01
காய்ந்த துணிகள் பறந்து பறந்து
வெயிலைத் துரத்தும் கொடியில்
ஈரமுலர்த்தி
விசுக்கெனப் பறந்த கணம்
பகலை உரசிற்று
சிறகுள்ள மலர்.
02
ஜன்னலில்
அமர்ந்திருப்பது
பறவையா?
பாணனா?
பறக்கவும் இல்லை
பாடவும் இல்லை
இறக்கைகளா ?
நரம்புகளா?
நாள் தோறும்
அதிர்கிறது
நடுநிசி.
03
இந்த யுகத்தின்
இறுதி
மனையுறைக் குருவியாக
புழுதியில் குளித்து
எஞ்சியிருக்கிறேன்
கல் தோன்றி
மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த குடிகளே
அருந்தக் கொஞ்சம்
தண்ணீர் தாருங்கள்.