சென்னையில் சில இடங்களுக்கு அடிக்கடி போவேன். புனித தோமையார் மலையிலுள்ள தேவாலயத்தில் பலநூறு ஆண்டுகால ஆலமரம் ஒன்றுள்ளது. அந்த மரத்தடியில் இருக்கும் கல்லிருக்கையில் அமர்ந்திருப்பேன். அந்த நிழல் சாதாரண மரநிழல் இல்லை. அந்தக் கல்லிருக்கையில் அமர்ந்திருந்தால் எதிர்ப்புறத்து கல்லிருக்கையில் வீடற்ற இயேசு (Homeless Jesus) உறங்கியபடி இருப்பார்.

அந்தச் சிற்பத்தை பார்த்துக் கொண்டிருப்பது ஒருவகை ஒத்தடம். வாழ்வின் களைப்பும் சோர்வும் அழிந்து போகுமொரு சிகிச்சையாக அமைகிறது. நண்பர்களையும் அங்கு அழைத்துச் சென்று உரையாடியிருக்கிறேன். எல்லோருக்கும் நெருக்கமானவராகி விடுகிறார் வீடற்ற இயேசு.

ஒரு நண்பர் அங்கிருந்து வரமறுத்தார். நேரம் ஆகிவிட்டது கீழே இறங்கலாமென்று சொல்லியும், இன்னும் கொஞ்ச நேரம் உட்காரலாம் என்றார். ஏனென்று தெரியாமல் கண்ணீர் உகுத்து விம்மினார். நான் இப்படியான அனுபவதத்தை இவ்விடத்தில் அடையவில்லை. அவர் கசிந்துருகினார். வீடற்ற இயேசுவின் கால்களையே பார்த்துக் கொண்டிருந்தார். “எவ்வளவு தூரமும் பாரமும் ஏந்திய பாதங்கள் இவை. அக்கிரமங்களை ஒழித்து சனங்களுக்காய் உழைத்த சரீரம்” என்றேன்.

“இவ்வளவு அகங்காரமும், கீழ்மையும் கொண்ட இந்த அற்ப மனுஷர்களுக்கு முன்பாக இப்படியொரு மானுடன் வீடற்று ஏன் இருக்க வேண்டும்?” என்றார் அந்த நண்பர்.

நாங்கள் அங்கிருந்து புறப்படுகையில் ஆலிலை ஒன்று உதிர்ந்து கீழே வந்தது. அதை அந்தரத்தில் வைத்தே பிடித்தேன். இலையில் சில தழும்புகள். சில ஓட்டைகள். பச்சையம் அழிந்து கரைந்து பாதிச் சருகாகியிருந்தது. இது இயேசுவின் ஒற்றைப்பாதம் என்றேன். நண்பரும் அதையேதான் நினைத்தார் என்றார்.

எனக்கு கடற்கரையில் அமர்ந்திருக்கப் பிடிக்கும். அப்போது தேவையானது அகத்தின் திரிதீண்டும் நேர்மறை எண்ணங்கள் மட்டுமே. அந்த ஒளியைப் பெருக்கத்தான் அநாதியான இயற்கையின் முன்பாக ஒரு மணல் துகளாக அமர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு அலை வருகையின் போதும் அழிவது எதிர்மறைகளே. மனிதர்கள் கடலுக்கு முன் அமர்ந்திருந்து தங்களுடைய இன்பங்கள் பெருகப் பிரார்த்திக்கிறார்கள். துன்பங்கள் நீங்க வேண்டுகிறார்கள்.

“அடிக்கடி கடலுக்கு செல்கிறீர்களே சலிப்பதில்லையா” என்று நண்பர்கள் கேட்பதுண்டு. நான் கடலுக்குச் செல்வதில்லை. கடலின் கரைக்குச் செல்கிறேன். அங்குதான் மானுடன் ஒரு பொருட்டில்லை என்பதை அவனது பாதங்கள் வரை வந்து தொடும் வெறும் நுரைகள் அறிவிக்கின்றன.

சென்னையில் பெசன்ட் நகர் கடற்கரை பிடித்தமானது. அந்தியை அழகாக்குவது கடல் வெளி. அந்தக் கடல் வெளியை அழகாக்கும் மெளனத் தியானிப்பு மனிதருள் புதைந்திருக்கும் அற்புத போதம். பெசன்ட் நகர் கடற்கரையின் மணல் வெளியில் அமர்ந்திருந்தால் சோதிடம் – குறி சொல்பவர்கள்  உள்ளங்கையைக் காட்டுங்கள் என்பார்கள். நெற்றி நிறைய குங்குமம் அணிந்த அம்மைகள் தங்களின் கையில் வைத்திருக்கும் பிரம்பினால் ஆரூடம் சொல்ல விரும்புகிறார்கள்.

