விஷ்ணுபுரம் விருது பெற்ற எழுத்தாளர் இரா. முருகன் அவர்களை சென்னை புத்தகத் திருவிழாவில் சந்தித்தேன். புதிய பொலிவுடனும் உற்சாகத்துடனும் இருந்தார். உடலுக்கு புத்தொளி நிரம்பிய ஆரோக்கியம் திரும்பியிருந்தது. வேக நடைப் போட்டியில் பங்கெடுக்கும் அளவுக்கு உறுதியாக இருந்தார். விருதுக்கு இப்படியொரு மருத்துவ குணமுண்டோ இதுவரை நான் அறிந்திலேன். ஆனால் இரா. முருகன் அவர்களை சந்தித்த கணம் விருதும் ஒரு மருந்துதான், சிகிச்சைதான் என்று நினைத்துக் கொண்டேன்.  அந்த வகையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்குதான் நன்றி சொல்லவேண்டும். ஏனெனில் விருது அறிவிக்கப்பட்டு ஆவணப்பட உருவாக்கத்திற்காக இரா. முருகன் அவர்களைச் சந்திக்க சென்றிருந்தேன். அவருடைய நிரந்தரமான சில உடல் உபாதைகளோடு இருந்தார். ஆவணப்படத்தை எவ்வாறு உருவாக்க எண்ணுகிறேன் என அவருக்கு கூறினேன். கேட்டு முடித்தவுடன் “ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறது. எப்போது படம்பிடிக்கிறோம்” எனக் கேட்டார். அடுத்த வாரம் திட்டமிடுகிறோம் என்று கூறிவிட்டு வந்தேன்.

ஆனால் இரா. முருகன் அவர்களை அவரது சொந்தவூரான சிவங்கைக்கு கூட்டிச் செல்ல முடியாதென நானும் இளம்பரிதி அவர்களும் முடிவு செய்தோம். ஆகவே சிவகங்கையாக காண்பிக்க காஞ்சிபுரத்தின் கிராமப்பகுதியொன்றில் வைத்து படம்பிடிக்க திட்டமிட்டோம். அங்குள்ள ஐயங்கார்குளத்திலும் இரா. முருகன் அவர்களையும் கட்டைக்கூத்து கலைஞரையும் உரையாடும் திரைக்கதை ஒன்றையும் எழுத உத்தேசித்திருந்தேன்.

ஆவணப்பட குழுவோடு சென்று இடங்களைப் பார்த்துவிட்டு வந்திருந்தேன். ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி அவர்கள் வேறொரு மாநிலத்தில் படப்பிடிப்பில் இருந்தார். சென்னை வந்ததும் புகைப்படங்களைக் காண்பித்தேன். அவருக்கும் பிடித்திருந்தது. காஞ்சிபுரத்தில் திட்டமிட்டமைக்கு முழுமுதற் காரணம் இரா. முருகன் அவர்களின் உடல் நிலையே. அவரை காரில் அழைத்துச் சென்று அன்று மாலையிலேயே சென்னைக்கு அழைத்து வந்துவிட முடியுமென எண்ணியிருந்தோம். அதற்கு அவரும் சரியெனவே கூறினார். ஆனால் அடுத்த வாரத்திலேயே அவரது உடல்நிலையில் மேலதிகமாய் ஊக்கம் கெட்டிருந்தது. நான் எதிர்பார்க்காத அளவுக்கு சுகம் அற்றுப் போயிருந்தார். எங்களுடைய திட்டமிடல்கள் அனைத்தும் குழம்பி நின்றன. என்ன செய்வதென யோசித்து விரைவாக முடிவு கண்டோம். இரா. முருகன் அவர்களை வெளியே அழைத்துச் சென்று படம்பிடிப்பதில்லை. அவருடைய உடல் நலம் கொஞ்சம் தேறியதற்கு பிறகு வீட்டில் வைத்தே எடுத்து விடலாம் என திட்டமிட்டோம்.

ஒட்டுமொத்தமாக ஏனைய படப்பிடிப்புக்களை முடித்துவிட்டே இரா. முருகன் அவர்களை மீண்டும் சந்தித்தோம். அப்போது அவர் கொஞ்சம் நலம் திரும்பியிருந்தார். ஆகவே அவரைப் படம்பிடித்தோம். நிறைய பேச விரும்பினார். ஒரு பெருங்கடல் கொந்தளிப்பான காலநிலையில் அலைகளை அள்ளிவருவதைப் போல  தனது நினைவுகளை திரட்டி வந்தார். ஆனால் அது நிஜத்தில் சாத்தியம் ஆகவில்லை. தன்னுடைய புனைவுலகு சார்ந்து நிறையவற்றைப் பேசினார். குரலில் தெளிவு வர ரொம்பவும் சிரமப்பட்டார். அதில் கவனம் செலுத்தவேண்டாம். முடிந்தவரை அதனை தொழில்நுட்ப உதவி கொண்டு சரிப்படுத்துகிறேன் என்றேன். விழிப்புக்கும் உடல் கோளாறால் ஏற்பட்ட விழிப்பின்மைக்கும் இடையே இரா. முருகன் என்கிற எழுத்தாளர் பேசினார். ஒட்டுமொத்தமாக எழுந்துவந்த நினைவுகளையும், தன்னுடைய எழுத்து சார்ந்த சில மதிப்பீடுகளையும் இடைவெட்டி இடைவெட்டிப் பேசினார். அதற்கு மேல் படம்பிடித்தால் அவரைச் சிரமப்படுத்துவது போலாகிவிடுமென நினைத்து, நன்றி சொல்லி விடைபெற்றோம்.

