மாம்பழமென்றால் பித்து. சிறுவயதில் யாழ்ப்பாணத்தில் ஆளரவமற்ற மாந்தோட்டங்களுக்குள் புகுந்து கூட்டமாக வேட்டையாடுவோம். எனக்கு விளா(லா)ட்டு மாம்பழமென்றால் தனிச் சுதி ஏறிவிடும். குரங்குகளே அதிர்ச்சியாகும் அளவுக்கு மரக்கொப்பில் சாவகாசமாக அமர்ந்திருந்து உண்பேன். எந்த மாங்காயை விடவும் கள்ள மாங்காய் உருசை அதிகம் என்றெல்லாம் சும்மாவா சொன்னார்கள்! சொலவடைக்கு வக்காலத்து வாங்கித்தந்து என்ன ஆகப்போகிறது. ஆனாலும் கள்ள மாங்காய் போலவே கள்ளக் கோழிக்கும், கள்ள ஆட்டுக்கும் இந்தச் சொலவடையே பொருந்தும்.

எங்கள் சொந்தவூரில் ஏக்கர் கணக்கிலுள்ள தேங்காய் தோட்டத்தில் களவாக இறக்கும் இளநீருக்கு இனிப்பும் வழுக்கலும் அதிகம் என்பார்கள். எனக்கு முக்கனிகளில் பிடித்தது மாம்பழம். அதுவும் கோவில் படையலில் இருந்து உண்ணும் மாம்பழச் சீவல்கள் கிளர்ந்தெழச் செய்துவிடும். வீட்டில் புட்டும் மாம்பழம் ஒருவேளை உணவு. அதில் மாங்கொட்டை பங்குகேட்டு நான் நடத்திய உரிமைப் போர்கள் ஏராளம். மாங்கொட்டை வெள்ளையாக வரும்வரை காந்துவது என் சுகம்.

எங்களூரிலிருந்த இராணுவத்தின் சிறிய முகாமொன்றின் வீதியோர வேலிக்கருகில் விளாட்டு மரத்தில் குலைகுலையாக கனிந்திருக்கும் பழங்களை அணில்கள் வீழ்த்திய பின்னர் எடுத்துச் சென்று உண்டிருக்கிறேன். தேனொழுகும் வாசனைப் பண்டம் போல, ஒருவகை தித்திப்பு. கண்களை மூடி உடலே இனிப்பதை உணர்ந்திருக்கிறேன். அந்த மரத்தின் கனிகளை கல்கொண்டோ, தடிகொண்டோ வீழ்த்த எண்ணினாலே பயங்கரவாதமென்பார்கள் ஆக்கிரமிப்பாளர்கள். மாம்பழத்துக்காக கையேந்தவும் மானம் ஒப்பவில்லை. கவரி மான்கள் எல்லாம் பிச்சை கேட்கவேண்டும் என்னிடம். ஆனாலும் அந்த மரத்தின் அணில்கள் என்னைப் போன்ற மாம்பழப் பிரியர்களுக்கு அருள் பாலித்தன.

பிறகொரு காலத்தில் மாம்பழங்கள் மீதான விரும்பம் அறவே அற்றுப்போனது. வழமை போல காட்டு முந்திரிப்பழங்களையும், பாலைப்பழங்களையும், விளாம்பழங்களையும் புசித்தேன். ஆனால் சொந்தத்தில் நிறையவே மாம்பழப் பிரியர்கள். வெள்ளைக் கொழும்பான், கறுத்தக் கொழும்பான், அம்பலவி என்று ஆளுக்கொரு ருசி பேதம் கதைப்பார்கள்.

மாம்பழத்தை விலக்கம் செய்த நாட்கள் நினைவிலுள்ளன. ஏதோவொரு கொந்தளிப்பும் அலைக்கழிவும் மனதுக்குள் தோன்றியிருந்தன. வாழ்வின் பிடிமானம் வேறு திசைகளுக்குள் கிளைபரப்பி, பூத்துக் காய்க்கத் தொடங்கியிருந்தன. அரசியல் உரையாடல்களின் வழியாக என் வயதை மீறிக் கடந்தபடியிருந்தேன். வீட்டிற்கு வருகிற மாம்பழங்களை பகிர்ந்து அளித்தேன். ஆனால் களவாக தோட்டங்களுக்குள் நுழைந்து சாப்பிடப் போகும் கூட்டத்தை நானே வழி நடத்தினேன். அதிலொரு கொழுத்த அனுபவம் எனக்கிருப்பதால் ஏனையோரும் பின்தொடர்ந்தனர்.

