இந்த வருடத்தின் தொடக்கத்தில் அசைவ உணவு உண்பதை சிறிது காலம் தவிர்த்துவிடலாமென்று விரும்பினேன். அதற்கான மன ஒத்திசைவுகள் எனக்குள்ளும் நன்றாகவே வளர்ந்து வந்தன. எனக்கு அப்படியொரு அசைவ விடுபடல் மனநிலை வந்திருப்பதை வீட்டில் நம்பமறுத்தார்கள். அம்மா கொடுப்புக்குள் சிரித்து “வரேக்க, சீலா மீன் வாங்கி வா” என்றாள். மனைவிக்கு எல்லா மீனும் ஒன்றுதான். எனக்கு முரல், பாரை, மத்தி என்றால் சுவர்க்கம் காண்பேன். ஆனாலும் கொஞ்ச நாள் தவிர்த்துவிடலாம் என்று எண்ணினேன்.

ப்ராயிலர் கோழிகள் சிறந்த அசைவனுக்கு பிடிக்காது. பண்ணையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழியின் உருசையில் மனம் திளைக்க எதுவுமில்லை. சென்னையில் கலப்படமற்ற நாட்டுக்கோழி, அதுவும் வீட்டில் மேய்ந்து வளர்ந்தவைகள். கொஞ்சம் விலை அதிகமென்றாலும் வாங்கிக் கொள்வேன். அந்தக் கோழிகளை யாபாரம் செய்பவர் தொழில் சுத்தம் கொண்டவர். ஆதலால் கழுத்து வெட்டிச்சாவல் என்றால் எனக்கு எடுத்து வைத்துவிடுவார். மண்ணில் காலூன்றி வளர்ந்த எல்லாவற்றுக்கும் தனித்த ருசி உண்டு. புள்ளியில் சேவலாய் இருந்தாலும் மொழியில் நாவலாய் இருந்தாலும் அதற்கென்று உருவாகும் மதிப்புத் தனித்துவமானதுதான்.

சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் போதெல்லாம் அச்சரப்பாக்கம் “99-KM” கடையில் தான் தேநீர், தானிய உருண்டைகள், வாழைப்பூ வடையென நண்பர்கள் உண்டு மகிழ்வோம். அந்தக் கடையில் எனக்குப் பிடித்த முதன்மைத் தன்மையே சுத்தம். நெடுஞ்சாலைகளில் உள்ள பெருமளவிலான உணவகங்களில் உண்பதற்கே பயம். கழிப்பறைகளைப் பார்த்தால் அருவருத்துவிடும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதைப்போல ஒரு சுத்தமான ஹோட்டலை அதன் கழிப்பறை பராமரிப்பிலேயே உணர்ந்துவிடலாம்.

99-KM உணவகத்தில் எல்லாமும் சுத்தமும், தரமும் பார்த்துப் பார்த்துச் செய்யப்படுகிறது என்றே கருதுகிறேன். உண்மையில் சென்னை போன்ற பெருநகரத்தில் கூட  அப்படியொரு கடையைத் தேடிப்பார்த்தாலும் கிடைக்காது என்பதே என் அனுபவம். வீட்டிலிருந்து எடுத்து வரும் உணவை சாப்பிடலாம் என்று அறிவித்திருக்கிறது 99KM நிர்வாகம். இது வியாபார எண்ணம் மட்டுமே கொண்டவர்களால் உரைக்க முடியாத கூற்று. தேநீர் என்றாலும் சரி, காபி என்றாலும் சரி அப்படியொரு ருசி நேர்த்தி இங்கேதான் பேணப்படுகிறது. சமீபத்தில் தூதுவளை சூப் குடிக்க நேர்ந்தது. ஆச்சியின் கைப்பக்குவம்.

இவர்களின் புதிய நிறுவனமான “உப்புக்கண்டம்” உணவகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அங்கே சாப்பிட்டேன். உப்புக்கண்டம் என்றால் ஈழத்தில் “வத்தல்” என்போம். என்னுடைய பெரியப்பா ஊரறிந்த வேட்டைக்காரர். அவர் அடித்துவரும் காட்டு விலங்குகளில் வத்தல் போட்டு எப்போதும் வைத்திருப்பார்கள். காட்டுப்பன்றியில் இருந்து எல்லா இறைச்சியின் வத்தலையும் உண்டிருக்கிறேன். ஆனால் பன்றி வத்தலுக்குத்தான் மவுசு அதிகம்.

