நேர்கண்டவர் – அந்தோனி அஜய்
அதிகமாகத் தொன்மங்களைப் பேசும் “மாபெரும் தாய்” சிறுகதைத் தொகுப்பு, சமகால ஈழப்படைப்புக்களிலிருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறது?
ஈழப்படைப்புக்களுக்கென்று சில பொதுவான தன்மைகள் இருக்கின்றன. இனவன்முறையும் போராட்டமும் போரும் பேரழிவுச் சித்திரங்களும் அவற்றின் நீட்சியான கதையாடல்களும் பொதுத்தன்மையை ஏற்படுத்துகின்றன. ஆனால் “மாபெரும் தாய்” தொகுப்பிலுள்ள கதைகள் இவற்றை தொன்ம உரையாடல்களாக மாற்ற விளைகின்றன. திக்கற்று காலூன்ற நிலமற்றுப் போயிருக்கும் தீரமிக்க இனக்கூட்டமொன்றின் வழிபாடுகளும், நாட்டார் மரபுகளும் புனைவின் வழியாக மீளுருவாக்கப்படவேண்டுமென்கிற அவா என்னிடமிருக்கிறது. அதன் வெளிப்பாடே இத்தொகுப்பு. தொன்மம் என்பது மாயத்தன்மை மட்டும் நிரம்பியதல்ல. அதற்கொரு வேர்ப்பிடிப்பான அரசியல் முகமும் இருக்கிறது. இத்தொகுப்பு ஈழ இலக்கியப் பரப்பில் மாறுபட்ட திசைவெளிகளை இனங்காட்டி, புனைவிலக்கியத்தின் வழியாக ஒரு பெருங்கதையாடலை சாட்சிப்படுத்துகிறது என்பேன்.
“முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை” நினைவுகள், துயரங்கள் இத்தனையாண்டுகளில் எவ்வாறான படிமங்களாய் மனதில் தங்கியுள்ளன?
ஒரு கடலின் முன்னே மனிதவுடல்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன. கூடாரங்களில் போர்க்காயமுற்ற குழந்தைகள் உயிருக்குப் போராடுகின்றனர். காகங்கள் கூட்டமாய்க் கரைகின்றன. மாமிசம் உண்ணும் காகங்களைப் போல போர்விமானங்கள் தரைதொட்டு தாக்குதல் செய்கின்றன. போராளிகள் யுத்தம் செய்கின்றனர். மானுட நாகரீகம் பற்றிய கவலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு இல்லை. அவர்கள் கருணையற்ற உலகின் சம்மதத்தோடு எங்கள் மீது ஆயுதங்களை பொழிந்தனர். நிகழ்வது இனப்படுகொலை என்பதற்கு சாட்சியாக கடலும் சூரியனும், பகலும் இரவும், நிலவும் வானும் இருந்தன. ஆனபோதிலும் நாம் எவராலும் காப்பாற்றப்படாமல் கொல்லப்பட்டோம். அவமானப்படுத்தப்பட்டோம். பிணக்காட்டின் மீது நின்றுகொண்டு தமிழால் கூவி அழைத்தோம். மானுடம் தத்தளிக்கும் குரலைக் கேட்கும் செவிகள் யாரிடமும் அப்போதுமில்லை. இப்போதுமில்லை. இனப்படுகொலை துயரங்கள் நினைவுகளாய் அல்ல. அவை இப்போதும் என்னுள் பற்றியெரிந்தபடியிருக்குமொரு ஊழி நெருப்பு என்றால் உங்களால் நம்பமுடியாது.
“மாபெரும் தாய்” தொகுப்பில் வருகிற பெண் கதாபாத்திரங்கள் வரலாற்றை உணர்த்துபவர்களாக, கடத்துபவர்களாக இருக்கிறார்களே?
பெண்கள்தான் வரலாற்றுக்கு உரிமையுள்ளவர்கள். தாய்நிலத்தின் கதைகளையும், சடங்குகளையும் நான் பெண்கள் வழியே அறிந்து கொண்டேன். என்னுடைய அம்மம்மாவை (ஆச்சி) நானொரு வரலாற்றுப் பொக்கிஷமாகவே பார்த்தேன். அவளது ரங்குப்பெட்டிக்குள் இருக்கும் திருநீற்று வாசனையில் இருந்து எல்லாமும் எனக்கு வரலாறு தான். அதுவும் காரணமாக இருக்கலாம்.
தேவாரம், திருவாசகம் போன்ற சைவ இலக்கியப் பின்னணி, உங்கள் படைப்புச் செயற்பாட்டில் எத்தகைய பாதிப்பை நிகழ்த்துகின்றன?
எனது படைப்பூக்கத்தின் சொற்களஞ்சியம் பெருமளவில் சைவ இலக்கியங்களிலேயே இருக்கின்றன. அவை தருகிற ஊக்கமும் மொழியூற்றும் வேறெதிலும் என்னால் பெறமுடியாதவை. தமிழ் மொழிக்கு நல்லூழ் பலவுண்டு. அவற்றுள் நான் பெரிதும் மதிப்பது பதிகங்களைத்தான். இப்போது திருநாவுக்கரசரின் ஒரு பதிகம் நினைவில் வருகிறது.
வாயே வாழ்த்துகண்டாய் – மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்.
இதன் பொருள் இப்படியாக விரிகிறது. வாயே! மதயானையின் தோலைப் போர்த்துப் பேய்கள் வாழும் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் பெருமானை நீ எப்போதும் வாழ்த்துவாயாக!
இந்தியச் சூழலில், ஈழத்தமிழர் பின்னணியைக் கொண்டு நிறையத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகின்றன. அவை தொடர்பாக நிறைய விவாதங்களும் எழுகின்றன. உங்கள் நிலைப்பாடு என்ன?
