01

பதினெட்டாவது மாடியிலுள்ள

என் வீட்டு ஜன்னலை

மலர்க்கொடியொன்று

பற்றியேறிவிட்டது.

அடுக்குமாடி வாழ்வில்

ஒரு பூவைப் பார்த்துவிடுவது

ஆறுதலாய் இருக்கிறது

எனக்கும் பூமிக்குமுள்ள

பந்தத்தின் கிளையை

இந்த ஜன்னல் பூ

எங்கிருந்து அழைத்து வந்தது

தெரியவில்லை.

கால்களில் மண்புரள

பூ…

பூ…

பூவெனத் திளைக்கிறேன்

அண்ணாந்து கேட்குமா

என் குரலை

நிலம்.

02

மழை பெய்தடங்கிய ராத்திரியின் மீது

நிலவேறி நகர்கிறது

நகரத்து நடைபாதையில் ஈரம் ததும்பத் ததும்ப

உறங்கக் காத்திருக்கிறார்கள்

இல்லமற்றவர்கள்.

குழந்தைகள் வீறிட்டு அழுகின்றனர்

போதையன் மனைவியோடு பொருதுகிறான்

குட்டி நாய்களும் இடத்தைப் பங்கிட்டிருக்கின்றன

மழையும்  நிலவும் ராத்திரியும்

பாதாளத்தின் இருளைப் போல

இப்படித்தான் பெருகுமா?

இவர்களின் உறக்கத்தின் மீது

இப்படித்தான் ஊழியாகுமா?

 

 

 

 

 

 

 

 

Loading
Back To Top