சிதைந்து தொங்கிய கால்களோடு குருதி தேங்கிய சாணத்தரையில் அண்ணாவுக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள் அம்மா. என்னைக் கண்டதும் “ இவனுக்கு சரியான தண்ணி விடாய், பாச்சியை விட்டு வாய எடுக்க மாட்டேன் என்கிறான்” எனச் சொல்லி மகிழ்ந்தாள். அம்மா, என்றபடி அவளருகே ஓடினேன். அவள் என்னை அணைத்துச் சொன்னாள். “சந்ததி சந்தியாய் இவனுக்கு நாங்கள் தண்ணி வைக்கவேணும். அவன் எங்கட வாசலுக்கு பறந்து வருவான்” அண்ணாவின் கால்களைத் தொட்டுப் பார்த்தேன். குருதியின் நீளக் கனியென தணல் பழுத்திருந்தது. கைகளை விசுக்கென எடுத்துக் கொண்டேன். “சரியான வெக்கை என்ன! இதுதான் எங்கட ஞாபகமடா மோனே” என்றாள் அம்மா.

– அத்தியாயம் 9

கரமுதல்வனின் போதமும் காணாத போதம் போருக்கு பின் ஈழ நிலத்தின் அம்மைகள் உணரும் வெக்கையையும் அதன் ஞாபகத்தையும் பேசும் படைப்பாக பரிணமிக்கிறது. ஈழப் போர் முடிவுக்கு வந்த பின் தங்கள் நிலத்தில் வாழ்வதற்கான நம்பிக்கையை ஈட்டிக்கொள்ள அம்மக்கள் மேற்கொள்ளும் அகப்போராட்டங்களையும் கண்டடைதல்களையும் இருபத்தைந்து அத்தியாயங்களில் வெவ்வேறு கதைமாந்தர்களின் குரல் வழி வரைந்து காட்டுகிறது. “இவனுக்கு சரியான தண்ணி விடாய்” என்கிறாள்.  போரெனில் தீ. தீயெனில் வெந்துருகும் பாலை நிலம். பாலையில் நீர் என்பது வெறும் நீர் மட்டுமல்ல வாழ்தலுக்கான நம்பிக்கையும் கூட. இங்கும் ஈழப் போருக்கு பின்பு மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் தங்கள் நம்பிக்கையை மீட்டுக்கொள்ள போராடுகிறார்கள். எவை இருந்தாலும் உயிர்த்திருப்பதற்கான அர்த்தத்தை வழங்கும் தொன்ம நம்பிக்கை இல்லையெனில் வாழ்வு நசிகிறது என்பதை நூல் முழுக்க காண்கிறோம்.

தங்களை கைவிட்ட தெய்வங்களுக்கு தாங்கள் வாழ்வளித்து பலத்தைப் பெறுதல், தம்மிடையே இருந்து நிலத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களை தெய்வமாக்குதல், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது நம்பிக்கை கொள்ளுதல், காதலும் காமமும் கொண்டு சூழுலகை பழித்து மறத்தல் என்ற நான்கு வழிகளில் வாழ்தலுக்கான அர்த்தத்தை மீட்டுக்கொள்கிறார்கள். தெய்வங்கள் மனித நிலையை அடைந்து புனர்வாழ்வு பெறுதலும் மனிதர்கள் தெய்வங்களாவதும் ஒரே அத்தியாயங்களில் பிணைந்து வெளிப்பட்டு ஒன்றிற்கொன்று சமானத்தன்மையை அடைகின்றன. தெய்வங்கள் மனித நிலையை அடைந்து புனர்வாழ்வு பெறுவதற்கு கொட்டடி காளி கோயில் சீரமைப்பை சொல்லும் அத்தியாயம் சிறந்த உதாரணம். இரவு முழுவதும் தீயை பார்த்து உட்கார்ந்திருக்கும் அம்மையிடமே காளி முறை வைக்கிறாள். அந்த இரவில் எரியும் தீ அவர்களது நினைவில் எரியும் நிலத்தை எரித்த தீ அல்லவா! அதை உணரும் ஒருவருக்கே தெய்வத்தின் குரல் கேட்கிறது. அவரே புனரமைக்கிறார். இந்த அறிகுறிகள் எல்லாம் கனவுச்சாயல் நிறைந்த பகுதிகளின் வழியாகவே கடத்தப்படுகிறது.

