நண்பரொருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் திரைத்துறையில் இருப்பதாக நம்புவர். ஆனால் இன்னும் எந்தவொரு திரைப்படத்தளத்திற்கும் வேடிக்கை பார்க்கச் சென்ற அனுபவம் கூட இல்லாதவர். சீக்கிரத்தில் படம் பண்ணிடலாம் என்று பாழடைந்த வீட்டில் பல்லி சொல்வதுமாதிரி சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த நண்பரின் கண்மூடித்தனங்களை நினைத்தால் குலை நடுங்கிவிடும். ஈரானிய இயக்குனர்கள் நால்வரின் பெயர்களை மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார். ஏழு கொரியத் திரைப்படங்களின் பெயரும் அப்படியே.

அவரைப் பொறுத்தளவில் தமிழில் இயக்குனர்களே இல்லை. மணிரத்னம் முதல் மாரி செல்வராஜ் வரை எவருக்கும் திரைப்படம் இயக்கத் தெரியவில்லை. ஒரு வியப்பூட்டும் ஷாட் இன்னுமே தமிழில் எழுந்து வரவில்லை என்பார். மசூத் கிமியாவைப் போல, நாசர் தக்வாய் போல, அப்பாஸ் கியாரோஸ்தமி போல இங்குள்ள ஒருத்தனுக்கு படம் எடுக்கத் தெரிகிறதா என்று குரல் எழுப்புவார். அவர் தாமதமாக சாப்பிடக்கூடியவர் ஆதலால் இப்படிப் பேசியே தனது செரிமானக் கோளாறைச் சரி செய்யக்கூடியவர். புளிச்சல் ஏப்பத்திற்கு பிறகு ஒரு சிகரெட்டை பற்ற வைத்தபடி இந்தக் குறைகளை தமிழ் சினிமாவில் சரி செய்யவாவது தான் திரைப்படங்களை இயக்கவேண்டிய வரலாற்றுக் கடமை இருப்பதாகச் சொல்வார். இப்படியான வரலாற்றுப் புருஷர்கள் எல்லாத்துறையிலும் இருப்பார்கள் போலும்!

உலக சினிமாவை தெய்வத்திருவடி என்று எண்ணி தங்களுடைய கண்களை அங்கிருந்து எடுக்காதவர்கள் பலருண்டு. இந்த நண்பருக்கு அப்படியும் பழக்கமில்லை. அதிகபட்சமாக பத்துக்கு மேற்படாமல் உலகத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறார். இன்னும் சிலவற்றை தமிழில் எழுதப்படும் உலக சினிமா குறித்த கட்டுரைகளின் வழியாக அறிந்திருப்பார். நான் இப்படிக்கூறுவதால் அவருக்கு ஏதோ வாசிப்புப் பழக்கமாவது இருக்கிறது என்று ஆசுவாசம் கொள்ளாதீர்கள். கட்டுரைகளுக்கு நடுவே பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் திரைப்படங்களின் போஸ்டர் வடிவமைப்புக்களை பார்த்திருப்பார்.

இவருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருக்கிறதென ஒரு சந்திப்பில் பட்டியல் ஒன்றைக் கொடுத்தேன். அங்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. அவருக்கு இலக்கியம் என்றால் இன்ஸ்ராகிராம், எழுத்தாளர் என்றால் முகநூல். இதனை விட்டால் ஊரில் நிகழும் வம்புகள் அனைத்தையும் வேரோடிச் சென்று அறிய எண்ணும் வம்பு ஆர்வம். ஒரு பேச்சுத்துணை கிடைத்தால் எல்லா வம்புகளையும், புறம் பேசுதல்களையும் ஒரு நடவடிக்கையைப் போல செய்வார்.

சமீபத்தில் வெளியான திரைப்படம் குறித்து அவரின் கருத்தை அறிய எண்ணினேன். சிலவேளைகளில் எனக்கும் செரிமானக் கோளாறு உருவாகிவிடும்போல! – நண்பர் அந்தப்படத்தை வழமை போலவே இவங்களுக்கு எங்கையா படம் எடுக்கத் தெரிகிறது. மஜீத் மஜிதியின் ஒரு ஷாட். ஒரு ஏஸ்தெட்டிக் ஐடியாவைக் கூட இவங்களால புரிஞ்சுக்க முடியாது என்றார். “Children of Heaven” திரைப்படத்தில் ஒரு ஷாட் வரும்…. பாருங்கள் ……. என்று தொடர்ந்து பேசினார்.

இப்போதெல்லாம் இவருடைய இந்தமாதிரியான பேச்சுக்கள் எனக்கு கவலையையும் அச்சத்தையும் தான் தருகிறது. இவர் இன்னொரு உலகில் தன்னையொரு படைப்பாளியாக எண்ணி வாழக்கூடுமென்று தோன்றியது. அதுவொரு பிறழ்வு நிலை. ஊரில் உள்ள குளக்கரையில் அவர் எழுதும் பாடல்களை செய்மதியில் படம் பிடித்து, சினிமாவின் பாடலாசிரியர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று நீயா நானா நிகழ்ச்சியில் ஒருவர் வந்து பேசினார் என்று ஞாபகம். அதுபோல் இவரும் தன்னையொரு திரைப்பட இயக்குனராக மெல்ல மெல்ல ஆகி ஏற்கனவே வந்த சில படங்களை நான் இயக்கி வைத்திருக்கையில், வேறு யாரோ தங்களுடைய பெயரைப் போட்டு வெளியிட்டுவிட்டார்கள் என்று சொல்லவும் எதிர்காலத்தில் வாய்ப்பு இருக்கிறது.

