ன்றிலிருந்து நாய்கள் மீது பிடிப்பில்லாமல் போனதென துல்லியமாக நினைவுக்கு வரவில்லை. “இப்படி ஆகிவிட்டேனே” என்ற தன்னிரங்கலின் சூடு அடிக்கடி என்னைப் பொசுக்குகிறது. “அதையே அளைந்து கொண்டிராதே, ஏதேனும் உண்ணி இருந்தால் உன்ர உடம்பில ஒட்டிப்போடும்” அடிக்கடி சொல்லும் அம்மம்மாவே விண்ணுலகில் இருந்தபடி இந்த மாற்றத்தைக் குறித்து எண்ணுவாள். நாய்களோடு காட்டுப் புழுதியிலும், பனங்கூடல்களிலும் அலைந்து திரிந்து குளத்தில் ஒன்றாகக் குளித்துக் கரையேறியதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவோ அறியேன்.

வன்னியின் சிறந்த வேட்டையாடிகளில் ஒருவரான அப்புவோடு உடும்பு வேட்டைக்காக போகத்தொடங்கிய நாட்களில்தான் நாய்களோடு நெருக்கமானேன். வேட்டை நாய்களின் தடம் பற்றி காடளந்த கதைகள் ஏராளமுள்ளன. எனக்கு சூரன் மீதுதான் விருப்பம். வெல்வெட் மினுக்கத்தில் கறுப்பு நிறம் கொண்டவன். அவனது நெற்றிச்சுழியிலிருந்து கீழிறங்கும் வெள்ளை நிறம் ஒரு விழியுருட்டலில் தீர்ந்து போகும் அளவுக்கு சிறிது. அழகின் கொடுப்பினையே அந்தரத்தில் அழிவதுதான். காதுகள் மிகமிகச் சிறியவை. கட்டைக்கால்கள். ஆனால் சூரன் வேட்டையாடுவதில் துடியானவன். காடே மணக்கும் அவனது வியர்வை வாசத்தில் என்பார் அப்பு.

இந்தச் சூரன் எங்களுடைய வீட்டில் பிறந்தவன். ஆறு குட்டிகள் ஈன்ற தவிட்டின் குழந்தை இவன். அப்பு குட்டியிலேயே வந்து அவனைத் தூக்கிச் சென்று வேட்டையாடுவதற்கு ஏற்றபடி வளர்த்தெடுத்தார். வேட்டைக்காக வளர்க்கப்படும் நாய்களின் வாழ்வுமுறை குறித்து வேறொரு தருணத்தில் எழுதியே ஆகவேண்டும். ஏனெனில் விலங்குகளில் நாய்களைப் போல மனிதர்க்கு தோழமையாக இருக்கும் வேறொன்று இருப்பதாக என்னால் நம்பமுடியாது. கட்டளைக்கு கீழ்ப்படிவது பயிற்சியால் அல்ல. விசுவாசத்தால் என்றே தோன்றும். மனிதர்களுக்குள்ளேயே இல்லாத இந்த விசுவாசம், மனிதர்களால் வளர்க்கப்படும் நாய்களுக்கு எப்படி உருவாகிவருகிறதென்பது குழப்பமே.

என்னுடைய ஆறு வயதில் அக்காளொருத்தி வெள்ளை நிறச் சடை நாயை வாங்கி வந்திருந்தாள். இந்த வகை பொமேரியன் (Pomeranian) நாய்களுக்கு யாழ்ப்ப்பாணத்தில் அதிக மவுசு ஏறியிருந்த காலமது. எங்களுடைய சொந்தக்கார வீட்டில் வளர்க்கப்பட்ட நாய். அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு இடம் மாறுவதால் அக்காவிடம் அதனை விட்டுச்சென்றார்கள்.

நாங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள எங்களுடைய அம்மாவின் பூர்வீக கிராமத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தோம். கட்டி முடிக்கப்படாமல் கைவிடப்பட்டு பழைய வீடாக மாற்றம் கண்டிருந்த கல்வீட்டில் அந்த நாய் எங்களோடு நெருங்கியிருந்தது. அதற்கு “ரோஸியோ, ரொக்சியோ, ரொம்மியோ” என்று பெயர். நான் “சடை” என்றுதான் கூப்பிடுவேன். அதற்கு வாராவாரம் குளிப்பாட்டுதல். அலங்காரம் செய்தல் என்பன நிகழும். அக்காவை விட்டு கீழிறங்காது. அக்காவின் வாசனையே மெள்ள மெள்ள சடையனுடையதாக மாறிவிட்டது. “நாய்க்குட்டி விசரி அதக் கீழ இறக்கி விடடி” என்று சொல்லாதவர்கள் மிகக் குறைவு.