கொட்டடி காளியின் அத்தியாயத்தில் அவள் வந்து பசிக்கு கேட்பதாக இருக்கட்டும், இறுதியில் தலை நோவு என சொல்வதாக இருக்கட்டும். இரண்டுமே கனவுரு பகுதிகள். நூல் முழுக்க ஏராளமான அத்தியாயங்களில் சட்டென்று நிகழும் கனவுத் தாவலை கூர்ந்து பார்த்தால் ஒன்றை விளங்கி கொள்ள முடிகிறது. அதை இப்படி சொல்லலாம், பாலையில் நாவறண்டு நீரின்றி மரண தருவாயில் இருப்பவர்களுக்கு வரும் கனவை ஒத்தவை அவை. இங்கே அவர்களது நா அருந்த நீருண்டு. ஆன்மா அருந்த ஏதுமில்லை. அப்படிப்பட்ட தருணங்களில் ஒன்று தங்கள் புராதன தெய்வங்களையோ அல்லது இப்போது உயிர்த்திருக்க காரணமான போர் தியாகிகளையோ கனவில் கண்டு தாகம் போக்க தெய்வமாக வழிபடுகிறார்கள். ஒவ்வொரு அத்தியாயத்திலும் இதை கவனிக்கிறோம்.

எப்போதெல்லாம் திக்கு தெரியாமல் தவிக்கிறார்களோ அங்கெல்லாம் அபோத நிலமான கனவில் கால் பதித்து அமுதம் சுரக்கும் சிலைகளை கண்டெடுக்கிறார்கள். திலகா அக்காவின் வளர்ப்பு நாயான வீமனின் மூன்று கால்கள் திரிசூல இலையாய் ஒளிர்ந்து தவேந்திரன் மாமா ஆலால கண்டனாக பங்கர் குழியில் புதிய வைரவர் கோவிலாவது கனவுகளில் வெளிப்படும் அருளுக்கு நல்ல உதாரணம். தெய்வங்கள் வாழ்வு பெறுகையில் பழைய முழுமையுடன் அல்ல, இழந்த அடையாளங்களுடனேயே நிறுவப்படுகிறார்கள். அந்த நிறுவலில் எப்போதும் இயக்கத்தின் சில அடையாளங்களும் கலந்து புதிய வார்ப்புருவை தெய்வத்திற்கு வழங்குகிறது. கொட்டடி காளிக்கு அம்மா காந்தள் மலர் சூடி அலங்கரிக்கிறாள். காந்தள் இயக்கத்தால் தமிழீழ மலராக அறிவிக்கபட்டதையும் சேர்த்து வாசித்தால் புதிய பரிணாமம் ஒன்று திறக்கிறது. இயக்கத்தின் அடையாளங்கள் தெய்வங்களுடன் கலப்பதை வீரபத்திரர் புதைக்கப்படுவது என வரும் தொடர்ச்சியான அத்தியாயங்களில் காண்கிறோம்.

அதேசமயம் இறுதியில காளிக்கு மண்ட பீஸ் என்னும் அக்காவின் வாக்கு. ஒரு சமூகமாக எப்படி போர் வடு அவர்களை உள்ளிருந்து உழற்றும் நோயாக அமைகிறது என்பதையும் சுட்டி நிற்கிறது. மனிதர்கள் தெய்வங்களாக மாறும் அத்தியாயங்களில் சங்கன் வரும் அத்தியாயம் முக்கியமாக கவனிக்கப்படத்தக்கது. இயக்கத்தில் உளவுக்காரனாயிருந்து போருக்கு பின் களவுக்காரனாய் உருவம் தரிக்கும் அவன் முருகனின் வேலை திருடிக்கொண்டு, எங்களைக் காப்பாற்றாத நீ, இந்த திருட்டுக்காக ஒன்றும் என்னை தண்டிக்க செய்யமாட்டாய் என திட்டி விட்டு வருகிறான். சங்கன் ஊரில் நடக்கும் விவரங்களை கூர்ந்து கவனிப்பதும் பட்டாம்பூச்சியை சந்திப்பதும் நமக்கு காட்டப்படுகிறது. ஒருபக்கம் அவனுக்கு தெய்வ பொருளை திருடுவதன் குற்றவுணர்வும் வாழ்வு போய்விடுமோ என்ற அச்சமும் தங்கள் நிலையை இப்படி நசிப்பிக்க செய்த தெய்வத்தின் மீதான கோபமும் என திணறும் போது தான் விடுதலை கனல் சுமந்த கண்களை அணிந்த மேய்ப்பனான அவனது தெய்வம் வந்து யுத்தம் தங்களை கைவிட்டதை சொல்வதை கேட்கிறான். தெய்வம் எங்களை கைவிடாது என்ற புதிய நம்பிக்கையை அடைகிறான். அந்த தெய்வம் அவர்களின் புதிய தெய்வம்.

