
நவீன இலக்கியத்தின் வாசகராக இருப்பதில் பெருமையடையும் பலநூறு பேர்களில் நானுமொருவன். ஒரு யாகத்தின் பக்தியோடு இலக்கியத்தை தொழுவது என் தரப்பு. எழுதுகோலும் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம் என்று பாடியவனே என் மொழியில் மகாகவி. இலக்கியமொன்றும் புனிதமில்லை. அது வெறுமென எழுத்துத்தான் என்போரிடம் வாதிப்பது என் வழக்கமில்லை. எழுத்தை அறிவியக்கத்தின் முதன்மையாக கருதுவோரையே நான் மதிக்கவும் போற்றவும் செய்கிறேன். இது குருமரபை ஏற்றுக்கொண்ட என் சமயப் பயிற்சியிலிருந்து வந்ததாகவே எண்ணுகிறேன்.
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் என்று இறைவனை பாடிய அப்பர் பெருமானை நாளும் பொழுதும் நினைத்துக் கொள்கிறேன். அவருடைய மொழியையும் பாடல்களின் பொருண்மையையும் எண்ணி எண்ணி வியந்து தொழுகிறேன். என்னுடைய மொழிக்குருதியில் நற்றுணையாக அமர்ந்திருப்பது அவர்தானோ என்று அடிக்கடி மகிழ்ந்து கொள்கிறேன். இலக்கியத்தை இவ்வளவு ஆழத்திலிருந்துதான் கண்டடைய விரும்புகிறேன். இப்படித்தான் கொண்டாட விரும்புகிறேன். இப்படித்தான் எழுத்திடம் போற்றி பணியவும் தயாராகவிருக்கிறேன். இந்த உறுதியான மரபின் நீட்சியே ஆகுதியின் இலக்கியச் செயற்பாடு.
வாசிப்பின் தொடக்க நாட்களில் தமிழின் முதன்மையான எழுத்தாளர்களின் எழுத்துக்களை கண்டடைந்தேன். அன்றைக்கு எழுதிக் கொண்டிருந்தவர்களையும் வாசிக்கலானேன். அதன்பிறகு மெல்ல மெல்ல மொழிபெயர்ப்பு இலக்கியங்களை வாசிக்க எண்ணினேன். மலையாள இலக்கியங்களை தமிழில் வாசிக்க வேண்டுமென்ற தேடல் உள்ளவர்களுக்கு நிர்மால்யாவின் மொழிபெயர்ப்பை பரிந்துரைக்கும் அளவுக்கு, அவரது பணிகளை கண்டடைந்தேன்.
சாரா ஜோசப் எழுதிய “ஆலாஹாவின் பெண் மக்கள்” என்ற நூலினையே முதலில் வாசித்தேன். என்னை வெகுவாக பாதித்த நூலது. பிறகு எம். சுகுமாரனின் சிவப்புச் சின்னங்கள் என்ற சிறுகதை தொகுப்பு. கமலாதாஸின் என் கதை, சந்தன மரங்கள் என தேடித் தேடி படிக்கலானேன். தமிழின் மொழிபெயர்ப்பு சக்திகளில் “நிர்மால்யா” பெருமை அளிக்கும் பெயராக அமைந்திருக்கிறது என்றால் மிகையில்லை. “மொழிபெயர்ப்பின் அகவழி” என்பதன் ஒத்த சொல்லும் – நிர்மால்யா தான். மலையாள இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பலருக்கு இவரே ஒரு சிறந்த முன்னோடியாகவும் அமைந்திருக்கிறார்.
ஒரு வாசகராக, எழுத்தாளராக இவரைக் கொண்டாடுவது நன்றியறிவிக்கும் செயலே ஆகும். முப்பதாண்டுகளுக்கு மேலாக இலக்கியத்தில் செயலாற்றும் ஒரு சிறந்த இலக்கியக்காரரை கெளரவிப்பது ஆகுதிக்கு மன நிறைவை அளிக்கிறது.
இந்த ஒருநாள் கருத்தரங்கில் தமிழ் இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அவரது மொழிபெயர்ப்பில் வெளியான புத்தகங்கள் சில தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவரால் எழுதப்பட்ட மகாத்மா அய்யன்காளி (வாழ்க்கை வரலாறு) நூலும் இந்த அரங்கத்தில் உரையாடப்படவுள்ளது. அனைவரும் வருக! ஆகுதி உங்களை அன்புடன் வரவேற்கிறது.
நன்றி.
அகரமுதல்வன்