சிலரிடம் மறுப்புச் சொல்லவே இயலாது. அம்மாவின் கனிவை அவர்களில் கண்டுவிடலாம். எப்போதாவது அப்படி ஒரு விடுபடல் வேண்டுமெனத்  தோன்றினால் உள்ளங்கையை விரித்துக் காண்பிப்பேன். இறந்தகாலம் – நிகழ்காலம் – எதிர்காலமென எல்லாவற்றையும் சொல்லுவார்கள். இங்கே நம்முடைய அறிவை நிலைநாட்ட வேண்டியதில்லை. எடுத்துக்கொள்ள விரும்பினால் ஏற்க விரும்பினால் பற்றிக்கொள்ள விரும்பினால் மறுதலிக்க விரும்பினால் ஏதெனினும் எல்லாமும் ஒரு பொழுது அனுபவம் மட்டுமே.

சென்னையிலிருந்து இரண்டு மணிநேர பயணத்தில் வருகிற திருவாலங்காட்டிலுள்ள இரண்டு கோவில்கள் எனக்குப் பிடித்தமானது. ஒன்று ஐம்பெரும் அம்பலங்களில் ஒன்றான ரத்தினசபை – திருவாலங்காட்டு சிவன் கோவில். மற்றொன்று அதன் அருகேயுள்ள பழையனூர் சாட்சி பூதேஸ்வரர் சிவன் கோவில். அப்பர், சம்பந்தர், சுந்தரர் என மூவரின் பாடலும் தாங்கிய  திருத்தலம் திருவாலங்காடு.

அதற்கு முன்பாகவே பேயார் காரைக்கால் அம்மையின் பதிகம் இந்தத் திருத்தலத்தில் எழுந்தது. ஆலங்காடு என்று அம்மை முடிக்கும் பதிகங்கள் எல்லாமும் மெய்சிலிர்க்க வைப்பவை.

சாட்சி பூதேஸ்வரர் சிவன் கோவில் வியக்க வைக்கும் பின்னணிக் கதை கொண்டது. சத்தியத்திற்காக தீயில் விழுந்து உயிர்துறந்தோர் – இறைவனை சாட்சியாக வைத்து அதனைச் செய்ததால் அங்குள்ளவர் சாட்சிபூதேஸ்வரர் ஆனார்.

இன்றைக்கு நாம் வாழும் காலத்தில் அறம் யாவையும் சாம்பலாக்கிக் கொண்டிருக்க, நம் முன்னோர் அறத்திற்காக தீயில் விழுந்த கதையை எவ்வாறு தரிசிக்க அருகதை உள்ளவர்களாக இருக்கிறோம் என்பது தனிக்கதை. இந்தக் கோவிலின் சூழல் ஆசுவாசம் தரக்கூடியது. அளவிற் சிறிய கோவில் எனினும், ஒரு நேர்மறை அதிர்வை, படைப்பூக்கத்தை தரவல்ல சக்தி அங்கேயுள்ளது என்பது என் அனுபவம்.

நான் அடிக்கடி செல்லும் இந்த இடங்கள் எல்லாமும் ஏதோவொரு வகையில் என்னைக் குணப்படுத்தும் திறனுடையவை. சிலவேளைகளில் தி. ஜானகிராமனின் சண்பகப் பூவையோ ஜெயமோகனின் மாடன் மோட்சத்தையோ சு. வில்வரத்தினம் கவிதையையோ படிப்பதைப் போலவே இவைகளும் அளிக்கின்றன செயலூக்கத்தையும் உற்சாகத்தையும் என்றால் சிலரால் நம்ப இயலாது.

உதிரும் ஆலிலையை அந்தரத்தில் ஏந்தி, இயேசுவின் பாதம் என்று சொல்லும் உனது அனுபவத்தை நான் ஏன் நம்பவேண்டுமென்று நீங்கள் கேட்பீர்களாயின்!

உதிரும் ஆலிலையையாவது நம்புங்கள்!

 

 

 

 

 

 

 

Loading
Back To Top