01

ஒளியெழும் போழ்தில்

காற்றில் தரிக்கும்

அரூபத்தின் கைகள்

இருளினுடையதா?

தெய்வத்தினுடையதா?

கருணை தேங்கியசையும்

சுடரில்

சிறுசெடியைப் போல

ஒளி துளிர்க்கட்டுமே!

இருளின் தெய்வமே

தெய்வத்தின் இருளே

உங்கள் பெருமூச்சை

இறுகப்பிடித்தபடி

இக்கணம்

திருவுளம்

காண்பியுங்களேன்.

02

நமக்கிடையில்

சிவந்து புரளுவது

வெறுப்பின் குருதியாறு

காயங்கள் பற்றி

எழுந்தாடும் தீயின்

வெறித்தனத்தில்

கசப்பிற்கு இரையான நேசம்

புகைகிறது.

தீயால் பிளவுறும் பொழுதில்

மழை பெய்துதான்

அடங்கவேண்டியுள்ளது

சாம்பலின் கங்கு.

Loading
Back To Top