மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை நீங்கள் அவனுக்கு காட்டினால், அவன் மேம்படுவான் என்றார் எழுத்தாளர் அன்டன் செக்கோவ். இந்த நேர்மறையான சிந்தனை படைப்பாளிக்கு மட்டுமே வரக்கூடியது. மனித குலத்தை சீர்படுத்தும் வலிமை உலகளாவிய நீதி அமைப்புக்களை விடவும் கலைப்படைப்புக்களுக்கு அதிகம் இருப்பதாக நம்புகிறவன் நான்.
வேடிக்கையாகச் சொன்னால், விக்டர் பிராங்கிளின் எழுதிய “Man’s Search For Meaning” – வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு ஹிட்லருக்கு கிடைத்திருந்தால் தான் நிகழ்த்திய மானுடப்படுகொலையை எண்ணி வெட்கித்துப் போயிருக்கவும் ஒட்டுமொத்த மானுடத்திரளின் முன்நின்று தன்னுடைய இறுதிக்கணங்களின் மன்னிப்பை கேட்டிருக்கவும் கூடுமென நம்புகிறேன். ஏனெனில் அந்தப்படைப்பின் ஆழமும் கொதிப்பும் அப்படியானது.
பாதிக்கப்பட்டவர் தன்னுடைய அனுபவத்தை சட்ட அமைப்புக்களின் முன் வாக்குமூலம் அளிப்பது போலில்லை, பாதிக்கப்பட்ட தரப்பிலுள்ள படைப்பாளியின் கலைப்படைப்பு. அது எல்லாச்சுவர்களையும் தகர்த்தெறிந்து எல்லோருக்குமான காற்றாக மானுட வெளியில் கலந்து நிற்கிறது. தனக்கும் தனது தரப்பினருக்கும் நிகழ்ந்த அவல அனுபவத்தை ஒட்டுமொத்த மானுடத்திரளின் அனுபவமாக மாற்றுகிறது.
இப்படியான அனுபவமாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்களே மாபெரும் திரைக் கலைஞர்களாக உலகு முழுதும் கொண்டாடப்படுகிறார்கள். Steven Spielberg, Otto Preminger, Don Siegel, Oliver Stone, Stanley Kubrick என்று நாம் பார்த்துப் பார்த்து வியப்பவர்கள் அனைவரும் தமது யூத துயரவாழ்வை ஒட்டுமொத்த மனித துக்கமாக மாற்றி கலைவழியாக வெற்றி கண்டவர்கள்.
இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ்ச் சூழலில் வியத்தகு கலைஞன். வாழை திரைப்படம் தமிழ் ரசிகர்களை உறையச் செய்திருக்கிறது. அவருடைய “பரியேறும் பெருமாள்” கலைப்படைப்பு உருவாக்கிய அதிர்வும், உரையாடலும் மாரி செல்வராஜ் என்கிற படைப்பாளியின் வருகைப் பாடல் மட்டுமே. ஒருவகை அறிவிப்பு பிரகடனம் என்று சொல்லலாம். பாதிக்கப்பட்ட தரப்பின் கதைகளைச் சொல்லும் போது தார்மீகமான கோபமும் ஆற்றாமையும் மேலோங்கி கலையின் ஆதாரத்தையும் அழகையும் குன்றச் செய்துவிடும் உதாரணங்கள் தமிழில் நிறையவே உண்டு.
ஆனால் மாரி செல்வராஜ் கலையின் அடிப்படையானவற்றை மட்டுமல்ல, உச்சமானவற்றையும் அறிந்திருக்கிறார். வாழை திரைப்படத்தில் மிக முக்கியமானது – நேர்கோட்டுக்கு மாறான கதை கூறல் முறை. சிவனனைந்தனுடைய கதறலுடன் ஆரம்பிக்கிற திரைப்படத்தின் மீது, ஒருவிதமான தீவிரத்தன்மை உருவாகி விடுகிறது. அது கடந்தகாலத்தின் அன்றாட வாழ்க்கைக்குள் சென்றாலும், இந்தச் சிறுவனின் கதறல் யாருக்கானது? யாருக்கு அவலம் நிகழ்ந்ததோ என்ற பதகளிப்பு தோன்றிவிடுகிறது.
கையில் கயிற்றுடன் நின்று அலறுகிற சிறுவன் உயரமான பாதையில் ஓடிச் செல்வது எதற்காக? ஓடும் கால்கள், கலங்கி நிற்கும் கண்கள், யாரையோ தேடி நிற்கும் தீனமான கூக்குரல் இவையாவையும் சுமந்தபடிதான் வாழையின் களத்திற்குள் நம்மால் செல்ல முடிகிறது.
எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில் “ஆழமான அனுபவங்கள் ஆழமான படைப்புகளுக்கு வழிகோலும் உத்தரவாதமில்லை. ஆனால் படைப்புக்குள் ஆழங்கள் இருக்குமென்றால் அவற்றின் பின் ஆழமான அனுபவங்களும் இருந்தாகவேண்டும். இந்த அனுபவ ஆழம் இல்லையென்றால் கற்பனை பயன் இல்லை. அனுபவ ஆழம் இருக்கும் போது சாராம்சத்தைக் கண்டடைய உபயோகப்படும் கற்பனை, அனுபவ ஆழம் இல்லாத நிலையில் மேலோட்டமான பரப்பில் பரந்து தத்தளிக்கிறது” என்கிறார்.
வாழை திரைப்படம் ஆழமான அனுபவங்களின் வழியாக பன்மடங்கு ஆழமான ஒரு படைப்பாகியிருக்கிறது.
“தன் பின்னணியைச் சார்ந்து இயங்குவது படைப்பாளிக்கு இயற்கையாக இருப்பது போலவே தன் பின்னணியைத் தாண்டும் சவாலை மேற்கொள்வதும் படைப்பாளிக்குரிய இயற்கைகளில் ஒன்றாகவே இருக்கிறது.” என்ற சுந்தர ராமசாமியின் இன்னொரு கூற்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வாழை என்பது இன்றைக்கு ஒரு மனித திரளின் துக்கமாக மாற்றப்பட்டுவிட்டது. வேம்பு அக்காவின் மருதாணி காயாத உள்ளங்கையும், அலறித்துடிக்கும் கனியின் மருதாணி அணிந்த உள்ளங்கையும் மாபெரும் இருளின் முன் அவலத்தின் எஞ்சிய ஞாபகமாக பார்வையாளனிடம் தாக்கம் பெறுகிறது. வல்லிருட்டில் உயிருக்காகப் போராடும் உடல்களை மீட்கத் துணியும் எஞ்சியோர் மீது நீரும், சேறும் கண்ணீரும் அழுகுரலும் பெய்கிறது. கூலிக்காகப் போராடியதால் ராமையாவின் குடிசையில் தீமூட்டிய மிலேச்சர்களுக்கும், பாரவூர்தியில் பயணப்பட வைத்து உயிரைப் பறித்தவர்களுக்கும் ஏதும் வித்தியாசம் இல்லை. வேம்பு, சேகர், கனி ஆகியோரின் ஆசையாலும், உதவியாலும் அதிஸ்டவசமாக உயிர் தப்பிய சிவனனைந்தன் ஊழியின் சாட்சியாக மிஞ்சி நிற்கிறான்.
பல்வேறு உண்மைத் தருணங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கதை சொல்லியின் அனுபவமாக மட்டும் மிஞ்சவில்லை. அது ஒரு பெருந்திரளின் முன்பாக வைக்கப்பட்ட பங்குச் சோறாக மாற்றப்பட்டிருக்கிறது. வேற்றுமைகளின் வழியாக நிகழ்த்தப்பட்ட அவலங்களை ஒரு கலைப்படைப்பு பதிவு செய்து மானுட மேன்மை என்கிற ஒற்றுமைக்கு திரளை அழைத்துவருவதே வாழை படத்தின் அழகியல். அந்த வகையில் மாரி செல்வராஜ் ஒரு மகத்தான கலைஞன்.
வாழை படத்திலுள்ள படிமங்கள் குறியீடுகள் குறித்து சிவனனைந்தன் கதாபாத்திரம் வழியாகவே நிறையவற்றைக் குறிப்பிட முடியும். பசியில் தவித்த அவன், வாழை மரத்தில் ஒரு கனியைத் தேடுகிற சிறு அவகாசம் மனம் பதபதைக்கச் செய்கிறது. அண்ணாந்து பார்ப்பது என்கிற ஒரு சொல்லின் பின்னே உள்ள ஆற்றாமையை அறிய நேர்கிறது. மாடு தொலைந்து போனதும் தெய்வத்தின் முன்னே நின்று, வேண்டுகிற அவனது நமபிக்கை, கனி வந்து தகவலைச் சொன்னதும் முகத்தில் நேர்கிற அச்சம்.
வாழைப்பழத்தை தின்றதால் யார் வீட்டு பழத்தை யார் உண்பது என்று கேட்டு அடிக்கும், ஒரு பாதகன் முன் சிவனனைந்தன் விழுந்து புரள்வதும் ஒரு கட்டத்தில் அவனை வீழ்த்திவிட்டு ஓடுவதும் கோலியாத்தை வீழ்த்திய தாவீதுவை நினைவுக்கு கொண்டு வருகிறது. பசியின் நிமித்தம் அலையும் சிவனனைந்தனின் ஒவ்வொரு காட்சியும் காய் சுமக்கச் செல்வதற்கு ஒப்பானது.