பூட்டம்மா எங்களுடைய வீட்டிற்கு வரவே மறுத்தாள். அப்படி வந்தாலும் தண்ணீர் குடிக்கவே விரும்பாதிருந்தாள். வீடெங்கும் நாய் மயிர் என்றாள். அவள் சொன்னது முழு உண்மைதான். பஞ்சு பறப்பது போல மயிர் மயிராய் வீடு மிதந்தது. அக்காவுக்கு அதொன்றும் குறையில்லை. இந்த நாயோட தன்மையே அப்படித்தான் என்று விளக்கம் அளித்து முடித்தாள். ஒரு பருவத்துக்கு அப்படி மயிர் உதிரும். பிறகு அது நேராது என்று அவள் சொன்னதுதான் நடந்தது.

“இடம்பெயர்ந்து வந்து சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் இருக்கிறவைக்கு பொமேரியன் நாய் ஒரு கேடா” என்று கேட்ட யாழ்ப்பாணத்துச் சொந்தக்காரர்களுக்கு வந்த கொதிப்பின் பின்னணியை அறிந்தபோது கொஞ்சம் குமட்டி விட்டது. அதாவது அந்தக்காலத்தில் இதுபோன்ற வெளிநாட்டு நாய்களை வளர்ப்பது பணக்காரர்களின் அடையாளமாம். அதெப்படி இவர்கள் வளர்க்கலாம் என்ற மேல்நிலை மனோபாவத்தின் புகைச்சலன்றி வேறில்லை. பிறகு சடையனுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. நாங்கள் மீண்டும் வன்னிக்குப் போனபோது யாரிடமோ கொடுத்துச் சென்றோம் என்றே நினைக்கிறேன்.

வன்னியில் எங்களுடைய வீட்டில் நான்கு நாய்கள் இருந்தன. முறையே வரியன், இரும்பன், தவிடு, பீமன் என்ற நாமங்கள். இதில் தவிடு மட்டும் பெட்டைகுட்டி. சூரனை ஈன்றது இவளே. வரியன் நன்றாகச் சாப்பிடக்கூடியவன். மாட்டிறைச்சி மணந்தால் போதும், அந்த வாசனையிலேயே மூன்று சட்டி சோறை முடித்துவிடுவான். சாப்பிட்டுவிட்டு ஒரு பனையின் கீழே சென்று மண்ணைக்கிளறி ஈரப்படுக்கையில் பள்ளிகொள்வான். அவனுக்கு சோறும் உறக்கமும் மட்டுமே விதிக்கப்பட்ட வினையாக்கும். இரும்பன் எவரைக் கண்டும் அஞ்சுவதில்லை. குரைக்காமலேயே காரியத்தில் கண்ணாயிருப்பவன். ஒவ்வொருவரின் காலடியின் நோக்கமும் அறிந்து வாலாட்டவும், கவ்விப்பிடிக்கவும் தெரிந்தவன். பெரிதாக பந்த பாசங்களிலும் பிடிப்போ நாட்டமும் இல்லாதவன். எப்போதும் தன்னுடைய பூசலான கண்களின் வழியாக தெருவையே பார்த்துக் கொண்டிருப்பான்.

தவிடு ஊரறிந்தவள். பிள்ளைகளை ஈன்று ஈன்றே நோவில் கிடப்பவள். ஒருகாலத்தில் எங்களூரின் பெருமளவிலான நாய்களை ஈன்ற அன்னை தவிடுதான்.

பீமன் – நாங்கள் அவனை வீமன் என்றுதான் அழைப்போம். பெயருக்கு ஏற்ற பலசாலி. சூரனின் தந்தையாக நான் நினைத்துக் கொள்வது இவனைத்தான். அயலில் மேய்ந்துகொண்டிருக்கும் கோழிகளை விரட்டிப்பிடிப்பதில் வீமன் கொஞ்சம் அவப்பெயர் பெற்றிருந்தான். வேறு வேறு காலங்களில் ஒரே வீட்டின் நான்கு கோழிகளையும் வீமன் விரட்டிப்பிடித்து தின்றதை சிலர் பார்த்திருக்கிறார்கள். அதனால் கோபமுற்ற அந்த கோழி வீட்டுக்காரர் உணவில் நஞ்சைக் கலந்து பீமனுக்கு அளித்திருக்கிறார். வீமன் அதனை நுகர்ந்து பார்த்து சாப்பிடாமல் தட்டிவிட்டிருக்கிறான். அதனால் கோபமுற்றவர் வீமனை அடிக்க தடிகொண்டு வந்திருக்கிறார். அவன் நகராமல் நின்றபடி அவர் மீது பாய்ந்து வந்திருந்தான். எந்தக் கடியும் இல்லை. எந்தக் கீறலும் இல்லை. சும்மாவொரு விளையாட்டு என்பதைப் போல வீட்டில் தணிந்திருந்தான். அயலவருக்கு நான்கு கோழிகளையும் வாங்கிக் கொடுத்து வீமனைக் கண்டித்தோம். ஆனாலும் அந்தச் செயலை வீமன் தொடர்ந்து செய்து வந்தான்.