இந்தியச் சூழலில் ஈழத்தமிழர் பிரச்னை எவ்வாறு அரசியல் ரீதியாக தவறாகக் கையாளப்படுகிறதோ அதைவிடவும் மோசமாகவே கலைரீதியாகவும் அணுகப்படுகிறது. அவை பற்றிய விவாதங்கள் இன்னும் சலிப்பூட்டக்கூடிய வகையில் நிகழ்கின்றன. அந்தகன் ஒருவன் யானையைத் தடவும் கதையைப் போல ஈழத்தை தொடுகின்றனர். இந்த விபத்துக்களைக் கடந்தும் திரைக்கலையில் ஈழத்தமிழர் வாழ்வியல் அழகுற, நேர்த்தியாக எதிர்காலங்களில் முன்னிறுத்தப்படும் என்பதே எனது நம்பிக்கை.
“மன்னிப்பின் ஊடுருவல்” என்ற உங்கள் கதையில் போராளி ஒருவர், துரோகியாக அடையாளம் காணப்பட்ட பெண்ணொருவரைத் திருமணம் செய்கிறாரே?
இதில் ஆச்சரியப்படவும், கேள்வி எழுப்பவும் என்ன இருக்கிறது. புலம்பெயர் வாழ்வில் அடையாளங்கள் அழிந்து, அகதி என்கிற ஒற்றை நிலையோடு வாழும் இரண்டு ஈழத்தமிழர்களே அந்தக் கதாபாத்திரங்கள். ஆனால் அவர்களின் கடந்த காலம் வேறு தர்க்கங்களாலும், அர்த்தங்களாலும் வழிநடத்தப்பட்டது. அந்தக் கதையில் வருகிற ஆண் ஒரு போராளியாக இருந்தவன். பெண் துரோகியாக இருந்தவள். துரோகியை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இருந்த அதே போராளி இப்போதில்லை. அவன் வீரயுகம் வீழ்ச்சியடைந்த பின்னர் மதுபானக்கடையை விட்டு வெளியே வரும் சாதாரண லெளகீகன். எல்லாவற்றுக்கும் மேல் இந்தக் கதையாடல் ஈழத்தமிழரின் அரசியல் வாழ்வில் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. நான் எல்லாவற்றுக்கும் அப்பால் மானுடத்தை நேசிப்பவன். தியாகத்துக்கும், துரோகத்துக்கும் அப்பால் மனித உணர்வு இருப்பதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.
உங்கள் கதைகள் தொன்மங்களின் வழி நடப்பது ஏன்?
எனக்குள் இரண்டாயிரம் ஆண்டுகால குருதி ஓடிக்கொண்டிருக்கிறது. எனது மொழியின் உக்கிரத்தை நான் சுமந்திருக்கிறேன். என்னுடைய குலப்பாடல் மரங்களையும், திசைகளையும், மண்ணையும், மனிதர்களையும் தாளக்கட்டுகளாக கொண்டிருக்கின்றன. எனது தாயின் ஆதிக்குகையில் இருந்து நான் வெளியேறும் போதே, அவள் தனது குருதியாய்க் கிடக்கும் என்னை முத்தமிடுகிறாள். “தொன்மம்” என்பது வேறொன்றுமில்லை, நானும் தான் என்ற உணர்வே என்னை வழிநடத்துகிறது.
நவீன இலக்கியத்தில் யாருடைய நீட்சியாக உங்களைப் பார்க்கிறீர்கள்?
நான் யாரினதும் நீட்சியுமில்லை. தான்தோன்றியுமில்லை. இந்த மொழியில் எழுதிய பலப்பல ஆளுமைகளின் படைப்புக்களை வாசித்திருக்கிறேன். வாசிக்கிறேன். நிறைய ஆசான்களை இனங்கண்டிருக்கிறேன். அவர்கள் நடந்த பாதையில், நானுமோர் பாதசாரி.
“கடவுள்,பிசாசு,நிலம்” என்கிற உங்களின் தொடர் ஜூனியர் விகடன் இதழில் வெளியாகிறதே, அது குறித்து சொல்லுங்கள்?
ஜூனியர் விகடன் இதழில் ஒரு தொடரை எழுதும் வாய்ப்புக் கிடைத்தமை எனது நல்லூழ். ஏனெனில் மாபெரும் முன்னோடிகள் பலர் இந்தப் பத்திரிக்கையில் எழுதிய படைப்புக்கள் மகத்துவமானவை. “கடவுள்,பிசாசு, நிலம்” தொடர் இதுவரை அதிகமாய் பேசப்படாத போர் நிறுத்தக் காலத்தை முன்னிறுத்துகிறது. ஈழர் இலக்கியமெனில் அது போர்க்கால கதைகள் தானே என்கிற முன்முடிவுகளுக்கு இத்தொடர் ஒரு பதிலளிப்பு. ஒரு சிறுவனின் பார்வையில் அவனது சுற்றமும், சூழலும் எப்படியான பயங்கரத்தைச் சுமந்திருந்தது என்பதை சொல்ல விளைகிறேன்.
நீங்கள் சமீபத்தில் வாசித்து வியந்த கவிதையொன்றைச் சொல்ல முடியுமா?
மலையாளக்கவிஞர் குஞ்ஞுண்ணி-மாஷ் அவர்களின் கவிதையை மறைந்த கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா அவர்கள் மொழிபெயர்த்திருந்தார். அதிலொரு கவிதை.
“நானொரு பூ
சிறிய பூ
எல்லோருக்குமான பூ
நானொரு தீ
பெரிய தீ
எனக்கு மட்டுமான தீ”.
நன்றி – https://www.newssensetn.com/cinema/writer-akaramuthalvan-interview