
01
நீளமானதொரு புல்லாங்குழல்
இந்த இரவு
பல்லாயிரம் துளைகளிலும்
காற்றை நிரப்பி
ஒவ்வொன்றாய் திறக்கிறது
நாளை.
02
பருத்து நீண்ட பாம்பென ஊர்ந்தசையும் கனவு
என்னைத் தான் மீண்டும்
தீண்டும்.
03
பிறந்த என்னை முதலில் ஏந்திய
மகப்பேறு விடுதித் தாதியை
அறிமுகப்படுத்தினாள் அம்மா.
உன் மேலிருந்த ரத்தத்தை துடைத்தவள்
நானே தான் என்றவள்
தாதியுமில்லை
தெய்வமுமில்லை
அவளொரு அநாதி காலத்தின்
கிளை நிழல்.