ஊரில் நாய்களோடு வாழ்வது கொடுப்பினை. அவற்றின் செல்லச் சிணுங்கல்கள். காதசைவுகள். வால் அசைவில் அதிகரிக்கும் குழைவு என எல்லாமும் ஒருவகை போதை நிலை. சில மதிய வேளைகளில் என்னுடைய முகத்தை நக்கி, உறக்கத்தில் இருந்து எழுப்பும் வீமன் ஸ்நேகிதன் போல. தன்னந்தனியாக காட்டிலும், வீதியிலும் நடந்து செல்லும்போது மூச்சிரைக்க ஆனந்தித்து ஓடிவரும் அவன் வழிக்காவல். காய்ச்சலோ, உடம்பு நோவோ வந்து வீட்டிற்குள் முடங்கிக்கிடந்தால் உள்ளே வந்துபார்த்து என் பாயின் அருகிலேயே அமர்ந்திருக்கும் போது வைரவர். எக்கணமும் உன்னோடு, எத்திசையும் உன்னோடு என்றிருப்பது காதல் அன்றி வேறேது. வீமன் அப்படித்தான் இருந்தான். நானும் அப்படித்தான் மண்ணில் விழுந்த நாவல் பழமென நாய்களோடு ஒட்டிக்கிடந்தேன்.

பின்னைய காலங்களில் மீண்டும் சடை நாய்க்குட்டியை வளர்க்க வேண்டியிருந்தது. அம்மாவிற்கு தெரிந்த ஒருவரின் வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட குட்டி. அக்காவுக்கு அதை வளர்ப்பதில் ஒரு நிறைவு. போர் தொடங்கி கடுமையான சூழலை நோக்கி வன்னி விரைந்து கொண்டிருந்தது. போர் விமானங்களின் இரைச்சல் கேட்டாலே அது குரைக்கத் தொடங்கிவிடும். ஒருநாளில் அது குரைக்காமல் இருக்கும் மணிநேரங்கள் மிகமிகக் குறைவே. ஏனெனில் அது குரைப்பதற்கு பிறந்ததென்று நம்பியது என்றே தோன்றுகிறது.

நாங்கள் இடம்பெயர்ந்து ஒவ்வொரு இடங்களுக்குப் போகும்போதும் அழைத்துச் சென்றோம். இறுதியாக முள்ளிவாய்க்காலிலும் அது பிழைத்திருந்தது. கடுமையான எறிகணைகள், அழுகுரல்கள், மனித மாம்சங்கள் என மானுட அழிவின் பிரளயத்தைப் பார்த்து குரைப்படங்கி நின்றது. அதனுடைய கண்கள் பதுங்கு அகழியின் இருண்ட மூலையிலேயே உறைந்து நின்றது. உண்பதற்கு உணவில்லாத நாட்கள் அவை. ஒரு வாயில்லாப் பிராணியை இப்படி வைத்து வதைக்கிறோமே என்று நொம்பலித்து அழுதாள் அக்கா. “இங்கு எங்கேயும் சாப்பாடு இல்லை. வேண்டுமானால் கடல் மண்ணைத்தான் அள்ளித் தின்ன வேண்டும்” என்றேன்.

ஆனால் அதுவும் பட்டினி கிடந்து உயிர்பிழைத்திருந்தது. இறுதி நாட்களில் ஒருநாள் அதிகாலையில் கடுமையான எறிகணை வீச்சுக்களுக்கும், போர் விமானத் தாக்குதல்களும் நடந்த வேளையில் பதுங்குகுழியை விட்டு அது மேலறி பூமியின் மேலே நின்றது. அக்கா உள்ளேயிருந்து அதை அழைத்தபடி இருந்தாள். அது உள்ளே வராமல் போனால், தானும் வெளியேறி விடுவதாகச் சொன்னாள். அவளை கோபம் கொண்டு அறைவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

“ஒரு நாய்க்காக உன்ர உயிரை விடப்போகிறியோ” என்று கேட்டேன்.

“என்னடா சொன்னீ….! ஒரு நாய்க்காகவோ!. அது என்ர ரோஸி” என்று சொன்ன அக்கா, பதுங்குகுழியை விட்டு வெளியேறினாள்.

ரோஸியைக் காணவில்லை. அவள் ஆயிரக்கணக்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் போல காணாமலேயே போனாள். அக்கா மாரில் அடித்துக் கொண்டு அழுததை வானம் பார்க்கவில்லை. அதனை மறைத்தபடி கந்தகப் புகை பெருவளியை மறைத்திருந்தது.