நீங்கள் எப்போதாவது பசியுடன் இருந்திருக்கிறீர்களா? ஒரு வேளை சோற்றுக்கு அல்லற்படுகிற வாழ்க்கை குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்றெல்லாம் நேரடிக் கேள்விகள் எழுப்பவில்லை. எந்த வகையிலும் எக்கணத்திலும் அதுபோன்றதொரு பிரச்சார நெடியையோ, பரிவையோ கோராத ஒரு அசலான படைப்பு இது. வீடு தோறும் பிணங்கள் கிடக்க பசியின் இருளில் அலைகிற சிவனனைந்தனின் கண்கள் துக்கத்தில் அழவில்லை. அவனுக்குள் இந்தத் துக்கத்தீ பற்றி மூளவேயில்லை.
சேகருக்கு என்ன நடந்தது? அவன் ஏன் இப்படிக் கிடக்கிறான்? என்ற கேள்விகள் மூலம் அவனுக்குள் நிகழ்வது வேறொன்று என்று தெரிகிறது. தெய்வங்கள் வேடிக்கை பார்க்கின்றன. இசக்கி தன்னுடைய குழந்தையை ஏந்தியபடி எதற்காக காத்திருக்கிறாள். அவளது சினம் மங்கிப்போனது? பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து எழுகிறவர்கள் அவர்களது தெய்வங்களையும் விசாரணை செய்யத் துணிகிறார்கள். வாழை அதனையும் செய்திருக்கிறது.
உயரத்திலிருந்து படம்பிடிக்கப்பட்ட வாழையின் பசுமை அடர்ந்த அந்த வெளியை ரசிக்க முடியவில்லை. பச்சைப் பசேல் என்ற வெளி என்கிற ஒரு சித்திரம் மனதுக்குள் எழவில்லை. தன்னுடைய பிள்ளையை கட்டாயமாக வேலைக்கு அனுப்பிவிட்டு அடைப்புக்குள் இருக்கும் கோழியையும், குஞ்சுகளையும் திறந்துவிடுகிற தாய் அந்நேரத்தில் யார்? அவளுடைய இன்னல்கள், மனச்சுமைகள் சொல்லிமாளாதவை. இறுதிக் காட்சியில் ஒரு வாய் சோறு சாப்பிடுவதற்கு கூட பிள்ளையை அனுமதிக்காத பாவி ஆகிவிட்டேன் என்று தலைவிரிகோலமாக கதறி அழுகிறவள் சிவனனைந்தனுடைய தாய் அல்ல. நான் ஏற்கனவே கூறிய மானுடத்திரளின் குற்றவுணர்வு. இப்படியான அவலத்தை வேடிக்கை பார்த்த நிகழ்த்திய ஒரு குரூர காலத்தின் அழுகுரல் அது. கண்ணன் வாடே…அம்மா அடிக்க மாட்டங்க என்று சொல்லியும் அவனால் நம்பமுடியாமல் ஓடுகிற காட்சி….இந்த சமூகத்தின் மீதான அவனது அச்சம் அன்றி வேறில்லை.
திரைப்படத்திலுள்ள மிக முக்கியமானதொரு சித்திரம் என் நெஞ்சில் இருந்து அகல மறுக்கிறது. கிராமத்தின் ஒட்டுமொத்தமான அழுகுரல்களுக்குள் மத்தியில் ஒரு சடலத்தின் முன்பாக பெண்ணொருத்தியின் மடியில் அமர்ந்திருக்கும் சிறுவன் ஒருவன் கையில் கனிந்த வாழைப் பழத்தோடு அமர்ந்திருக்கிறான். இத்தனை அழுகுரல்களால், மரணங்களால், கனிந்த ஒரு வாழைக் கனி அது. அந்தச் சிறுவன் ஏந்தி நிற்பது கனியை அல்ல. ஒரு காலத்தின், நினைவின் ஊழியை என்றே சொல்லத்தோன்றிற்று.
சில வருடங்களுக்கு முன்பாக மாரி செல்வராஜ் அவர்கள் வாழை கதையை என்னிடம் சொல்லி முடித்ததும் Cary Joji Fukunaga இயக்கிய Beasts of No Nation என்கிற திரைப்படத்திற்கு சற்றும் குறைவில்லாதவொரு திரைப்படமாக வாழையைக் கூற முடியும் என்றேன். படம் பார்த்ததற்கு பிறகும் அந்த ஒப்பீட்டில் ஒரு மாற்றமும் இல்லை. இனிமேல் வாழையைப் போல Beasts of No Nation என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.