
01
பழங்கால இடுகாட்டின் நெருக்குவாரத்தின்
குழியொன்றில்
வால்சுருட்டி உறங்கியிருக்கிறது
நெடும்பகல் நாய்.
நேற்றைக்கு மூடப்பட்ட ஆறடி மேட்டில்
அமர்ந்திருந்து
அலகால் இறகுகளை நீவிய புறாக்கள்
படபடத்து எழுந்து பறக்கின்றன
உயரமான கல்லறையின் மீது ஏறிநின்று
கண்களை மூடி
பூமியை நோக்கி விழுந்தான்
ஒருவன்.
கல்லறை மீது தலைதூக்கும்
ஓணானை
பாய்ந்து கவ்வியது
நெடும்பகல் நாயின்
உறக்க வேஷம்.
இப்படியொரு இளைப்பாறல்
இப்படியொரு அமைதி
இப்படியொரு விடுபடல்
இப்படியொரு இல்லாமை
யாருக்கு வேண்டும் இப்போது?
02
இருள் யுகத்தின்
குகையிடுக்கில்
கசியும் காயம்
எனது.
குருதியே அகல்
குருதியே திரி
குருதியின் ஒளி
எனது.
03
கைவிடப்பட்டவர்கள்
தாழ்வாரத்தில் ஒதுங்கி
மழையை வெறிக்கிறார்கள்
பறவைகள் உலர்ந்து
மீண்டும் பறக்கும் வரை
நீரில் அவர்கள் நடப்பதில்லை
தீயின் பாலையில்
அணைய மறுத்து
பிராயணம் போகிறவர்கள்
பற்றியெரியும்
ஒரு மழைக்காக காத்திருக்கிறார்கள்.