இப்படியான பிரச்சனைகளோடு பலர் வலம் வருகிறார்கள். இன்னொரு எழுத்தாள நண்பரிடம் ஒரு கதையைச் சொன்னால், இதைப் போலவே நானொரு கதையை வொர்க் பண்ணி வைத்திருக்கிறேன் நண்பா என்பார். படைப்பில் இவர்கள் அறியாதது என்று ஒன்றுமில்லை. ப்ரம்மாவே இவர்களிடம் தான் திருவோட்டை நீட்டி படைப்பூக்கம் பெறுகிறார் என்று சொல்லவும் தயங்கார்.

இந்த நண்பர் ஏதேனும் நாவலையோ, சிறுகதையையோ திரைப்படம் ஆக்கவேண்டுமென இப்போது விரும்புகிறார். அதற்காக எந்தப் புத்தகங்களை வாசிக்கலாம் என்று கேட்டார். அவர் அறியாதது ஏதும் உண்டோ! – எனக்கு எந்த ஈரானிய எழுத்தாளரையும் தெரியாது என்றேன். இல்லை தமிழில் உள்ளவர்களையே சொல்லுங்கள் என்றார். நீங்கள் உலக சினிமாவைத் தவிர ஏதும் கலை இல்லை என்பவர். உங்களுக்கு உலக இலக்கியமே நன்றாக இருக்கும். ஆகவே அதே ஈரான், கொரிய எழுத்தாளர்களைத் தேடிப் படியுங்களேன் கூறினேன்.

“இல்லையே தமிழில் நிறைய நல்ல கதைகள் இருக்குமே”

“உங்களுக்குத் தெரியாததா…அப்படி என்ன புதிதாக எழுதப்போகிறார்கள்”

“அதுவும் சரிதான். நீங்க புதிசா என்ன வாசித்தீர்கள்?”

“எதைப் படிச்சும் என்ன ஆகப்போவுது சொல்லுங்க. எனக்கு உங்களைப் போல மஜீத் மஜிதியைத் தெரியாதே” என்றேன்.

“ஜெயமோகன்னு ஒருத்தர எல்லாரும் சொல்லிட்டுத் திரியிறானுங்களே. அவர் வொர்த்தான ஆளா. வாசிக்கலாமா…நேர வீண் கிடையாதுல்ல!” என்று கேட்டார்.

“நீங்கள் ஏற்கனவே என்ன இலக்கியப் புத்தகம் வாசித்து இருக்கிறீர்கள்” கேட்டேன்.

எங்களூர் நூலகத்தில இருந்து நிறையப் புத்தகங்களைத் திருடிட்டு வந்து வாசித்திருக்கிறேன். ஒன்றா? இரண்டா? சமீபத்தில் கூட “சுவாசம் சந்தா திட்டம்” என்றொரு சிறிய நாவலை வாசிக்க வைத்திருக்கிறேன்.

“வாங்கினீர்களா?”

இல்லை நண்பர் ஒருவர் புத்தகத் திருவிழாவிற்கு சென்று வரும்போது நிறைய குட்டி நாவல்கள், சிறுகதைகளை வாங்கி வந்திருந்தார். அதிலிருந்து எடுத்தேன் என்றார்.

“ஓ….சரி கிடைத்ததை வாசியுங்கள். அதில் கூட ஏதேனும் கதை கிடைக்கலாம் இல்லையா”

நண்பர் விடைபெற்றுக் கொண்டார். அடுத்து எங்கே என்று கேட்டேன்.

என்னுடைய நீண்ட கால நண்பர் ஒருவர் படம் இயக்குவதற்கு ரெடியாகிவிட்டார். ஆனால் அவருக்கு சில சந்தேகங்களும், அச்சங்களும் இருக்கின்றன. ஷாட்ஸ் பிரிப்பது தெரியாமல் இருக்கிறார். அவருக்கு ஒரு வகுப்பு மாதிரி எடுக்கிறேன். வளசரவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு தான் செல்கிறேன்.

எப்படி அவர் படம் பண்ணிவிடுவாரா என்று கேட்டேன்.

இல்லையுங்க. எனக்குச் சந்தேகம் தான். நேற்றைக்குத் தான் மஜீத் மஜிதி எடுத்த “Life is Beautiful” திரைப்படத்தை பார்க்கச் சொல்லியிருக்கிறேன் என்றார்.

அந்தப் படமும் அவர் தானா எடுத்தார்?

“இல்லையா பின்னே. அந்தப் படத்தில் ஒரு ஷாட் வருமே…. அதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப் போவுது சொல்லுங்க” என்று விடைபெற்றுக் கொண்டார்.

என்னை மன்னியுங்கள் Roberto Benigni! – இப்படியான மடையர்களிடம் உங்கள் பெயரை ஏன் நிரூபிக்க வேண்டும். முதலில் இப்படியானவர்களிடம் நாம் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்பதே நாம் அவர்களுக்கு அளிக்கும் சலுகை.

“சரி வருகிறேன். சீக்கிரத்தில் ஒரு திரைக்கதையை எழுதி முடியுங்கள். அதன்பிறகு என்னிடம் தாருங்கள். ஒரு பார்வை பார்க்கிறேன்” என்றார்

என்ன துணிவு… என்ன வாழ்வு…என்ன அசட்டுத்தனம்…. இப்படியுமா அழிவர்! தெய்வமே!

 

 

 

 

 

 

 

 

 

 

Loading
Back To Top