விருது விழாவில் ஆவணப்படம் திரையிடப்பட்டு முடிந்ததும் இரா. முருகன் அவர்களது கரங்களைப் பற்றி நன்றி என்றேன். அவர் என்னை வாழ்த்தினார். ஆவணப்படத்தின் ஒளியமைப்பு குறித்து சிலாகித்தார். ஒட்டுமொத்தமாக அந்தக் கணங்கள் ஆசிர்வாதமானவை. எனக்கு அவருடைய உடல் நிலை குறித்து ஒருவகையான கவலை பீடித்திருந்தது. ஆவணப்படத்தில் பேசும் போது, இனி நான் எழுதுவேனா தெரியவில்லை, அதற்கு பகவான் அருள் வேண்டுமென்று சொன்ன போது கொஞ்சம் அதிர்ந்து விட்டேன். மொழியை எழுதும் ஒருவனுக்கு இறையருள் பலமடங்கு சேரும். எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம் என்ற பாரதியின் அடிகளைத் தொடர்ந்து எழுதுபவனும் தெய்வம் என்பேன். அப்படிச்  சொல்வதால் எந்தத் தெய்வக்குற்றமும் ஆகாதெனும் பெருத்த நம்பிக்கை எனக்குள்ளது. சென்னைக்கு வந்ததும் என்னைத் தொடர்பு கொண்டு மீண்டும் வாழ்த்தினார். ஆவணப்படத்தின் சிறப்புக்களை அவரது பார்வையில் முன்வைத்தார். வெகு விரைவில் ஒருநாள் சந்திக்கலாம் என்றார். A GARDEN OF SHADOWS என்கிற தலைப்பு குறித்தும் சிலாகித்தார்.

இப்போது சென்னை புத்தகத் திருவிழாவில் அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சியும் சொல்லிச் சொல்லி இனிமையாகும் உணர்வும் ஏற்பட்டது. இப்போது ஒரு திரைப்படத்தில் கூட இரவு பகலாக இரா. முருகன் அவர்கள் நடிக்கும் அளவுக்கு உடல் ஆரோக்கியத்துடனும் உள வலிமையோடும் இருப்பதாக புரிந்து கொண்டேன். நூல்வனம் அரங்கில் இரா. முருகன் அவர்கள் அமர்ந்து அளாவினார். புதிதாய் செட்டை உரித்த பாம்பின் நடுவெயில் மினுக்கம் அவரது முகத்தில் ஜ்வலித்துக் கொண்டிருந்தது. கைகுலுக்கும் போது அவ்வளவு உறுதியான பற்றுதல். அவ்வளவு உறுதியான பிடிமானம். அவர் கூறிய பகவான் அருளுகிறார் என்றே தோன்றிற்று.

ஜெயமோகன் அவர்களுக்கு மகிழ்ச்சியோடு தகவல் அனுப்பினேன். இரா. முருகன் திடமாக புத்தகத் திருவிழாவில் அவருடைய உதவியாளரின் அனுசரணை இல்லாமலேயே நடந்து போகிறார். இப்போது அவரால் ஒரு திரைப்படத்தில்கூட நடக்க முடியும். விஷ்ணுபுரம் விருது ஒரு சிகிச்சையாகவும் எனக்குத் தோன்றுகிறது என்றேன். முன்னர் எழுத்தாளர் பூமணி அவர்களுக்கும் இது போன்ற அனுபவம் இருப்பதாக அறிந்திருக்கிறேன். ஆனால் இரா. முருகன் அவர்களை நேரிலேயே பார்க்கிறேன்.

விஷ்ணுபுரம் விருது என்பது தமிழ்ச் சமூகத்தில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளில் முதன்மையும் பெருமிதமும் கொண்டது. வெறும் விருதும் காசோலையும் வழங்கப்படும் ஒரு சடங்கியல் விருது விழா அல்ல. விருது பெறும் படைப்பாளியின் ஒட்டுமொத்த படைப்புக்களையும் வாசித்துவிட்டு வந்திருக்கும் வாசகர்களாலும் அந்த விழா அரங்கம் நிறைந்திருக்கும். இலக்கியத்தை மேன்மையாகக் கருதாத எவரும் அங்கே தலைவைக்க மாட்டார். ஒரு மாபெரும் திரளுக்கு முன்பாக தன்னுடைய எழுத்துக்காக பெறுகிற விருதை ஒரு எழுத்தாளன் தனது எல்லையற்ற கனவின் சிலிர்ப்பாக அங்குதான் பொருள் கொள்ளமுடியும். அங்கு விருதுபெறும் போது கரவொலி எழுப்புவர்கள் யாரும் கடமைக்காக செய்பவர்கள் அல்ல. எழுத்தின் செழுமையை சிறப்பை அறிந்தவர்கள் என்பதே இன்னொரு கெட்டியான கெளரவம்தான். இப்படியொரு நிறைவான விருதையும் சிறப்பையும் பெற்றால் ஒவ்வொரு படைப்பாளியும் இலக்கியத்திற்கு இன்னும் இன்னும் பணி செய்வார்கள். அதற்கான உளவிசையையும், உற்சாக ஆற்றலையும் இப்படியான மதிப்புமிகு கெளரவங்களே வழங்குகின்றன என்றால் மிகையில்லை. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு நன்றி. மங்கலம் பெருகட்டும்.

Loading
Back To Top