விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் இரண்டாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டிற்கான விருதினைப் பெற்றவர் எழுத்தாளர் இரா. முருகன். அவரது படைப்புகளின் முக்கியமான பங்களிப்பை வெளிப்படுத்தும் ஒரு ஆவணப்படத்தினை இயக்கும் வாய்ப்பினை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எனக்கு வழங்கினார். “A GARDEN OF SHADOWS” என்ற ஆவணப்படத்தினை இயக்கியிருந்தேன்.

தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்படங்களுக்கென பொதுவான பாணிகளே உண்டு. பூங்காங்கக்கள், நடைபாதைகள், மொட்டைமாடிகள், பாழடைந்து பொருக்கு உதிரும் பாசிச்சுவர்கள் என அங்குதான் படம்பிடிக்க வேண்டுமென ஒரு நினைப்பும் உண்டு. சம்பந்தப்பட்டவரைப் பற்றி ஏனைய எழுத்தாளர்கள் தமது அபிப்பிராயங்களை முன்வைப்பதையே படம்பிடித்து தொகுத்து வழங்குவார்கள். என்னளவில் அவற்றை ஆவணப்படம் என்று அழைக்கவியலாது.

இன்று உலகளவில் தயாரிக்கப்படும் ஆவணப்படங்கள் பெரிய பொருட்செலவிலான  திரைப்படங்களுக்கு மேலான கவனங்களைப் பெறுகின்றன. எழுத்தாளன் குறித்த ஆவணப்படத்தில் மரத்திலிருந்து இலை விழுவதையும், சருகுகள் மீது நிழல் விழுவதையும் காட்டி, அந்த எழுத்தாளனை வழிநெடுக அழைத்துச் செல்வது இல்லையென்ற தீர்மானம் என்னிடமிருந்தது. ஆகவே எனக்கு நானே வரித்துக் கொண்ட முதல் சவால் இதுதான். அப்படியெனில் அடுத்து என்ன?

எழுத்தாளர் இரா. முருகன் அவர்களை முதன்முறையாக நண்பர்களோடு சந்திக்கச் சென்றேன். அவருடைய உடல் நிலையின் தீவிரத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆகவே அவரோடு ஒரு மணிநேரத்துக்கும் குறைவாக உரையாடி முடித்து, ஆவணப்படத்திற்கான படப்பிடிப்பை எப்போது நடத்தலாம் என நீங்களே சொல்லுங்கள் என கூறிவிட்டு வந்தேன். இடையிடையே தொலைபேசி உரையாடல்கள். இரா. முருகன் அவர்கள் நான் கூறிய ஒரு புதுமுறையைப் பாராட்டினார். அவரது கதாபாத்திரங்களான பனியன் சகோதரர்களை முன்வைத்து எழுதிய திரைக்கதையைக் கூறினேன். ஆர்வமாக இருக்கிறது. புதிதாக இருக்கிறது எனப் பாராட்டினார்.

இரா. முருகன் அவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது சொந்தவூருக்கு செல்லாமல் காஞ்சிபுரத்தை ஒட்டியுள்ள சிறிய கிராமத்தை தேர்வு செய்தேன். அங்குள்ள ஆலயத்தின் பின்புறத்திலுள்ள குளத்தில் வைத்து இரா. முருகன் அவர்களை படம்பிடிக்க எண்ணினேன். வழி இணைய இதழின் ஆசிரியர், எழுத்தாளர் இளம்பரிதி உட்பட என்னுடைய நண்பர்களோடு இடம் பார்க்க பயணப்பட்டேன். இடங்களை உறுதி செய்துகொண்டோம். அங்குள்ள கட்டைக் கூத்துப் பள்ளிக்குச் சென்றும் இடம் பார்த்தோம். கலையை வளர்க்கும் வளாகத்தில் நிலவொழுகும் இரவில் நின்று ஆவணப்படத்தின் காட்சிகளை ஓட்டிப்பார்த்தேன். காஞ்சிபுரத்தில் படம் பிடித்துவிடலாம் என திட்டமிட்டு உறுதி செய்து கொண்டோம்.

சிறந்த ஒளிப்பதிவாளர் ஒருவர் கிடைத்தால் மட்டுமே, நான் நினைப்பதை, நினைத்தது போல ஒளியூட்டி ஆக்கித்தருவார் என்று விரும்பினேன். என்னுடைய நண்பரும் திரைப்பட ஒளிப்பதிவாளருமான பிரியேஷ் குருசாமி அவர்களிடம் விஷயத்தைக் கூறினேன். “கண்டிப்பாக பண்ணலாம். எனக்கு ஊதியம் எதுவும் வேண்டாம்” என்றார். பல மொழி திரைப்படங்களிலும், விளம்பரப்படங்களிலும் ஒளிப்பதிவாளராக செயற்படுபவர் பிரியேஷ். என்னுடைய அணுக்க நண்பர். அந்த நட்பின் கை என்னைப் பற்றிக்கொண்டதும் இந்த ஆவணப்படத்தின் சிறந்த தோற்றம் என் கண்முன்னால் காட்சியாகியது. திரைத்துறையில் இதுபோன்ற ஆக்கச் செயல்களுக்கு தமது திறமைகளை அள்ளித்தருவோர் அரிது.

