01

எழுத்து சொல் பொருள் இவை ஒவ்வொன்றிலும்

உன் ஞாபகங்கள் கிளர்கின்றன

இலக்கண விதிகள் என் பேச்சை மட்டுமல்ல

வாழ்க்கையையும் வழிநடத்துகின்றன

வாழ்க்கை ஞாபகங்களால் அர்த்தமாகிறது

ஞாபகங்கள் வார்த்தைகளால் ஆனவை.

02

சொற்கள் மொய்க்கும் தேனடை மனம்

ஞாபக அறைகளில் இனிக்கும் குருதி

 

தெய்வமுண்டு மகளே தெய்வமுண்டு

தெய்வத்தோடு பேசும் தனிமொழி

ஒவ்வொரு மனிதர்க்குமுண்டு

 

சொற்கள் மொய்க்கும் காயத்தில்

பேசும் உதடுகள் துடிக்கும்

நடுங்கும் சுடர் அறியும்

எண்ணெய் காய்ந்த திரியால் நேரும் அநித்தியம்.

03

மழையில் நனைந்த குருட்டுப் பூனை

மூடிய வாசல் எதிரே நின்று கத்துகிறது

அதன் கூப்பாட்டில் இரண்டொரு தமிழ்ச்சொற்கள்

இன்னும் விடியாத இரவை அசைக்கின்றன

கவிஞன் வளர்க்கும் பேசும் பூனை

அதன் குருட்டு மொழி

மியாவ் என்பது உனக்கு ஓசை

எனக்குச் சொல்

சொல்லனைத்தும் பொருளுடைத்து மகளே

04

எழுத்து சொல் பொருள்

நீ ஓர் எழுத்து

மட்டுமல்ல ஒரு சொல் மற்றும் பொருள்

நீ ஒரு சொல் உயிரி

Loading
Back To Top