னக்குத் தெரிந்த இலக்கிய நண்பரொருவர் வினோதமானவர். ஆச்சரியம் அளிக்கக் கூடியவர். நீங்கள் என்ன புத்தகத்தைப் பற்றிச் சொன்னாலும் வாசித்திருப்பார். அல்லது சென்ற நாட்களிலேயே மீள்வாசிப்பு செய்திருப்பார். அவரளவில் ஒளவையின் கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு” என்பதெல்லாம் வெற்றுப் பம்மாத்து. ஒட்டுமொத்த தமிழிலக்கியம் மட்டுமல்லாமல் மொழிபெயர்ப்பில் வெளியான இந்திய – உலக இலக்கியங்களையும் வாசித்திருக்கிறார் என்பார். இவ்வளவு ஆச்சரியங்களைத் தரக்கூடிய  இலக்கிய உபாசகரோடு பழக்கம் வைத்திருப்பதெல்லாம் இந்த ஒற்றை வாழ்வுக்கு நாம் அளிக்கும் தண்டனையன்றி வேறில்லையெனத் தோன்றும். ஆனாலும் நண்பரோடு பேசுவதில் சுவாரஸ்யமும் இருக்கவே செய்யும்.

நேற்றைக்கு மாலையிலும் அவரோடு உரையாடினேன். ராஜீந்தர் சிங் பேடியின் சிறுகதையொன்றை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். ஆமாம் நானும் வாசித்திருக்கிறேன், அற்புதமான எழுத்தாளரல்லவா! என்றார் நண்பர். சிறந்த எழுத்தாளர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றேன். இவரின் கதைகளை என்னுடைய சிறிய வயதில் வாசித்தேன். ஆனால் பாருங்கள் இன்றுவரை ஞாபகத்தில் உள்ளதென்றார். இந்த நண்பர் எல்லாவற்றையும் சிறிய வயதினிலேயே வாசித்தவர். இப்போது வாசிப்பதற்கு என்ன இருக்கிறது என்று சலித்தும் கொள்வார்.

இது ஒருவகையான வியாதி. வாசிப்பவர்கள் பலரிடமும் காணப்படும் மிகமுக்கியமான பிரச்சனை. அவர்கள் வாசிக்காமல் எந்தப் புத்தகமும் இல்லை. அவர்கள் அறியாமல் எந்தப் பக்கமும் பூமியில் புரட்டப்படவில்லையென கருதுகிறார்கள். எனக்குத் தெரிந்த கல்விப்புல நண்பரொருவர் இலக்கியக் கூட்டங்களுக்குத் தவறாமல் வருபவர். நவீன இலக்கிய வாசிப்பில் தீவிரம் கொண்டவர் என்று எங்கும் தன்னை முன்வைக்கமாட்டார். அமர்ந்திருந்து குறிப்புகள் எடுப்பார். சில புத்தகங்களை வாங்கிச் செல்வார். இந்தப் புத்தகம் வாசித்திருக்கிறீர்களா என்று கேட்டால் உண்மை நிலவரம் என்னவோ அதனையே சொல்வார். இவருடைய உண்மை ஞானத்தை அடைய விரும்பும் ஆற்றல் கொண்டது என்றே தோன்றும். ஆனால் ஆரம்பத்தில் கூறிய நண்பர் அப்படியா என்ன!

லா.ச.ரா இவர் வாசிக்க வேண்டுமென்று தான் “அபிதா”வையே எழுதினார். ஜான் பெர்க்கின்ஸ் தன்னைப் பொருளாதார அடியாள் என்று ஒப்புதல் அளித்து எழுதியதும் முதல் அத்தியாயத்தையே நண்பருக்குத் தானே அனுப்பி வைத்தார். தகழியின் கயிறு நாவலை வாசிக்கும் போது நண்பருக்கு ஏழு வயதென்பது பொய்யா என்ன! எட்டாவது வயதிலேயே நல்லுரைக்கோவையை படித்ததுவும், பத்தாவது வயதினிலேயே தி. ஜானகிராமனின் மொத்தப் படைப்புக்களையும் வாசித்து முடித்ததுவும் உண்மையா என்ன! – நண்பருக்கு பொய்யின் மீது ஏனிந்த இரக்கமோ அறியேன். எதன் பொருட்டும், எவர் பொருட்டும் இந்த நிலையை விட்டு அவர் இறங்கியதில்லை. டி.டி கோசாம்பி எழுதிய “பண்டைய இந்தியா” புத்தகத்தை மீள் வாசிப்புச் செய்யவேண்டுமென்றார்.

“முன்னர் எப்போது வாசித்தீர்கள் ?” என்று கேட்டேன்.

“பன்னிரெண்டு வயசிலேயே படிச்சாச்சு”  என்றார்.