எங்களுடைய பூர்வீக வீட்டின் வலதுமூலையில் விளாட்டு மாமரம் ஒன்று உள்ளது. இளமையில் பூத்துக்குலுங்கும் குமரியைப் போல – பருவத்தில் மங்கலம் ஆகிவிடும் தரு. குலை குலையாக காய்த்துக் கனிந்து அருளுபவள். எவ்வளவு வாளிப்பான திரட்சி கொண்ட பழங்கள். அந்தப் பருவத்தில் ஊரில் தேனெடுத்து உண்டால், இந்த மரத்தின் அதே உருசையை உணரலாம். இப்போது வரை இளங்குமரியைப் போல பூத்துக்கனியும் தேன்தரு அவள். நிலம் பிரிந்து வாழ்வது எவ்வளவு துயர் என்று என்னிடம் கேட்பவர்களுக்கு – ஒருமுறை எனது பூர்வீக வீட்டின் மாங்கனியை கொடுக்க வேண்டும். பிறகு அவர்களே இந்தக் கேள்விக்கு பதிலை உரைப்பார்கள்.

மாதா ஊட்டாத சோற்றினை மாங்கனி ஊட்டும் என்கிற பழமொழியை சிலர் அறிந்திருக்க கூடும். ஆனால் இந்தக் கூற்றை அரிதானவர்களே உணர்ந்திருப்பார்கள். காலை உணவு முடித்து காடு குளமென்று சுற்றிவிட்டு மாலையில் வீடு வந்தவொரு வாழ்வில் மாங்கனிதான் எங்களைக் காத்த அம்மை.

இப்போது நகரவாழ்வில் எந்தப் பழங்களையும் நம்பி உண்ண முடியவில்லை. எல்லாவற்றிலும் ரசாயனம் என்பது இயல்பாக ஆகியிருக்கிறது. சில காய்கறிகளை கழுவும் போதே சாயம் வெளுக்கிறது. எல்லாத்துறைகளிலும் அறம் வீழ்ச்சி கண்டுவிட்டது. உணவகங்கள் பலவற்றுள் பரிமாறப்படும் உணவின் தரங்களை சோதித்தாலே நான் கூறும் அறவீழ்ச்சியை அறியலாம். மாம்பழக் காலம் வந்தால் வீதிகளில் கடைகள் முளைத்துவிடும். குவியல் குவியலாக மஞ்சள் குன்றுகள் மாம்பழங்களால் ஆகிவிடும். எந்தக் கடையில் கேட்டாலும் “சூப்பறான பழங்க. வாங்கிட்டுப் போய் நல்லதில்லேன்னா. எடுத்திட்டு வாங்க, சார்” என்பார்கள். முன்னர் இப்படியொரு வசிய வார்த்தைக்கு நம்பி வாங்கி வந்து சாப்பிட்டு இரண்டு நாட்கள் பேதியும் உடல் சூடும் ஆகியிருந்தது. அதன் பிறகு ஆசைக்கும் வேண்டாம் பூசைக்கும் வேண்டாம் என்கிற கசப்பு மட்டுமே எஞ்சியிருந்தது.

சில வருடங்களுக்கு முன்பாக நூல்வனம் மணிகண்டன் நமபிக்கையான இடத்திலிருந்து வாங்கிய பழங்களென சிலவற்றை தருவித்தார். எந்தவிதமான ரசாயனங்களும் போடப்படாமல் பழுத்த அசலான மாம்பழம் என்றார். பல ஆண்டுகளாக ஒரு அறங்குன்றா மாம்பழ யாபாரி அவருக்கு விற்பனை செய்கிறார் என்று தோன்றியது. தீங்கற்ற ருசியான பழங்கள். அளவில் பெரியதாயினும் உருசையில் குறையில்லை. இந்த வருடமும் அந்தப் பழங்களை உண்டேன். ருசி கூடியிருந்தது. ஆனாலும் நாட்டானாய் ஏதோ போதாமையிருந்தது. உலகமெல்லாம் சுத்தினாலும் ஊர்க்குளத்தில் குந்தி குண்டி கழுவினால்தான் ஊத்தை போன சுகமென்பார் அண்ணாவியார் ஒருத்தர். அதுபோலவே இந்த மனநிலையும்.

ஒரு மழை நாள் இரவில் லோகமாதேவி வீட்டில் அமர்ந்துண்ட மாங்கனிகளில் தேனொழுகும் தன்மையில்லை. ஆனால் கட்டித்து நின்ற உருசைக்கு இணையில்லை. அணில் கொறித்து கீழே விழுகிற மாங்கனிகள் இனிமை பெருக்குபவை. அந்தப் பழங்களை எண்ணுக்கணக்கற்று மண் ஒட்டவே திண்டிருக்கிறேன். கிளி கொத்தினாலும் அப்படித்தான். இது வெறுமென கற்பனாவாதம் அல்லவெனச் சொல்லிக் கொள்கிறேன்.

போதமும் காணாத போதம் – துங்கதை நூலுக்கு சென்னையில் நிகழ்ந்த அறிமுக விழாவிற்கு தலைமை தாங்க வந்திருந்த பிரியத்திற்குரிய எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்கள், விழா முடிந்ததும் நண்பர்களுடன் கீழே நின்றும் பேசிக்கொண்டிருந்தார். பிறகு அங்கிருந்த நண்பர்களுக்கு மாம்பழங்களும், பச்சைக் கச்சான் (மல்லாட்டை)யும் பொதியாக கொடுத்தார். பத்தாயத்தில் கனிந்தவை என்றார். அளவில் சிறிய பழங்கள். இலேசான வாசனை. காம்பில் பால் நிற்கும் காய்கள் இரண்டுமிருந்தன. அடுத்தடுத்த நாட்களில் பழமொன்றை எடுத்து தோலோடு கடித்தேன். அடேயப்பா! பவாவின் பெருங்கதையாடல் முறைமையில் சொல்ல வேண்டுமென்றால் “ஒரு அபூர்வமான ருசி நண்பர்களே” எனலாம்.

