01

காற்றின் உள்ளங்கையில்

அதிர்ந்து கரைந்த நுரைக்குமிழ்

எந்தக் குழந்தை ஊதியது?

எங்கிருந்து பறந்து வந்தது?

அழுகையில் ஊடுருவி நிற்கும்

இந்த வெளியில்

அந்தக் குழந்தையை

எங்கு தேடுவேன்

நான்.

02

அற்பர்களிடம்

மறவாமல் புன்னகைக்கும்

ரோஜா நான்.

காய்ந்த இலையென

உதிர்க்கும்

குளிர்ந்த தரு நான்.

ஒருபோதும்

என் இமைகள்

தங்களிடம் தாழாது

அற்பரே!

03

ஒளியின் முறிந்த கிளையின் கீழே

சலசலப்பது

இருபத்தோராம் நூற்றாண்டின்

குருதி

நிணமாய் எஞ்சிய நிலமொன்றின் சீழ்.

 

Loading
Back To Top