
அன்புமிக்க அகரமுதல்வனுக்கு!
என் ஆசிரியர் அடிக்கடி ஒன்று சொல்லுவார், தராசின் ஒருபக்கத்தில் பக்தி நூல்களையும், மறு பக்கத்தில் திருவாசகத்தையும் வைத்தால், திருவாசகம் தான் முன்னோக்கி இருக்கும் என்று. சட்டென பார்க்கும் போது இந்தத் தொடர் ஒரு மிகை கூற்றாக தெரியலாம். ஆனால் படிக்கும் போது தான் தெரிகிறது அதனது உண்மை. நண்பர்களாக திருவாசகம் படிக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. படிக்க ஆரம்பித்தோம். உங்களிடம் சில ஆலோசனைகளும் கேட்டோம். நீங்களும் சில அமர்வுகளில் கலந்து கொண்டு நெறிப்படுத்தினீர்கள். தற்போது 25 ஆவது வாரத்தை அடைந்துள்ளோம். இதை சிறப்பு அமர்வாக மாற்ற முடிவு செய்ய திட்டமிட்டோம். முதலில் ஒரு இணையத்தளத்தை தொடங்கி அதில் பல அறிஞர்களிடம் இருந்து சைவம் சார்ந்த கட்டுரைகளை வாங்கி பதிவேற்ற உள்ளோம். மேலும் அன்று ஒரு சிறப்பு உரையாடல் நடத்த திட்டமிட்டோம். யாரை அழைப்பது என்ற யோசனையே எங்களுக்கு வரவில்லை. கரு ஆறுமுகத்தமிழன் இருக்கும் போது வேறு யாரை அழைக்க முடியும்? அவரிடம் தொடர்பு கொண்டு பேசினோம். மிகுந்த பணிச்சுமைக்கு நடுவில் வர சம்மதித்துள்ளார். எந்த இலக்கிய நிகழ்வாக இருந்தாலும் அகரமுதல்வன் என்ற பெயர் நிச்சயம் வந்துவிடுகிறது. இந்த நிகழ்வும் அப்படித்தான். அழைத்தோம். நீங்களும் மறுக்காமல் சம்மதித்தீர்கள். திருவாசகம் என்ற தேனைப் பருக வரும் ஞாயிறு அன்று கூடுவோம். “மேன்மைகோள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”
நன்றி
முத்துமாணிக்கம்
அன்பின் முத்துமாணிக்கம்! உங்களுடைய இந்த முயற்சி பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது. சின்ன அளவில் தொடங்கும் நற்கருமங்கள் அனைத்தும் – தொடர் செயற்பாட்டின் வழியாக தன்னை அசைவியக்கமாக மாற்றும். நீங்கள் கடுமையான உளச்சுழலில் இருந்த காலத்தில் திருவாசகத்தை வாசிக்கவேண்டுமென விரும்பினீர்கள். “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்கிற சிவபுராண வரிகளை நினைத்துக் கொள்கிறேன். இருபத்தைந்து வாரமும் அவனருள் உங்களை வந்தடைந்திருக்கிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து ஈடுபடுங்கள். இனியவை யாவும் மொழியால் உங்களை வந்தடையட்டும்.