01
என் கானகத்தில்
புராதன விலங்கொன்றை
கண்டேன்
மலையடிவாரத்து
வெட்சியின் அடர்வுக்குள்
பதுங்கி மறைந்திருந்தது
கணத்தில் மனம் களித்து
நெருப்பாலும்
நினைவாலும்
சூல் கொண்ட
தாளத்திற்கு
உடல் அதிர
பாதங்கள் அசைய
வெறிக்குரவையாடியது
குருதி
வெஞ்சுடர் திகைத்திறங்க
வெட்சி மலர்கள் ஆடி அசைய
மலைப் பாதையில்
சுவடு பதித்தது
அது.
02
நேற்றைக்கு
உதிர்ந்து போன
பூவை
ஏந்தியிருக்கிறது
இன்று
அநித்தியத்தின்
நித்திய
சாட்சியானவைகளே
மலர்க!
03
நகரப் பூங்காவின் கல்லிருக்கையில் அமர்ந்து
கண்ணீர் விடுகிறவன்
அந்நியன் இல்லையெனக்கு
அவனது கைகளைப் பற்றிக்கொண்டு
என் கண்ணீரையும் விடுவேன்.
கண்ணீருக்கு சொந்தமானவர்கள்
கைகுலுக்கிக் கொள்ள
கண்ணீரைத் தவிர வழியுண்டோ
அறியேன்.