
பங்குனியை உங்களுக்குத் தெரிந்திருக்காது. என்னுடைய நண்பர். திரைத்துறையில் பணிபுரிகிறார். அவரது சொந்தவூரிலிருந்து நடிப்பதற்காக வந்தவர், இப்போது உதவி இயக்குனராக இருக்கிறார். தமிழ் திரைத்துறை ஒரு உச்ச நட்சத்திரத்தை இழந்த வானமானது இவரால்தான். ஆனால் பங்குனிக்கு இப்போது நடிக்கும் வாய்ப்புத் தேடி வந்துள்ளது. மிகமிக முக்கியமான இயக்குனர் ஒருவரின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததாகவும், அதனைத்தான் மறுத்துவிட்டேன் என்றும் கூறினார். இயக்குனராக அறியப்படுவதிலேயே தான் பெருமை கொள்வதாகவும் உறுதியளித்தார். சென்னை புத்தக கண்காட்சியின் இறுதிநாளில் அவரைக்காண நேர்ந்தது. இரண்டு கட்டைப்பை நிறைய புத்தகங்களை வாங்கிக் குவித்திருந்தார். நிறையவே வாங்கிவிட்டீர்கள் போல என்று கேட்டேன். அய்யய்யோ தோழர் இது என்னுடைய புத்தகங்கள், விற்பனைக்கு வைத்திருந்தேன். இன்று எல்லாவற்றையும் கலெக்ட் பண்ணுகிறேன் என்றார். உங்கள் புத்தகமா? நீங்கள் எழுதுவீர்களா? கதையா? கவிதையா? என்றேன். அதெல்லாம் எழுதத்தான் நிறையப்பேர் இருக்கிறார்களே, இது கொஞ்சம் வேற மாதிரி ட்ரை பண்ணியிருக்கேன். சங்கப்பாடல்கள் , திருக்குறள் பொருளுரை எழுதியிருக்கிறேன். சங்கமோ – குறளோ புத்தகத்தின் பெயர் என்றார். ஒரு பிரதியை எடுத்து நீட்டினார்.
திகைப்புடன் வாங்கியதும், வாழ்த்துக்கள் என்றேன். அந்த நன்றியை அவர் அசட்டையாக ஏற்றுக்கொண்டார். படித்துவிட்டுச் சொல்லுங்கள். உங்களுக்குத் திருக்குறள் – சங்கப்பாடல்கள் குறித்த அறிமுகம் இருக்குமாவென தெரியாது. ஆனாலும் படியுங்கள். எல்லோரும் புரிந்துகொள்ளுமாறு எளிமைப்படுத்தியிருப்பதாக மேலதிக தகவல்களையும் சொன்னார்.
இம்முறை சென்னைப் புத்தக காட்சியில் தமிழ் புனைவு நூல்கள் பெருமளவில் வெளியாகவில்லை. வெளியானவற்றில் சிலதை மட்டுமே வாங்கினேன். வகை தொகையில்லாமல் வாங்கிக் குவித்த குற்றத்திற்காக வாசித்து துன்பப்பட முடியாது. இந்த விழிப்புணர்வு வந்து சேருமளவுக்கு அனுபவப்பட்டிருக்கிறேன் என்றால் பாருங்களேன். ஆகவே இந்த ஆண்டில் அ-புனைவுகளை வாசிக்கலாம் என்று தீர்மானித்தேன். “பேரரசன் அசோகன் மறக்கப்பட்ட மாமன்னன் வரலாறு” முதல் அ.கா. பெருமாள் அவர்களின் “நித்தியவல்லியின் கடனக்கழிப்பு” நூல்வரை ஐம்பதிற்கு மேற்பட்ட புத்தகங்களை வாங்கினேன். சில மொழிப்பெயர்ப்பு புனைவுகள் வேறு. ஒருசிலர் வெளியான தமது படைப்புக்களை தருவித்தனர்.