அதன்பிறகு என்னுடைய எண்ணத்திற்கு உரையாடல் எழுதவல்ல ஒருவரைக் கண்டடைய வேண்டும். எழுத்தாளர் இரா. முருகன் அவர்களது படைப்புகளை நிறைவாக வாசித்தும், ஒரு காட்சியை வசனங்களால் கொண்டு நகர்த்தும் அளவுக்கு திறனும் உள்ள இலக்கியக்காரராக இருக்கவேண்டுமென எண்ணினேன். உடனடியாக ஜா.ஜா என்றழைக்கப்படும் ஜா. ராஜகோபாலன் அவர்களை அழைத்துப் பேசினேன். கடுமையான பணி நெருக்கடியில் இருப்பவர். நான் சொன்னவற்றை கேட்டு முடித்து காட்சிகள் ஒவ்வொன்றையும் பிரித்து, அசலான திரைக்கதை ஆசிரியர் போலவே அனுப்பி வைத்தார். வியக்க வைக்கும் எழுத்து. மீண்டும் நேரில் சென்று சந்தித்து எனக்குத் தேவையான சிலவற்றை கேட்டுப் பெற்றேன். ஜா. ஜாவின் பங்களிப்பு இன்றி இந்த ஆவணப்படம் சிறப்பாக நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

ராஜாவுக்கும் சாமானியனுக்கும் இடையே நிகழும் உரையாடல் வழியாக இரா. முருகன் அவர்களின் சரிதத்தை சுருக்கமாகவும், அவரது படைப்புகளில் உள்ள எள்ளலான மொழி வழியாகவே ஒரு நிகழ்த்துக்கலையை உருவாக்க வேண்டுமென விரும்பினேன். ஆலம் விழுதைப் பற்றியாடும் சிறுமியைப் போல மாயத்திற்கும் யதார்த்திற்கும் இடையே அந்தரத்தில் அசைந்து பரவசம் அடையவேண்டுமெனவும் எண்ணினேன். அந்தப் பரவசத்தை அளிக்கும் வல்லமை ஒரு அசலான கூத்துக் கலைஞனுக்கு இருக்கும். எனக்கு கட்டைக்கூத்து கலைஞர் மூர்த்தியை அறிமுகப்படுத்தியது “வழி” இளம்பரிதிதான். மூர்த்திக்கு கேமராவுக்கு முன்நின்று நடித்துப் பெரிய பழக்கம் இல்லை. ஏதோ திரைப்படம் ஒன்றுக்கு அழைக்கப்பட்டு வழமை போல தன்னுடைய உழைப்பை வழங்கியிருக்கிறார். ஆனால் சினிமா அவரை ஏமாற்றி அனுப்பியிருக்கிறது. இந்த ஆவணப்படத்தில் கிட்டத்தட்ட பத்து மணிநேரங்களுக்கு மேலாக அதே வேஷத்தோடு இருந்தார் மூர்த்தி. உண்மையில் அவரது உழைப்பும் அர்ப்பணிப்பும் சகிப்புத்தன்மையும் போற்றுதலுக்குரியது. கட்டைக்கூத்து கலைஞர் மூர்த்திக்கு பெருமளவில் வாய்ப்புக்கள் வரவேண்டும்.

சாமானியனாக நடித்திருக்கும் மிதுன் ருத்ரன் என்னுடைய நண்பர். கூத்துப்பட்டறை ந. முத்துசாமி அவர்களிடம் நடிப்புக்கலை பயின்றவர். பத்தாண்டுகளுக்கு மேலே திரைத்துறையில் சரியான வாய்ப்புக்காக உழைப்பவர். மெஹந்தி சர்க்கஸ் என்கிற திரைப்படத்தில் நாயகனின் நண்பராக நடித்திருக்கிறார். சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர். திரைத்துறையில் தகுந்த வாய்ப்பு வரும்வரை அதற்காக விடாப்பிடியாக உழைப்பவனே வெற்றி காண்பான். மிதுன் வெற்றி காணும் திறனுள்ளவர். இந்த ஆவணப்படத்தில் அவரது முகபாவம் ஒரு சாமானியனின் அப்பாவித்தனத்தை தகுந்தளவில் வெளிப்படுத்தி இருப்பதாக பார்த்த சிலர் அடையாளமாக கூறினார்கள்.

இசையமைத்த ஸ்டீபன் திவாகர் கனவுகளை ஏந்தி நிற்கும் இளைஞன். கொதியும் வலியும் கொண்ட வாழ்க்கைப் பின்னணி கொண்டவர். இசையை ஏந்தி வீதிகள் தோறும் சனங்களை விழித்தெழச் செய்த இசைக்கலைஞனின் மகன். பொருளாதார வலிமை கொண்ட என்னுடைய இரண்டு விளம்பரப்படங்களுக்கு ஏற்கனவே இசையமைத்திருக்கிறார். இந்த ஆவணப்படத்தில் அவரது பின்னணி இசை ஒருவகையான பக்குவமான செயலாகவே தோன்றியது. ஆர்மோனியம், உடுக்கு, புல்லாங்குழல், மேற்கத்தேய இசையென அளவு மீறாமல் தருவித்திருந்தார். அவரின்றி அழகும் உணர்வும் இந்த ஆவணப்படத்தில் சேர்ந்திருக்காது.