அமிழ்தம் விளைந்த சிறுகனி. உள்ளே சிவந்து தீயென மங்கும் திரட்சி தேனாய் இருந்தது.  ஒரு பழத்தை உண்டு களித்தேன். மாம்பழம் உண்ணத் தெரிந்தவன் கொட்டையை தானம் செய்யமாட்டான். காந்தினேன். ஏதோ பேய்பிடித்தது மாதிரி அடுத்த பழத்தையும் தேடினேன். வீட்டில் உஷாராகிவிட்டார்கள். ஆதீரனுக்கு வைக்காமல் பேய் தின்றுவிடுமென அம்மா ஏற்கனவே கணித்திருந்தாள் போலும்!

இந்த மாங்கனி இன்னும் எவ்வளவு பேரைப் பேயாக்கும் என்று தெரியவில்லை. காரைக்கால் அம்மை பசித்து வந்த சிவனடியாருக்கு வழங்கிய ஒரு பழத்தைக் கொடுத்துவிடுகிறாள். வீட்டிற்கு வந்த கணவன் பரமதத்தன் மாம்பழத்தை எடுத்து வரும்படி கூறுகிறார். அம்மை எடுத்து வந்து கொடுக்கிறாள். நன்றாக உள்ளதே அடுத்த பழத்தையும் எடுத்து வா என்கிறார். என்ன செய்வதென அறியாது அம்மை சிவனிடத்தே இறைஞ்ச அவளுக்கு மாங்கனி கிடைக்கிறது. அதனை எடுத்துச் சென்று தனது கணவனுக்கு கொடுக்கிறார். சாப்பிட்டவன் இது இன்னும் ருசியாக இருக்கிறது. முன்னைப் பழம் போலில்லையே என்று கேட்கிறார். அம்மை நடந்ததைச் சொல்கிறாள்.  அப்படியா! எங்கே இன்னொரு பழம் கேள், கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என்கிறான் கணவன். அதுபோலவே அம்மை கேட்க பழம் கிடைக்கிறது. கணவன் பரமதத்தன் இறையருள் வாய்ந்த உன்னோடு இல்லறம் நடத்த இயலாது என்று பயந்து விலகுகிறார். பிறகு கணவன் விலக்கிய இந்த உடல் வேண்டாமென பேயுருக் கொண்டு அம்மை கயிலைக்குச் செல்வது சைவர்கள் அறிந்திருக்கும் புராணக்கதை.

நான் மாம்பழத்தின் மீது விசர் பிடித்து திரிந்த சிறுவயதில் ஆழமாக ஒன்றை நம்பினேன். மானுடர்கள் இன்று உண்டு களிக்கும் மாங்கனி என்பது அம்மைக்கு சிவன் அருளிய இரண்டாவது கனி. அதாவது பரமதத்தன் எங்கே நீ சொல்வது உண்மையா இன்னொரு பழம் கேள் என்பதற்கு பிறகு கிடைத்தது. ஏனெனில் அந்தப் பழமே மானுடர்க்கு மிச்சம் வைக்கப்பட்டது. சிவன் அம்மைக்கருளியது மாங்கனி. ஆகவே என்னுடைய கூட்டாளிகளிடம் “இந்தப் பழங்கள் பேயுருக்கொண்ட நமது அம்மையினது தாய்மையின் கனிவு” என்பேன். மாதா ஊட்டாத சோற்றினை மாங்கனி ஊட்டும் எனும் பழமொழியில் மாங்கனி வெறும் கனியாக மட்டுமே இருக்கிறது. அதுவுமொரு மாதா என்பவன் நான்.

ஒருநாள் கடுமையான காற்றுடன் மழை பெய்துகொண்டிருந்தது. அம்மம்மா லாம்பை பிடித்தபடி தாழ்வாரத்துக்கு முன்னால் சென்று மூத்திரம் போனாள். விளாட்டு மாமரம் காற்றில் அசைவதைப் பார்த்து பேயாய் ஆடுகுது மோனே என்றாள். எழுந்து வந்து பார்த்தேன். மின்னல் வெளிச்சத்தில் மரத்தின் ரூபத்தைக் கண்டேன்.

“ஓமன, முறியிற மாதிரியெல்லே ஆடுது”

“அது முறியாது மோனே. மாமரம் என்ன வெறும் மரமே. அதில இருக்கிறவள் கையிலைக்கு தலையால நடந்து போன ஆச்சியெல்லே. அவள் பேயாய்த் தான் ஆடுவாள்.” என்றாள்.

ஞாலமே ! மாமரமும் மாங்கனியும் – நம்மைப் பேணும் அம்மை காண்!

Loading
Back To Top