விடுதலைக் கருவிகளைத் தோள்களில் சுமந்தவர்கள் தெய்வங்களானதும், தெய்வங்கள் அவரவர் வாழிடங்களில் பெருகிய ஒப்பாரிப் பாடல்களைச் சகியாமல் கண், காதுகளைப் பொத்திக்கொண்டு வெளியேறியதுமான நிலத்தில் நின்று, ஈழத் தமிழரின் மீள்குடியேற்ற வாழ்வை இந்த நூலில் எழுதுகிறார் அகரமுதல்வன்.

செட்டிக்குளம் அகதி முகாமில் அடைக்கப்பட்டு பலாத்காரங்களுக்கும் வன்முறைக்கும் உள்ளான சனங்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்புகிறது ராணுவம். செத்தே போனாலும் சொந்தக் காணியில் என் உயிர் போகட்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு அந்நேரத்தில் நிம்மதி திரும்பியது என்று தொடங்குகிறது ‘போதமும் காணாத போதம்.’

அன்று, கடல் வாசல் தெளிக்கும் வீட்டுக் கூரைகளில் கறையான் படை. பனைமரக் காடு புதர்மண்டிக் கிடக்கிறது. பறவைகள் கூடுகள் சிதைந்து கிடக்கின்றன. மறுமுறை ஒருமுறை பார்க்க ஏங்கிய வாழ்நிலத்தைக் கண்ணாரக் கண்டபோது, எல்லோருடைய உதடுகளும் புன்னகையை மறந்திருந்தன. வெறும் கூடுகளான உடலுக்குள் இருந்து கண்ணீர் மட்டும் அளவில்லாமல் சுரக்கிறது. எந்தத் துயரத்திலும் கண்ணீர் சிந்தாத தாய், தனது காலடி மண்ணை இரண்டு கைகளாலும் அள்ளி வான் நோக்கி எறிகிறாள். அது சாபமா, பிரார்த்தனையா என்ற கேள்விதான் இந்த நூலின் 25 அத்தியாயங்களுக்குள் கதையாக நிகழ்கின்றன.

போரால் உயிரிழந்தவர்கள், உறவிழந்தவர்கள், உறுப்பிழந்தவர்கள், வடுக்களைச் சுமர்ந்தவர்கள் எனக் கதைமாந்தர்களை வரிசைக்கிரமமாக அறிமுகப்படுத்துகிறார் அகரமுதல்வன். அவர்கள் ஒன்றுகூடி தங்களின் போர்க்கால ‘பரணியைப்’ பாடுகிறார்கள். துயர்நீங்க தங்கள் உரையாடலுக்குள் ‘பாணாற்றுப்படை’ நிகழ்த்துகிறார்கள். ‘துயிலெடை நிலை’ பாடி நிலத்தடியில் உறங்கிப்போனவர்களை மீள எழுப்புகிறார்கள்.

மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, படை, குடி, முரசு, கொடி, தெய்வமென இழந்த ஞாபகங்களால் மிச்சமிருக்கும் வாழ்வை நம்பிக்கைக்கு நெருக்கத்தில் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள்.  கொட்டடி காளியும், வீரபத்திரரும், பூதவராயரும், கருங்காலி முனியும், மாடன்களும் மீளக் குடியேற்றத்தில் பங்கேற்கிறார்கள். போர்த் துயருக்குப் பிறகான வாழ்வின் வெக்கையும் ஞாபகங்களின் தகிப்புமே “போதமும் காணாத போதம்.”

போரின் மிச்சத் துகளைத் சுமந்தலையும் திலகா அக்கா,  மன்னார் களமுனையில் சமராடி, இறுதிப் போரில் காணாமலான பூதவதி, சுடுகலன் தாங்கிய பகைவர்க்கு நடுக்கம் வரச் செய்த அதியமானின் உடலைத் துளைத்த தோட்டா, ‘இனி மிச்சமிருக்கப்போவது தாய் நிலமல்ல, ஓர் உன்னதச் சகாப்தத்தின் நிர்மலமான இறந்தகாலம்’ என்று முன்னறிவிப்பு செய்யும் ஈகையாள், நந்திக்கடலின் உப்புத் தண்ணீரில் விளக்காய் எரியும் அதிபத்தன், யுத்தம் ஒழிக! யுத்தம் ஒழிக! என்று முயங்கும் யசோ என….  கதைமாந்தர்கள் எல்லோருமாகச் சேர்ந்து ஒரே குரலில் பாடுகிறார்கள்.

“இந்த நூற்றாண்டின்மீது எங்கள் குருதி படிந்திருக்கிறது. பழம்பாடலின் வழியாக நிலத்தின் தொன்மங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் எங்கள் தெய்வங்களை விடுவிக்கிறோம். பாஸ்பரஸ் வாசனைக்கு நடுவே நம்பிக்கையின் ஒளியைக் கண்டடைகிறோம். ஞாபகங்கள் போல வதையுமில்லை… ஞாபகங்களைப் போல சிறையுமில்லை… ஞாபகங்களைப் போல விடுதலையுமில்லை” என்கிறார் அகரமுதல்வன்!

Loading
Back To Top