இன்றுள்ள இலக்கியச் சூழலில் தமிழ் வாழ்வை எழுதுவதில் பெருமளவிலான இளம் படைப்பாளிகளுக்கு இனம் புரியாத விலக்கமுள்ளது. இந்த உண்மையை உரைத்ததால் சிலருக்கு என்னிலும் கசப்புத் தோன்றும். அது குறித்த நோவு எனக்கில்லை. புத்தாயிரத்தின் கடைசிப் பத்தாண்டுகளில் எழுதப்பட்ட புனைவுகள் பலவும் இந்த விலகல் மனோநிலையில் இருந்து அவதரித்தவையே. படைப்பாளன் நினைத்தும் அதனைச் சாத்தியப்படுத்த முடியாமல் தமிழ் வாழ்வு போரிட்டு நிலைக்கிறது. “தமிழ் வாழ்வை எழுதிக் குவித்துவிட்டார்கள். சலிப்புத்தான் எஞ்சுகிறது. நான் எழுத விரும்புவது அதைத் தாண்டிய கதைகளைத்தான்” என்றார் சக இளம் படைப்பாளியொருவர்.

இந்த நூற்றாண்டில் இதுவரை உலகம் முழுதுமிருந்து உருவாகி வந்திருக்கிற மாபெரும் படைப்புக்கள் பலவும் அவர்களது சொந்த இனத்து வாழ்வின்  அடிப்படையைக் கொண்டவையே. ஆனால் நம் சூழலில் தமிழ் வாழ்வின் விலக்கம்- ஒரு படர்தாமரை போல மிக ரகசியமாக பரவுகிறது. தமிழ் வாழ்வில் புதிய அறமதிப்பீடுகளையும், விசாரங்களையும் வாழ்க்கை கோரும் கேள்விகளையும் படைக்க இந்த நூற்றாண்டு ஒரு அரும்வாய்ப்பாக உள்ளது என்பதை மீண்டுமொருமுறை உரத்துக் கூறுகிறேன்.

கலையின் முக்கிய அம்சமே படைப்பாளியின் உணர்வில் கலந்து நிற்கும் அனுபவமே. அது நீக்கம் பெற்றாலோ, திரள மறுத்தாலோ படைப்பெனும் தகுதியை அடையாது போய்விடும். இன்றைக்கு அதிகளவில் நிகழ்வது இதுதான். ஆனால் இன்னொரு புறம் நம்பிக்கையளிக்கும் படைப்புக்கள் வந்தவண்ணமுள்ளன. சக படைப்பாளிகளான சுநீல் கிருஷ்ணன், கார்த்திக் புகழேந்தி, ம.நவீன், வாசு முருகவேல், செந்தில் ஜெகன்னாதன், ஜா. தீபா, தீபுஹரி, கமலதேவி, ரமா சுரேஷ், தெய்வீகன், லெ.ரா. வைரவன், முத்துராசா குமார், கார்த்திக் பாலசுப்ரமணியன், காளி ப்ரசாத்,  சித்ரன், தூயன், அஜிதன் எனத் தொடரும் இளம் படைப்பாளிகளின் படைப்புக்கள் தமிழ்த் தன்மையை, பிராந்திய பண்பாட்டை முன்வைக்கின்றன. இந்தப் படைப்பாளிகளின் பெயர்கள் என்னுடைய வாசிப்பை அடிப்படையாகக் கொண்டவை.  இவர்களின் நிரையில் ச. துரையையும் சேர்த்துக் கொள்கிறேன்.

ச.துரையின் “தீடை” சிறுகதைத் தொகுப்பு புதிய வரவொன்றின் அசலான பிரகடனம். மனித மனங்களை இருளுக்கும் ஒளிக்கும் பங்கிடுகிறார். தர்க்கங்களின் வழியாக கண்டடைய இயலாத இருப்பு பற்றிய பதற்றத்தை இயற்கையோடும் – உலகியல் அவஸ்தைகளோடும் தணிக்கிறார். இத்தொகுப்பில் உள்ள கடல் – வாய்பிளந்து நிற்கும் பேய்க்கடல். இந்த நூற்றாண்டில் தமிழ் வாழ்வை எழுதும் ஒருவனுக்கு கடல் ஏதேனுமொரு அலையில் முள்ளிவாய்க்காலின் உடலங்களைக் காட்டாமல் போகுமா?

