாப்பாத்திரங்களின் வழியாகச் சொல்லும்போது உருவாகும் எளிமையான அழுத்தம் தானே நின்று சொல்லும் போது குறைந்து போய்விடுகிறது.
இன்னொரு ஆச்சர்யம் தான் அதிகம் விமர்சிக்கும் ஷோபாசக்திதான் அகரமுதல்வன் கதை சொல்வதற்கான வலுவான உந்துசக்தியாக இருக்கிறாரோ எனத் தோன்றுகிறது. இந்தத் தொகுப்பில் அகரமுதல்வன் ஒரு கதையை துவங்கி அதில் பயணிக்கும் கதை சொல்லும் முறை சற்றேறக் குறைய ஷோபாவின் ஸ்டைல். ஒரு கதையில் நிலத்தையும் கதாப்பாத்திரத்தையும் எவ்வாறு ஷோபா வாசகனுக்கு அறிமுகப்படுத்துவாரோ அதே போன்றதொரு வடிவத்தைத்தான் அகரனும் கையாள்கிறார். இந்தப் பாதிப்பு இயல்பாகவே நடந்திருக்கலாம். சொல்லப்போனால் இப்படியானதொரு பாதிப்புகளில் இருந்துதான் ஒரு கதை சொல்லி தனக்கான தனித்துவத்தை உருவாக்கிக் கொள்ளமுடியும்.
இதுபோன்ற புனைவுப் பிரதிகள் இலக்கிய சூழலில் உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டியது அவசியமானது. அதிகமும் கலைக்கு விரோதமானதொரு மனநிலை பெருகிப்போயிருப்பதை நிறையபேரிடம் சமீபமாகக் காணமுடிகிறது. கலை தொடர்பான எண்ணங்களை மனித மனங்களில் இருந்து மழுங்கடித்திருப்பதில் சந்தேகமில்லாமல் சமூகவலைதளங்களுக்கு பெரும் பங்குண்டு. எதை வேண்டுமானாலும் எழுத முடியுமென்கிற சுதந்திரம் எதையும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்கிற நம்பிக்கையை பலருக்கும் உருவாக்கிவிட்டிருக்கிறது.
வெட்டிவாதங்களை, களிப்புகளை, குடியை மட்டுமே வாழ்வின் பிரதானம் என்று நம்புகிறவர்களை அதே நம்பிக்கை உடைய ஒரு தலைமுறை தொடர்வது நம்மொழியில் நிகழும் துயரம். இலக்கியச் சூழலில் இதற்குமுன்பு குடி ஒரு அரசியலாக மாறி இருந்தது. புக்காவ்ஸ்கியையோ, லார்பத்தாயையோ உதாரணமாகக் காட்டி குடித்தார்கள் என்று சொல்லி விடமுடியாது. அவர்களின் குடி கலையாக மாறியது. சமூகத்தின் திட்டுத்திட்டான வெளிச்சங்களை அதன் வழியாய் தேடிக்கண்டடைந்தார்கள். செகாவ் ரஷ்யமக்களின் துயரங்களையும், கவபத்தா கைவிடப்பட்ட ஜப்பானியர்களின் துயர்மிகு தனிமையையும் எழுதியதைப்போல் இங்கே நம்மவர்களில் ஜி.நாகராஜனைச் சொல்லலாம்.
சரித்திரத்தின் வன்முறைகளை களைந்து மேன்மையான வாழ்வை மேற்கொள்ள கலைதான் துணையாய் இருந்திருக்கிறது. நல்ல புத்தகங்கள்தான் மனிதர்களை சிந்திக்க தூண்டியிருக்கிறது. ஒரு சமூகத்தின் கலாச்சார மாற்றம் வாழ்க்கை குறித்தான அர்த்தங்களை நுண்மையாக அணுகவும் புரிந்துகொள்ளவும் தான் கலைவடிவங்கள் ஊடகமாய் இருக்கின்றன.