படத்தொகுப்பாளர் விக்கினேஷ் ராஜா. தன்னுடைய பாணியில் கதைகளைச் சொல்ல வேண்டுமென ஆசைப்படும் சரியான தொகுப்பாளர். அவருக்கு இன்னும் தீவிரம் கூடிவரும். இந்த ஆவணப்படத்தின் கதைசொல்லும் முறையை நான் தீர்மானித்த போது சரிப்பட்டு வருமா என்று சந்தேகித்தார். இரண்டு காட்சிகளை அடுக்கிப் பார்த்தப் பின்னர் இதுதான் சரியாகும் என்று இசைவு தெரிவித்தார். கொஞ்சம் கடுமையான பணி. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்துக்கு மேலான காட்சிகளை வெட்டித் தொகுக்க வேண்டியிருந்தது. எதிர்காலத்தில் சிறந்த படத்தொகுப்பாளராக ஆகக்கூடியவர்ன் விக்னேஷ் ராஜா.

இரா. முருகன் அவர்கள் பேசுவதை படம்பிடித்தவர் ஒளிப்பதிவாளர் ராஜேஷ். என்னுடைய சகோதரரும் நண்பரும். மிக விரைவில் அறியப்படும் ஒரு தொழில்நுட்ப கலைஞராக ஆகும் திறன் படைத்தவர். என்னுடைய கடுமையான நேர நெருக்கடிகளை புரிந்து அதற்கு இசைவாக பணியாற்றும் சூதனம் தெரிந்த தம்பி அவர்.

விளம்பர வடிவமைப்பை உருவாக்கி அளித்த சிவா அன்புக்குரியவர். இளந்தலைமுறை கொண்டிருக்கும் நவீன அறிவாற்றலை அவரது துறையில் நிறைத்து வைத்திருக்கிறார். அவருடைய வேலைப்பளுவின் மத்தியில் இதனை சிறப்பாக வடிவமைத்திருந்தார்.

வண்ணக்கலவையை ஆக்கி அளித்தவர் மனோஜ் ஹேமச்சந்தர். என்னுடைய இயக்குனர் தனா அவர்களின் மூலமாகவே இது சாத்தியப்பட்டது. மூன்று நாட்கள் கடுமையான தொடர் வேலை. மனோஜ் வளர்த்து வரக்கூடிய வண்ணக்கலைஞன்.

இந்த ஆவணப்படத்தின் கட்டைக்கூத்து உரையாடல் காட்சியை படம்பிடித்த கொசஸ்தலை ஆறு பாகசாலை என்கிற கிராமத்தின் பகுதியாக இருந்தது. அங்கு உறுதுணையாக இருந்த, சிவனடியார் பாகசாலை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி. எப்போதும் உறுதுணையாக இருக்கும் பச்சையப்பன் அவர்களுக்கும் நன்றி.

“A GARDEN OF SHADOWS” என்று பெயரிடப்பட்டதும் ஆங்கிலத்திலா என்று வியப்படைந்தார்கள். சிலர் அருமையாக இருக்கிறது. நிழல்களின் தோட்டமா என்று கேட்டார்கள். இரா. முருகன் எழுத்தைப் போலவே இருக்கிறது என சிலர் பாராட்டினார்கள். அரசூர் வம்சம் என்றே வைத்துவிடுங்கள் அதுதான் நன்றாக இருக்குமென சிலர் கட்டணமில்லாத ஆலோசனைகள் வழங்கினர்.

மாலையில் ஆற்றின் நடுவே நீரற்றுக் கிடந்த மணல் திட்டில் படம் பிடிக்க ஆரம்பித்தோம். நள்ளிரவு கடந்து போகையில் ஆற்றில் நீர் நிரம்பிக் கொண்டிருந்தது. கால்களில் நதி முட்டியது. எங்கள் இடையில் ஓடும் நதியில் கால் நனைத்து மேடேறினோம். இடையில் ஓடும் நதிக்குள் நின்றபடி “A GARDEN OF SHADOWS” என்ற தலைப்பை நானும் இளம்பரிதியும் முடிவு செய்து கொண்டோம். என்னுடைய உதவி இயக்குனர்களாகவிருந்த அன்பு ஹனீபாவும், விஷாலுக்கும் நன்றி. ஹனீபா படப்பிடிப்புத்தளத்தில் சிறந்த உதவி இயக்குனர்.

ஆவணப்படத்தினைப் பார்த்தவர்கள் பலரும் கடிதங்களின் மூலமும் நேர்ப்பேச்சிலும் பாராட்டுகிறார்கள். எல்லோருக்கும் நன்றி.

 

எல்லாம் செயல்கூடும் என்னாணை யம்பலத்தே

எல்லாம்வல் லான்ற னையே ஏத்து.

  • வள்ளலார்

 

 

Loading
Back To Top