கவிஞர் அ. நிலாதரன் அவர்களின் கவிதைத் தொகுப்பினை கொம்பு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சில கவிதைகளைப் புரட்டிப்பார்த்தேன். சிலம்பு கூறும் நான்காவது உண்மை என்ற கவிதையின் கடைசி வரிகள் வெகுவாகக் கவர்ந்தன. “பால் சுரக்கும் முலைகள்; தேவையெனில் தீ சுரக்கும்” என்று எழுதியுள்ளார். இன்னும் சில அசலான கவிதைகள் உள்ள தொகுப்பு இது. நிறையக் கவிதை நூல்கள் வெளியான போதும் எல்லாவற்றையும் வாங்கிக்கொள்ளவில்லை. இரண்டு புத்தகங்களை வெளியிட்டு வைத்தேன். இந்தப் புத்தகக் கண்காட்சியில் அதிகமாக விற்ற கவிதைத் தொகுப்பு “மலைச்சாமியின் வயலை இருபத்தியொன்றாம் நூற்றாண்டு மேய்கிறது” என்ற கவிஞர் மண்குதிரையினுடைய இரண்டாவது தொகுப்புத்தான். அபாரமான கவிதைகள். தமிழ்க் கவிதை வாசகர்கள் தவறவிடக்கூடாத கவிதை நூல். இவ்வளவுக்கும் மத்தியில் பங்குனி எழுதிய பொருளுரை நூலும் வந்து சேர்ந்திருக்கிறது.
நேற்றைக்கு எனக்கு சந்திராஷ்டமம் என்கிற சங்கதி தெரியவில்லை. இந்த ஆண்டின் புதிய நாட்காட்டி இன்னும் முன்பக்கம் திறக்காமல் இருக்கிறது. பங்குனியின் நூலை எடுத்தேன். என்னவாய் இருந்தாலும் திரைத்துறையைச் சேர்ந்தவர். யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதில் கவனமாய் இருப்பவன். பங்குனி எழுதிய பொருளுரை நூலின் பக்கங்களைப் புரட்டினேன். ஒரே வியப்பு – பிறகு திகில் கூடி கொஞ்சம் மயக்கமே ஏற்பட்டு விட்டது. பங்குனியே திருக்குறள் வடிவில் சில பாடல்களை எழுதி அதற்கு பொருளுரை எழுதியிருக்கிறார். சங்கப்பாடல்களைப் போல ஏதோ எழுத முயன்று இருக்கிறார். படிக்கச் சகிக்கவில்லை. போலச் செய்தலையே கலையாக நம்பிக்கொண்டிருக்கும் நவீன கவிகள், எழுத்தாளர்கள் நமது இலக்கியச் சூழலில் நிறையவே இருக்கிறார்கள்.
இது என்னடா வள்ளுவனுக்கும் சங்கக் கவிகளுக்கும் வந்த சோதனை! அய்யகோ! என்று தலையில் அடித்தேன். மனம் கொள்ளாமல் புத்தகத்தில் இருந்த பங்குனியின் எண்ணைத் தொடர்பு கொண்டேன். TRUE CALLER செயலியில் சங்க வள்ளுவர்- வடபழனி என்று பெயர் வந்தது. இன்னும் எவ்வளவு துயரத்தை காண்பேன் இவ்வாழ்வின் தூரத்தில் என்றபடி அவரின் பேச்சுக்காக காத்திருந்தேன். “வணக்கம் சங்க வள்ளுவர் பேசுகிறேன். தாங்கள் யார் என்று அறியலாமா” என்று அழுத்தித் தேய்க்கப்பட்ட அட்சரத்தோடு பேசினார். பங்குனி நான்தான் பேசுகிறேன். உங்களோடு இயல்பான தமிழில் பேசலாமா? அல்லது நீங்கள் பேசுவதைப் போல, மொழியை சலவைக் கடைக்கு எடுத்துச் சென்று அழுத்தித் தேய்த்து பேசவேண்டுமா? என்று கேட்டேன்.
தல நீங்களா சொல்லுங்க என்றார். இப்படியான திடீர்க்குழைவு அரசியலாளர்களை அடுத்து சினிமாக்காரர்களுக்குத்தான் வாய்க்கும்.