லட்சியங்களும் நோக்கமும் இல்லாமல் விட்டேத்தியாய் திரியும் ஒரு சமூகத்திற்கென சிந்திப்பவனாக கலைஞன் இருக்கிறான். லட்சியங்களே இல்லாமல் வாழ்கிறவர்களிடம் சமூக விழுமியங்களை சகமனிதர்களின் பிரச்சனைப்பாடுகளைக் குறித்து மன்றாடி பிரயோஜனமில்லை. குற்றமும் தண்டனையும் நாவலின் துவக்கத்தில் ரஸ்கோல்னிகவ் தான்கொலை செய்யவிருக்கும் வட்டிக்கடை பெண்மணியின் வீட்டைப்பார்க்கும் போது இப்படி யோசிக்கிறான். “இந்த பெண்ணிடம் இருக்கும் நகைகளை எடுத்துக் கொண்டு போனால் எத்தனை மாணவர்கள் படிக்கலாம்?’ அந்தநாவலின் அடிநாதமே அதுதான். சமூகம் எல்லா வளங்களையும் ஒரே இடத்தில் சேர்த்து வைக்கும் போது குற்றச்செயல்களும் வன்முறையும் அதிகமாகவே செய்யும் என்பதை நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் ஒருவன் தன் வாழ்விலிருந்து கண்டு சொல்கிறான் என்றால் இன்றும் வட்டி கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் மனிதர்களோடு அதை நாம் பொருத்திக் கொள்ளமுடியாதா?
இலக்கியத்தின் பயன்பாடு அதுதானே? சொற்களில் இருந்து வாழ்வின் அறத்தைக் கற்றுக்கொள்.
குழந்தைப் போராளி நூலில் ஒருவாக்கியம் வரும், ” அவர்கள் என்னிடமிருந்து புத்தகங்களை பறித்துக் கொண்டு துப்பாக்கிகளைக் கொடுத்தனர்.” என. வன்முறையாளர்களின் முதல் எதிரி புத்தகங்கள் தான். கெமர்ரூஜ் இதையே தான் செய்தது. கல்வியாளர்களை சிந்தனையாளர்களை தேடி தேடி சுட்டுக்கொன்றது. பாசிஸ்டுகள் உங்களை புத்தகங்களிடம் இருந்து பிரிப்பதை கடமையாக செய்வார்கள்.
சிந்திக்க மறுக்கும் ஒரு சமூகம் எப்போதும் அடிமையாகவே இருக்கும். நாம் அப்படித்தான் மாற்றப்பட்டிருக்கிறோம். நமது கல்வி முறையே குமாஸ்தாக்களாக நம்மை உருவாக்கத்தான் இருக்கிறது. அதனால் தான் அவர்கள் பாடப் புத்தகத்தை தவிரவேறு எதையும் வாசிக்கவோ கற்றுக் கொள்ளாவோ நம்மை அனுமதிப்பதில்லை. படி, வெள்ளைக்காரனிடம் அடிமையாக வேலைக்கு போ. சம்பாதி. குடி. சம்போகம் செய். அவ்வளவுதான் வாழ்க்கை என்று பணிக்கிறது. அதனால் தான் வாட்ஸப்ஃபார்வேர்ட் செய்திகளில் புரட்சியைத் தேடிக்கொண்டிருக்கிறோம். முகநூல்பதிவுகள் நம்மை கிளர்ச்சியடையச் செய்கின்றன.
மிர்தாதின் புத்தகத்தில் இப்படி ஒரு பத்திவரும், “எந்த வகையில் வந்தது என்றாலும் உலகின் அதிகாரம் என்பது போலிதான். அது கச்சை வாரை இறுகக்கட்டி, உடை வாளை உயரத் தூக்கி, ஆராவாரமாக ஊர்வலம் போகும். தனது பொய்யான இதயத்தை யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக.” யுத்தத்தின் கதைகளை வாசிக்கவேண்டியதும் அதுகுறித்தும் உரையாட வேண்டியதுமான அவசியத்தை இதிலிருந்து தான் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. எந்த நிலையிலென்றாலும் அதிகாரத்திற்கெதிரான வலுவானதொரு நிலைப்பாட்டை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டுமென்றால் கலைவடிவங்களைக் கைக்கொள்ளத்தான் வேண்டும்.
அகரமுதல்வனின் இந்தக் கதைகள் அதிகாரத்திற்கு எதிராக உருவானவை என்பதையே நமக்கு வலுவாய் உணர்த்துகின்றன.