ச. துரையின் கதைகள் நிகழ்தகவைப் போல நிகழ்கின்றன. யதார்த்தத்தின் குரூர நிச்சயங்களோடு முரண்படுகின்றன. பாத்திரங்களின் எண்ணங்களும் கனவுகளும் ஆசைகளும் சராசரி உலகியல் அம்சங்களுக்காக ஏங்குகின்றன. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் யாவற்றிலும் மனங்குலைந்த சித்திரமும், எதற்கென்று உணர இயலாத  கொந்தளிப்பும், துர்மரணங்களும் நிகழ்கின்றன. இவைகளை கனவிலும் நினைவிலுமாய் துயரங்களின் நடுக்கத்தால் அச்சப்படும் கதைகள் எனலாம்.

தமிழ்ப் புனைவுலகம் எல்லைகளைத் தகர்த்து முன்னேறுவதில் ஆர்வமுடையது. புதிய வெளிகளில் அது தன்னை பரிசோதிக்கவும் தயங்குவதில்லை. படைப்பாளி உளப்பூர்வமாக இதுபோன்ற கூர்மையான செயல்களில் இறங்கவேண்டும். யதார்த்தவாதம் என்பதைக் கடந்து வேறொரு உலகை சிருஷ்டிக்க எண்ணுபவர்கள் நமது மரபை காவு கொடுக்காமல் முயன்று பார்க்கலாம். ச. துரைக்கும் இந்த ஊடுருவல் மீது பிடிப்பு இருக்கிறது.  திரோபியர் தானேஸ், வாசோ, குரைக்கும் பியானோ கதைகள் அந்தப் பிடிப்பின் சாட்சிகள்.  வாசோ கதையில் வருகிற சிறுமியின் தீப்பந்தம் ஏந்திய சித்திரம் இருள் கவிந்த காலத்தின் சிறுசுடரென, தத்தளிக்கும் விடுதலையின் மீதமான வரியெனத் தோன்றுகிறது. இத்தொகுப்பின் சிறந்த கதை வாசோ.

ச. துரையை எழுத்தாளனாக அறிவிக்கும் சிறந்த முகவரியும் இந்தக் கதைதான்.

வாழ்வின் அடர்த்தியும், தகிக்கும் அல்லல்களுமே கலையாகிவிடுமா என்பவரும் உண்டு. ஆமாம் அது மட்டுமே கலையாகிவிடுமா என்ன! பொன்னகரம் கதையில் அம்மாளுவின் அலைவு – வெறுமென ஒரு ஆவணத்தன்மையாக எழுதப்பட்டிருந்தால், இன்று நினைவுகூரப்படும் கதையாக அது பிழைத்திருக்குமா!

தீடை தொகுப்பின் போதாமைகளில் முக்கியமானவை. கதை கூறும் முறையிலுள்ள சிதறல் தன்மை. குவிய மறுத்த கதை மொழி. படைப்பின் சுதந்திரத்தையும், சூக்குமத்தையும் அனுமதிக்காத கதைசொல்லியின் கடும்போக்கு. “தன்னையே பாதிக்காத அனுபவத்தை வைத்துப் படைப்பாளியால் பிறரைப் பாதிக்கச் செய்யும் படைப்பை எப்படி உருவாக்க முடியும்?” என்ற எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் இந்த வரிகள் இத்தொகுப்பின் ஓரிரெண்டு கதைகளை வாசிக்கும் போது நினைவிலாடியது.

ச. துரையின் கதைகள் வாழ்வுக்கும் அலைதலுக்குமிடையே காத்திருந்து காயும் கடல்நிலத்தில் விரிகிறது. வெவ்வேறு குரல்களின் வழியாக வெளிப்படும் அம்பா பாடல்கள். உப்பு நீரில் தோய்ந்து காற்றுலர்த்தும் வலையைப் போல, எவ்வளவோ பாறைகளையும், ஆழங்களையும் கண்ட தரிசனங்கள். நம்பிக்கையினால் சமாதானங்களை உயிர்ப்பிக்கும் சகிப்புத்தன்மை கொண்டவர்களைப் படைக்கிறார். நினைவாலும், பயங்கரங்களாலும் துன்புறுத்தப்படும் கடல் மனிதர்களின் மீட்சி பற்றி சிந்திக்கிறார். இந்தப் பொருண்மையாலும் தீடை சிறுகதை தொகுப்பு சிறந்ததாக மாறியிருக்கிறது.

தொடர்ந்து வாசித்து, எழுதுவதன் மூலமாக தமிழ் இலக்கியப் புனைவு வெளியில் உறுதியான தாக்கத்தைச் செலுத்தவல்ல எழுத்துச் சக்தியாக ச. துரை திகழுவார். அவர் திகழவேண்டும் என்பது என்னுடைய ஆத்மார்த்தமான விருப்பம்.

எழுத்தாளர் ச. துரைக்கும், இந்நூலை வெளியிட்ட சால்ட் பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்.

 

  • அகரமுதல்வன்

 

Loading
Back To Top