வாசக நண்பர்களுக்கு வணக்கம்!
“எழுதுகோலும் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்” என்றுரைத்த பாரதிக்கு என் முதல் வணக்கம். இந்த வாக்கியத்தை முழுதும் நம்புகிறவன் நான். எழுத்தூழியத்திற்கான அர்ப்பணிப்பையும் படைப்பாற்றலுக்கான அகத்தையும் புறத்தையும் எனக்கருளிய மொழியையும், வாழ்வையும் எண்ணி மகிழ்வதா? நோவதா? என்ற தர்க்கவியல் குழப்பங்கள் நேராமலில்லை. என்னுடைய கொந்தளிப்பும், அவலமும் இனி வருகிற எல்லா நூற்றாண்டிலும் நிறைந்திருக்கும். மனித குலத்திற்கு எதிரான போரியல் நடவடிக்கைள், இனப்படுகொலை , ஆயுத இயக்கங்களின் அத்துமீறல்கள், இனவெறிக் காடையர்களின் வன்முறை வெறியாட்டங்கள், இடப்பெயர்வு, மரணங்கள், எப்போதும் எரிந்தபடியிருக்கும் போர்க்காயங்கள், புலம்பெயர்வின் அகதி அடையாளமென இழப்புகளாலும், கசப்புகளாலும் ரணமாகிய வாழ்வு, புயலில் சிதறிய சின்னஞ்சிறு படகின் துண்டங்களாய் கண்ணீரில் மிதந்தபடி இருக்கிறது. அதன்பொருட்டு காலம் எனக்களிக்கும் நீதி போதுமானதாயில்லை. என்னை வந்து சேராத நீதிக்காய் காத்திருக்கும் இந்தப் போழ்தில், தெய்வம் எனக்கருளும் எழுத்தால் நீதியை நான் அடைவேன் என்றுணர்ந்தேன். என் அடியாழத்தினுள்ளே மூண்டெழும் தீயில் வார்த்தைகளை காய்ச்சினேன். மொழியைத் தியானித்தேன். என் மீதமிருக்கும் ஜீவிதத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் “அறம் வெல்லும் அஞ்சற்க” என்று எழுதத் தொடங்கினேன். “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள். உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள். துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்” என்ற திருவிவிலியத்தின் வாசகத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பேன். அறம் என்கிற உணர்வும் பொறுப்புமே எனது இலக்கியத்தின் ஒளியூற்று. இனி இந்த இணையத்தளத்தின் வழியாக உரையாடலாம், விவாதிக்கலாம். நன்றியும் அன்பும்.