இங்கே ஆட்டிறைச்சி உப்புக்கண்டம் தருகிறார்கள். அடேயப்பா! எழுதும் போதே  உருசைப் பிரவேசம் எச்சிலில் நிகழ்கிறது. சாப்பாடு பரிமாறும் சகோதரியின் உபசரிப்பு. சில உறவுக்காரர்களை அழைத்துச் சென்று அவரின் கையால் ஒருபிடி சோறு வாங்கித் தின்னச் சொல்லவேண்டும். அப்படியேனும் அவர்களுக்கு உபசரிப்பு வருகிறதா என்று ஒரு நப்பாசைதான். என் பெரியம்மா ஒருத்திக்கு யாரேனும் அவளது வீட்டிற்கு சாப்பாட்டு வேளையில் சென்றால் பிடியாது. ஏன் இந்த நேரம் வந்தீர்கள் நாம் சாப்பிட வேண்டும் என்று சொல்லும் அநாகரீக ஸ்திரி அவள். ஆனால் உப்புக்கண்டம் உணவகத்தின் முதல் இனிமையே இந்த உபசரிப்புதான். அன்றைக்கு சோறு பரிமாறிய சகோதரியின் பெயர் மீனாட்சி. இப்படியான கரங்கள் நீண்டு பரிமாறும் உணவை உண்பதில் உடல் நலம் பெருகும்.

உப்புக்கண்டம் உணவுப் பட்டியல்களில் மரபுக்கு முக்கிய இடம் அளிக்கிறார்கள். சிரட்டை றால், குன்னி றால் தொக்கு என்று அசைவர்களுக்கு ஒரு கொண்டாட்ட நிலையமாக உருவாக்கி இருக்கிறார்கள். சைவ உணவும் நன்றாக இருப்பதாக நண்பர்கள் சான்றிதழ் அளித்தார்கள். அப்படியொரு சோதனைக்கு கூட, அங்கே கீரையையும் பீட்ரூட்டையும் தின்பேனா நான்.

மீன் குழம்பின் கூட்டுச்சுவை அலாதி. மத்தி மீன் வாசனையோடு ஒருபிடி சோற்றை உண்டு களித்தேன். அவ்வளவுதான். நிலம் சூழந்த கடலின் நினைவுகள் பேரலையாய் எழுந்து அடித்தன. சில மீன்களையும், நகர வீதிகளில் விற்கும் நொங்கு குழைகளையும், தனித்து நின்று அசையும் பனை மரங்களையும் பார்த்தால் பொங்கிவரும் கண்ணீரே! – அன்று உப்புக்கண்டம் உண்ணும் போதும் உகுத்தது.

“வானகமே, இளவெயிலே, மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? – வெறுங் காட்சிப் பிழைதானே? போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனல் நானுமோர் கனவோ? – இந்த ஞாலமும் பொய்தானே?” என்ற பாரதியின் வரிகள் எங்கிருந்தோ வந்து நின்றன. கானகமே! பனைமரமே! தாய்நிலமே! என்று எனக்குள்ளே குருதி படபடத்து அதிவேக அழுத்தம் கொண்டது.

உப்புக்கண்டம் உணவகத்தை விட்டு வெளியே வருகிற போது கொஞ்சம் இளைப்பாற வேண்டுமெனத் தோன்றியது. ஓலைப்பாயும் மரநிழலும் வாய்த்துவிட்டால் உண்ட களைப்பு போக உறங்கி எழுவது வீட்டுப்பழக்கம். அது வீட்டில் உண்ட உணவால் மட்டுமே நேரும் திருப்தி. உப்புக்கண்டம் வீட்டுச் சுவையைத் தருகிறது.

சென்னை வந்ததும் அங்கே உணவுண்டதையும், உருசையையும் பாராட்டிச் சொன்னேன். “அதுதானே பாத்தன் நீயாவது மச்சத்தை விடுகிறது. நீ சொல்லும் போதே உது நடவாது எண்டு எனக்குத் தெரியும்” அம்மா சொன்னாள். இல்லை உண்மையாவே கொஞ்ச நாளைக்கு மச்சம் சாப்பிடுகிறத விடவேணும் என்று மீண்டும் சொன்னேன்.

இன்று நண்பர் ஒருவர் போனில் அழைத்தபடியிருந்தார். என்ன விஷயமோ என்று கேட்டால், “சும்மா வாங்களேன் இண்டைக்கு இரவு உப்புக்கண்டம் போய் சாபிட்டிட்டு திரும்பி வரலாம்” என்றார். அது சரியான தூரம். வேறொரு நாளைக்குப் போகலாம் என்றேன். இல்லை வேறொரு நாளைக்கும் போகலாம். இண்டைக்கும் போகலாம் என்கிறார்.

அதனாலென்ன என்று புறப்பட்டேன்.

ஆனாலும் நித்தம் இது தொடர்ந்திடுமோ என்றெல்லாம் யோசனையாக இருக்கிறது! அதனாலென்ன “நல்ல உண்டியைத் தேடி உண்” ஒரு ஆத்திசூடியை புதிதாகச் சூடிக்கொண்டால்  உப்புக்கண்டம் சென்னைக்கு மிக அருகிலேயே என்று நம்பிவிடுவேன்.

Loading
Back To Top