அன்புமிக்க அகரமுதல்வன் அண்ணே!

ஒரு நவீன இலக்கிய வாசகர் பக்தி இலக்கியத்தை கவிதையாக, மொழி அழகியலயாக, தத்துவமாக, பக்தியாக என நீளும் குழப்பங்களில் எவ்வாறு வாசித்துக் கண்டடைய வேண்டுமென நினைக்கிறீர்கள்?

முத்துமாணிக்கம்

 

அன்பின் முத்துமாணிக்கம்!

நவீனத் தமிழ் இலக்கிய வெளியில் பக்தி இலக்கியம் குறித்த பிரக்ஞை குறிப்பிடப்படுமளவு இல்லை. பக்தி இலக்கியத்தைக் குறித்து உரையாடினாலே பிற்போக்குத்தனமென்று உதறித்தள்ளும் பாவனை முற்போக்கு இரைச்சல் எழுந்துவிடும். இதன் விளைவாகவே நவீனத் தமிழ் இலக்கிய வெளி தன்னுடைய பாவனை முற்போக்கு தந்திரங்களுக்காக பக்தி இலக்கியங்களை கைவிட்டுவிட்டது. இதனால் பக்தி இலக்கியத்திற்கு எந்த இழப்பும் இல்லை. மாறாக நமக்குத்தான் பேரிழப்பு.

நான் சைவ அறநெறி வகுப்புக்களின் மூலமாக பதிகங்களைக் கற்றுக்கொண்டவன். பண்ணிசையால் திருமுறைகளை ஓதியவன். நான் பக்தி மரபை ஆராதிப்பவன். அதன் வழியாகவே பதிக வரிகளை ஆய்ந்து நோக்கும் ஆசான்கள் எனக்கு கிடைத்தனர். காரைக்கால் அம்மையார் முதல் – மணிவாசகர் என நீளும் மாபெரும் பக்தி இலக்கியக்காரர்களை அப்படித்தான் அறிந்தேன்.  பக்தியாகவும், இலக்கியமாகவுமே அவற்றை தொடக்கத்தில் உணர்ந்தேன்.

ஆனால் பக்தி இலக்கியத்தை ஒருவர் எவ்வாறு புரிய விரும்புகிறாரோ, அதுபோலவே கண்டடைந்து கொள்ளலாம். அங்கு எந்த கட்டித்துப்போன வாசிப்பு முறைமையும் இல்லை. ஏனெனில் இன்று பக்தி இலக்கியங்களை வாசிப்பதற்கும் உரையாடுவதற்கும் சிறுதொகையினரே இலக்கியச் சூழலில் இருக்கிறார்கள். சங்க இலக்கியத்திற்கும் இதே நிலையத்தானே நாம் வழங்கியிருக்கிறோம். ஒரேயொரு செம்புலப்பெயல் நீரை வைத்துக் கொண்டு தானே மேடையிலும், இலக்கிய உரையாடல்களிலும் பலர் கம்பு சுத்துகிறார்கள். ஒரு திருக்குறளை இரண்டு தடவைகள் ஏற்ற இறக்கத்தோடு சொல்லி, திருவள்ளுவரை ஒரு சக படைப்பாளியாக ஆக்கிவிடும் தந்திரப் பாவனைகள் நம் சூழலுக்கு போதுமானதாகிவிடுகிறது.

கடும்பகல் நட்ட மாடிக்

கையிலோர் கபால மேந்தி

இடும்பலிக் கில்லந் தோறு

முழிதரும் இறைவ னீரே

நெடும்பொறை மலையர் பாவை

நேரிழை நெறிமென் கூந்தற்

கொடுங்குழை புகுந்த வன்றுங்

கோவண மரைய தேயோ.

அப்பர் பெருமானின் இந்த வரிகள் எனக்கு பக்தியாகவும், கவிதையாகவும், தத்துவமாகவும், மொழியழகியலாகவும் பிடித்தது. மேற்கொண்டு என் துணையாகவும். தீவிரத்தோடும் அர்ப்பணிப்போடும் எந்தக் கலையிடமும் நாம் பணிந்தோம் எனில் அது எல்லாமுமாக எம்முள் சடை விரிக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

Loading
Back To Top