விமர்சகர் சக்திவேல் 

சங்கன் காணும் விடுதலை கனல் சுமந்த கண்களை  விடுதலைப்  புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் அவர்களுடன் அனிச்சையாக தொடர்புப்படுத்தி கொள்கிறோம். ஆனால் போதமும் காணாத போதத்தில் முழுக்க அத்தகைய கால, இடத்துடன் தொடர்புறுத்தும் சொற்கள் நீக்கப்பட்டு தொன்மமாக மாறி வருகிறது. அப்படி தொன்மமாக்குவது காலத்தை தொலைவுப்படுத்தி ஆறுதலை வழங்குகிறது. இந்த உக்கிரத்தை வருங்காலத்திற்கு கடத்தும் இலக்கிய பிரதியாக மட்டுமே நிற்க செய்கிறது – அரசியல் உள்ளீடுகளை தவிர்த்து. இயக்கம் மூலம் நம்பிக்கையை பெறுவதற்கு பூதவதி வரும் அத்தியாயமே முதன்மை உதாரணம். பூதவதியின் அன்னை புலிகளின் மேஜரை கருங்காலி முனி என்று நினைத்து மருளுகிறாள். இறுதியில் பூதவதியின் கால் பெருவிரல் உதிரும் மரத்துக்கு கீழ் நின்று என்ர தெய்வமே என அலறும் அத்தைக்கு பல்லாயிரம் முனிகள் காட்சியளிக்கின்றனர்.

முனிகளும் மாடன்களும் தெய்வங்களேயானாலும் நம்மை கொன்று குருதியுண்ணும் தெய்வங்களும் கூட. இயக்கம் அம்மக்களுக்கு அப்படித்தான் இருக்கிறது. வன்கவர் படையிடம் இருந்து அவர்களை காப்பாற்றும் அதே நேரம் அதற்காக தன் மக்களின் ரத்தத்தையும் குடிக்க தவறுவதில்லை. பூதவதி போல கட்டாய படையணி சேர்ப்பிற்கு சென்று களமாடியவர் முதற்கொண்டு துரோகத்தின் பெயரால் சுட்டுக்கொல்லப்படும் அதியமான் வரை அந்த பட்டியல் நீள்கிறது. காப்பாற்ற எழும் முனிகள் காவு கொள்ளத் தொடங்கும்போது இலட்சிய கனவுகள் கரைய தொடங்குகின்றன போலும்.

இயக்கத்தில் சேருபவர்களை பொறுத்தவரை யெகோவாவின் படைகளின் வழியாக – நூற்றாண்டுகளாக யூதர்களின் நம்பிக்கை தூணாக விளங்கிய விடுதலைப் பயணம்(Exodus)  நூலில் குறிப்பிடப்படும் தெய்வம் – நம்பிக்கையடையும் குங்குமம் முதற்கொண்டு, தன்மானத்திற்காக களம் நிற்கும் தேமா, எதிரிக்கு பயமிருப்பதை அறிந்த பின்னர் தற்கொலை செய்யாமல் வீரச்சாவு அடையும் கரியன் என பலதரப்பட்டவர்களை காண்கிறோம். இவர்களுக்கு இடையில் முக்கிய ஒற்றுமையாக தொலைதூர சாம்ராஜ்ய இலட்சியங்கள் அல்ல அவர்களை உந்துவது, வாழ ஒரு பிடி நிலம் வேணும் என்ற நெருக்கடி தான்.

இறுதிக்கட்ட போரின் போதும் அதன் பின்னரும் ஏற்படும் தனிமையையும் வெறுமையையும் காமம் முகிழ்க்கும் காதலில் போக்கும் உறவுகளாக ஐந்து அத்தியாயங்கள் விரிந்து அமைகின்றன. இந்த பகுதியில் முக்கியமாக குறிப்பிட நினைக்கும் கதைகள் யசோவுக்கும் ஆதாவுக்கும் உரியன. யசோ உடனான உறவு கனவுக்கும் நனவுக்கும் இடையில் ஊசலாடிய படியே சென்று முடிகிறது. வாசகன் தன் கற்பனைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப அதனை வளர்த்து நீட்டலாம். ஆனால் யசோவின் கதையை போர்க்காலத்தில் நிகழும் காதலின் நிலைத்தன்மைக்கான குறியீடாக எடுத்து கொள்ளலாம். நிகழ்ந்ததா என அறிவதற்கு முன்னரே புகையாகிப் போவது. ஆதாவின் அத்தியாயத்தை பொறுத்தவரை வைத்தியலிங்கத்தின் வசையே அதன் சமநிலையை சிறப்பு தன்மைக்கு அடித்தளமாக அமைகிறது. ஏனெனில் எல்லா தியாகங்களும் சாமானியர்களால் புரிந்து கொள்ளப்படுவதில்லை. நறுமுகையின் புல்லாங்குழல் இனிமைக்கான தவிப்பாக எரிந்து எஞ்சுகிறது.