உங்களுடைய புத்தகத்தைப் புரட்டினேன். என்ன செய்து வைத்திருக்கிறீர்கள். ஏன் இப்படியெல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்டேன்.
“தல…நீ எதுக்கு அதப் படிச்சா. அன்னைக்கு உன்னைப் பார்த்ததும் அதக்கொடுக்கணும்னு கொடுத்தேன். அதுக்காக நீ படிப்பியா” உரிமையோடு கேட்டார்.
பங்குனி நீங்கள்தானே வாசிக்கச் சொன்னீர்கள் – கேட்டேன்.
“அட நீங்க வேற. அன்னைக்கு எங்கூட வந்தவனுக்கு உங்கள எழுத்தாளன தெரிஞ்சிருந்தது. உங்க கதைகள அவன் படிச்சிருக்கான். ஆனா உங்ககிட்ட பேசத் தயங்கி நின்னுகிட்டான். அவனுக்கு ஒரு ஷோ காமிக்கத்தான் நானே உங்ககிட்ட புக் கொடுத்தேன். இல்லையினா அதே பயத்தோடு நானும் கடந்திருப்பேனே” என்றார்.
பயமா? ஏன் என்ன பயம்?
“என்ன பயமா? எனக்குத் தெரிஞ்ச ஒருத்தனோட கவிதை புத்தக வெளியீட்டு விழாவில பேசப்போயிருக்கீங்க. அவன் எழுதின எதுவுமே கவிதை இல்லைன்னு பேசி அவன் எழுதுறதையே நிறுத்திட்டான்னு உங்களுக்குத் தெரியாதுல”
“அப்படியா…அந்தத் தம்பியா! அவன் முன்னமே கவிதை எழுதினதில்லையே. அப்புறம் எப்படி இப்ப நிறுத்தி இருப்பான்?”
தல…சரி விடுங்க. அதுதான் நவீன இலக்கியக் கரையில் ஒதுங்கவில்லை. மரபு இலக்கியம் போனாச்சு. இங்க அந்த வசதியிருக்கு. ஒரு வாடகை வீட்டில எல்லா ஜன்னலையும் திறந்திட்டு உக்கார்ந்து தம் அடிக்கிற மாதிரி…அது வெறும் புகைக்கிற செயல் இல்லை. புரியுதா?
“இல்லை. எனக்கு புரியல”
“விடுங்க தல. என்னுடைய குறள். என்னுடைய சங்கப்பாடல். அதில குறை இருந்தாலும் நிறை இருந்தாலும் அது என்னுடையதுதான். யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை”
“பங்குனி நீங்கள் எழுதினது மேல ஒன்றும் புகாரில்லை. ஒரு கெட் – அப் போட்டு உங்கள் ஓவியத்தைப் போட்டு இருக்கிறியளே. அதை வரைஞ்சது ஆர்?”
“அத வரைஞ்சதும் நான்தான். அது வள்ளுவரோட கடைசிக்கால ஓவியத்தோட மாதிரி. நீங்க மட்டும்தான் கண்டுபிடிச்சு கேட்கிறீங்க தல”
“யோவ்….அது வள்ளுவர் உருவம் இல்லை. புத்தரோட உருவம் ஐயா. திருக்குறள் தான் உனக்கு தெரியமாட்டேங்குது. திருவள்ளுவரையுமா தெரியாது.” என்றேன்.
ஐயா….ஏன் கோபப்படுகிறீர்கள். வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார். ஆறுவது சினம்… கோபப்படாதீங்க என்றார்.
போனை வையுங்கள் பங்குனி என்றேன்.
நீங்கள் ஏன் என்னோட புத்தகத்தை படிக்கிறீங்க. அது படிக்க என்னோட ஆயிரக்கணக்கான வாசகர்கள் இருக்காங்க. சும்மா போனை வையுங்க என்றார்.
பங்குனி நீயா பேசுறாய்!
“பங்குனி இல்லை. எழுத்தாளன் “சங்க வள்ளு….
என்று சொல்லும் போதே போனைத் துண்டித்து விட்டேன். அதனைக் கேட்பதற்கு எல்லாம் சக்தியில்லை.