அகரமுதல்வனின் முந்தைய படைப்பான ‘மாபெரும் தாய்’ நூல் குறித்து விமர்சனம் எழுதியபோது, வெறும் மரண ஓலங்களையும் , வாதைகளையும்,மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருபத்திலிருந்து, ஒரு சிறிய வெளிச்சம் நோக்கி நகர்வதை பற்றி பேசத்தொடங்கி இருக்கிறார், அது மிகுந்த ஆசுவாசத்தையும் , நம்பிக்கையையும் தருகிறது என்று குறிப்பிட்டு இருந்தேன்.
அவருடைய அடுத்த தொகுப்பான ‘போதமும் காணாத போதம்’ எனும் இந்த நூலில், போருக்கு பின்னான வாழ்வை, மறு குடியமர்த்தலை , மெதுவாக தலை எடுக்கும் மனிதர்களை காட்டியிருக்கிறார். எனினும் அவர்களின் நினைவலைகள் முழுவதும் தோட்டாக்களின் காயங்களும் , இழந்த அனைத்திற்குமான பொருமல்களும் , ஆதங்கங்களும் நிரம்பி வழிகின்றன.
இந்த தொகுப்பில் தெய்வங்களும் , மாண்டோரும், திரும்பி வந்து ஸ்தூலமாக உலவுவதும், சன்னதம் வந்தோருடன் உரையாடுவதும் என , எரிந்து அழிந்து போன வாழ்வை மீட்க மனிதர்கள் அமானுஷ்யங்களை நம்பியும் , சார்ந்தும், சிறிது சிறிதாக கட்டமைக்கின்றனர். சிறு தெய்வங்களையும், மாண்டோரின் ஆற்றலையும் துணைக்கு அழைத்துக்கொள்வது எல்லா மனிதர்களுக்கும் ஒரு நம்பிக்கையையும் , மேற்கொண்டு வாழ்வை அமைத்துக்கொள்வதற்கான உத்திரவாதத்தையும் அளிக்கிறது, ஆகவே கதைகள் நெடுகிலும் தெய்வங்கள் வந்து காக்கிறது , துணை நிற்கிறது, அருள் சொல்கிறது. கோவில் சிலையை திருடும் திருடனுக்கும் அடைக்கலம் தருகிறது. மாண்டோர் மாற்று உடல்களில் புகுந்து நீர் அருந்துகிறார்கள் , காதல்மொழி பேசி புணர்கிறார்கள், சூட்சுமமாக வந்து காக்கிறார்கள்.
போர்ச்சுழலை கண்டும் கேட்டும் ,பாதிக்கப்பட்டும், வாழ்ந்து, நொந்து மீண்ட அடுத்த தலைமுறைக்கும் , எப்படியோ உயிர் தப்பிய முந்தைய தலைமுறைக்கும் , நினைவுகளில் பதிந்திருப்பது போரெனும் கோர தாண்டவம் மட்டுமே, ஆகவே மனப்பிறழ்வின் எல்லையை தொட்டவண்ணம் உள்ளனர், முழுவதுமாக பிறழ்ந்து விடாது இருக்கவே , மேலே சொன்ன தெய்வங்களும் , மாண்டோரின் ஆற்றலும் இவர்களுக்கு தேவையாகவுள்ளது. இந்த இரண்டிலும் நம்பிக்கை இல்லாதோர் இன்னும் அடர்ந்த இருளில் இருக்கவே வாய்ப்புள்ளது.
போரின் உக்கிரமான எந்த நிகழ்வும் அதன் அரசியலும், அங்கிருந்த மனிதர்களும், அவர்தம் அன்றாடமும் தெரியாத , மற்ற தேசத்தில் வாழும் இன்றைய தலைமுறைக்கு இந்த நூல் முக்கியமான ஒன்றை சொல்கிறது. ‘நம் வாழ்வு இப்படியும் இருந்தது’- என்பதே அந்த செய்தி. இதன் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாத தலைமுறையாக, எந்த விதத்திலும் தங்கள் வாழ்வோடு பொருத்திப்பார்த்துக்கொள்ள முடியாதவர்களாக, சுக ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கும் மனிதனாக, தொழில் நுட்ப நுகர்வும், பொருளாதார மேன்மையும் கொண்ட இளைஞனாக உலகம் முழுவதும் அந்த இனத்தின் சுவடுகள் பரவி இருக்கலாம், ஆனால் அவர்களின் ஆழம் அறியும் ஒன்றை பற்றி இந்த நூல் பேசுகிறது.