ஆக போருக்கு பிந்தையை வாழ்வில் தெய்வங்களை மீட்டெடுத்தும், போரின் போது இயக்கத்திற்கு தன்னை கொடுத்தும் போருக்கு நடுவில் காதலை சுகித்தும் நம்பிக்கையையும் வாழ்வுக்கான அர்த்தத்தையும் மீட்டுக்கொள்ளும் மக்களின் கதைகளை திறம்பட கூறும் போதமும் காணாத போதத்தில் அமைந்த போதாமைகள் சிலவற்றையும் குறிப்பிடத்தான் வேண்டும். நூலை வாசிக்கையில் ஒரு விலக்கம் உடன் வந்தபடியே இருக்கிறது. அது கதை சொல்லியின் குரலில் வெளிப்படும் புறவய யதார்த்தத்தால் சமனிலைப்படுத்தப்படாத உணர்ச்சிகரம் என்பேன். அந்த குரலில் வெளிப்படும் உணர்ச்சிகரத்தை சக மனிதனாக புரிந்து கொள்கிறேன். ஆனால் நவீன இலக்கிய வாசகனாக என் கேள்வியும் மதிப்பீடும் கால பெருக்கில், வரலாற்றில் உணர்ச்சிகரத்திற்கு என்ன இடம் ? என் வரையில் இழப்பினால் மட்டுமே உருவாகும் உணர்ச்சிகரத்திற்கு பெரிய மதிப்பில்லை.

நினைவுகூரலாகவும் சம்பவ இட வர்ணனைகளுமாக வரும் குரலில் அவர்களது நிகழுலகத்தின் துண்டு சித்திரமும் வருமென்றால் அது இந்த உணர்ச்சிகரத்தை நீடித்த அறச்சார்புடைய சமநிலை கொண்டதாகி இருக்கும் என்பது வாசகனாக என் பார்வை. ஏனெனில் வீர உணர்ச்சியானது நம்பிக்கையையும் வாழ்வுக்கான அர்த்தத்தையும் அளித்தால் மட்டும் போதுமானது இல்லை என்று நினைக்கிறேன். அங்கே அறம் வந்து நின்றாக வேண்டும். அந்த அறம் ஒருவர் தன் நினைவில் சுமந்த உணர்ச்சிகரத்தை நியாயப்படுத்தும் காரணமாக அன்றாடத்தை உணர்வதால் வருவது. எனவே உணர்வு கொந்தளிப்பும் சூழுலகமும் சந்திக்கும் புள்ளியே அறத்தை உருவாக்குகிறது. அது இந்நூலில் குறைப்படுவதாக உணர்கிறேன். தொழில்நுட்ப நம்பகத்தன்மையை பொறுத்தவரை வாசகனாக எனக்கு சில குறைகள் உள்ளன. புலித்தேவன் வரும் அத்தியாயத்தில் கனவுரு பகுதியேயானாலும் அம்மாவுக்கும் அவனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் பதிமூன்று வயது சிறுவனுக்கு எனும் போது நெருடல் ஏற்படுகிறது. அதேபோல அப்பனும் நறுமுகையும் வேதாரண்யத்தில் கரையேறுவது அந்தரத்தில் நிற்கிறது.

முடிவாக, போதமும் காணாத போதத்தின் மக்களை வெட்டி வீசப்பட்ட முருங்கை மரத்தின் குச்சி ஒன்று துளிர் விட்டு மரமாவதன் நிகழ்வுடன் ஒப்பிடலாம். முருங்கையை நாம் விறகுக்கு பயன்படுத்துவதில்லை. அம்மக்களை அப்படி எண்ணியே இராணுவம் விடுவிக்கிறது. ஆனால் கடும் வறட்சியிலும் சொட்டு நீர் பாசனத்தில் வளரும் முருங்கை குச்சிகளை போல தங்களின் நினைவுகளை நீர் சொட்டாக்கி வேரூன்றி மரமாகிறார்கள்.

நூலினை வாங்க –  https://www.panuval.com/bothamum-kanadha-botham-10025742

Loading
Back To Top