அன்புள்ள எழுத்தாளர் அகரமுதல்வன் அவர்களுக்கு,

ஒவ்வொருவரும் அவருடைய வாசிப்பு அனுபவத்தில் இருந்து தான் அவர்களது வாசிப்பை பகிர்கிறார்கள். சிலரின் வாசிப்பு பகிர்வு “இதெல்லாம் அக்கதையில் உள்ளதா ?” என்று திகைக்க செய்யும் அளவிற்கு உள்ளது.  over Reading என்பதை எப்படி கண்டடையலாம்?

  • ஞானசேகரன்

 

அன்பின் ஞானசேகரன் !

நீங்கள் குறிப்பிடும் திகைக்கவைக்கும் வாசிப்பு பகிர்வுகள் இலக்கியச் சூழலில் சர்வசாதாரணம். ஆனால் அதனை உங்களின் வாசக அனுபவத்தோடு வைத்து அணுகக் கூடாது. ஒருவர் சராசரி நிலையிலிருந்து வாசிப்புக்குள் அடியெடுத்து வைக்கும் தொடக்க காலத்தில் ஒரு “பாக்கெட்” நாவலைப் படித்தால் கூட அப்படித்தான் உணர்ச்சி வசப்படுவார். அதற்காக இதெல்லாம் ஒருநாவலா என்று நம் அறிவாற்றலால் அவரின் வெளிப்பாட்டைச் சீண்டக்கூடாது. அவருடைய வாசிப்பில் அவர் அடைந்த உணர்வெழுச்சிக்கு ஒரு மதிப்பு உண்டு. ஆகவே நான் அவரின் வெளிப்பாட்டுக்கு செவி சாய்ப்பேன்.

Over Reading -ஐ அவர்களின் மிகையான வெளிப்பாட்டில் காணக்கூடும். ஒரு துணுக்கை எழுதியவரிடம் சென்று உங்கள் கவிதையின் இரண்டாவது வரி அற்புதம் என்று பாராட்டுபவர்களை எதிர்கொண்டிருப்பீர்கள் அல்லவா! சில வேளைகளில் உங்களுக்கு கூட அந்த அனுபவம் வாய்த்திருக்கும். நான் எழுதிய அரசியல் கட்டுரையை வாசித்த ஒருவர், தங்களின் சிறுகதையை வாசித்தேன் ஐயா, அற்புதமான தொடக்கமும் முடிவும் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இந்த வாசிப்பையே நான் அறியாமையின் அதீதம் என்று கருதுகிறேன். இன்றைக்கு முகநூல் முழுக்க இந்த Over Reading இலக்கியப் பாவனை பெருகியுள்ளது. எனக்கும் இலக்கியம் தெரியும் என்பதைச் சான்று பகிர பலரும் மிகையான வார்த்தைகளால் புத்தக வாசிப்பு அனுபவங்களை பகிர்கிறார்கள். எழுதும் வார்த்தைகள் கூட எங்கேயோ எழுதப்பட்ட கட்டுரைகளில் இருந்து கையாளப்பட்டிருக்கும்.

சமீபத்தில் வெளியான சிறுகதை தொகுப்புக்களை தொடர்ந்து  வாசித்து வருகிறேன். இன்றைக்கு எழுதும் சக படைப்பாளிகள் சிலர் Over Reading மனோபாவத்தினால் எழுத்தாளர் ஆனவர்கள் என்றே தோன்றுகிறது. மிகையான கண்மூடித்தனம். எழுத்தை எவ்வாறு கருதுகிறார்கள் என்று அறிய முடியவில்லை. ஒருபக்கம் இந்தப் புத்தகங்களுக்கு எழுதப்பட்டிருக்கும் சில வாசிப்பனுபவங்களை காண நேர்ந்தால் அதை விடக் கவலையே எஞ்சுகிறது.

நமது சூழலில் வாசிப்பதையே ஒரு மிகையான செயலாகவே கருதுகிறார்கள். வாழ்க்கையில் இல்லாத அனுபவமா வாசிப்பில் கிடைக்கப்போகிறது என்று கருத்துக்களை உதிர்க்கும் பேர்வழிகள் எங்கும் காணக்கிடைப்பார்கள். இன்னொரு பக்கம் வாசிப்பே சுவாசிப்பு என்பவர்கள். அது பேச்சளவில் அளந்து விடும் கூற்று. அப்படி என்னவெல்லாம் சுவாசித்து இருக்கிறீர்கள் என்றால், மாதவன் நாயர் டீக்கடையில் நாளிதழ் என்பதுதான் மிஞ்சும். ஆனால் தீவிரம் கொண்ட இலக்கிய வாசகர்கள் வேறானவர்கள். அவர்கள் இதுபோன்ற அரட்டைகளில் சேராதவர்கள். Over Reading – என்கிற மிகையான வெளியிலிருந்து தப்பி இலக்கியத்தை முன்வைப்பவர்கள்.

என்னுடைய நண்பர்கள் சிலருக்கும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. Over Reading என்றால் அதிலுள்ளவற்றை நீங்கள் பார்க்க மறுக்கிறீர்கள் என்பார்கள். சிலருக்கு அசலான வாசிப்பு அளவீடுகள் எதுவும் இருக்காது. ஏற்கனவே யாராலோ சொல்லப்பட்ட அளவுகோலோடு படைப்புக்களை அணுகுவார்கள். எதுவும் பெரிசாக இல்லையே என்று வாயைச் சுழிப்பார்கள். அவர்களிடம் இருக்கிற அளவுகோலும் புதிதில்லை என்பதை மறந்துவிடுவார்கள். ஆனால் இவர்களுக்குப் பின்னால் ஒரு அணி திரளும். கோட்டை கொத்தளங்கள் உருவாகும். இலக்கியச் சூழலில் ஒரு குரலென ஆகிநிற்பார்கள். ஆனாலுமென்ன புதிதாக எதுவும் இவர்களிடம் இருக்காது.

பிறகு உங்களுக்கு ஒரேயொரு அன்பான கோரிக்கை. இந்த Over Reading – ஐ கண்டடையும் பிரயத்தனத்தை கைவிடுங்கள். ஏனெனில் கண்டு பிடிக்க வேண்டுமென்ற துடிப்பே ஒரு வகையில் Over Reading – என்றால் மிகையில்லை.

 

 

Loading
Back To Top