ரோஸி போலவே எங்களது எல்லாமும் காணாமல் போனது ஊழிக்கதை.

***

இன்று நாய்களைக் கண்டாலே ஆகமாட்டேன் என்கிறது. சென்னையின் தெருக்கள் சிலவற்றில் இரவில் பயணம் போவது திகிலாகவே உள்ளது. நாய்கள் அண்டாமல் இருக்க ஏதேனும் கொசுவிரட்டி போல இருந்தால் உடலில் தடவிக்கொள்ளவும் தயாராகவே இருக்கிறேன். நண்பர் ஒருவர் “நீங்கள் நாயைக் கண்டதும் உள்ளூர பயப்படுகிறீர்கள். அதற்கு அந்தப் பயம் தெரிந்துவிட்டால் உங்களை நோக்கியே வரும்” என்கிறார். உள்ளூரவெல்லாம் பயப்பிடவில்லை. வெளியவே பயப்படுகிறேன். உங்களுக்குத் தெரியவில்லையா என்று கேட்டேன்.

நகரத்தில் ஐந்து ரூபாய் பிஸ்கட் பைகளை வாங்கி நாய்களுக்கு தானம் அளிக்கும் பாரிகள் நிறையவே கண்களில் தெரிவர். அவர்கள் எந்தக் கடையில் வாங்குகிறார்களோ, அந்தக் கடையின் முன்பே அதனை உதிர்த்துக் கொட்டுவார்கள். நாய்கள் குழுமி நின்று பிஸ்கட்டுக்காக கடியுண்டு சண்டை போடும். வீதியில் வருகிறவர்கள் மிரண்டு தடம் மறப்பார்கள். அப்படியான நாய்கள் வீதியை குறுக்காக ஓடி ஓடி அளப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்தச் சங்கடங்கள் மென்மையானவை தான். ஆனால் எனக்கு உடல் சிலிர்க்கிறது.

நாய்களோடு அணுக்கம் பாராட்டும் என்னை நான் இனிமேல் சந்திக்க முடியாதென்றே நினைக்கிறேன். ஏனெனில் அந்த ஒட்டுதலில் இருந்து வெகுதூரம் விலகிவிட்டதாகவே எண்ணுகிறேன். சில நாய்களின் கண்கள் எனக்கு வீமனையோ, தவிட்டையோ ஞாபகப்படுத்துகின்றன. ஒருகணத்தில் அங்கிருந்து விழிப்படைந்து கால்களை பின் இழுத்துக் கொள்கிறேன். சில வேளைகளில் என் வீமனும் தவிடும் வரியனும், இரும்பனும் என்னோடு நின்றுவிட்டார்களா தெரியவில்லை.

வெகுநாட்களாக என்னுடைய காலடியில் ஒரு கறுப்பு நிறத்திலான நாய் அமர்ந்திருப்பதைப் போலவே தோன்றுகிறது. அது சூரன். அவனை நாங்கள் அப்படி கையறு நிலையில் விட்டுவிடவில்லை. வேட்டைக்கு போயிருந்த போது ஏதோ கடித்து இறந்து போனான். அவனை மண்ணிற்குள் இறக்கும் போது, காட்டுப் பூக்களும், உப்புக்கல்லும் போட்டுப் புதைத்தோம். எங்களுடைய வளவிலுள்ள தேசிக்காய் மரத்தடியில் அவன் வேராகிக் கிடப்பான். அவனை அங்கு புதைத்த பிறகே தேசிக்காய் மரம் பூத்துக் காய்த்தது. இப்போது என் காலடியில் சூரன் அமர்ந்திருக்கிறான். இந்தக் கட்டுரையை எழுதும்போதும் அவன் நாக்கின் ஈரம் என் கால் பெருவிரலை நனைக்கிறது.

“சூரா….கொஞ்சம் அமைதியாக இரு” எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அமைதியாக இருக்கிறான்.

அக்காவுக்கு இந்தக் கட்டுரைய அனுப்பி வைத்தேன் படித்துவிட்டு இப்படி எழுதியிருந்தாள்.

அன்பின் தம்பிக்கு!

என்றிலிருந்து நாய்கள் மீது பிடிப்பில்லாமல் போனதென துல்லியமாக நினைவுக்கு வரவில்லையென நீ எழுதியிருக்கிறாய். ஆனால் அந்தநாள் எனக்கு நினைவில் இருக்கிறது

“ஒரு நாய்க்காக உன்ர உயிரை விடப்போகிறியோ” என்று என்னை நீ கேட்ட நாளிலே தான், அது நிகழ்ந்தது”

 

 

 

 

 

 

Loading
Back To Top