வணக்கம் , அகரமுதல்வன்!

கவிஞனுக்கும் எழுத்தாளனுக்கும் அறச்சீற்றம் உண்டு. வடிவம் தான் அவர்களை பிரித்து காட்டுகிறதா? இல்லை ஆளுமையில் பெரும் வேறுபாடு உண்டா?

  • ஞானசேகரன்

 

 

அன்பின் ஞானசேகரன்!

உங்களுடைய கேள்வியில் கவிஞருக்கும், எழுத்தாளருக்கும் அறச்சீற்றம் இருப்பதாக உறுதிப்பட தீர்ப்பு எழுதியுள்ளீர்கள். இதுவே நெருக்கடியை ஏற்படுத்தும் சுமைதான். இலக்கியம் என்பதே அறச்சீற்றத்தின் வெளிப்பாடு மட்டுமில்லை. அது படைப்பாளியின் தனிப்பட்ட உணர்வுகளின் உள்முகமாகவும் அமையும்.  எழுதுபவர்களின் ஆற்றாமையும், தத்தளிப்பையும் ஏந்திக்கொள்ளவும், தாங்கிக்கொள்ளவும்  இலக்கியம் இருக்கிறது.  இன்னொரு தரப்பு கசப்பையும் இருளையும் மட்டும் சொல்லுவதே இலக்கியமென கருதுகிறார்கள். இதுதான் இலக்கியம் என ஒற்றைத்தன்மையாக அறிக்கையிடும் எந்தத் தரப்பின் குரலும் ஒருவகையில் தூய்மைவாதத்தையே சேரும். ஆகவே பரந்தளவில் இலக்கியத்தை அறியத் துடிக்கும், எழுத விரும்பும் ஒவ்வொருவரும் அறச்சீற்றத்தை மட்டுமே கையிலெடுக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை.  கலை கோரும் திசையில் தனது தலையை அளிப்பவனை எழுத்து பீடிக்கும்.

கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஓருலகம் சார்ந்தவர்களோ, ஒரே தன்மை கொண்டவர்களோ இல்லை. இவர்கள் இருவருக்கும் இடையே சிந்தனையிலிருந்து, முன்வைக்கும் அவதானங்கள் வரை பாரிய வித்தியாசங்கள் உள்ளன. கவிஞர்கள் உணர்ச்சிவசமானவர்கள். நீங்கள் கூறும் தீவிரத்தன்மையான அறவுணர்ச்சியும் அதில் அடக்கமே தவிர, அதுமட்டுமில்லை.

ஒளவையின் தனிப்பாடல் ஒன்றை உதாரணமாகச் சொல்கிறேன்.

அற்றதலை போக அறாததலை நான்கினையும்

பற்றித் திருகிப் பறியேனோ – வற்றும்

பரமனை யானுக்கிந்த மானைவகுத் திட்ட

பிரமனையான் காணப் பெறின்.

படைத்தலைச் செய்யும் பிரம்மனின் மிஞ்சியிருக்கும் நான்கு தலைகளையும் திருகி எறிவேன் என்கிறாள். இந்தப் பாடல் பிறந்த கதையையும் முழுமையான பொருளையும் தேடி வாசியுங்கள்.  கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையில் இருப்பது வடிவ பேதம் மட்டுமல்ல. கொந்தளிக்கும் அகத்துள் ஒருவிதமான வெக்கைச் சலனத்தை ஏற்படுத்தி, கங்கு தணியாமல் காத்திருப்பார்கள் கவிஞர்கள். அந்தத் தணலில் இருந்து ஒரு சொல் கனிந்த தீயாகி மேலெழும்புகிறது.

“சாகத் துணியில் சமுத்திரம் எம் மட்டு
மாயையே – இந்தத் தேகம் பொய்
என்றுணர் தீரரை என் செய்வாய் மாயையே”

பாரதியின் இந்த மாயையைப் பழித்தல் எவ்வளவு பெரிய தீக்கிடங்கில் இருந்து பழுத்துச் சிவந்த ஆற்றல். பாரதி மரணமில்லாத பெருவாழ்வை மொழியில் பதிந்து விட்டிருக்கிறான் அல்லவா! இங்கே இந்த உணர்ச்சிவயப்படலை அறச்சீற்றம் என்றும் கருதலாம்.