“அடேயப்பா. ஆச்சரியம் தான்” என்றேன். அவருக்குள் ஒரு வீண் பெருமை. என்னை நம்ப வைத்துவிட்டாராம்.

“லோகமாதேவி எழுதிய அந்தரத்தாமரைன்னு ஒரு புத்தகம் வாசித்தீர்களா?” கேட்டேன்.

“என்ன நண்பரே! இப்பிடிக் கேட்டிட்டிங்க. அந்த நாவல் என்னோட பால்ய நினைவுகள்ள ஒன்னு. ஊர்ல உள்ள நூலகத்தில இருந்து வாசிச்ச நினைவு இருபது வருஷமாகியும் இப்பவரைக்கு எனக்குள்ள இருக்கு. அந்த நாவலோட பெயர்தான் மறக்க இயலாதது “அந்தூரத்தாமரை” என்று இனிப்புண்டவரைப் போல பாவனை செய்தார். அவ்வளவு இனிமையான நாவலாம் அது. புரிகிறதா?

“அதிருக்கட்டும் அந்தப் புத்தகத்தை எதுக்கு இப்ப கேட்டீங்க. மறுபதிப்பு வந்திருக்கா” என்னிடம் கேட்டார்.

“மறுபதிப்பில்லை. முதல் பதிப்பே இப்பதான் வந்திருக்கு. அது நாவலோ, சிறுகதையோ, ஏன்  நினைவுக் குறிப்போ இல்லை. கட்டுரை தான். தாவரவியல் கட்டுரைகள்” என்றேன்.

“அப்பிடியா! இல்லையே நான் இவரின் நாவலை வாசித்திருக்கிறேனே,அப்படியெனில் அந்தூரத்தாமரை எழுதிய லோகமாதேவி வேறு யாரோவா?” விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத மடப்பேர்வழியாய் சமாளித்தார்.

“யோவ். உனக்கு தெரியாது. இன்னும் வாசிக்கவில்லைன்னு சொல்றதுக்கு என்னய்யா பிரச்சனை” என்று கேட்டதும் நண்பர் திகைத்துவிட்டார்.

“என்னங்க இப்பிடி மிரட்டுறீங்க”

“அப்புறம் உனக்கு இதில என்னதான் சுகம் கிடைக்குது. இன்னும் வாசிக்கல. இந்தப் புத்தகத்த கேள்விப்படலன்னு சொல்றதில, நீ எங்க குறைஞ்சு போறாய்” கேட்டேன்.

“இல்ல நண்பரே. அதுவந்து” என்று இழுத்தார்.

“யோவ், இந்த இலக்கியம், அறிவு, அறிவுஜீவி இதெல்லாத்தையும் விட வாய்மை முக்கியம். அதைப் புதைச்சிட்டு இதை எதையும் உன்னால நெருங்கமுடியாது. பெருமைக்கு பொய் பேசினாலும் சோறு கிடைக்காது. ஞாபகம் வைச்சுக் கொள்” என்றேன்.

சற்றுநேரம் அமைதியாக நின்ற நண்பர் மெல்லிய இருமலுடன் கேட்டார். “நான் சொல்றதெல்லாம் பொய்யின்னு தெரிஞ்சு இத்தனை வருஷம் கேட்டிட்டு இருந்தீர்களே ஏன்?”

“உண்மையிலும் ஒருநாள் உங்களை இலக்கியம் வாசிக்க வைத்துவிடலாம்ங்கிற நம்பிக்கைதான்”

“ஆனா, நீங்க ஜூனியர் விகடன்ல எழுதின தொடரை வாசிச்சிருக்கிறேன். தெய்வம், பேய், நிலம், , கடவுள். நல்ல தொடர்.” என்றார்.

இதற்கும் மேலும் அவருடன் பேசினால், இலக்கியத்தின் பேரினால் ஏதேனும் அனர்த்தம் நிகழவும் வாய்ப்பிருக்கெனத் தோன்றியது. விடைபெற்றுக் கொண்டேன். இரவு நண்பரிடமிருந்து பகிரி வழியாக ஒரு தகவல் வந்தடைந்திருந்தது.

“நான் உங்களைப் போல புத்தகங்களை படிப்பவன் அல்ல. மனிதர்களை வாசிப்பவன். மனிதர்களை எவனால் வாசிக்கமுடியுமோ அவனே கலைஞன்”

அவருக்குப் பதிலாக ஒரு நன்றாகச் சிவந்திருக்கும் இதய வடிவிலான ஸ்டிக்கரை அனுப்பி வைத்தேன்.

‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்ற பாரதியின் வரிகளை சற்று மாற்றி “மானுடர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று எனக்கு நானே சொல்லிவிட்டு உறங்கினேன்.

 

 

Loading
Back To Top