தியாகங்கள் எல்லாம் ஞாபங்களாக மட்டுமே எஞ்சுவதில்லை அவை தலைமுறைகளின் சித்தத்தில் ஆழ் மனதில் எங்கோ ஒரு விதையை பதியம் செய்கிறது. அது நம்பிக்கைக்கு இட்டுச்செல்கிறது. இந்த கதைகளில் வரும் மனிதர்களின் நம்பிக்கை அத்தகையது. ஒரு கதையில் காமம் கொண்டு நம்பிக்கை பிறக்கிறது. மற்றொன்றில் தெய்வச்சிலை திருடனுக்கு தன் குழந்தையில் இருந்து நம்பிக்கை பிறக்கிறது. வேறொன்றில், இறந்து பட்ட காதலி கேட்கும் புல்லாங்குழல் நாளைய நம்பிக்கையை விதைக்கிறது. இப்படி அத்தனை கதைகளிலும் ஏதேனும் ஒரு சிறு நம்பிக்கை கீற்று. இந்த சிறு ஒளி சென்று இன்றைய தலைமுறையை தொடுமெனில், இந்த கதைகள் எழுதப்பட்டதன் நோக்கமும், ஆற்றவேண்டிய கடமையும் நிறைவேறுகிறது. அதை செய்யும் என்றே நாமும் நம்புவோம்.
இழந்த பூமியை மீட்டெடுத்தல் , அரசியல் ஆவேசங்கள் , சூளுரைகள், சரி தவறுகள் , போர் நாட்டங்கள்,என எந்த உணர்ச்சிகரமான பாவலாக்களும் இல்லாமல் நம்மோடு பேருந்தில் பயணம் செய்யும் , பக்கத்தில் அமர்ந்து தேநீர் அருந்தும் , தினசரி பத்திரிகை வாசிக்கும் சாமானியனை, அவனுடைய அன்றாடத்தை பற்றி பேசுவதாலேயே இந்த கதைகளில், எங்கோ நடந்த போர்க்கதைகள் என்கிற தொனியும் இல்லாமல், என் இனத்திற்கு இப்படி நடந்து விட்டதேயென்று நிக்கிற போலி ஆவேசமும் இல்லாமல், கதைகளை ஒரு தேர்ந்த கதைசொல்லியிடுமிருந்து கேட்பது போல வாசிக்க முடிகிறது. முதல் கதையில் தொடங்கி இறுதி வரை, ஒரு பாணன் ஒவ்வொரு கதையாக சொல்லிச்செல்கிறான், நாம் காதுகளாக அமர்ந்திருக்கிறோம்.
சமீபத்தில் ஜெயமோகன் அவர்கள் ஜெயகாந்தனை சந்தித்த ஒரு நிகழ்வை சொல்லி , இங்கிருக்கும் அனைத்தும் ‘ பஸ்மம் ‘ சாம்பலாகவே, மாறப்போகிறது எனக்கூறி , சைவ சித்தாந்தத்தில் அதன் படிமத்தை பற்றி பேசியிருப்பார். இந்த கதைகளை படித்த பின் மேலும் ஒரு படிமம் தோன்றியது. பிரளயம் முடிந்து பூமி முதல் ஆகாயம் வரை நீரால் நிரம்ப , அனைத்தும் அடங்கிய பின், ஆலிலையில் அழகிய குழந்தையென திருமால் அவதரிக்கிறான். ருத்ரன் அனைத்தையும் ‘பஸ்மம்’ என ஆக்குகிறான் , அதில் நீர் நிரப்பி பிரளயம் உண்டாக்கி, தானே ஒரு விதையென ஆலிலையில் மிதந்து வருகிறான் திருமால்.
போர் எனும் பிரளயத்திற்கு பின் மறுவாழ்வு என குடிகள் மெதுவாக முளைக்கின்றன, மனதில் ஆறாத வடுக்களுடன் , காயங்களுடன், துன்ப நினைவுகளுடன், ஆலிலையில் மிதக்கும் சிறு நோய்மையுற்ற திருமால்களுக்கு இன்னும் சில தலைமுறைகளில் பூரண சுக வாழ்வு அமையட்டும். ன் மரபிலக்கியத்தில் பரிச்சயமிக்க அகர முதல்வனின் ஒவ்வொரு படைப்புமே முந்தைய படைப்பை தாண்டி சென்று தனக்கான புதிய மைல்கல்களை தாமே நிறுவிக்கொள்பவை. இந்த நூலும் அகரமுதல்வன் தாண்டவேண்டிய புதிய நீண்ட நெடுங்கோடு ஒன்றை நிறுவியிருக்கிறது. அவர் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்களும், அன்பும்.