எழுத்தாளர்கள் சற்று வேறுவிதமானவர்கள். அவர்களுக்கும் கொந்தளிப்பும் பதற்றமும் பெருமளவில் உள்ளது. ஆனால் உலகம் முழுவதும் பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்களுடைய சிறுபிராயத்தின் நினைவுகளால் வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள். சற்றும் எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் தங்களுடைய நிகழ்காலத்தைச் சந்தித்தால், உணர்ந்தால் பல எழுத்தாளர்கள் வெறுமை கொண்டுவிடுகிறார்கள். கடந்தகாலத்தின் கனவுள் படிவது அவர்களுக்கு சுகமளிக்கிறது. கனன்று சுழலும் ஒருவெளியில் தனித்து நிற்க அஞ்சுவதில், அவர்களுக்கு ஒரு இளைப்பாறல் கிடைக்கிறது. நிகழ்காலத்தை இறந்தகாலமெனும் அருங்காட்சியகத்தில் காண்பதில் பிரியமாக இருக்கிறார்கள். நிகழ்காலத்தின் கசப்பை மட்டுமல்ல, இனிமையை, மகிழ்ச்சியை, தோல்வியைக் கூட அவர்கள் சந்திக்க விரும்புவதில்லை. தேனில் ஊறவைத்து  நெல்லிக்காய் உண்பவர்களை அறிவீர்கள் அல்லவா! அப்படித்தான் பல எழுத்தாளர்கள்.

நான் எப்போதும் கவிதைகளை வாசிப்பவன். ஒவ்வொரு நாளின் உரையாடலிலும் கவிஞர் ஒருவரின் கவிதையை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் உள்ளது. எழுத்தாளனுக்கும் கவிஞனுக்கும் இடையே இருப்பது மாபெரும் ஆளுமை வேறுபாடு.

என் நூற்றாண்டு

துணியால் வாயைப் பொத்தி அழுதபடி
ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்து விட்டது.
படிவங்களை நிரப்பத் தெரியாமல் ஒரு முதியவர்
மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார்
என் வரிசை நகர்ந்து விட்டது.
தண்டவாளத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு
தண்ணீர் தண்ணீர் என்று
கையசைத்துக் கொண்டிருக்கிறான்
என் டிரெயின் நகர்ந்து விட்டது
எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்
இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ
அவ்வளவு நேரம்.

தேவதச்சன் இந்த நூற்றாண்டைப் பற்றி கூறுகிற சித்திரத்தை தமிழ் எழுத்தாளன் புனைவில் இன்னும் தரவில்லை. வேடிக்கையாக சொன்னால், எழுத்தாளர்கள் அடுத்த நூற்றாண்டுக்காக காத்திருக்கிறார்கள். கவிஞர்கள் இந்த நூற்றாண்டை பட்டவர்த்தனம் ஆக்குகிறார்கள். ஈழத்துக் கவிஞர் சேரனின்,

“முகில்கள்மீது நெருப்பு
தன் சேதி எழுதியாயிற்று
சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து
எழுந்து வருக”

புகழ்பெற்ற இந்தக் கவிதை வரிகளை தமிழர் எவரும் மறப்பாரோ! மறக்கும் வரிகளா இவை. அன்றைக்கு முகில்களின் மீது நெருப்பு எழுதிய சேதி இன்னும் தான் அணையவில்லை அல்லவா! சாம்பல் பூத்த  தெருக்கள் இன்றும் உலகில் உள்ளது அல்லவா!

பதினான்கு தலைமுறைக்கு ஒரு முறை

வாய்க்கிறது

சுதந்திரம் தூக்கலான ஒரு எதிர்ச்சொல்

குருதிக்கறை கொண்ட

உடைந்த பல்

அதிகம் சிரிக்கிறது

ஒரு புதிய அர்த்தத்தில்.

அதோ!

அதிகாரி வீட்டுக்குள்

பன்றிக்குடல் எறிந்துவிட்டு ஓடுகிற சிறுவன்

வரலாற்றில்

புழுதி கிளப்பப் போகிறான்.

என்ற கவிஞர் வெய்யிலின் கவிதைகளையும் குறிப்பிட விரும்புகிறேன். பன்றிக்குடலை எறிவதில் அறவுணர்ச்சி மட்டுமல்ல. ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலையின் அழகியலும் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக அது ஒரு கவிதையாக தன்னை முழுமையாக்கி உள்ளது.

என்றும் நிலைத்திருக்கும் மொழியில் கவிஞன் முதன்மையானவன். ஆதியும் அந்தமும் அற்ற சிவனுக்கு அம்மையாகத் தெரிபவள், கவிஞர் காரைக்கால் அம்மைதான். மொழிக்கு மட்டுமல்ல அறத்துக்கு மட்டுமல்ல தெய்வத்துக்கும் கவிஞன் முதன்மையானவன். அவனே ஆளுமையில் வியப்பளிப்பவன் என்பது என்னுடைய கருத்து. என்றுமுள்ள மொழிக்கு என்றைக்கும் அருளுபவன் கவிஞன்.

நன்றி

 

 

 

 

 

Loading
Back To Top